Published:Updated:

குழந்தைக்கு வசதியாக தாய்ப்பால் கொடுக்க உதவும் 5 நிலைகள்! #WorldBreastFeedingWeek

பா.கவின்

தாயிடமிருந்து சுரக்கும் சீம்பால் குழந்தைக்கான அமிர்தமாகும். அது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. முதலில் சிறிதளவே சுரக்கக்கூடிய சீம்பால்தான் குழந்தைக்கான அமிர்தமாகும். சீம்பால் சிறிதளவே சுரந்தாலும் குழந்தைக்குப் போதுமானதாகவே இருக்கும்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

இன்றைய நாகரிக உலகில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்மார்களின் நலனுக்கும் உகந்தது. தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம், எந்தெந்த நிலைகளில் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மீனா பிரகாஷ்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

"தாயிடமிருந்து சுரக்கும் சீம்பால் குழந்தைக்கான அமிர்தமாகும். அது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. முதலில் சிறிதளவே சுரக்கக்கூடிய சீம்பால்தான் குழந்தைக்கான அமிர்தமாகும். சீம்பால் சிறிதளவே சுரந்தாலும் குழந்தைக்குப் போதுமானதாகவே இருக்கும். அதைவிடுத்து, சீனித் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவற்றைக் கொடுப்பது நல்லதல்ல. பால் புகட்டும்போது தாய் நேராக உட்கார்ந்து, நிமிர்ந்த நிலையில் பால் கொடுப்பதுதான் சிறந்தது. பால் புகட்டுவதுகூட ஒரு கலையே. நடனத்தில் பல வகையான அபிநயங்கள் உள்ளதுபோல பால் புகட்டலிலும் ஐந்து வகைகள் உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.

பந்து நிலை (ஃபுட்பால் பொசிஷன்):

பந்து நிலை
பந்து நிலை
https://wicbreastfeeding.fns.usda.gov

குழந்தையை பந்தைப் பிடிப்பதுபோல உள்ளங்கையில் கழுத்துடன் தலையையும் சேர்த்துப் பிடிக்க வேண்டும். குழந்தையின் உடலை முன்னங்கையால் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, குழந்தையின் உடல் தாயின் அக்குள் பகுதியையொட்டிய பகுதியில் இருக்குமாறு அணைத்துக்கொண்டு பால் புகட்ட வேண்டும்.

சிசேரியன் அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கும் இந்தமுறை வசதியாக இருக்கும். இரட்டைக் குழந்தை பெற்றவர்கள் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் பால் கொடுக்க இந்த முறை உதவும். சுகப்பிரசவம் ஆனவர்கள் இடப்பக்கம் பால் கொடுக்கும்போது இம்முறையைப் பின்பற்றலாம்.

தொட்டில் நிலை (கிரேடில் பொசிஷன்):

தொட்டில் நிலை
தொட்டில் நிலை
https://wicbreastfeeding.fns.usda.gov

தொட்டில்போல கையை வைத்துக்கொண்டு குழந்தையைப் பிடிக்க வேண்டும். மறுகையில் முன்னங்கைகளால் குழந்தையைத் தாங்கிக்கொண்டு பால் கொடுக்க வேண்டும்.

குறுக்குத் தொட்டில் நிலை (கிராஸ் கிரேடில் பொசிஷன்)

குறுக்குத் தொட்டில் நிலை
குறுக்குத் தொட்டில் நிலை
wikipedia.org - BruceBlaus

குழந்தையின் தலையை உள்ளங்கையாலும் உடலை முன்னங்கையாலும் தாய் பிடித்துக்கொள்ள வேண்டும். மார்பகத்துக்கு எதிராகக் குழந்தையைக் குறுக்குவாட்டில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மார்பகத்தைப் பிடித்துக்கொண்டு பால் புகட்ட வேண்டும்.

பக்க சாய்வு நிலை (சைடு லையிங் பொசிஷன்)

தாய்ப்பால்
தாய்ப்பால்
pixabay.com

சிசேரியன் செய்துகொண்டவர்கள், அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் குழந்தை பிறந்த சில தினங்கள் படுத்த நிலையில் பால் புகட்டலாம். ஒரு சாய்ந்து, தலையைச் சற்று உயர்த்திப் படுத்துக்கொண்டு, குழந்தையின் உடல் தாயின் உடலுடன்படும்படி அணைத்தபடி பால் கொடுக்க வேண்டும். இரவு நேரத்தில் இந்த நிலையில் பால் புகட்டலாம்.

படுக்கை நிலை (பேக் லையிங் பொசிஷன்)

படுக்கை நிலை
படுக்கை நிலை
pixabay.com

தலை மற்றும் தோள் பகுதிக்குச் சற்று உயரம் கொடுத்து தாய் படுத்துக்கொண்டு, தாயின் உடலில் குழந்தை முழுவதுமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு பால் புகட்ட வேண்டும். யாருக்கு எந்தமுறை வசதியோ அதன்படி பால் புகட்ட வேண்டும். குழந்தை 10 முதல் 20 நிமிடம் வரைப் பால் குடிக்கும் என்பதால், மிருதுவான தலையணையை அணை கொடுத்தால் தாய் அயர்ச்சி அடையாமல் இருக்க முடியும்.

பிள்ளை பெற்ற பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு இயல்பாக இருக்கிறதா?! வீட்டிலேயே  தெரிந்து கொள்ளலாம்!

ஒவ்வொரு முறை பால் புகட்டும்போதும் சுவாசிக்க ஏதுவாகக் குழந்தையின் மூக்கு மேல்நோக்கி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். சில குழந்தைகள் முழுமையாகப் பால் குடிக்காமல், குடிக்க ஆரம்பித்ததும் தூங்கிவிடுவார்கள். குழந்தை தூங்கிவிடாமல் இருக்க விரலால் குழந்தையை வருடிக்கொண்டே இருக்கலாம்.

தாய்ப்பால்
தாய்ப்பால்
pixabay.com

தாய்க்குப் பால் அதிகமாகச் சுரக்கும்பட்சத்தில் குழந்தை வேகமாகக் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்தநேரம் குழந்தைக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, சிறிதுநேரம் கழித்து கொடுக்க வேண்டும்.

குழந்தை வெறும் முலைக்காம்பில் மட்டும் வாய் வைத்து பால் அருந்தாமல், காம்பைச் சுற்றியுள்ள முகட்டையும் சேர்த்து வாயை வைக்குமாறு பழக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பால் அதிகம் சுரக்கும். தாய்க்கும் வலி எடுக்காது. குழந்தை பால் குடித்து முடித்து உள்ளே சென்ற காற்று வெளியேறி ஏப்பம்விடும் சத்தம் வரும்வரை தோளில்போட்டு மென்மையாகத் தட்டிக்கொடுக்க வேண்டும். பால் கொடுத்தவுடன் தொட்டிலில்போட்டு ஆட்டினால் மூக்கு வழியாகக் காற்று வெளியேறி ஆபத்தை விளைவிக்கலாம்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

தாய்க்குப் பால் சுரக்கவில்லை, குழந்தைக்குப் பால் போதவில்லை என்றால் நேர்மறை சிந்தனையுடன் யோசிக்க வேண்டும். `இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் அதிகம் நீர் ஊறும்' என்பதுபோல புகட்டப் புகட்டப் பால் சுரக்கும். குழந்தையின் தேவைக்கேற்ப பால் சுரக்கும். குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றாலும், மருத்துவர் ஒரு சில காரணங்களுக்காகத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் மட்டுமே மாற்று வழியை நாட வேண்டும். காம்பில் வெடிப்பு, உள்ளே இழுக்கப்பட்ட நிலை ஏற்பட்டவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மீண்டும் தாய்ப்பாலையே புகட்ட வேண்டும்'' என்கிறார் மருத்துவர் மீனா பிரகாஷ்.