Published:Updated:

“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

உடலுக்கும் தொழிலுக்கும் - 9

லகம் முழுவதும் அழகுக்கலை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. ஒப்பனை என்பது திருமணம், விசேஷத் தருணங்களில் மட்டுமே செய்துகொள்வது என்றில்லாமல் அன்றாடம் வேலைக்குச் செல்வோரும்கூட இதில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள். ஒப்பனையின் மூலம் பொலிவான தோற்றத்தைத் தரும் அழகுக்கலை நிபுணர்களின் வாழ்க்கை, அதேபோல் அழகுடன் இருக்கிறதா? அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவியைச் சந்தித்தோம்.

“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

ஷீபா தேவி... 14 ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்கலை நிலையத்தையும், அழகுக்கலை பயிற்சிப் பள்ளியையும் நடத்திவருகிறார். “மேக்கப் என்பது சிறு வயதிலிருந்தே எனக்குப் பிடித்த ஒன்று. பள்ளியில் படிக்கும்போதே கலைநிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்கேற்போருக்கு நான் மேக்கப் போட்டுவிடுவேன். காலப்போக்கில் அழகுக்கலை மீது ஆர்வம் அதிகரித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவிபத்தாம் வகுப்புத் தேர்வு விடுமுறையின்போது, அடிப்படை அழகுக்கலை நிபுணர் பயிற்சியை முடித்தேன். ப்ளஸ் ஒன் விடுமுறையில் அட்வான்ஸ்டு பயிற்சி முடித்தேன். இப்படி சருமம், கூந்தல் என ஒவ்வொரு பிரிவுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டேன்.

எங்கள் குடும்பம் பாரம்பர்யமானது என்பதால், நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததில் யாருக்கும் விருப்பமில்லை. ஆனாலும் சண்டை போட்டு இந்தத் துறைக்கு வந்தேன். என் அப்பா மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருந்தார். அழகுக்கலைப் பயிற்சி பெற்றதுமே பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், இந்த வேலைகளைப் பார்ப்பேன். வீட்டில் என் அறையை பார்லராக மாற்றுவதற்கு அப்பாவிடம் 30,000 ரூபாய் வாங்கினேன். வீட்டில் பார்லர் நடத்தி அப்பாவிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தேன். அதோடு, நான்கு லட்ச ரூபாய் செலவில் வெறும் 100 சதுர அடியில் ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்தேன். பிறகு படிப்படியாக முன்னேறி இப்போது பார்லர், பயிற்சி மையம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற்று அழகுக்கலை பயிற்சி அளிப்பது என உயர்ந்திருக்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு இந்தத் துறையில் தொடர்வது பற்றி கணவர் வீட்டார் யோசித்தார்கள். ஒரு கட்டத்தில், இது மிகவும் பாதுகாப்பான துறை என்பதைப் புரிந்துகொண்டார்கள். இந்தத் துறையைப் பொறுத்தவரை பொறுமை அதிகம் தேவை. எந்த மனநிலையில் இருந்தாலும் வாடிக்கை யாளர்களைப் பொறுமையாகவே கையாள வேண்டும்.

“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

ஒரு வாடிக்கையாளர், ‘ஸ்டெப் கட்’ பண்ணிக்கொள்ள வந்தார். முடியின் நீளத்தை எந்தளவுக்குக் குறைக்கவேண்டியிருக்கும் என்பதைச் சொன்னதும், அவரும் சம்மதித்தார். ஆனால், எங்கள் ஊழியர் முடி வெட்டியதும் முடியின் நீளம் அதிகமாகக் குறைந்துவிட்டதாகக் கூறி, கோபத்தில் கத்தினார். அவரிடம் முடி வெட்டியதற்குப் பணம் தர வேண்டாம் என்று கூறிவிட்டு, அதே முடியை சற்று ஸ்டைலாக மாற்றினேன். அதனால் சந்தோஷப்பட்டவர், வலுக்கட்டாயமாகப் பணம் கொடுத்துவிட்டுச் சென்றார். காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை பார்லர் நேரம். வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்தால், இரவு 11 மணிவரைகூட நீளும். திருமண முகூர்த்தம் 6 மணிக்கு என்றால், நான் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அங்கே  இருக்கவேண்டியிருக்கும். அதனால் நள்ளிரவில்கூட கிளம்பிப் போயிருக்கிறேன். நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்வதால், கால்கள் மரத்துப்போய்விடும்; குடைச்சல் எடுக்கும். புருவம் திருத்துவது போன்ற வேலைகளைக் குனிந்துகொண்டே செய்வதால் முதுகு வலிக்கும்.  முக்கியமாக, நேரத்துக்குச் சாப்பிட முடியாது. உணவைத் தவிர்க்கவோ, தாமதமாகச் சாப்பிடவேண்டிய நிலைமையோ ஏற்படும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும்.

முடியை ‘ஸ்ட்ரெய்ட்டனிங்’ செய்யும்போது, கஷ்டமாக இருக்கும். இயற்கைக்கு எதிராக முடியின் அமைப்பை மாற்றி நேராக்க, ஆறு முதல் எட்டு மணி நேரம் பிடிக்கும். அவ்வளவு நேரம் செலவழிப்பதால், அடுத்த நாள் கையை உயர்த்தி முகம் கழுவ முடியாத அளவுக்குத் தோள்பட்டையில் வலி எடுக்கும். 

ஸ்ட்ரெய்ட்டனிங், ஹேர் கலரிங் செய்யப் பயன்படுத்தும் க்ரீம்களில்  இருக்கும் ரசாயனங்கள் கைகளில் அலர்ஜியை ஏற்படுத்தும். கிளவுஸ் போட்டாலும்கூட ஒவ்வாமை ஏற்படும். `ஸ்ட்ரெய்ட்டனிங்’ கருவி சில நேரங்களில் கையில்பட்டு சருமம் பொசுங்கிவிடும். மற்ற துறைகளைப்போலவே இதிலும் துன்பங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன. சில நேரங்களில் என் குடும்பத்தை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்குப் போக முடியாது. இதனால், பல நண்பர்களை இழந்திருக்கிறேன். விடுமுறை நாள்களில் வாடிக்கையாளர்கள் சிலர் வருவதாக புக் செய்திருப்பார்கள். அதற்காக என் சொந்த வேலையை ஒதுக்கிவிட்டுக் காத்திருப்பேன். ஒரே போன் காலில், ‘முக்கியமான வேலை... வர முடியாது’ என்று சொல்லிவிடுவார்கள். வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே மேக்கப்புக்கு புக் செய்த சூழலில், என் வீட்டில் ஏதேனும் பிரச்னை என்றாலும்கூட, அவர்களிடம் வர முடியாது என்று சொல்ல முடியாது.

2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது, திருவொற்றியூரில் ஒரு மணப்பெண்ணுக்கு மேக்கப் புக்காகி இருந்தது. ஊரெங்கும் வெள்ளம், சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கிப் போனது. மணப்பெண்ணுக்கு நீண்ட நாள்கள் கழித்துத் திருமணம்... அதைத் தவிர்க்கக் கூடாது என்று நினைத்தேன். காய்ச்சலுடன் இருந்த என் குழந்தையை தூக்கிக்கொண்டு திருமண மண்டபத்துக்குப் போய்விட்டேன். இரவில் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

என் மூத்த மகன் பிரசவ தேதிக்கு சில நாள்களுக்கு முன்பே பிறந்துவிட்டான். அப்போது 20,000 ரூபாய்க்கு ஒரு மேக்கப் புக் ஆகி இருந்தது. வேறு வழியில்லாமல் குழந்தை பிறந்த மூன்றாவது நாளே கணவர், குழந்தையுடன் பார்லருக்குப் போய்விட்டேன். குழந்தையை கணவர் கையில் கொடுத்துவிட்டு வாடிக்கையாளருக்கு மேக்கப் போட்டேன். என் இரண்டு பிள்ளைகளையும் பார்லரில் வைத்துத்தான் வளர்த்தேன். பிள்ளைகள் வளர வளர என் தொழிலும் வளர்ந்தது. வேறு துறைக்குச் சென்றிருந்தால், குழந்தை பிறந்ததும் என் கரியர் அங்கேயே தேங்கிப்போயிருந்திருக்கும். இந்த அளவுக்கு வந்திருக்க சாத்தியமேயில்லை. எத்தனை தடைகள், பிரச்னைகள் இருந்தாலும் அழகுக்கலை துறை எனக்கு ஒரு வரப்பிரசாதமே” என்கிறார் ஷீபா தேவி.

“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

எதிர்மறை அனுபவங்களால் சோர்ந்துபோகக் கூடாது!

அழகுக்கலை நிபுணர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளைத் தருகிறார் பொது மருத்துவர் செல்வராஜன்.


“அழகுக்கலை நிபுணர்கள் போன்ற நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு, கால்களிலிருந்து பிற இடங்களுக்கு ரத்தம் சீராகச் செல்லாது. அதனால் கால்களிலுள்ள நரம்புகள் விரிவடைந்து, கால் பகுதியில் ரத்தம் தேங்கிவிடும். இந்த நிலை தொடர்ந்தால் நரம்புச்சுருள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையின் நடுவே சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இரவில் தூங்கும்போது கால்களுக்கு அடியில் தலையணையை வைத்துக்கொண்டு கால்களைச் சற்று உயர்த்திவைப்பது நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, கால் நரம்புகள் சேதமடைவது தடுக்கப்படும். தொடர்ச்சியாக கால் மரத்துப்போவது, கூசுவது போன்றவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மிகவும் அவசியம். பொதுவாகவே ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஏதாவது சாப்பிட வேண்டும். பசி ஏற்படும்போது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். அந்த நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிலம் ரத்தத்துடன் கலந்து ஜீரணமாகிவிடும். தாமதமாகச் சாப்பிட்டாலோ, உணவைத் தவிர்த்தாலோ அமிலம் சுரப்பது அதிகரித்து வயிற்றில் எரிச்சல், புண் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். சாப்பிட நேரம் இல்லையென்றால், வயிற்றை காலியாக இருக்கவிடாமல் பழச்சாறு, பிரெட், பன், பிஸ்கட் போன்ற உடனடியாகச் சாப்பிடக்கூடிய எளிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஏ.சி இருப்பதால் தாகம் ஏற்படாது. ஆனாலும், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு, தூக்க விஷயத்தில் கவனம் தேவை.

அதிக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் தசைகள் தளர்ந்து சோர்வடைந்துவிடும். எனவே, அது போன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஒவ்வாமையை ஏற்படுத்தும் க்ரீம் அல்லது ரசாயனங்களைத் தவிர்ப்பது நல்லது. எல்லாத் துறைகளிலும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். எதிர்மறை நிகழ்வுகள் ஏதாவது ஏற்பட்டால், அடுத்த முறை அதுபோல நிகழாமல் தடுக்க அந்த அனுபவம் உதவும். அதனால் எதிர்மறையாக ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டால், சோர்வடைந்துவிடக் கூடாது.’’

வந்தனை செய்வோம்...

ஜெனி ஃப்ரீடா - படங்கள்: தே.அசோக்குமார்

“இந்தத் துறையில் துன்பங்களும் வலிகளும் அதிகம்!” - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

உளவியல் உண்மைகள்!

`உ
ணர்ச்சி வசப்படும்போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்’ என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா... நாம் உணர்வுகளின் பிடியில் இருக்கும்போது நமது `யோசிக்கும் மூளை’ செயலிழந்து, `உணர்வு மூளை’ மட்டுமே வேலை செய்யும். அதனால்தான், பல நேரங்களில் (காலை அவசரத்தில்) நாம் தேடும் பொருள் நம் கண்முன் இருந்தாலும் நமக்குத் தெரிவதில்லை.