Published:Updated:

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்
பிரீமியம் ஸ்டோரி
News
“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

உடலுக்கும் தொழிலுக்கும் - 5

தையற்கலை... ஆயகலைகளில் ஒன்றான இது, ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. எனவே, மனிதகுலம் இருக்கும்வரை தையற்கலைக்கு அழிவில்லை என்று தைரியமாகச் சொல்லலாம். இன்றைக்கு நாம் உடுத்தும் உடைகளின் பின்னால் எத்தனைபேரின் உழைப்பு இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.  

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

கடின உழைப்பைச் செலுத்தி, நாம் விரும்பிய ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும் தையற்கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அது பற்றித் தெரிந்துகொள்ள சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் வசிக்கும் தையற்கலைஞர் ஜெனிபரைச் சந்தித்தோம். 17 வயதில் தையல் மெஷினின் பெடலில் கால்பதித்தவர், 18 ஆண்டுகளாக அந்த இயந்திரத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்“தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது ஜாக்கெட், சுடிதார் தைத்துக் கொடுப்பேன். ஆனால், நான் விரும்பும்விதத்தில் எனக்கென புதிதாக ஒரு ஜாக்கெட்கூட தைத்துக்கொள்ள முடியாது. `எனக்காகச் செலவழிக்கும் அந்த நேரத்தில் வேறொருவருக்கு தைத்துக் கொடுத்தால் கூடுதலாக 200 ரூபாய் கிடைக்குமே’ என்று நினைக்கத் தோன்றும்.’’ நெகிழ்ச்சியுடன் பேச்சை ஆரம்பிக்கிறார் ஜெனிபர்.

“ ‘பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் ஏதாவது கைத்தொழில் தெரிந்திருக்க வேண்டும்’ என்று என் அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அதன்படி நான் ப்ளஸ் டூ முடித்தவுடன் சென்னை அமைந்தகரையிலிருக்கும் தையல் பயிற்சி நிறுவனத்தில் என்னைச் சேர்த்துவிட்டார். அதன் பிறகு, தொலைதூரக் கல்வி முறையில் டிகிரி படிக்கலாம் என்று முடிவெடுத்து, அதில் சேர்ந்தேன். திருமணம் ஏற்பாடாகிவிட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

குடும்ப வறுமை காரணமாக ஒரு சிட்ஃபண்ட் நிறுவனத்தில் 1,250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 14 வருடங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினேன். அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் துணிகள் தைப்பேன். குழந்தைகள் பிறந்த பிறகு என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே, வீட்டின் அருகே இருக்கும் ஒரு தையல் பயிற்சி நிறுவனத்தில் தையல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இன்றுவரை அந்தப் பணி தொடர்கிறது. வீட்டிலும் தையல் மெஷின் வைத்து துணி தைத்துக் கொடுக்கிறேன். பெண்களுக்கான அனைத்து மாடல் ஜாக்கெட், சுடிதார் தைப்பேன். ஆண்களுக்கு சட்டை, பேன்ட் தைத்துக்கொடுத்தேன். ஆனால், ஆண்களுக்கு அளவெடுப்பது சரிப்பட்டு வராததால், இப்போது பெண்களுக்கு மட்டுமே தைத்துக் கொடுக்கிறேன். 

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

என் இரண்டாவது மகள் பிறந்த நேரத்தில், என் கணவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தலையில் காயம்பட்டதால் சுமார் ஒன்பது மாத காலம் அவரால்  வேலைக்குப் போக முடியவில்லை. குழந்தை பிறந்த நேரம் என்பதால், என்னாலும் வேலைக்குப் போக முடியவில்லை. நான் கற்ற தொழிலை நம்பி, குழந்தை பெற்ற 16-வது நாளே தையல் மெஷினில் உட்கார்ந்துவிட்டேன்.

‘கைத்தொழில் கற்றுக்கொள்’ என்று என் அம்மா சொன்னதன் அர்த்தத்தை அன்றுதான் உணர்ந்தேன். ‘இந்தத் தொழிலும் கையில் இல்லையென்றால், என் குடும்பத்தின் நிலை என்னவாகியிருக்கும்’ என்று அப்போது நினைத்துப் பார்த்தேன். தையல் தொழில் கை கொடுத்ததால், அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் 10 ரூபாய்கூட கடன் வாங்காமல் குடும்பச் செலவுகளைச் சமாளித்தேன். கணவரின் சிகிச்சைக்குக்கூட யாரிடமும் நான் கடன் வாங்கவில்லை.

