Published:Updated:

கர்ப்பிணிகளுக்கு ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம்!

கர்ப்பிணிகளுக்கு ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம்!
கர்ப்பிணிகளுக்கு ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம்!

ர்ப்பிணிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் ரூ.4000 மதிப்பிலான `ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு, ரூ.4,000 மதிப்பிலான இரும்புச் சத்து டானிக் உள்ளிட்ட, ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய, இரண்டு பெட்டகம் வழங்கப்படும் எனக் கடந்த 2018 - 19-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்த உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக 1,001.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ``மூன்று மற்றும் ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு இரண்டு பெட்டகங்கள் வழங்கப்படும், இதன்மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 6 லட்சம் பேர் பயனடைவர்' என்றும்' கூறப்பட்டது. 

அந்தப் பெட்டகத்தில், `ப்ரோ பிஎல்' ஊட்டச்சத்து மாவு 1 கிலோ, 200 மி.லி இரும்புச் சத்து டானிக் பாட்டில், 1 கிலோ பேரீச்சம்பழம், 1 கிலோ ஆவின் நெய், ஆல்பெண்டசோல் (Albendazole) குடற்புழு நீக்க மாத்திரைகள், கோப்பை ஒன்று, துண்டு மற்றும் பொருள்கள் வைக்கும் பை ஆகிய 8 பொருள்கள் அடங்கியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

``இதன் மூலம் மகப்பேறின்போதும் நிகழும் இறப்புகளைத் தவிர்க்க முடியும். தமிழக அரசு அளித்துள்ள இந்த ஊட்டச்சத்து மாவு மற்றும் இரும்புச் சத்து நிறைந்த டானிக்குகள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும்'' என்றார் மகப்பேறியல் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷோபா.