Published:Updated:

`இரண்டு குழந்தைகளுக்குப் பின் 80.1% பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்கின்றனர்!’ - அமைச்சர் தகவல்

`இரண்டு குழந்தைகளுக்குப்  பின் 80.1% பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்கின்றனர்!’ - அமைச்சர் தகவல்
`இரண்டு குழந்தைகளுக்குப் பின் 80.1% பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்கின்றனர்!’ - அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 80.1 சதவிகிதப் பெண்கள் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்கின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2017-2018-ம் நிதியாண்டில் குடும்ப நலத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக சென்னை மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``குடும்ப நலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தற்போது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.6 சதவிகிதம் ஆகும்.

தமிழகத்தில் அரசு துணை சுகாதார மையங்கள் முதல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் வரை தமிழகம் முழுவதும் 13,882 மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட குடும்ப நல சேவைகள் வழங்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 23.26 லட்சம் பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 8,710 ஆண்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

28.98 லட்சம் தாய்மார்கள் கருத்தடை வளையங்கள் பொருத்திக்கொண்டுள்ளனர். அதன் மூலம் சுமார் 3 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. பிறப்பு விகிதங்கள் அதிகமாக உள்ள 21 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் சிறப்பு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம்கள் ரூ.2.16 கோடியில் நடத்தப்படுகின்றன. இதுவரை 619 சிறப்பு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம்கள் மூலம் 4,331 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். இதனால் 30 சதவிகித பிரசவ கால மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 80.1 சதவிகிதப் பெண்கள் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்" என்றார். சுகாதாரத் துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.