ஒரே இடத்தில் தொடர்ச்சியாக உட்கார்ந்து தைக்கும்போது முதுகு, இடுப்புப் பகுதியில் வலி எடுக்கும். நீண்ட நேரம் காலைத் தொங்கவிட்டபடி வேலை செய்வதால், காலில் வீக்கம் ஏற்படும். மோட்டார் மெஷின்தான் வைத்திருக்கிறேன் என்றாலும், பெடலை ஒரு விரலால்தான் அழுத்த வேண்டும். ஏதாவது ஒரு பக்கக் காலின் பெருவிரலை வைத்து அழுத்தித் தைப்பதற்குத்தான் பயிற்சி எடுத்திருப்போம். அதனால் அடுத்த கால் விரலைப் பயன்படுத்தி, வேகமாகத் தைக்க வராது. ஒரே கால் விரலைத் தொடர்ந்து அழுத்துவதால், பெருவிரல் வலிப்பதுடன், கால் நரம்பு சுண்டி இழுக்கும். கூர்ந்து பார்த்து நூல் கோப்பதாலும் தைப்பதாலும் கண்களில் அழுத்தம் ஏற்படும். 

துணியை வெட்டும்போது அதிலுள்ள பிசிறுகள், நூலிலுள்ள பஞ்சு போன்ற தூசுகள் மூக்கின் உள்ளே செல்வதால், அடிக்கடி அலர்ஜி ஏற்படும். தைக்கும்போது மோட்டார் சத்தம், மெஷின் சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதால், எரிச்சலும் தலைவலியும் ஏற்படும். ஒரு தடவை துணி தைக்கும்போது மெஷினில் இருந்த ஊசி, விரலின் ஒரு பக்கத்தைத் துளைத்து மறுபுறமாக வெளியே வந்துவிட்டது. கையை மெஷினிலிருந்து எடுத்தபோது ஊசி மூன்றாக உடைந்து ஒரு பாகம் விரலுக்குள் மாட்டிக்கொண்டது. ஊசி குத்தியதைவிட மருத்துவமனையில்  அதை எடுக்கும்போது அதிக வலியால் துடித்துவிட்டேன்.

பண்டிகைக் காலங்களில் நிறைய ஆர்டர்கள் வரும். பலர் கடைசி நிமிடத்தில் வருவார்கள். அப்போதெல்லாம் இரவில் அதிக நேரம் கண்விழித்துத் தைக்கவேண்டியிருக்கும். இரவு நேரத்தில் மெஷின் சத்தம் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக இரவு    12 மணிக்குள் தையல் வேலையை முடித்துவிடுவேன். அதன் பிறகு ஹெம்மிங் செய்வது, கொக்கி கட்டுவது போன்ற கைவேலைகளை விடியற்காலை 4 மணிவரைகூட  விழித்திருந்து செய்வேன். நேரத்துக்குச் சாப்பிட முடியாது. ‘வேலையை முடித்துவிட்டுப் போய்ச் சாப்பிடலாம்’ என்று நினைத்து உட்கார்ந்தால், நேரம் போய்க்கொண்டே இருக்கும். பாதியில்  எழுந்தால், மீண்டும் உட்கார்ந்து தைக்கச் சிரமமாக இருக்கும்.

தைத்துக்கொடுத்த உடைகளில் ஏதேனும் பிரச்னை இருந்தால், சிலர் சண்டைபோடுவார்கள். யார் என்ன சொன்னாலும் கோபப்படாமல்  சிரித்துக்கொண்டே ‘சரி பண்ணித் தர்றேன்...இந்த முறை தவறு நடந்துவிட்டது, இனிமேல் அப்படி நடக்காது’ என்று சொல்லி தவறுகளைச் சரிசெய்து தருவேன். சிலர், `காசு கொடுக்க மாட்டேன்’ என்பார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால்கூட அட்ஜஸ்ட் செய்து தைத்துக் கொடுப்பேன். சில வாடிக்கையாளர்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். சிலர் ‘தைக்கவில்லை என்றால் கொடு’ என்று கோபமாக வாங்கிக்கொண்டு போவார்கள். நான் கோபமாகப் பேசினால், வாடிக்கையாளர்கள் வருவது பாதிக்கப்படும் என்று நினைத்து, யாரிடமும் முகம் சுளித்துப் பேச மாட்டேன்.

‘ஏன் எனக்கு இந்த நிலைமை... முதுகு ஒடிய தைக்கிறோமே... நல்லாப் படிச்சிருந்தா நல்ல வேலைக்குப் போயிருக்கலாமே’ என்று சில நேரம் தோன்றும்.  ஆனால், என் ஒரு மாதக் குழந்தையை கையில் வைத்திருக்கும்போது யோசித்தேன். ‘நான் என்ன படிச்சிருந்தாலும், கைக்குழந்தையை வெச்சிக்கிட்டு என்னால வேலைக்குப்  போயிருக்க முடியாது. தையல் வேலைங்கிறதால வீட்டுல இருந்து யாரையும் நம்பாம என் குழந்தைகளையும் நானே பார்த்துக்க முடியுது’ என்று. அதனால் வருத்தத்தையும் மீறிப் பல நேரங்களில் தையல் தொழிலை நினைத்து சந்தோஷப்படவே செய்கிறேன்” என்று நிறைவாக முடித்தார் ஜெனிபர்.

``தையற்கலைஞர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி அவசியம்!’’
  

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

``தையற்கலைஞர்களுக்கு உடல்சார்ந்த பிரச்னைகள் வந்தால், அவற்றைத் தீர்க்க என்ன வழி?’’ என்று பொதுநல மருத்துவர் சுரேஷ் கண்ணாவிடம் கேட்டோம்.

“தொடர்ச்சியாகப் பணியாற்றுவதால், இவர்களுக்கு சில உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்து தைப்பது, ஒரே வேலையைத் தொடர்ச்சியாகச் செய்வதால் ஏற்படும் அயர்ச்சி போன்றவை  அவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், கழுத்து எலும்பு, முதுகு எலும்பில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி எடுக்கும். அதனால் முதுகுத்தண்டுவடத்தில் பிரச்னை, நரம்பியல் பிரச்னை, எலும்புத் தேய்மானம், ஆர்த்ரைட்டிஸ் போன்றவை ஏற்படும். இவை வயதான காலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்னைகள்தாம் என்றாலும், இது போன்ற உடல் உழைப்பு சார்ந்த கடின வேலை செய்பவர்களுக்கு முன்னதாகவே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

தைக்கும்போது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, பதற்றம் ஏற்படும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, பார்வை  மங்குதல், கண் எரிச்சல் ஏற்படலாம். தையற்கலைஞர்கள் போதிய இடைவெளியில் கண் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொடக்கத்திலேயே பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகாண வேண்டும். நவீன தொழில்நுட்பத்தில் புதிய தையல் மெஷின்கள் வந்த பிறகு பணியிடத்தில் நடைபெறும் விபத்துகள், காயங்கள் போன்றவை குறைந்திருக்கின்றன. ஆனாலும் தையற்கலைஞர்கள் ரணஜன்னிக்கான தடுப்பூசி (டெட்டனஸ்) போட்டுக்கொள்ளவேண்டியது அவசியம்.

உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாப்பாடு சரியாக இல்லாவிட்டால் வயிற்றில் புண், வலி, ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் பல்வேறு நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. தையல் தொழில், உடல் உழைப்பு சார்ந்த தொழிலாக இருப்பதால், ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். பணியின் நடுவே ஓய்வு எடுப்பது நல்லது. மேலும், சிறிது தூரம் நடப்பது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, புத்துணர்ச்சி கிடைக்கச் செய்யும்” என்கிறார் அவர்.

வந்தனை செய்வோம்...

ஜெனி ஃப்ரீடா - படங்கள்: ப.பிரியங்கா

“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்!” - தையற்கலைஞர் ஜெனிபர்

பளபளப்புக்கு பப்பாளி

ன்கு கனிந்த பப்பாளிப்பழம் இரண்டு துண்டுகளுடன், 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்துக் கலந்து, தலையில் தடவவும். அது காய்ந்துவிடாதபடி ஷவர் கேப் அணிந்துகொள்ளவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். பப்பாளியிலுள்ள புரதம், உங்கள் கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தக்கவைத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டி, பளபளப்பையும் தரும்.