Published:Updated:

இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி! #LifeStartsAt40 #நலம்நாற்பது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி! #LifeStartsAt40 #நலம்நாற்பது
இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி! #LifeStartsAt40 #நலம்நாற்பது

``சின்ன காய்ச்சல்னாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடி, கண்ட கண்ட மாத்திரையை முழுங்குறாங்க. ஊசியைக் குத்திக்கிறாங்க. ஆனா, நான் எதுக்கும் ஆஸ்பத்திரி பக்கம் போனதில்லை.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இளம் வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு என்று வந்து பயமுறுத்துகிறது. காரணம், சாப்பாட்டு முறை, உடல் உழைப்பு இல்லாமை, வேலைப்பளு தரும் மனஅழுத்தம் ஆகியவைதாம். ஆனால், 60 வயதுக்கும் மேல் கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் பலரும் இன்னமும் நோய்நொடி இல்லாமல், கண்ணுக்குக் கண்ணாடிகூட போடாமல் 'ஜம்'மென்று வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒருவர்தான் பொன்னம்மாள் பாட்டி. 'வயது 75-க்கு மேல் இருக்கும்' என்கிறார். ஆனால், அவருக்கு எந்த நோயும் இல்லையாம். "மழைக்குக்கூட ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்கினதில்லை கண்ணு" என்று 'கெக்கேபிக்கே'வென சிரிக்கிறார்.

இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி! #LifeStartsAt40 #நலம்நாற்பது

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள செல்லரபாளையம்தான் பொன்னம்மாளின் ஊர். வீட்டில் வேலையாக இருந்த அவரைச் சந்தித்து, "ஃபிட்னஸ் ரகசியம் சொல்லுங்க?" என்றோம். நாம் சொல்வது புரியாமல், 'ஙே' என்று விழித்தார். "உங்களுக்கு எந்த வியாதியும் இல்லையாமே, அந்த ரகசியத்தை சொல்லுங்க ஆத்தா!" என்று கேட்டோம். "இதானா நீ கேட்ட சேதி. என்னோட கணவர் பேரு குப்பன். எங்களுக்கு ரெண்டு பசங்க, மூணு பொம்பளை புள்ளைங்க பொறந்தாங்க. ரெண்டு பசங்களும் தவறிட்டாங்க. மூணு பொம்பளை புள்ளைங்களையும் ஊரோட கண்ணடையுற மாதிரி நல்ல இடங்கள்ல கட்டிக்கொடுத்தாச்சு. நானும், என் கணவரும்,‘வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாவு’ன்னு வாழ்ந்துகிட்டு இருக்கோம். மாரியாத்தா புண்ணியத்துல எனக்கும் என் கணவருக்கும் எந்த நோவும் இல்லை. ஒரு காய்ச்சல், தலைவலின்னுகூட நான்  அசந்துமசந்து படுத்ததில்லை. அதுக்குக் காரணம், 50 வயசுவரைக்கும் சாப்பிட்ட தெம்பான சாப்பாடுதான். அப்போ கம்பங்களி, கம்பஞ்சோறு, கேழ்வரகு களி, சோளச்சோறு, கேப்பைக்களினு நாங்க சாப்புட்ட நல்ல சாப்பாடுதான், இன்னைக்கும் எங்களைத் திடகாத்திரமா வச்சிருக்கு. உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி, சோளத்தை வறுத்துப்போட்டு பணியாரம் சுட்டுத் திங்குறதுன்னு நாங்க சாப்பிட்ட சாப்பாடு அப்படிப் பிரமாதமா இருக்கும். அதெல்லாம் நாக்குக்கு ருசியாவும் இருக்கும். உடலுக்கு எந்தக் கெடுதியும் செய்யாது; சத்தையும் கொடுக்கும்.

இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி! #LifeStartsAt40 #நலம்நாற்பது

அப்புறம் இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, ஊருணி கெளுத்தி மீனுன்னு நாங்க பதமா சாப்புட்ட சாப்பாடே தனிரகம். இப்ப ரேஷன் கடையில கெடைக்கிற பருப்பு வேகவே மாட்டேங்குது. ஆனா, நாங்களே சொந்தமா பருப்பை விளைவிச்சு, அதைச் செம்மண்ல உருட்டி காயப்போட்டு, அதைத் திருகையில உடைச்சு, கிடைக்குற பருப்பை வச்சு, வீட்டுல விளைஞ்ச நாட்டுக் கத்திரிக்காயைப் போட்டு குழம்பு வச்சு, கம்பஞ்சோத்தோடு பிசைஞ்சு சாப்பிட்டா, எட்டூருக்கு மணக்கும். அதேபோல, உணவுப் பொருள்களைத் திருகை, அம்மி, ஆட்டுக்கல்னு உடல் உழைப்பை பயன்படுத்தித்தான் தயாரிப்போம். இப்போ, எல்லாத்துக்கும் மெஷின். 10 கிலோமீட்டர் தூரம்னாலும் நடந்தே போவோம். இப்பவும் அப்படிதான். ஆனா, இப்ப உள்ள பிள்ளைங்க, பக்கத்து தெருவுல இருக்கிற கடைக்குப் போகக்கூட வண்டி கேக்குதுங்க. அப்புறம்,' சின்ன வயசிலேயே அதுவருது, இதுவருது'னு புலம்பினா எப்படி?

இள ஆட்டுக்கறி, காட்டுக்கோழி, கெளுத்தி மீனு... ஆச்சர்யமூட்டும் பொன்னம்மாள் பாட்டி! #LifeStartsAt40 #நலம்நாற்பது

அதேபோல், சின்ன காய்ச்சல்னாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடி, கண்ட கண்ட மாத்திரையை முழுங்குறாங்க. ஊசியைக் குத்திக்கிறாங்க. ஆனா, நான் எதுக்கும் ஆஸ்பத்திரி பக்கம் போனதில்லை. சின்ன புள்ளைங்களுக்கு செரிமானம் ஆயி, நல்லா பசி எடுக்க ஓமத்தண்ணியக் கொடுப்போம். ‘வெளிய’ நல்லா போகணும்ன்னா, முருங்கை கசாயம் வச்சுக் கொடுப்போம். உடல்சூட்டைப் போக்க வெந்தயக் கசாயம் வச்சுக் கொடுப்போம். பெரியவங்களுக்கு வயிறு செரிமானம் ஆகாம பொருமலா இருந்துச்சுன்னா, சீரகத்தை தட்டிப்போட்டு கசாயம் வச்சுக் கொடுப்போம். வயித்துப் புண்ணுக்கு மணத்தக்காளி சூப்பு வச்சுக் கொடுப்போம். சளி பிடிச்சவங்களுக்கு காட்டு எலுமிச்சை, துளசி, நொச்சித்தழை, மஞ்சள் எல்லாத்தையும்போட்டு சூடுபறக்க கொதிக்கவிட்டு, அதுல ஆவி பிடிக்க வைப்போம். அதுக்கு நெஞ்சுசளிகூட அத்துக்கிட்டு வந்துரும். கல்யாண முருங்கை இலையை தோசை மாவோட அரைச்சு, தோசை சுட்டு சாப்பிட்டாலும் சளித்தொல்லைக்கு நல்லது. இவையெல்லாம் எங்க காலத்தோடு போயிடுச்சு. இப்போ தொட்டது தொண்ணூறுக்கும் ஆஸ்பத்திரி, மாத்திரை, மருந்துதான்.

நான் எத்தனை மணிக்கு ராவுக்கு லேட்டா படுத்தாலும், டாண்ணு அதிகாலை 4.30 மணிக்கு எழுந்திருவேன். அதேபோல, வீட்டுவேலைப் பார்த்துட்டு, ஆடு, மாடுகளை மேய்க்கப் போனேன்னா பொழுதுசாயதான் வீட்டுக்கு வருவேன். அப்புறம், இரவு சோலிகள முடிச்சுட்டு படுக்க 11 மணியாயிரும். 'அக்கடா'ன்னு படுத்தா, அப்படி ஒரு தூக்கம் வரும். உடலுக்கு நான் கொடுக்கும் வேலையால வர்ற அசதி, அப்படி என்னை அடிச்சுப்போட்டாப்புல தூங்க வைக்கும். இப்போ கோடி ரூபா கொட்டி, பங்களா கட்டி, மெத்தையில் படுக்கிறவங்களுக்கு மாத்திரை போட்டாதான் தூக்கம் வருதாமில்லே. பொழுதுபோக்க இப்பமாதிரி டி.வி பொட்டி அப்ப ஏது? அந்தி மசங்குன நேரத்துல அஞ்சாறு பொம்பளைங்க கூடி, ஊர்க்கதையை புரணியா பேசிக்குவோம். அது ஒரு சொகம். ஆயிரம் வரட்டும் தம்பி. அந்தக் கால வாழ்க்கைபோல வராது. என் கட்டை வேகுறவரைக்கும் உடலுக்கு உழைப்பைக் கொடுத்துகிட்டேதான் இருப்பேன். அதுவரை என்னை எந்த நோயும் அண்டமுடியாது. அப்படி ஒரு நோவு வருதுன்னா, அது என்னோட சாவாதான் இருக்கும், ஆமாம்" என்று கூறி, மறுபடியும் பெருங்குரலில் சிரிக்கிறார். 

இந்தக் கட்டுரையில் பொன்னம்மாள் பாட்டி, அனுபவத்தின் அடிப்படையில் தன் சொந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு