Published:Updated:

வளரிளம் பருவ வயது வரம்பை 16 -ஆக மாற்றலாமா? -ஓர் அலசல்!

"கருத்தரித்தலில் தொடங்கி கர்ப்பகாலம், குழந்தை வளர்ப்பு வரை சிசு குறித்த எவ்வித அடிப்படை புரிதலும் இல்லாமல் இருப்பவர்கள் கர்ப்பமாகும்போது எதற்கெடுத்தாலும் சந்தேகம் வரும். உடல்நலத்தை எப்படிக் கவனித்துக்கொள்வது என அவர்களுக்குத் தெரிந்திருக்காது”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர், 16 வயதுச் சிறுமி ஒருவரைக் கடத்தி வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தார்  என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அத்துடன் நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் சபரிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சபரிநாதன் சார்பில் தண்டனையைக் குறைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்தவாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட சிறுமி `நான் கடத்தப்படவில்லை, விருப்பத்தின்பேரிலேயே இவரைத் திருமணம் செய்துகொண்டேன்' என்று கோர்ட்டில் தெரிவித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரை விடுதலை செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், `16 வயதுக்கு மேற்பட்டவர்கள், விருப்ப உறவு கொள்வது தவறல்ல' எனச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற பரிந்துரையையும் நீதிபதிகள் வழங்கியுள்ளார்கள். தற்போது போக்சோ சட்டத்தின்படி, வளரிளம் பருவத்துக்கான வயது வரம்பு 18 ஆக உள்ளது. அதை, 16 வயது என்று திருத்தி அமைக்கவேண்டும் என்பதே தற்போது உயர் நீதிமன்ற பரிந்துரையின் சாராம்சம் ஆகும்.

ஆனால், `வளரிளம் பருவத்துக்கு உட்பட்ட காலமாகக் குறிப்பிடப்படும், 18 வயது' என்பது மருத்துவ ரீதியான சில காரணங்களை அடிப்படையாக வைத்து குறிப்பிடப்படுபவை. அந்த வரைமுறையை மாற்றியமைப்பது, சம்பந்தப்பட்ட குழந்தையின் வாழ்வில் தவறான அல்லது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்' என்கிறார் மகப்பேறு மருத்துவர் சம்பத்குமாரி. அதற்கான காரணத்தை விரிவாக விளக்கினார் அவர்.

`எந்தவொரு குழந்தைக்கும், பருவமடையும் காலம் மிகவும் முக்கியமானது. அடிப்படையில் பருவமடையும் காலகட்டம் என்பது, 16 வயது. அதன்பிறகே பெண்ணுக்கு தன் உடல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உடல்ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளத் தொடங்குவார்கள். இதையெல்லாம் உள்வாங்கி தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காகத்தான் அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம்... அதாவது, 18 வயது என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 

பாலியல் தொடர்பான சந்தேகங்களும், உறவு கொள்வது பற்றிய தெளிவான அறிவும் பதின் பருவக் குழந்தைகளுக்குத் தேவை. அவை இருந்தால் மட்டுமே, அடுத்தகட்ட வாழ்க்கைச் சூழலுக்கு அவர்களை நாம் அழைத்துச் செல்ல முடியும். முக்கியமாக, பாதுகாப்பாக எப்படி உறவு கொள்வது, கருத்தடைச் சாதனங்கள் என்றால் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன, பாதுகாப்பாக உறவு கொள்வதென்றால் என்ன, பாதுகாப்பற்ற உறவு என்பது என்ன, பாதுகாப்பின்றி பாலியல் உறவு கொள்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும், பதின்பருவ கர்ப்பம் எவ்வளவு ஆபத்தானவை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். 

பதின்பருவத்தில் உறவு கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் எனப் புரியும்விதமாக அவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். மற்றவர்களைவிட மனநல ஆலோசகரால்தான் இவற்றை மிக எளிதாகச் சொல்லமுடியும். இவை அனைத்துக்கும் பிறகு, மிகமுக்கியமான ஒரு விஷயத்தை அவர்களுக்கு நாம் போதிக்கவேண்டும். ஒருவேளை பதின்பருவத்தில் அவர்கள் உறவு கொள்ள நினைத்தால், அதைப் பாதுகாப்பாக கையாள்வது எப்படி என்பதுபற்றி தெரிந்திருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில், புரிந்துணர்வில்லாமல் ஈடுபட்ட உறவால் அவர்கள் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.  
வளரிளம் பருவத்தில் கருத்தரிப்பதால் மிகமுக்கியமான மூன்று உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

* கர்ப்ப காலத்தில் முறையான உணவுமுறையைப் பின்பற்றாததால், இந்தியாவில் ஏறத்தாழ 70 முதல் 80 சதவிகித பெண்கள் ரத்தச்சோகை பாதிப்புடனேயே தங்களது கர்ப்பகாலத்தைக் கழிக்கின்றனர். மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை காரணமாக, பதின்பருவத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தச்சோகை ஏற்படுவதை ஆய்வுகள் தரும் தரவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். இப்படியாக, ரத்தச்சோகையை எதிர்கொள்ளும் இரண்டு சூழல்களும் ஏதேனும் ஒரு புள்ளியில் இணைந்திருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட வளரிளம் பருவத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, உடல்ரீதியாக மிகவும் பலவீனப்படுவார். 

* வளரிளம் பருவத்தில் கர்ப்பமானால், சூழல் காரணமாக உயர் ரத்தஅழுத்தப் பிரச்னை ஏற்படுவது இயல்பு. இது சிசுவின் உடலுக்கு, பாதிப்பை ஏற்படுத்தலாம். 

* வளரிளம் பருவம் என்பது சம்பந்தப்பட்ட பதின்பருவக் குழந்தை உடல்ரீதியாக நன்கு வளரவேண்டிய பருவம். எனவே உடல் ரீதியாக அவர்களுக்கு எலும்புகள் அனைத்தும் குறுகலாக இருக்கும்.

இதனால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு குறைவாகிவிடும். இளம்வயதில் சிசேரியன் குறித்த அடிப்படை புரிதலை அவர்களுக்கு வலுக்கட்டாயமாகத் தந்து, தாய் சேய் நலனைக் காக்க வேண்டிவரும்.  
உடல்நலனைவிட, அதிக பாதிப்பை அடைவது மனநலன். கருத்தரித்தலில் தொடங்கி கர்ப்பகாலம், குழந்தை வளர்ப்பு வரை சிசு குறித்த எவ்வித அடிப்படை புரிதலும் இல்லாமல் இருப்பவர்கள் கர்ப்பமாகும்போது எதற்கெடுத்தாலும் சந்தேகம் வரும். உடல்நலத்தை எப்படிக் கவனித்துக்கொள்வது என அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இதனுடன் சேர்த்து, சமூகத்தின் பார்வையையும் அவர்கள் கடக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது என்றால், கருக்கலைப்பை நாட வேண்டிய சூழல் ஏற்படும். பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்றால் ரத்தக்கசிவு, கர்ப்பப்பை தொற்று என அடுத்தகட்ட உடல்நலப் பிரச்னைகளை அவர்கள் சந்திக்கவேண்டும்.

மேற்கூறியவை யாவும், உடல்ரீதியான சிக்கல்கள் மட்டுமே. மனரீதியான சிக்கல்கள் ஏராளமாக இருக்கும் என்பதால், தாய்க்கும் சேய்க்கும் உடல்நலனில் வெவ்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கவே வளரிளம் பருவ கர்ப்பத்தைத் தவிர்க்குமாறு மருத்துவர்களாகிய நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறோம். 

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான மனநல ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். இன்றைய நிலவரப்படி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வளரிளம் பருவத்துக்கென தனி க்ளினிக் இருக்கிறது. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளன. எனவே, அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்தவேண்டும். இதைச் செய்வதுதான், இன்றைய சூழலில் அடிப்படைத் தேவை" என அழுத்தமாகச் சொல்கிறார் சம்பத்குமாரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு