Published:Updated:

`மில்லியனில் ஒருவராகலாம் நீங்கள்!’ - ஸ்டெம்செல் ரகசியம் பகிரும் டாக்டர் கண்மணி கண்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மில்லியனில் ஒருவராகலாம் நீங்கள்!’ - ஸ்டெம்செல் ரகசியம் பகிரும் டாக்டர் கண்மணி கண்ணன்
`மில்லியனில் ஒருவராகலாம் நீங்கள்!’ - ஸ்டெம்செல் ரகசியம் பகிரும் டாக்டர் கண்மணி கண்ணன்

"கடைசியாக, அந்த நாள் வந்தேவிட்டது. எனது ரத்தத்தின் மூலம் மறுபடி பிறந்திருக்கும் குழந்தை ஸ்ரீமாலி பாலசூர்யாவைப் பார்க்கப்போகிறேன். தாத்ரி, டிரான்ஸ்பிளான்ட் ரெஜிஸ்ட்ரிக்கு எனது நன்றி. என் வாழ்வின் தங்கத்தருணம் இது" - கேரளா, தமிழகம் இரு மாநிலங்களிலும் ஸ்டெம்செல் தானம் செய்த முதல் பெண் கண்மணி கண்ணனின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``உலகத்தோட வேற ஒரு மூலைல இருந்த என்னோட குழந்தையைப் பாக்க போறேன்னு நினைக்கும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என் உடலோட இன்னொரு பகுதிய எங்கிருந்தோ கொண்டு வர போற மாதிரி இருந்தது” என்று பேசத் தொடங்கினார் கண்மணி.

"குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி ரத்தச்செல்களைச் சேமித்துவைக்கும் ஸ்டெம்செல் சேமிப்பு நடைமுறை, சமீப காலங்களில்தான், அதுவும் நகர்புறங்களில் இப்போது முளைத்திருக்கும் புது வணிகம். எல்லோருக்குமானதாக இந்த செல் சேமிப்பு நடைமுறை வருவதற்கு பல வருடங்கள் ஆகலாம். ரத்தப் புற்றுநோய், ரத்தச் சிவப்பணுக்கள் குறைபாட்டால் உருவாகும் `தலாசீமியா', ரத்த வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் ஏற்படும் `ஏப்ளாஸ்டி அனீமியா' போன்ற நோய்களுக்கு முழுச் சீரமைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான் `ஸ்டெம்செல்'  சிகிச்சை முறை'' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், பொருத்தமான ஸ்டெம்செல்கள் அதிகம் கிடைத்தால்தான், இந்தச் சிகிச்சைமுறையைச் செயல்படுத்த முடியும். ஆகையால், இந்தச் சிகிச்சையே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்டெம்செல் வங்கியை அரசு நிதி உதவியுடன் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டுவரும் இந்த வேளையில், கண்மணி - ஸ்ரீமாலிக்கு இடையில் நிகழ்ந்திருக்கிறது இந்த மேஜிக். `` `Immature Totipotent Cells' எனப்படும் ஸ்டெம்செல்கள் மட்டுமே, ரத்தச் செல்களாகவோ எல்லாவிதமான செல்களாகவோ மாறும் மகத்துவம் பெற்றவை. ஆனால், எங்களுக்கு நடந்திருக்கும் இந்த மேஜிக், டிரான்ஸ்பிளான்ட் ரெஜிஸ்டரி மூலமாக நடந்திருக்கிறது. மில்லியன் மக்களில் யாரோ இரண்டு பேருக்கு ஸ்டெம்செல் பொருந்தியிருக்கலாம். அப்படியான இரண்டு பேராக நாங்கள் இருந்திருக்கிறோம். என்னுடைய ரத்தக்குழந்தை ஸ்ரீமாலி” என்று சொல்லும் 24 வயதான கண்மணி எம்.பி.பி.எஸ்ஸுக்கு, கண்கள் நிறைகிறது.

கேன்சர், தலாசீமியா மற்றும் மரபணுரீதியிலான நோய்கள் ஏற்பட்டால், ஸ்டெம்செல்களை வைத்து அதைக் குணப்படுத்திவிட முடியும் என்பதுதான் மருத்துவர்கள் அளிக்கும் நம்பிக்கை. தாத்ரி ஸ்டெம்செல் டோனர் ரெஜிஸ்ட்ரி மற்றும் எய்ம்ஸ் நிறுவனத்தின் புற்றுநோய் சிகிச்சைத் துறை 2013-ம் ஆண்டில் நடத்திய கருத்தரங்கில், எம்.பி.பி.எஸ் இரண்டாம் படிக்கும்போது கலந்துகொண்டிருக்கிறார் கண்மணி. ``டாக்டர் நீரஜ் எனக்கு ரொம்பவும் பிடிச்ச ப்ரொபஸர். ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்டேஷன் பத்தின அந்த கான்ஃபரன்ஸ்ல அவருக்காகத்தான் நான் கலந்துகிட்டேன். ரெஜிஸ்ட்ரியில அன்னைக்கே என்னுடைய பெயரையும் பதிவு பண்ணிட்டு வந்துட்டேன். ஒரு வருஷம் கழிச்சு தேவதையா மாறுற வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கல” என்று சொல்லும் கண்மணியை, திருச்சியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பச்சபெருமாள்பட்டி கிராமம் தன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது.

பதிவுசெய்து நான்கு வருடங்களுக்குப் பிறகு, `உங்களுடைய ஜீன் பொருந்தும் ஒருவருக்கு தானம் தேவைப்படுகிறது. உதவுங்கள்’ என தாத்ரி நிறுவனத்திடமிருந்து அழைப்பு கிடைத்திருக்கிறது கண்மணிக்கு. தானம் தேவைப்படுபவரது பெயரோ, அவரைக் குறித்த எந்தத் தகவலோ கண்மணிக்குத் தெரிவிக்கப்படவில்லை. வீட்டை ஏமாற்றிவிட்டு தம்பியுடன் இதைச் செய்ய புறப்பட்டபோது, குற்றவுணர்வெல்லாம் இல்லை என்கிறார் கண்மணி. ``மில்லியனில் ஒருவராக மாறுங்கள்” என்று, பார்க்கும் எல்லோரிடத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார் அவர்.

செல் சேமிப்பு செய்த நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து, கண்மணியைச் சந்திக்க அனுமதி வாங்கியிருக்கிறார்கள் ஸ்ரீமாலியின் பெற்றோர். ஸ்ரீமாலியைச் சந்தித்த தருணம் குறித்துக் கேட்டதும், ``நிஜமாவே என்கிட்ட வார்த்தைங்க இல்லை. எனக்குக் குழந்தை பிறக்கும்போதுகூட, நான் இனிமே அந்தப் பரவசத்தை உணர்வேனா எனத் தெரியவில்லை. என் உடம்பில் என்னோட செல்கள் எப்படி வேலைசெய்யுதோ, அப்படித்தான் ஸ்ரீமாலிக்கும் இருக்கும்! ஒரே ரத்தமும் செல்களும் எங்க ரெண்டு பேர் உடம்பிலுமே இருக்கு. இந்த மேஜிக்தான் கடவுள்னு நான் நினைக்கிறேன்” என்கிறார் அவர். குழந்தைகள் புற்றுநோயில் (Paediatric Oncology) ஸ்டெம்செல் சிகிச்சை குறித்த ஆய்வுக்காக, தற்போது லண்டன் சென்றிருக்கும் கண்மணியின் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகமாகட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு