செயற்கை கருத்தரிப்பில் குழந்தை பெற்றுக்கொள்ள வயது வரம்பு நிர்ணயித்திருப்பது, தனிமனித உரிமையை பாதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

60 வயது நிரம்பிய ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ரவிக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 2 ஆண்டுகள் குழந்தை பிறக்காத காரணத்தால் 2017-ம் ஆண்டிலிருந்து ரவியும் அவரின் இணையரும் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் வயது வரம்பு இருப்பதால், தம்பதியரால் சிகிச்சையைத் தொடர முடியவில்லை. அதனால் வயது வரம்பை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அய்யாவிடம் பேசினோம். அவர், ``திருமணமும், குழந்தை பெறுதலும் தனிநபர் உரிமை. இந்திய சட்டம் திருமணம் செய்துகொள்வதில் எந்தவித வயது வரம்பையும் விதிக்கவில்லை. ஆனால், Assisted Reproductive Technology (ART) Regulation Act 2021 சட்டத்தின்படி, செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறும் உரிமை 21 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும் மட்டுமே உள்ளதாக வலியுறுத்துகிறது. வயதான தம்பதிகளுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கும்.
ஆனால், இயற்கை முறையில் வாய்ப்பு இல்லாதபோது செயற்கையான முறையில் கருத்தரிப்புக்குச் செல்கிறார்கள். திருமணத்துக்கு அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்காத அரசு, குழந்தை பெறுதலிலும் வயது வரம்பை நிர்ணயிக்கக் கூடாது. வயதான தம்பதிகளின் குழந்தை வளர்ப்பில் அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.
இது குறித்து சென்னை கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மீனாவிடம் பேசினோம். அவர், ``வயது முதிர்ந்த பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறுதலில் சிக்கல் அதிகமாகவே உள்ளது. அவர்களுக்கு கரு முட்டைகள் குறைவாக இருக்கும்.
அந்த முட்டையில் உருவாகும் குழந்தை, வளர்ச்சியில்லாமல் பிறக்கலாம். வேறொருவரின் கரு முட்டையைக் கடன் வாங்கி கருத்தரிப்பு செய்ய முடியும். பெண்ணுக்கு வயதின் காரணமாக ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அவை பிறக்கும் குழந்தையை பாதிக்கவும் செய்யலாம். டெலிவரியின்போது வயதான பெண்ணின் உடல் சுகப்பிரசவத்துக்கு ஒத்துழைக்காது. அதனால் அறுவைசிகிச்சையின் மூலம்தான் குழந்தையை வயிற்றிலிருந்து எடுக்க முடியும்.

வயதான பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறக்கும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனில் குறைபாடு இருக்கலாம். வேறு சில உடல் பிரச்னைகளும் ஏற்படலாம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
பெண் உடல், இயல்பாகவே பிரசவத்துக்குப் பின் சோர்வுற்றிருக்கும் நிலையில், வயது முதிர்ந்த பிறகு பிரசவம், அதுவும் செயற்கை முறையில் என்றால் பெண்ணின் உடல் ஒத்துழைக்குமா என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம். குழந்தை முக்கியம்தான் ஆனால் தாயின் ஆரோக்கியம் அதைவிட முக்கியம்.