ஹெல்த்
தொடர்
Published:Updated:

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி
பிரீமியம் ஸ்டோரி
News
“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

உடலுக்கும் தொழிலுக்கும் - 6

‘உங்களுக்கு போகப் பிடிக்காத இடம் எது?’ என்று கேட்டால், ‘மருத்துவமனை’ என்று தயங்காமல் சொல்வோம். மருந்துகளின் வாடை, பலவிதமான நோயாளிகள், வலியால் துடிக்கும் மனிதர்கள்... என அங்கு நிலவும் சூழலே அசாதாரணமாக இருக்கும். ஆனால், மருத்துவர்களும் செவிலியர்களும் இதிலிருந்து மாறுபட்டவர்கள்; தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மருத்துவமனையிலேயே கழிப்பவர்கள். `சேவை’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர்கள் செவிலியர்கள்தாம். அன்றாடம் நோயாளிகளையும், அவர்கள் படும் வலிகள், வேதனைகளையும், பல இறப்புகளையும் எதிர்கொள்ளும் செவிலியரின் உடல்நலமும் மனநலமும் எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள, மதுரை மாவட்டம், தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் தேவிகா ராணியைச் சந்தித்தோம்.

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

தேவிகா ராணியின் உடன் பிறந்த நான்கு பேரும் மருத்துவத் துறையில் வெவ்வேறு பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க, இவர் நர்ஸாகப் பணியாற்ற முடிவெடுத்தார். 18 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் சேவையாற்றிவருகிறார்.

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி“அருப்புக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு, இப்போது தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிகிறேன். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் ஒரு பிரிவாக, காசநோயாளிகளுக்கான உள் நோயாளிகள் பிரிவாக இந்த மருத்துவமனை  செயல்பட்டுவருகிறது. மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த  மருத்துவமனை தண்டனைக்கான இடமாகத்தான் கருதப்பட்டது. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், மிகவும் மோசமான நிலையில் வனம்போலக் காட்சியளித்த இந்த மருத்துவமனையை ‘காட்டு ஆஸ்பத்திரி’ என்றுதான் கூறுவார்கள்.  இரவுப் பணியின்போது வார்டில் ஒரேயொரு குண்டு பல்பு மட்டும்தான் இருக்கும். அறைக்குள் வெளிச்சம் இருக்காது. மழைக்காலங்களில் பாம்புகள், பூச்சிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். `எப்படியாவது டிரான்ஸ்ஃபர் வாங்கிப் போய்விட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே இருப்பேன். ஆனால் டாக்டர் காந்திமதிநாதன் நிலைய மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றதும் மருத்துவமனையின் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இயற்கைச் சூழலுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தோற்றத்தில் மருத்துவமனை காணப்படுவதால், இங்கு பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இங்கு புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகள் வருவது வழக்கம். அதற்காக, இங்கிருக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வோம். அதன் பிறகு மருத்துவமனையின் சூழலுக்கு உடல் பழகிவிடும்; காசநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் உருவாகிவிடும். ஆனாலும் அவ்வப்போது இருமல், சளி போன்ற  தொந்தரவுகள் வரத்தான் செய்யும்.

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

நான் இந்த மருத்துவமனைக்கு வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளில், என் கணவருக்கு காசநோய் பாதித்தது. ‘உன்னால்தான் அவருக்கு காசநோய் வந்துவிட்டது’ என்று உறவினர்கள் என்னைத்  திட்டினார்கள். ஆனாலும் மனம் தளராமல் என் கணவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தேன். காசநோய்க்குத் தொடர்ந்து ஆறு மாதங்கள் மாத்திரை சாப்பிட வேண்டும். ஒரு நாள் சாப்பிடாவிட்டாலும், மருந்து எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும். இதனால் அதிக கவனத்துடன் என் கணவரைப் பார்த்துக் கொண்டேன். அதே நேரத்தில் செவிலியர் பணியையும் விடவில்லை. அது மிகவும் கடினமான காலகட்டம். சிகிச்சைக்குப் பிறகு அவர் முழுமையாக குணமடைந்தார். நோயாளிகளிடம் என் கணவரை உதாரணமாகக் கூறி நம்பிக்கை வார்த்தைகள் சொல்வேன்.

இங்கே தங்கியிருக்கும் நோயாளிகளில் சிலர் எங்களிடம் கோபமாகப் பேசுவார்கள். ‘நான் வந்து சேர்ந்து இத்தனை வாரமாகுது. தினமும் மாத்திரை கொடுக்குறீங்க... ஆனா இருமல் மட்டும் குறையவே மாட்டேங்குது’ என்று ஆதங்கப்படுவார்கள். பதிலுக்குக் கோபப்படாமல் பொறுமையுடன் அவர்களைக் கையாள்வேன். எத்தனை மாதங்கள் அவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லி சமாதானப்படுத்துவேன். சிகிச்சை முடிந்து காசநோயிலிருந்து முற்றிலும் விடுபட்டு அவர்கள் வீடு திரும்பும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

காசநோய் பாதித்த ஓர் இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்ததால், அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அவரின் மனைவி வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஒருநாள் இரவு கழிவறைக்குச் சென்ற அவருக்கு இருமல் வந்திருக்கிறது. இருமல் நிற்காமல் தொடர்ந்ததால் ரத்தம் வெளியேறி, கழிவறையிலேயே மயங்கி விழுந்துவிட்டார். அன்றைய தினம் நான் இரவுப் பணியில் இருந்தேன். உடனிருந்த  நோயாளிகள் தகவல் தெரிவிக்கவே நானும், சக செவிலியர்களும் ஓடிச் சென்று பார்த்தோம். மனதை உறையவைக்கும் காட்சி அது. சுமார் 600 மி.லி ரத்தம் வெளியேறிய நிலையில், ரத்தச் சகதிக்குள் அரை மயக்கத்தில் கிடந்தார். கழிவறையிலிருந்து அவரை மீட்டு, அவருக்குத் தேவையான முதலுதவி செய்து, அவரது வீட்டுக்குத் தகவல் சொன்னோம். உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப் பரிந்துரைத்தோம். அங்கே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து ஓரளவுக்கு உடல்நலம் தேறியதும், சில தினங்களில் மீண்டும் எங்கள் மருத்துவமனைக்கே உள் நோயாளியாகத் திரும்பினார். அன்றைக்கு அவர், ‘நீங்க அன்னைக்கு இல்லைன்னா... இன்னைக்கு நான் உயிரோடவே இருந்திருக்க முடியாது!’ என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. இதைவிட ஒரு செவிலியருக்கு வேறு என்ன விருது கிடைத்துவிடப் போகிறது. இத்தகைய வார்த்தைகளுக்கு முன் நாங்கள் படும் கஷ்டம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். எல்லோரும் புண்ணியம் வேண்டி கோயில், குளம் என்று போகிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு, பார்க்கும் வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது. இந்த பாக்கியம் எங்கே, யாருக்குக் கிடைக்கும்!

காசநோய் பரவக்கூடியது, நோயாளிகள் தும்மினாலோ, இருமினாலோ அடுத்தவருக்குப் பரவக்கூடியது என்பது தெரிந்தாலும்கூட இந்த மருத்துவமனையில் விரும்பிப் பணியாற்றுகிறேன். இரண்டு மூன்று நாள்கள் விடுப்பு எடுத்தாலும்கூட, மீண்டும் எப்போது பணிக்குத் திரும்புவோம் என்ற நினைப்புதான் வரும். ஒவ்வொரு நாளும் செவிலியர் சீருடையை அணிந்தவுடன் எனக்குள் புது உற்சாகம் ஊற்றெடுக்கும். அடுத்த நொடியே நோயாளிகளைப் பார்ப்பதற்காக என் கால்கள் தானாகச் சென்றுவிடும்” என்று கூறிய தேவிகா  ராணி, நோயாளிகளைப் பார்க்க நம்மிடமிருந்து விடைபெற்றார்.

முகக் கவசம் அவசியம்!  

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

நோயாளிகளின் நலம்காக்கும் செவிலியர்கள், அவர்களின் உடல்நலத்தை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் பொது மருத்துவர் தனகீர்த்தி.

“நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் செவிலியர்கள் கை சுகாதாரத்தைப் பேண வேண்டும். நோயாளிக்கு என்ன மாதிரியான சேவை செய்தாலும், உடனடியாக அவர்கள் நன்றாகக் கைகளைக் கழுவ வேண்டும். தொற்று நோயாளிகள் மத்தியில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

அறுவை சிகிச்சைக் கூடங்களில் ரசாயனங்கள், நச்சுப் பொருள்கள் போன்றவற்றைக் கையாளும்போது அவசியம் கையுறை அணிய வேண்டும். எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், கதிர்வீச்சுத் துறை ஆகியவற்றில் பணியாற்றும் செவிலியர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது உடலில் கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி  இருக்கிறது என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனையுடன் கதிர்வீச்சுத் தாக்கத்தைக் குறைக்க வேண்டும்.

இரண்டு ஷிஃப்ட், விடுப்பு எடுக்காமல் பணிசெய்வது என்று தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளக் கூடாது. போதிய அளவு ஓய்வு, உறக்கம் இருந்தால்தான், நோயாளிகளிடம் செவிலியர்களால் கனிவுடன் பணியாற்ற முடியும். நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக நேரம் நின்றுகொண்டே பணியாற்றுபவர்களுக்கு நரம்புச் சுருள்நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால், பணி நேரங்களில் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கால்களுக்கான ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அவ்வப்போது பணிக்கு நடுவே சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மனதை இலகுவாக்கும் வகையில் குடும்பத்தினர் அல்லது சக பணியாளர்களுடன் சேர்ந்து பிக்னிக், சுற்றுலா செல்லலாம். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வது மனதுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.”

வந்தனை செய்வோம்...

ஜெனி ஃப்ரீடா - படங்கள்: வீ.சதீஷ்குமார்

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி
“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

ரவு படுக்கைக்குச் சென்ற பிறகும் தூக்கம் வராமல் அவதிப்படக் காரணம், `இன்சோம்னியா. ’ காலை நேரமாகியும் படுக்கையைவிட்டு எழ முடியாமல் அவதிக்குள்ளாக்குவது, `டிசேனியா’ (Dysania). இவற்றுக்கு மனஅழுத்தம், பதற்றம் போன்றவையே காரணம்.