Published:Updated:

குறைப்பிரசவம் தடுக்கலாம்!

குறைப்பிரசவம் தடுக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
குறைப்பிரசவம் தடுக்கலாம்!

ஹெல்த்

குறைப்பிரசவம் தடுக்கலாம்!

ஹெல்த்

Published:Updated:
குறைப்பிரசவம் தடுக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
குறைப்பிரசவம் தடுக்கலாம்!

லக அளவில் வருடத்துக்கு ஒன்றரைக் கோடி குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கிறார்கள். அதிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் குறைப்பிரசவங்கள் நடக்கின்றன. இதற்குக் காரணம் என்ன... எப்படித் தடுப்பது... குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும்? தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் மகப்பேறு மருத்துவர் குந்தவி.

குறைப்பிரசவம் தடுக்கலாம்!

குறைப்பிரசவம்

பெண் கருவுற்ற நாளிலிருந்து பிரசவம்வரையிலான 40 வார காலத்தை, `கர்ப்பகாலம்’ என்கிறோம். சில பெண்களுக்கு, சில உடலியல் காரணங்களால் பிரசவம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே நிகழ்ந்துவிடும். 20 முதல் 34 வார காலத்துக்குள் நடைபெறும் பிரசவம், `குறைப்பிரசவம்.’ 34 வாரங்களுக்குப் பின்னர் 40 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளும்கூட குறைப்பிரசவக் குழந்தைகள்தாம். என்றாலும், 34 வாரங்களுக்கு முன்னரே பிறந்துவிடும் குழந்தைகளுக்குத்தான் ஆபத்து அதிகம்.

காரணங்கள்

* கர்ப்பப்பை முதிர்ச்சி ஏற்படும் 20 வயதுக்கு முன்னரோ அல்லது கர்ப்பப்பை பலவீனம் அடையும் 40 வயதுக்குப் பின்னரோ பெண் கருவுற்றால், கர்ப்பப்பை பலவீனம் காரணமாக, குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறைப்பிரசவம் தடுக்கலாம்!



* கர்ப்பிணியின் உடல் எடை குறைந்தது 40 கிலோ இருக்க வேண்டும். அது மேலும் குறையும்பட்சத்தில் குறைப்பிரசவம் ஏற்படலாம்.

* முதல் பிரசவம் குறைப்பிரசவமாக இருந்தால், இரண்டாவது பிரசவத்திலும் குழந்தை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

* கர்ப்பப்பை பிரச்னைகளுள்ள பெண்கள் அவற்றுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளாதபட்சத்தில்.

* கருவுற்ற பெண்ணுக்கு அதிக மன அழுத்தம், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்றவை.

குறைப்பிரசவம் தடுக்கலாம்!

* இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்மார்களுக்கு பெரும்பாலும் குறைப்பிரசவமே நிகழும்.

* கர்ப்பகாலத்தில் சிறுநீரகத் தொற்று ஏற்படுவது.

* கர்ப்பிணிகளுக்கு மஞ்சள்காமாலை, அம்மை போன்ற நோய்களால் உடல் பலவீனம் அடைவது.

* சில கர்ப்பிணிகளுக்கு தாம்பத்யத்தால் கர்ப்பப்பையில் ஏற்படும் பாதிப்புகள்.

* குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே பனிக்குடம் உடைவது.

* நஞ்சுக்கொடி இறக்கமும் காரணமாகலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்!

குறைப்பிரசவத்தில் ஒரு கிலோவைவிடக் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க நிறைய போராடவேண்டியிருக்கும். மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படலாம். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளாக இருப்பார்கள். நுரையீரல் முழுமை பெற்றிருக்காத காரணத்தால், ஆஸ்துமா பிரச்னை ஏற்படும். இன்குபேட்டரில் நீண்ட நாள்கள் வைத்திருக்கவேண்டி வருவதால் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். சில ஆண்டுகளுக்கு அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். இரண்டரை வயதுக்குப் பின்னரும் அவர்கள் பேசவில்லை, நடக்கவில்லையென்றால், மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை வழங்க வேண்டும்.

தடுக்கும் வழிமுறைகள்!

* கர்ப்பிணிகளுக்கு அவர்கள் உடல்நிலை காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை உரிய நேரத்தில் தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

குறைப்பிரசவம் தடுக்கலாம்!

* மருத்துவர்கள் பரிந்துரைக்கும் டவுண் சிண்ட்ரோம் தொடர்பான ஸ்கேன், அனாடமி ஸ்கேன், என்டி (NT) ஸ்கேன் போன்றவற்றை எடுத்து கருவின் நலனை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை ஸ்கேனில் ஏதேனும் மாறுபாடு இருந்தால், குறைப்பிரசவத்தைத் தடுக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.

* ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடல் எடையைச் சீராக அதிகரிக்க வேண்டும்.

* கர்ப்பகாலத்தில் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.

* நஞ்சுக்கொடி கீழே இறங்கியிருக்கிறது என்றால், அடிக்கடி தரையில் உட்கார்ந்து எழுவதைத் தவிர்க்க வேண்டும்.

* கர்ப்பிணியின் ரத்த அழுத்தம், ரத்தத்திலுள்ள உப்பின் அளவு, சர்க்கரையின் அளவு போன்றவற்றைச் சீரான இடைவெளியில் பரிசோதித்து ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* கர்ப்பப்பைவாயின் நீளம் 20 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனில் 2.5 செ.மீ-க்கு கீழ் இருந்தால், மருத்துவ ஆலோசனையின் பேரில் புரோஜெஸ்டிரான் மருந்து எடுத்துக்கொள்வது நல்லது.

* குறைப்பிரசவத்துக்கே வாய்ப்பிருக்கிறது என்று ஸ்கேன் மூலம் உறுதிசெய்யப்பட்டுவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளலாம். இது கருவிலிருக்கும் குழந்தையின் நுரையீரல் வளர்ச்சியைக் குறைப்பிரசவத்துக்கு முன் ஓரளவு முழுமை அடையச் செய்யும்.

குழந்தை பிறப்புக்குப் பின்...

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அதை அதிகரிக்க அவசியம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தேவைப்பட்டால் செயற்கை சுவாசம் அளிக்கவும், இதயத்துடிப்பு சமநிலையைச் சீராக்கவும் உரிய கருவிகள், வசதிகள் மருத்துவமனையில் இருக்கின்றனவா என்று உறுதிசெய்துகொள்ளவும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் முழுமையான உடல் உறுப்பு வளர்ச்சிக்கு மருத்துவர்கள் சொல்லும் சிகிச்சை முறைக்கு தாய்மார்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படும் என்பதால், கைகளைச் சுத்தம் செய்த பின்னரே தூக்க வேண்டும். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நேரடியாக பால் குடிக்கத் தெரியாது என்பதால், டியூப், ஸ்பூன், கங்காரு முறை பாலூட்டுதல் எனப் படிப்படியாகப் பழக்க வேண்டும்.

சு.சூர்யா கோமதி