ஸ்பெஷல் 1
Published:Updated:

வேலு பேசறேன் தாயி!

டாக்டர் வடிவேலு...M.B.B.S.M.D.F.RC.S. எல்லாத்துக்கும் மேல !வடிவேலு ஓவியம்: கண்ணா

நகைச்சுவை புயலின் நவரச தொடர்

##~##

ஆஸ்பத்திரி ஞாபகங்கள அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துட முடியாது. காய்ச்ச, சீக்குனு ஏதாச்சும் ஒரு நோவுக்காக ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்கின அனுபவம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி சமீபத்துல நடந்த ஆஸ்பத்திரி அனுபவம் ஒண்ணு, என்னய நெகிழ வெச்சிருச்சு.

எங்க அம்மாவுக்குத் திடீர்னு ஒடம்பு நோவு. என்ன வியாதினு மட்டுப்படல. அம்மாவுக்கு ரெகுலரா வைத்தியம் பாக்குற வைத்தியரு, 'பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டுங்க'னு சொல்லிட்டாரு. என்னதேன் காய்ச்ச பிணினாலும்... அம்மா எப்பவும் சொணக்கந் தெரியாத அளவுக்குத் தைரியமா இருக்கும். ஆனா, இந்த முறை ரொம்ப சோந்து போச்சு. யாரைப் பாக்குறது, என்ன பண்றதுனு ஒண்ணும் புரியல. விசயந் தெரிஞ்சவங்ககிட்ட பேசினதுக்கு அப்புறந்தேன், மதுரையில இருக்குற பெரிய ஆஸ்பத்திரி ஒண்ணைக் கை காட்டினாக. 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல... அம்மா ஒடனடியா சரியாகணுஞ் சாமீ’னு வேண்டிக்கிட்டு, அந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போனேன்.

அத ஆஸ்பத்திரினு சொல்றதா... இல்ல, பங்களானு சொல்றதான்னு தெரியல. அம்புட்டு அழகு... அம்புட்டுச் சுத்தம். பெரிய பெரிய டாக்டருங்க தஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலிபீசு பேசிக்கிட்டு கோட்டுஞ் சூட்டுமா போய்க்கிட்டு இருந்தாக. அதை எல்லாம் பாத்த ஒடனே... அம்மாவுக்கு பயம் வந்துடுச்சு. ''நா ஒரு நிமிசங்கூட இங்க இருக்க மாட்டேண்டா தம்பி... நீ நம்மூட்டுக்குப் பக்கத்துல இருக்குற வழக்கமான வைத்தியர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போயிடு''னு பினாத்த ஆரம்பிச்சுட்டாக. ''சாதாரண டாக்டருங்க பாத்து உன்னையச் சரி பண்ண முடியாது. இந்த ஆஸ்பத்திரியிலதேன் ஒண்ணய கொணமாக்க முடியும்''னு சொன்னேன். ''இல்லடா... நாலெழுத்துப் படிக்கத் தெரியாத நாம, இவுககிட்ட எப்படிடா ஒடம்புக்கான நோவச் சொல்ல முடியும்?''னு வூட்டுக்கு கௌம்புறதிலேயே குறியா இருந்துச்சு அம்மா.

வேலு பேசறேன் தாயி!

எனக்கும் அந்த பயம் இருக்கத்தேன் செஞ்சுச்சு. ஆனா, அடுத்த அரை மணி நேரத்துல டாக்டருங்க எங்களக் கவனிச்ச கவனிப்பு இருக்கே... ஆத்தாடி... அப்புடி ஒரு கவனிப்பு. தலை தொடங்கி கால் வரைக்கும் அம்மாவோட அத்தன நோவையும் சல்லடை போட்டுச் சலிச்ச மாதிரி கண்டுபுடிக்க ஆரம்பிச்சுட்டாக. ஸ்கேனு, எக்ஸ்ரேனு நாலஞ்சு நர்ஸுங்க ஓடிக்கிட்டே இருந்துச்சுக. 'அம்மா, 'ஆ’ காட்டுங்க...’, 'அம்மா நல்லா மூச்சு வுடுங்க...’  'அம்மா கை, காலை நல்லா அசைங்க’னு பெத்த புள்ளைக மாதிரி அந்த டாக்டருங்க, எங்கம்மாவை கவனிச்ச விதம்... என்னைய கண்கலங்க வெச்சிருச்சு.

அட, எங்காத்தாவுக்கு மட்டுமில்ல... கையில கட்டப் பையி, கசங்கின கண்டாங்கிச் சேலைனு பக்கத்து ஊருகள்ல இருந்து வந்திருந்த அம்புட்டுப் பாமர சனங்களுக்கும் அதே கவனிப்புதேன், கரிசனந்தேன். ''நல்லவங்களாதேன் இருக்காங்கடா வேலு''னு எங்கம்மா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, அம்மாவுக்கு வைத்தியம் பாத்த டாக்டருங்க எல்லாரும் எங்கிட்ட வந்தாக. 'எப்படி நன்றி சொல்றது?'னு நான் தத்தளிச்சு நிக்க, அவுகளோ... ''அண்ணே, ஒங்ககூட சேந்து போட்டோ எடுத்துக்கலாமாண்ணே''னு கேட்டாக பாருங்க... இதுபோதும் தாயிகளா! ஒரு காமெடி நடிகனுக்கு, படிச்சவுக கொடுத்த இம்பூட்டு மரியாதை... என்னக் கலங்க வெச்சுருச்சு. எங்க அம்மாவுக்கு சந்தோசம் தாங்கல. அதுவே அவுக சீக்கைப் பாதி சரியாக்கிருச்சு.

இதேமாதிரி எனக்கு இன்னொரு ஆஸ்பத்திரி அனுபவமும் நடந்துச்சு. ஒரு தடவை மதுரைக்கு வந்திருந்தப்ப திடீர்னு வயித்து வலி. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தருக்குப் போன் பண்ணினேன். ''நீ நம்ம கிளினிக்குக்கு வந்துடு வடிவேலு... பத்து நிமிஷத்துல வலியை கிளியர் பண்ணி அனுப்பிடுவோம்''னு சொன்னாரு. கிளினிக்குக்குப் போனா... '’டாக்டர், ஆபரேசன்ல இருக்காரு... பத்து நிமிசம் வெயிட் பண்ணுங்க''னு நர்சம்மா சொன்னாக. ரிசப்சன்ல வெயிட் பண்ணினா, என்னைய மாதிரி நாப்பது, அம்பது பேரு ஒக்காந்து இருந்தாக. அம்புட்டுப் பேரும் டி.வி. பொட்டியப் பாத்துக்கிட்டு இருந்தாக. அதுல என்னோட காமெடி ஒண்ணு ஓடிக்கிட்டு இருந்துச்சு. 'ஏதோவொரு சேனல்ல ஓடுது’னு நெனச்சுக்கிட்டு நானும் ஒக்காந்தேன். பாத்தா விளம்பரம், செய்தினு எதுவுமே இல்லாம தொடர்ந்து என்னோட காமெடியாவே ஓடிக்கிட்டு இருந்துச்சு. அப்புறந்தேன் தெரிஞ்சது... என்னோட காமெடிகள எல்லாம் தனி சி.டி-யாவே போட்டு ஓட வுட்டிருக்காகனு!

வேலு பேசறேன் தாயி!

பத்து நிமிசம் கழிச்சு டாக்டர் கூப்புட, உள்ள போனேன். ''ஸாரி வடிவேலு''னு சொன்னவர்கிட்ட... வெளியே ஓடுன என்னோட காமெடி சி.டி-யைப் பத்தி கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு பாருங்க ஒரு பதிலு... அசந்துட்டேன். ''நான் பேருக்குத்தான் டாக்டர்... உண்மையில நீதான் வடிவேலு... எம்.பி.பி.எஸ், எம்.டி, எஃப்.ஆர்.சி.எஸ் எல்லாத் தையும் தாண்டின டாக்டர்.

இங்க வியாதியோட வர்றவங்க டாக்டரைப் பாக்கறதுக்குள்ள டென்ஷனாவாங்க. அதுலேயே நோய் இன்னும் அதிகமாயிடும். ஆனா, என்னோட கிளினிக்குல இந்தப் பிரச்னையே இல்ல. ரிசப்ஷன்ல காத்திருக்கும்போது ஒன்னோட காமெடியப் பாத்து... விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க. லோ பி.பி, ஹை பி.பி-னு வர்றவங்களுக்கு அந்தச் சிரிப்புலயே பாதி வியாதி குணமாகிடும்''னு அவரு சொல்லிக்கிட்டே போக, நான் புல்லரிச்சுப் போயிட்டேன் தாயிகளா! வயித்து வலியோட ஆஸ்பத்திரிக்குப் போனவன், மனசு நெறஞ்சு போயி வூட்டுக்கு வந்தேன்.

சிரிப்புத்தேன் சிறந்த வைத்தியம்னு சொல்லுவாக. அதை இக்கட்டான நேரங்கள்ல உணர்றப்போ இந்த மனசு அடையற சந்தோசம் இருக்கே... அப்பப்பா... அதுபோதும் தாயிகளா... இந்தப் பிறவிக்கு நான் சேமிச்ச சொத்து!

- நெறைய்ய பேசுவோம்...