Published:Updated:

``ஒவ்வொரு பீரியட்ஸ்க்கு அப்புறமும் ஒரு யூனிட் பிளேட்லெட் ஏத்தணும்!''- மகளுக்காகப் போராடும் தந்தை

ஆர்த்தி
ஆர்த்தி ( க.பாலாஜி )

கல்லீரல் செயலிழப்பு, நடக்க இயலாத நிலை, பித்தக்குழாய் பாதிப்பு என நோயின் பாதிப்பு ஒரு புறம். மரண வேதனை தரும் சிகிச்சை ஒரு புறம். இவற்றைக் கடந்து தன்னுடைய படிப்புக்காகவும் எதிர்காலத்துக்காகவும் வில்சன் நோயுடன் நித்தமும் போராடி வருகிறார் ஆர்த்தி.

"என்னோட வாழ்க்கையில இந்த நிமிஷம் மட்டும்தான் நிஜம். நாளைக்கு எப்படி இருக்கும்னு நான் இதுவர யோசிச்சுப் பார்த்ததே இல்ல. மரண விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்த எனக்கு வலியும் பயமும் பழகிப்போச்சு. ஆனாலும், என்னை நேசிக்கிற, எனக்காகவே உயிர் வாழுற அம்மா, அப்பாவுக்காக இன்னும் நிறைய நாள் உயிர் வாழணும்னு ஆசையா இருக்குக்கா. அவங்களுக்காக நான் ஏதாவது செய்யணும். நான் சம்பாதிச்சு எங்க அப்பாக்கு ஒரு சொக்காவாவது வாங்கித் தரணும்" - செயற்கையாக வயிற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் பித்தக்கழிவுப் பையை சுமந்துகொண்டு நடக்க முடியாமல் தவழ்ந்து வந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார் ஆர்த்தி.

சென்னை கிரீம்ஸ் வே பகுதியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து அவரைச் சந்தித்தேன். எதிர்காலத்தை எதிர் நோக்கும் விழிகள். பல வேதனைகளுக்குப் பிறகும் நாளைய பொழுது தனக்காக விடியும், எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை மிகுந்த பேச்சு.

பித்தக்குழாய் சிகிச்சைக்கு முன்பு ஆர்த்தி
பித்தக்குழாய் சிகிச்சைக்கு முன்பு ஆர்த்தி

ஆர்த்தி, 'வில்சன்' என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர். நம் உடலில் தாமிர சத்து, தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்புதான் வில்சன் நோய். கல்லீரலில் உற்பத்தியாகும் 'செருலோபிளாஸ்மின்' புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடலில் தாமிரம் ஆங்காங்கே சேர்ந்து கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் போன்றவற்றை பாதிக்கும். லட்சத்தில் மூன்று பேருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வில்சன் நோய்க்கு உள்ளாகியவர்கள் அது தரும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அரிதான ஒன்று. தன்னுடைய 13 வயதிலிருந்து வில்சன் நோயுடன் போராடி வருகிறார் ஆர்த்தி. வில்சன் நோய் தாக்கத்தால் கல்லீரல் செயலிழப்பு, நடக்க இயலாத நிலை, பித்தக்குழாய் பாதிப்பு என நோயின் பாதிப்பு ஒரு புறம். மரண வேதனை தரும் சிகிச்சை ஒரு புறம். இவற்றைக் கடந்து தன்னுடைய படிப்புக்காகவும் எதிர்காலத்துக்காகவும் வில்சன் நோயுடன் நித்தமும் போராடி வருகிறார் ஆர்த்தி. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை துளிர்விடுகிறது. உடல் சோர்விலும் வார்த்தைகளில் அவ்வளவு உற்சாகம்.

ஆர்த்தி
ஆர்த்தி

"எங்க அப்பா சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறார். இன்னைக்கு ஆட்டோ ஓட்டுனாதான் நைட்டு சாப்பாடு. அதுதான் எங்க குடும்பத்தோட நிலை. எத்தனையோ நாள் அடுத்த நேர சாப்பாட்டுக்கு அரிசி இல்லாம இருந்திருக்கோம். ஆனா, எனக்கு மருந்து மாத்திரை இல்லாம இருந்ததே இல்ல. எனக்கு இப்போ 23 வயசு. என்னைக் காப்பாத்த 13 வருஷமா என்னைப் பெத்தவங்க போராடிக்கிட்டு இருக்காங்க. ராப்பகலா ஆட்டோ ஓட்டி சம்பாதிக்குற மொத்த காசும் எனக்கு மருந்து மாத்திரை வாங்கத்தான் சரியா இருக்கு. இந்த 10 வருஷத்துல எங்க அப்பா, அம்மா நல்ல துணி உடுத்திக்கூட நான் பார்த்தது இல்ல. எத்தனையோ நாளு ரெண்டு பேரும் தண்ணியைக் குடிச்சுட்டு படுத்துருக்காங்க. அதைப் பார்க்கும்போது இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமானு தோணும். ஆனா, 'உன்னை எப்படியும் குணமாக்கிருவேண்டா'னு கண்ணீரோட அப்பா சொல்லும்போது இந்த நம்பிக்கைக்காவது வாழணும்னு ஆசையா இருக்கும். நான் பொறக்காம இருந்திருந்தா எங்க அம்மாவ மலடினு மட்டும்தான் இந்தச் சமுதாயம் தூத்தியிருக்கும். ஆனா நான் பொறந்து எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்துருக்கேன்" வழியும் கண்ணீரை துடைத்தவாறே பேச ஆரம்பிக்கிறார்.

"10 வயசுல திடீர்னு ஒரு நாள் வாந்தி, மயக்கம். டாக்டர்கிட்ட போனோம். டெஸ்ட்டெல்லாம் எடுத்து பார்த்துக்கிட்டு மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பிட்டாங்க. 13 வருஷமா அந்த மாத்திரைகள்தான் நான் உயிர்வாழ காரணமா இருந்திருக்கு. மத்த பசங்க மாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது. உடம்பு எப்போதுமே களைப்பாதான் இருக்கும். நான் கஷ்டப்படக் கூடாதுனு என் அம்மா என் கூட விளையாடுவாங்க. அம்மாதான் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். ஒரு வயசுல என்ன எப்படி மடியில் தூக்கி சோறு ஊட்டுனாங்களோ, இப்பவும் அப்படிதான் ஊட்டுறாங்க. அவங்க எங்கேயுமே வெளியே போனது இல்ல. இந்த வீட்டைவிட்டா அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது. அவங்களோட மொத்த சந்தோஷமும் நான்தான். எத்தனையோ பேரு, `கடனை வாங்கி பொம்பளை புள்ளைக்கு இப்படி வைத்தியம் பாத்து, படிக்க வெச்சு என்ன பண்ண போறீங்க'னு என் முன்னாடியே என் அம்மாகிட்ட கேட்பாங்க. 'ஆர்த்தி பெரிய ஆளா வரும் பாருங்க'னு சொல்லிட்டு நகர்ந்து வந்துருவாங்க. என்மேல் அவ்வளவு நம்பிக்கை. எப்படியாவது ஒரு வேலைக்குப் போயி அப்பா, அம்மாவை உட்காரவெச்சு சாப்பாடு போடணும். அது கண்டிப்பா என்னால முடியும்னு நான் நம்புறேன்.

ஆர்த்தி
ஆர்த்தி
க.பாலாஜி
அம்மா 1 வயசுல என்ன எப்படி மடியில் தூக்கிவச்சு சோறு ஊட்டுனாங்களோ, இப்பவும் அப்படித்தான் ஊட்டுறாங்க. அவங்க எங்கேயுமே வெளியே போனது இல்ல. இந்த வீட்டைவிட்டா அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது.
வெங்கடேசன்

’என் உடம்புக்கு என்னப்பா... நான் எதுக்கு மாத்திரை சாப்பிடுறேன்’னு சின்னவயசில் அடிக்கடி கேட்பேன். 'நீ எதைப்பத்தியும் யோசிக்காம நல்லா படி. அதுதான் உன் அடையாளமா இருக்கும். அப்பா இந்த உலகத்தைவிட்டு போனதுக்கு அப்புறமும்கூட உன் படிப்பு உன்னைக் காப்பாத்தும்'னு சொல்லுவாங்க. அதுக்கு அர்த்தம் புரியலைனாலும், அப்பா சொன்னதுக்காகவே ஸ்கூலில் 75 சதவிகித மார்க் எடுத்து, சென்னையில் எஸ்.ஐ.டி காலேஜ்ல பி.சி.ஏ சேர்ந்தேன். 19வது வயசுல ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்துகிட்டே இருந்துச்சு. அப்பாவும் ஊருல இல்ல. ஒரு நாள் சாப்பிடும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அம்மா அழுத சத்தம் மட்டும் தூரமா காதுல கேட்டுச்சு. கண் முழுச்சு பார்த்தா, நகர கூட முடியாம ஐ.சி.யு-ல படுக்க வெச்சுருந்தாங்க. ஒரு மாசம் ஹாஸ்பிட்டலில் இருந்தேன். டெஸ்ட் எல்லாம் எடுத்துப்பார்த்துட்டு 'கல்லீரல் ரொம்ப பாதிச்சுருச்சு. உடனே ஆப்ரேஷன் பண்ணணும்'னு சொல்லிட்டாங்க. அங்கதான் ஆரம்பிச்சுது எல்லா பிரச்னைகளும். அந்த நிமிஷத்திலிருந்து இப்போவரை யாராவது உதவ மாட்டாங்களானு அப்பா ஓடிக்கிட்டே இருக்காங்க. நோய்க்கு ஏழை, பணக்காரன்னு வித்தியாசம் தெரியுறது இல்லக்கா" - கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்க, ஆர்த்தியின் தலைகோதி ஆறுதல்படுத்திவிட்டு பேச ஆரம்பிக்கிறார், ஆர்த்தியின் அப்பா வெங்கடேசன்.

"நானும் என் வீட்டுக்காரம்மாவும் படிக்கல. என் மவள படிக்க வெச்சு பெரிய ஆளா ஆக்கணுங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்காக இன்னொரு புள்ள கூட பெத்துக்கல. பார்த்து பார்த்து வளர்த்த புள்ள, கண்ணு முன்னாடி ஒவ்வொரு நிமிஷமும் வலியில துடிக்கிறத எந்த அப்பனால தாங்கிக்க முடியும். கல்லீரல் மாத்தணும்னு சொன்னதும், முதலில் இடி விழுந்த மாதிரிதான் இருந்துச்சு. ஆனா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல என் மகள் பழையபடி இருந்தா போதும்னு உதவி கேட்டு ஓட ஆரம்பிச்சேன். 500, 1000-னு கொடுத்தவங்ககூட சாமியாத்தான் தெரிஞ்சாங்க. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கல்லீரலுக்கு எழுதிக்கொடுத்து மூணு மாசம் காத்திருந்தோம். பொழுது விடிஞ்சதும் ஆஸ்பத்திரிக்கு போயி கல்லீரல் வந்துருக்கானு கேட்டுட்டுதான் அடுத்த வேலைக்கே போவேன்.

குடும்பத்துடன் ஆர்த்தி
குடும்பத்துடன் ஆர்த்தி

ஒரு மாசம் கழிச்சு விபத்துல இறந்த ஒரு பொண்ணோட கல்லீரலை ஆபரேஷன் பண்ணி ஆர்த்திக்கு வெச்சாங்க. எல்லா பிரச்னையும் முடிஞ்சுது. ஆர்த்தி திரும்பி காலேஜ்க்குப் போக ஆரம்பிச்சுது. 'நான் அடுத்த வருஷம் வேலைக்கு போயிருவேன்ப்பா, கடனையெல்லாம் அடைச்சுரலாம்'னு சொல்லுச்சு. நாங்களும் புது தெம்போட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சோம். ஆனா, அந்த சந்தோஷம் ரெண்டு மாசம்கூட நீடிக்கலம்மா. கல்லீரலைக் குணப்படுத்த ஆர்த்தி எடுத்துக்கிட்ட மருந்து உடம்பிலிருக்கும் வெள்ளையணுக்களைக் குறைச்சுருச்சு. உடம்புல சின்ன காயம் பட்டாகூட ரத்தத்தை நிறுத்த ரெண்டு மணிநேரம் ஆகும். பீரியட்ஸ் நேரத்துல 10 நாளு படாதபாடு படும். பாத்ரூமை விட்டே வெளிய வராம உள்ளயே உட்கார்ந்து இருக்கும். இந்தக் கொடுமை வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாதும்மா. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனப்போ உடம்பில் ரத்தத்தைத் தக்க வைக்க பிளேட்லெட் ஏத்தணும்னு சொன்னாங்க. உடம்புல ரத்த வெள்ளையணு குறையும்போதெல்லாம் ஒரு யூனிட் பிளேட் லெட் ஏத்துவோம். பிரீயட்ஸ்க்கு அப்புறமும் ஒரு யூனிட் ஏத்துவோம்.

அது மட்டுமல்ல மருந்தில் உள்ள ஸ்டீராய்டு தொடை எலும்பையும் பாதிச்சுருச்சு. ஆர்த்தியால நடக்க முடியல. பித்தக்குழாயிலும் அடைப்பு ஏற்பட்டுருச்சு. திரும்பவும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணோம். பித்தக்குழாய் அடைப்பை சரிசெய்யணும்னா ஆபரேஷன்தான் பண்ணணும்னு சொன்னாங்க. அதுக்குள்ள கொரோனா பரவ ஆரம்பிச்சதால், வயித்துக்கு வெளியே துளை போட்டு செயற்கையா பித்தத்தை வெளியேத்துற பை வெச்சுட்டு, கொரோனா முடிஞ்சதும் வாங்கனு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அந்தப் பையை நாமளே வீட்டில் மாத்திக்கலாம். ஒவ்வொரு முறை அந்தப்பையை மாத்தும்போதும் ஆர்த்தி வலியில் அப்படி துடிக்கும்மா. ஒரு அப்பாவா தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன். இப்போ வரை அஞ்சு லட்ச ரூபாய் கடன் இருக்கு. இன்னும் எத்தனை லட்சம் செலவாகும்னு தெரியல. யார் யாரோ உதவுறாங்க. இன்னும் உதவிகள் தேவைப்படுது... நிச்சயம் ஆர்த்தியைக் காப்பாதிருவேன்னு நம்பிக்கை இருக்கு.

`மகனுக்கு நாப்கின் வாங்குற கொடுமை எந்தத் தாய்க்கும் வரக்கூடாது..!' - கலங்கும் தாயின் துயரம்

காலேஜ்க்குப் போக முடியலங்கிற வருத்தம் அது மனசுக்குள்ள இருக்கு. வீட்டுல இருந்தே படிச்சுது. ஆனா, பரீட்சை எழுத போக உடம்பு ஒத்துழைக்கல. எப்போ பார்த்தாலும் புக்கை கட்டி பிடிச்சுட்டு அழுதுட்டு இருக்கும். எப்படியாவது வாழ்க்கையில முன்னேறிடலாம்னு இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோன மாதிரி இருக்கு. ஆனா, நான் உயிரோட இருக்க வரை என் மகளை ராணி மாதிரி பார்த்துக்க முடியும்னு நம்புறேன். ஆர்த்தி இப்போ அரசுப் பணியாளர் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சுருக்கு. நிச்சயமா ஜெயிச்சு தான் யாருங்கிறத உலகத்துக்குக் காட்டும்" மகளின் கைகளைப் பற்றிகொள்கிறார் வெங்கடேசன்.

அடுத்த கட்டுரைக்கு