Published:Updated:

உலர் திராட்சை... முருங்கைக்கீரை... கறிவேப்பிலை ஜூஸ்... ரத்தச்சோகைக்கு எளிய தீர்வுகள்!

ஊட்டச்சத்துள்ள, குறிப்பாக இரும்புச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடாதது, இரும்புச்சத்தை உடல் உட்கிரக்கும்தன்மை இல்லாதது, மாதவிடாய், நோய்த்தொற்று ஆகியவை ரத்தச்சோகை ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்.

உலர் திராட்சை... முருங்கைக்கீரை... கறிவேப்பிலை ஜூஸ்... ரத்தச்சோகைக்கு எளிய தீர்வுகள்!
உலர் திராட்சை... முருங்கைக்கீரை... கறிவேப்பிலை ஜூஸ்... ரத்தச்சோகைக்கு எளிய தீர்வுகள்!

லகம் முழுவதும் 162 கோடி பேருக்கு ரத்தச்சோகை இருக்கிறது. அதாவது மக்கள்தொகையில் 24.8 சதவிகிதம் பேரைப் பாதித்திருக்கிறது ரத்தச்சோகை. இந்தியர்களை அதிகம் அச்சுறுத்தும் பிரச்னைகளில் ஒன்று, ரத்தச்சோகை. மொத்த மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை பாதிப்பு உள்ளது என்கிறது ஓர் ஆய்வு. ஆண்களைக் காட்டிலும் பெண்களே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் 55 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை உள்ளது. அவற்றில் 39 சதவிகிதம் பேருக்குக் குறைவான அளவு பாதிப்பும், 15 சதவிகிதம் பேருக்கு மிதமான பாதிப்பும், 2 சதவிகிதம் பேருக்கு தீவிர பாதிப்பும் உள்ளது. கர்ப்பிணிகளில் 70 சதவிகிதம் பேரும் ரத்தச்சோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. கர்ப்ப கால உயிரிழப்புகளில் 40 சதவிகிதம் ரத்தச்சோகையால்தான் ஏற்படுகின்றன. 

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாகவே ரத்தச்சோகை ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இரும்புச்சத்து குறைபாடாகும். உடல் முழுவதிலும் ரத்தஓட்டத்துக்குத் தேவையான ஆக்சிஜனை சிவப்பணுக்கள்தாம் கொண்டுசெல்கின்றன.

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது ஆக்சிஜனை எடுத்துச்செல்வதிலும் பிரச்னை ஏற்படுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது சோர்வு, படபடப்பு, மூச்சடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் சோர்வுடனும் எந்த வேலையையும் செய்யப்பிடிக்காத மனச்சோர்வுடனும் வெறுப்புணர்வுடனும் காணப்படுவார்கள்.  ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் முகமும், கண்களும் வெளிறிய நிறத்தில் இருக்கும். தலைச்சுற்றல், தலைவலி, கை, கால்கள் குளிர்ந்த நிலையில் இருப்பது, நகங்கள் உடைவது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

ஊட்டச்சத்துள்ள, குறிப்பாக இரும்புச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடாதது, இரும்புச்சத்தை உடல் உட்கிரக்கும்தன்மை இல்லாதது, மாதவிடாய், நோய்த்தொற்று ஆகியவை ரத்தச்சோகை ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். 

இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்பட்டால் அது இதயத்தை மேலும் பலவீனப்படுத்தி, இதயச் செயலிழப்பு ஏற்படவும் வழிவகுக்கும். கருவுற்றிருக்கும் தாய்மார்கள் குறைமாத குழந்தைகளைப் பிரசவிக்கவும் ரத்தச்சோகையே காரணமாக இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு ரத்தச்சோகை பாதித்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


தடுப்பது எப்படி?

போலிக் அமிலம் நிறைந்த உணவுகளான கீரைகள், பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நாள்தோறும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, முருங்கைக்கீரை. கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்ற எளிதாகக் கிடைக்கக்கூடிய கீரை வகைகளிலும் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. இவற்றை ஒவ்வொரு நாளும் காலை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. பாதாம், முந்திரி, உலர் திராட்சையும் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  

இரும்புச் சத்தை உடல் எளிமையாக கிரகித்துக் கொள்ளத் துணையாக இருப்பது, வைட்டமின் சி சத்து.  ரத்தச்சோகையைக் குணப்படுத்தவும் இது உதவும். எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தக்காளி ஆகிய நமது நாட்டில் விளையும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை, இரும்புச்சத்துள்ள உணவுகளுடன் சேர்த்து உண்ணும்போது ரத்தச்சோகையிலிருந்து எளிதில் விடுபடலாம். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எளிய மருத்துவம்

எளிதாகக் கிடைக்கும் கறிவேப்பிலை, ரத்தச்சோகைக்கு அருமருந்து என்கிறது இயற்கை மருத்துவம். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்து, மிக்ஸியில் அரைத்துச் சாறெடுத்து அதை வடிகட்டிக் கொள்ளுங்கள். இனிப்புக்காகப் பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை... இவற்றில் ஒன்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு சிறிது எலுமிச்சைச் சாற்றையும் கலந்து தினமும் காலையில் அருந்துவது நல்லது..!  

- நா.நாச்சாள், இயற்கை வாழ்வியல் ஆலோசகர்.