Published:Updated:

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மென்சுரல் கப்பை பொருத்திவிட்டால் கப்பில் சேகரிக்கப்படும் ரத்தம் வெளியே கசிய வாய்ப்பே இல்லை.

Published:Updated:

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மென்சுரல் கப்பை பொருத்திவிட்டால் கப்பில் சேகரிக்கப்படும் ரத்தம் வெளியே கசிய வாய்ப்பே இல்லை.

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மாதவிடாய் நேரத்தில் நாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்தான், தற்போது பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது. அதே நேரம், இந்த மென்சுரல் கப் யாரெல்லாம் பயன்படுத்தலாம்; அதை எப்படிப் பயன்படுத்துவது; எப்படிச் சுத்தம் செய்வது, அது உள்ளே போய்விடுமா என்பது போன்ற குழப்பங்களால் பல பெண்கள் மென்சுரல் கப் பயன்படுத்துவதற்கு தயங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் தயக்கங்களைப் போக்கும்வண்ணம், மென்சுரல் கப் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கெளரி மீனா.

மென்சுரல் கப் என்பது என்ன ?

``மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன. துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை. ஆனால், மென்சுரல் கப் என்பது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம், அரிப்பு, நாப்கின்களால் உண்டாகும் அலர்ஜி போன்றவை வராது என்பதுதான் மென்சுரல் கப்பின் ப்ளஸ்.'' 

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மென்சுரல் கப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் ?

``குத்துக்கால் இட்டோ, ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை கழிப்பறையின் மீது வைத்து கால்களை நன்றாக அகற்றி, மென்சுரல் கப்பின் வாய்ப்பகுதியை அழுத்தி 'c' போன்று மடித்து பிறப்புறுப்பின் உள்ளே பொருத்திக்கொள்ள வேண்டும். சரியாக நீங்கள் பொருத்திவிட்டால் கப்பில் சேகரமாகும் ரத்தம் வெளியே கசிய வாய்ப்பே இல்லை. மென்சுரால் கப் பயன்படுத்த ஆரம்பிக்கும் புதிதில், 'சரியாகத்தான் பொருத்தியிருக்கிறோமா' என்ற சந்தேகம் வந்தால், நாப்கினையும் வைத்துக்கொள்ளுங்கள். மென்சுரல் கப்பை  5 மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியே எடுத்துச் சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.''

மென்சுரல் கப்பை எப்படிச் சுத்தப்படுத்துவது ?

``5 மணி நேரத்துக்கு ஒருமுறை, மென்சுரல் கப்பில் இருக்கிற ரத்தத்தை அப்புறப்படுத்தும்போதும், அதைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் முழுதும் பயன்படுத்திய பின்னர், கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்து, மீண்டும் மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சுத்தம் செய்யப்பட்ட கப்பை பத்திரமாக ஒரு துணியிலோ அதற்கென கொடுக்கப்பட்ட பைகளிலோதான் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் வைத்து, பிறகு பயன்படுத்தினால், தொற்றுக் கிருமிகளால் அலர்ஜி ஏற்படலாம்.'' 

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மென்சுரல் கப்பை யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?

``திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருமணமாகாத பெண்களுக்கு என பிரத்யேக மென்சுரல் கப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

திருமணமாகாத பெண்களுக்கு, பிறப்புறப்பில் மென்சுரல் கப்பை பொருத்துவது சிரமமாக இருக்கிறது என்றால், நாப்கினையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

குழந்தை பெற்ற நேரத்தில் பிறப்புறுப்பு பாகம் அதிகமாகப் புண்பட்டு இருக்கும் என்பதால், அப்போது மென்சுரல் கப்பை தவிர்த்து விடுங்கள். 

நீள நீளமாக நகம் வைத்திருப்பவர்கள் பென்சுரல் கப்பை வைக்கும்போது, பிறப்புறுப்பில் காயம் ஏற்படும் தவிர, நகங்களில் இருக்கிற அழுக்கு, அந்தக் காயங்களில் பட்டால் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படலாம். அழகுக்காக நகம் வளர்க்கிற பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.'' 

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

மென்சுரல் கப் வாங்கும்போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?

``மென்சுரல் கப் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கிறது . இதன் விலை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்குள்தான் இருக்கும். 'S, M, L, XL, XXL' போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. திருமணமாகாத பெண்கள் 'S' என்ற அளவில் வாங்கினாலே போதுமானது. மற்றவர்கள் முதலில் 'M' என்ற அளவை வாங்கி முயற்சி செய்யலாம். ரொம்ப இறுக்கமாகவோ, தளர்வாகவோ உணர்கிறீர்கள் எனில் அளவில் மாற்றம் செய்து கொள்ளலாம்.''

மென்சுரல் கப் உடலுக்குள் சென்றுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்களே... அது உண்மையா?

``நிச்சயமாக இல்லை. கப்பில் உள்ள அழுத்தம் நாம் பொருத்திய இடத்தைவிட்டு நகரவிடாது என்பதால் வீண் பயம் வேண்டாம். அதேபோல, கப்பில் சேகரிக்கப்படும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றுவிடும் என்ற வதந்தியையும் நம்ப வேண்டாம். மென்சுரல் கப் கால மாற்றம் மட்டுமல்ல, பாதுகாப்பான மாற்றமும்கூட.'' 

மென்சுரல் கப்புக்கும் டேம்பான்ஸுக்கும் என்ன வித்தியாசம் ?

மென்சுரல் கப் எப்படிப் பயன்படுத்த வேண்டும்... மருத்துவரின் விளக்கம்! #MenstrualCup

``டேம்பான்ஸ் என்பது பருத்தியால் செய்யப்பட்ட நாப்கின் போன்றதுதான். டேம்பான்ஸ்ஸில் உள்ள பருத்தி ஈரத்தை உறிஞ்சு வைத்துக்கொள்ளும். நாப்கின் மாற்றுவது போன்று நான்கு மணிநேரத்துக்கு ஒரு முறை டேம்பான்ஸை மாற்றுவது அவசியம். முழுக்க முழுக்க காட்டன் என்றாலும், பிறப்புறுப்புக்குள் பொருத்தும்போது எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் டேம்பான்ஸை உடலில் பொருத்தியிருக்கும்போது அது உடலில் பொருத்தியிருக்கிறோம் என்ற எண்ணத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். உடலில் நீண்ட நேரம் இருப்பின் அலர்ஜி, அரிப்பு, வறட்சித்தன்மை போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மென்சுரல் கப்பை பொருத்தவரை சிலிகான் மெட்டீரியல் என்பதால் உடலில் பொருத்திய பின் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு குறைவு. மென்சுரல் கப்பை பொருத்துவதால் எந்த அசெளகரிமும் ஏற்படாது. சுத்தமாகக் கழுவி பயன்படுத்துவதால் அலர்ஜி போன்றவற்றையும்கூட தடுக்க முடியும்.''