Published:Updated:

''நான் டாக்டர் ஆகவில்லை... ஆனால், டாக்டர்களை உருவாக்குகிறேன்!''

நாடு போற்றும் நல்லாசிரியர்கள்! சா.வடிவரசு, இ.கார்த்திகேயன் படங்கள்: வீ.நாகமணி, ச.இரா.ஸ்ரீதர், தி.முத்துராஜ், எம்.தமிழ்ச்செல்வன்

''நான் டாக்டர் ஆகவில்லை... ஆனால், டாக்டர்களை உருவாக்குகிறேன்!''

நாடு போற்றும் நல்லாசிரியர்கள்! சா.வடிவரசு, இ.கார்த்திகேயன் படங்கள்: வீ.நாகமணி, ச.இரா.ஸ்ரீதர், தி.முத்துராஜ், எம்.தமிழ்ச்செல்வன்

Published:Updated:
##~##

ஆசிரியராகப் பணியாற்றி, தனது சிந்தனையாலும், ஒழுக்கத்தினாலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியை வகித்து, நாட்டுக்கும் ஆசிரியர் பணிக்கும் பெருமைகளைச் சேர்த்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அதன் காரணமா கவே அவருடைய பிறந்த நாளை (செப்டம்பர் 5) ஆசிரியர் தினமாக கொண்டாடுவதோடு... தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் நல்லாசிரியர்களுக்கான விருதும், தேசிய விருதும் வழங்கி கவுரவிக்கின்றன நமது அரசுகள்.

இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. அமைப்பு சார்பாக நாடெங்கிலும் இருந்து பல ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் மூன்று பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தேசிய விருது வாங்கியிருக்கும் அந்த சாதனை ஆசிரியைகளைச் சந்தித்தோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலெக்ஸ்சென்ட்ரா கலைச்செல்வி, எஸ்.பி.ஒ.ஏ ஸ்கூல் - ஜூனியர் காலேஜ், அண்ணா நகர், சென்னை:

''எங்கம்மா சுசிலா, கணக்கு டீச்சர். அவங்களோட இன்ஸ்பிரேஷன்லதான் நானும் கணக்கு டீச்சர் ஆனேன். திருநெல்வேலி பக்கத்துல இருக்குற மாவடி கிராமத்துல படிச்சு, எப்படியாவது டீச்சரா ஆகணும்னு சென்னை வந்த எனக்கு... எஸ்.பி.ஒ.ஏ. ஸ்கூல்ல வாய்ப்பு கொடுத்தாங்க.

33 ஆண்டுகளா வகுப்பறைகள்லதான் அதிக நேரம் இருந்திருக்கேன்.

''நான் டாக்டர் ஆகவில்லை... ஆனால், டாக்டர்களை உருவாக்குகிறேன்!''

மேத்ஸ்னாலே பல பசங்களுக்கும் பயம்தான். அது மேத்ஸ் டீச்சர் மேல வெறுப்பையும் உண்டாக்கிடும். ஆனா, நான் ஒவ்வொரு ஸ்டூடன்ட்டையும் என் குழந்தை மாதிரி நினைச்சு பாடம் நடத்துறதால, அவங்களோட தவறுகளுக்கு கோபப்படாம, அதைப் பக்குவமா திருத்துற மனசு கிடைச்சுது. வருங்கால தலைமுறையை உருவாக்கற ஆசிரியர் பொறுப்பை உணர்ந்து பாடம் எடுப்பேன். அதனாலதான் என்னோட பல மாணவர்களை சென்டம் வாங்க வைக்க முடியுது.

இந்த விருதுக்காக பலமுறை விண்ணப்பிச்சவங்க எல்லாம் இருக்காங்க. ஆனா, முதல் முறையே கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னோட மேத்ஸ் டீச்சரான எங்கம்மாவுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்!''

வசந்தி தியாகராஜன், சிஷ்யா ஸ்கூல், ஓசூர்:

''கிட்டத்தட்ட 30 வருஷமா நான் ஆசிரியை பணியில் இருக்கேன். 1999-ல தொடங்கிய சிஷ்யா பள்ளியில் நான் பிரின்சிபல் ப்ளஸ் கரஸ்பாண்டன்ட். மாணவர்களுக்கு பாடம் நடத்துறதோட மட்டும் நின்னுடாம, ஒவ்வொரு நாளும் என்னுடைய திறமைகளையும் நான் வளர்த்துகிட்டேன். அதனாலதான் என்னால கல்வியியல் பாடத்துல டாக்டரேட் முடிக்க முடிஞ்சுது.

''நான் டாக்டர் ஆகவில்லை... ஆனால், டாக்டர்களை உருவாக்குகிறேன்!''

சி.பி.எஸ்.இ-யோட 'சி.சி.இ’ பிரிவில் முதல் மாஸ்டர் டிரைனராக தேர்வுசெய்து, கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 500-க்கும் மேலான பள்ளி முதல்வர்களுக்கு நான் பயிற்சி கொடுத்திருக்கேன். பிறகு, 'மென்ட்டார்'ங்கற அடிப்படையில 11 பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பு எங்கிட்ட கொடுக்கப்பட்டது. இதை நான் சிறப்பாக செய்ததால்... 11 பள்ளிகளின் தரமும் உயர, அவங்கள்லாம் பரிந்துரைச்சதால 'மென்ட்டார்' விருது இப்ப கிடைச்சுருக்கு. ஏற்கெனவே, 2004-ல இதே சி.பி.எஸ்.இ. அமைப்புல நல்லாசிரியருக்கான தேசிய விருது வாங்கினேன். ஆக... இது ரெண்டாவது தேசிய விருது.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் லைஃப் ஸ்கில் பாடங்களை எடுக்குறேன். ஐந்து விதமான கற்பிக்கும் முறைகளை கையாண்டு பாடம் எடுக்குறேன். மதிப்பெண்களுக்காக மட்டும் மாணவர்களை விரட்டாம, அவங்க புரிஞ்சு உள்வாங்கிக்க மெனக்கெடுவேன். அதனாலதான் அவங்களோட ஃபேவரைட் டீச்சர் நான்!''

பத்மினி ஸ்ரீராமன், தி ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல், அடையாறு, சென்னை:

''தினமும் என் மகள் அனுஷாவை ஸ்கூல்ல விடுறதுக்காக கூட்டிட்டுப் போவேன். அவ அழுதுட்டே இருப்பா. அவளுடைய அழுகைய நிறுத்த முடியாம அந்த பள்ளியோட ஆசிரியை கிளாஸ் ரூம்க்கு வெளியிலேயே இருக்க சொல்வாங்க. நானும் தினமும் அப்படியே உட்கார்ந்திருப்பேன்.

ஒருநாள் அந்த ஸ்கூல் பிரின்சிபால் என்னை கூப்பிட்டு, 'நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’னு கேட்டாங்க. நான் அப்போ பி.ஏ. படிச்சிருந்ததால என்னை அந்தப் பள்ளியோட டீச்சரா வேலையில சேரச் சொன்னாங்க. இப்படித்தான் என்னுடைய ஆசிரியை பணி தொடங்கிச்சு. அதுக்கப்புறம் என்னுடைய வேலைக்கு தேவையான படிப்புகளை எல்லாம் படிக்கத் தொடங்கினேன். இப்போ கல்வியியல் பாடத்துல எம்.ஃபில் முடிச்சிருக்கேன். ஆரம்பத்துல எல்.கே.ஜி-க்கு டீச்சரா சேர்ந்த நான்... இப்போ பிரின்சிபாலா இருக்கேன்.

ஒருநாளும் புக்ல இருக்குறதை அப்படியே பசங்ககிட்ட கக்க மாட்டேன். ஒவ்வொரு பாடத்தையும் நடைமுறை வாழ்க்கையோட ஒப்பிட்டு நடத்துவேன். நியூஸ் பேப்பர்ல ஏதாவது பாடம் சம்பந்தப்பட்ட செய்தி வந்தா, மாணவர்கள்கிட்ட பகிர்ந்துக்குவேன். அதனாலயே என் வகுப்புனா ஸ்டூடன்ட்ஸுக்கு ரொம்ப இஷ்டமாயிடுச்சு. விருது அறிவிப்புக்காக அவங்க எல்லாரும் என்னை வாழ்த்தினப்போ, 'நீங்க எதிர்காலத்துல வாங்கப் போற வெற்றிகள் எல்லாமே எனக்கு விருதுதான்!’னு சொன்னேன். அதுக்கான என் உழைப்பை கொடுத்துட்டே இருப்பேன்!''

''நான் டாக்டர் ஆகவில்லை... ஆனால், டாக்டர்களை உருவாக்குகிறேன்!''

தமிழகத்தின் பிற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களில் ஒருவராக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியர் சி.எஸ்.குமுதம், தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவர் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

''என்னோட சொந்த ஊரு... புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி. எனக்கு ஆறு தங்கச்சிங்க, ஒரு தம்பி. நான்தான் வீட்டுக்கு மூத்தபிள்ளை. எங்கம்மா, அப்பா ரெண்டு பேருமே ஸ்கூல் டீச்சர்ஸ். 1966-ல காமராஜர் தொடக்கப் பள்ளினு சொந்தமா ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. டாக்டராகணும்கறதுதான் என்னோட லட்சியம். ஆனா, 'அதுக்கு நிறைய செலவாகும்... உன் தங்கச்சிகளையும் படிக்க வைக்கணும் இல்லையா..?’னு அப்பா சொல்ல, டீச்சர் டிரெயினிங் சேர்ந்து ஆசிரியை ஆயிட்டேன்.

அறிவியல் பாடத்துல மனித உடற்கூறுகள் பாடம் நடத்தும்போது கறிக்கடைக்குப் போயி ஆட்டு இதயம், பல் அடுக்குகள், கண் போன்ற உறுப்புகளை வாங்கி வீட்டுக்குக் கொண்டுவந்து கழுவி, மறுநாள் ஸ்கூலுக்கு கொண்டு போயி அதையெல்லாம் வெச்சு பாடம் நடத்துவேன். நுரையீரலைக் கொண்டு வந்து ஊதிக்காட்டி சுருங்கி விரியறத சொல்லிக் கொடுப்பேன், இதனால பாடம் ஈஸியா புரியும்.

எங்க அம்மா, அப்பா, தங்கைகள், தங்கை கணவர்கள், என் பொண்ணு, கணவர் எல்லாரையும் சேர்த்து எங்க வீட்டுல மொத்தம் 11 ஆசிரியர்கள். 2009-ல மாநில அரசோட ராதாகிருஷ்ணன் விருதும், இந்த வருஷம் தேசிய நல்லாசிரியர் விருதும் வாங்கிருக்கேன்.

டாக்டராக நினைச்ச நான், ஆசிரியரா ஆன தால... டாக்டர்கள், இன்ஜினீயர்கள், தொழிலதி பர்கள், தலைவர்கள்னு பலரையும் உருவாக்கற பாக்கியம் கிடைச்சுருக்கு!'' என்கிறார் பெருமிதத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism