Published:Updated:

ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி
ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி

ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி

பிரீமியம் ஸ்டோரி

தாய்ப்பால் என்பது இயற்கை, உயிர்களுக்கு அளித்த வரம். பெண் பூப்பெய்தும் முன்பிருந்தே தாய்ப்பால் சுரப்பிகள் மார்பில் வளர ஆரம்பிக்கின்றன. இவற்றுக்கான முன் தயாரிப்புகள் அந்தப் பெண் தன் தாயின் கருவில் இருக்கும்போதே ஆரம்பமாகின்றன. ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது இயல்பான அளவைவிட மார்பகங்கள் இரு மடங்கு வளர்ச்சி அடைகின்றன. குழந்தை பிறப்புக்குச் சற்று முன்னதாக, தாய்ப்பால் சுரப்பதற்கான தயார்நிலையில் தாயின் உடல் இருக்கும்.
 
குழந்தை பிறந்தவுடனேயே மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் ‘புரோலாக்டின் ரிலீஸிங் ஹார்மோன்’ சுரக்க, அது பிட்யூட்டரி என்ற நாளமில்லா சுரப்பியின் மீது அழுத்தம் தந்து ‘புரோலாக்டின்’ ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது. ‘புரோலாக்டின்’, ரத்தத்தில் கலந்து மார்பகத்தை அடைந்தவுடன், பால் சுரக்க ஆரம்பிக்கிறது. குழந்தைப்பேற்றின் போது சுரக்கும் மற்றொரு ஹார்மோனான ‘ஆக்ஸிடோசின்’, இந்தத் தாய்ப்பால் வெளியேற வழிவகை செய்கிறது. குழந்தை, தன் வாயால் மார்பகக் காம்புகளைச் சுவைக்கும்போது, மார்பகத்தின் நரம்புகள் தூண்டப்பட்டு அந்தச் செய்தி மூளைக்குச் செல்லும். அப்படிச் செல்கையில் மேலதிகமாக ‘புரோலாக்டின்’ மற்றும் ‘ஆக்ஸிடோசின்’ ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்தத் தருணத்தில் ஓர் அழகான சுழற்சி நிறைவடைந்து ‘லாக்டேஷன்’ (Lactation) என்னும் அற்புதம் கட்டமைக்கப்படுகிறது. இந்தச் சங்கிலியில் எங்கு தடை ஏற்பட்டாலும் தாய்ப்பால் உற்பத்தி பாதிக்கப்படும்.

ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி

சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்போதோ, தாயின் உடல்நிலையில் சில பிரச்னைகள் ஏற்படும்போதோ தாய்ப்பாலுக்கு பதில் புட்டிப்பால் அளிக்க நேரிடும். புட்டியில் ஓட்டை பெரிதாக இருப்பதால் பால் எளிதாகக் குழந்தையின் வாயை அடைகிறது. ஒருமுறை புட்டியில் அருந்திய குழந்தை அடுத்த முறை தாயின் மார்பகத்தில் தன்முயற்சியுடன் பாலை அருந்தச் சிரமப்படும். இதை, ‘நிப்பிள் கன்ஃப்யூஷன்’ (Nipple Confusion) என்கிறோம். தாய்ப்பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் இடையில் ருசியும் மாறுபடும். இதை ‘டேஸ்ட் கன்ஃப்யூஷன்’ என்கிறோம்.

பாலை உறிஞ்சுவதில் போதுமான அளவு அழுத்தம் இல்லாததால், தாயின் மார்பகக் காம்பில் உள்ள நரம்புகள் மூலமாக செய்தி மூளைக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. ‘ஆக்ஸிடோசின்’ மற்றும் ‘புரோலாக்டின்’ சுரப்பு குறைகிறது. இதனால், தாய்ப்பால் சுரப்பது குறைகிறது. பால் போதவில்லை என்று மீண்டும் புட்டிப்பால் கொடுப்பார்கள். இந்தநிலையில், பால் சுரப்பது முற்றிலும் குறைந்துவிடும். இதையே ‘லாக்டேஷன் ஃபெயிலியர்’ என்கிறோம்.

தாய்ப்பால் இல்லாத நிலை என்பது  நோயோ, குறைபாடோ அல்ல. ஒரு பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பெற்றால்கூட நான்கு பிள்ளைகளுக்கும் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கும் ஆற்றலை இயற்கை, தாய்க்கு வழங்கியுள்ளது. மார்பகத்தின் அளவுக்கும் பால்சுரக்கும் அளவுக்கும் தொடர்பில்லை. சிறிய அளவிலான மார்பகம் இருந்தாலும் போதுமான அளவு பால் சுரக்கவே செய்யும்.

 ‘சோர் நிப்பிள்’ (Sore nipple) எனப்படும் பிரச்னையில், காம்பில் வலி, வெடிப்பு ஏற்படும். அநேகமாக இப்போது அனைத்துப் பெண்களுமே தன் குழந்தைப்பேற்றில் ஒருமுறையாவது இந்தப் பிரச்னையை சந்திக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் தாய்ப்பால் புகட்டும்போது சரியான நிலையைக்  கடைப்பிடிக்காததுதான்.

ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி

தாய், நாற்காலியிலோ, சுவரிலோ முதுகை நன்றாக ஒட்டியபடி வசதியாகச் சாய்ந்து, கால்களை நீட்டி அமர வேண்டும். குழந்தையின் தலையைத் தாங்கியிருக்கும் கைக்குக் கீழே ஒரு தலை யணையை வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் முகம், தாயின் மார்பின் அருகில் இருக்க வேண்டும். காம்பின் முழுப்பகுதியும் மார்பகத்தின் பெரும்பான்மையான பகுதியும் குழந்தையின் வாயினுள் நன்கு பொருந்தியிருக்க வேண்டும். பால் அருந்தும்போது குழந்தையின் வயிற்றின் மீது கையைவைத்துப் பார்த்தால், பாத்திரத்தில் பால் விழுவது போன்ற உணர்வு தெரியும். 15 முதல் 20 நிமிடங்களில் ஒரு பக்கத்தில் சுரக்கும் பால் முழுவதையும் குழந்தையால் அருந்திவிட முடியும். மறுபுறத்திலும் இதேபோல முழுவதுமாகக் கொடுத்து முடிக்க வேண்டும். இதுவே சரியான பாலூட்டும் முறை. இவற்றில் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டால், குழந்தை காம்பின் நுனியில் வாய்வைக்கிறது என்று அர்த்தம்.

இப்படி வலுவின்றி பாலை உறிஞ்சுவதால், மார்பகத்தில் சில இடங்களில் பால் கட்டிக்கொள்ளும். காம்பிலும் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் காய்ந்து போகும். எளிதில் கிருமித்தொற்று ஏற்பட்டு, ஏற்கெனவே பால் கட்டியுள்ள இடத்தில் சீழ் (Breast abscess) கோத்துக்கொள்ளும். வலி, காய்ச்சல், நடுக்கம் போன்றவை ஏற்படும். அறுவைசிகிச்சை செய்யக்கூட நேரிடலாம். படுத்தநிலையில் பால் ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

‘சோர் நிப்பிள்’ பிரச்னையைத் தடுக்கவும் குணப்படுத்தவும் எளிய வழி ஒன்று உண்டு. பால் கொடுத்து முடித்து குழந்தை வாயை எடுத்தவுடன் காம்பை உள்நோக்கி அழுத்தினால், சிறிதளவு பால் வரும் (Hind milk). அதைக் காம்பின் மேலே தடவுவது காம்பு வெடிப்புக்குச் சிறந்த மருந்து. மேலும் காம்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சோப் பயன்படுத்தக் கூடாது. வெறும் நீரால் கழுவினாலே போதும். தாய், தளர்வான பருத்தி உடைகளையே அணிய வேண்டும்.

 குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு நீர்ச்சத்து, எதிர்ப்பாற்றல் மிகுந்த சீம்பால் (Colostrum) சுரக்கும். இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். பல தடுப்பூசிகளின் ஆற்றலை இந்தச் சீம்பால் ஒருங்கேகொண்டிருக்கிறது. இந்தச் சீம்பால் மிகக் குறைவான அளவே சுரப்பதால், தாய் பிரசவித்த வேதனைகளையும் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் அதிக நேரம் பால் ஊட்டுவது அவசியம். 

பாலூட்டுவது பெண்களுக்குமே மிகச் சிறந்த விஷயம். பின்னாள்களில் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பைக் குறைக்கிறது. புட்டிப்பால் அளிப்பதால் வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்னைகளிலிருந்து குழந்தைகளைக் காப்பதால் குழந்தை வளர்ப்பும் எளிதாக அமைகிறது.

ஒரு குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். அதுவரை தாயின் உடல் நிலைக்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படும். கருவுற்றிருக்கும்போது, முதல் மூன்று மாதங்களில் சத்துள்ள உணவு எடுப்பதில் காட்டும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்து விடுகிறது. சத்து மாத்திரைகளைச்  சரியாக எடுக்காததால் ரத்தச்சோகை, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிறிய காயங்களினால்கூட எலும்பு முறிவு ஏற்படுவதைப் பாலூட்டும் தாய்மாரிடையே காண்கிறோம்.

படித்த, வேலைக்குப் போகும் பெண்கள்தாம் கிடைத்ததை உண்டு, கிடைத்த நேரத்தில் உறங்கி ஆரோக்கியத்தை இழக்கின்றனர். வேலைப் பளு, குடும்பச் சச்சரவுகள் போன்ற உளவியல் காரணங்களால்கூடத் தாய்ப்பால் சுரப்பது குறையலாம்.

இனிமையான குடும்பச்சூழல், ஆரோக்கியமான உணவுகள், குழந்தையைப் பற்றிய இனிமையான சிந்தனைகள், பெரிய வர்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனை... இவை இருந்தாலே தாய்ப்பால் என்னும் அமுதத்தைத் தடையின்றி அருந்தி அடுத்த தலைமுறை தழைக்கும்!

ஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம்! - டாக்டர் அகிலாண்ட பாரதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு