Published:Updated:

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை
பிரீமியம் ஸ்டோரி
பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை

சாதாரண களைப்பு, அசதி போன்ற அறிகுறிகளுடன் எட்டிப்பார்க்கும் அனீமியாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கு உங்களை அழைத்துச்செல்லலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

சாதாரண களைப்பு, அசதி போன்ற அறிகுறிகளுடன் எட்டிப்பார்க்கும் அனீமியாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கு உங்களை அழைத்துச்செல்லலாம்.

Published:Updated:
பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை
பிரீமியம் ஸ்டோரி
பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை

புற்றுநோய் பாதித்தவர்களுக்கான ரத்த தான முகாம் ஒன்று சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்பட்ட இந்த முகாமில் ரத்த தானம் செய்ய முன்வந்த ஒன்பது பெண்களில் ஒருவர் மட்டும்தான் அதற்குத் தகுதியுடன் இருந்தார். மற்ற எட்டு பெண் களுக்கும் ஹீமோகுளோபின் அளவு போதுமானதாக இல்லை எனத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. உலகளவில் இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் `அனீமியா' எனப்படுகிற ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது. கர்ப்பிணி களில் 40 சதவிகிதம் பேரும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவிகிதத்துக்கும் மேலாகவும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தகவலையும் அந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது.

சாதாரண களைப்பு, அசதி போன்ற அறிகுறிகளுடன் எட்டிப்பார்க்கும் அனீமியாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கு உங்களை அழைத்துச்செல்லலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

அனீமியா குறித்த ஏ டு இஸட் தகவல்களைத் தருகிறார் கோயம்புத்தூர், கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர்நல சிறப்பு மருத்துவர் ஸ்ரீதேவி. ரத்தச்சோகையிலிருந்து மீள்வதற்கான உணவுப்பழக்கங்களையும், அவற்றை எப்படியெல்லாம் அன்றாட உணவில் முறைப்படுத்தலாம் என்றும் விளக்குகிறார்கள், செலிபிரிட்டி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் மற்றும் கிளினிகல் டயட்டீஷியனும் வெல் னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்டுமான ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ரத்தச்சோகை என்பது என்ன?

ரத்தச்சோகை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன் சிவப்பணுக்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்வதுதான் சிவப்பணுக்களின் வேலை. இந்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கை குறைந்தாலோ, அவற்றின் வடிவம் மாறினாலோ அல்லது அவற்றுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் ஹீமோகுளோபினின் செறிவு குறைந்தாலோ அதை ரத்தச்சோகை என்கிறோம்.

ஸ்ரீதேவி . ஷைனி சுரேந்திரன் , ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீதேவி . ஷைனி சுரேந்திரன் , ஸ்ரீமதி வெங்கட்ராமன்

காரணங்கள்

நம் உடலில் எலும்பு மஜ்ஜையிலிருந்து சிவப்பணுக்கள், ஸ்டெம்செல்கள் மூலம் உற்பத்தியாகின்றன. இந்த உற்பத்தி குறைந்தாலோ அல்லது ரத்தச் சிவப்பணுக்கள் அதிக அளவில் அழிந்துபோனாலோ அனீமியா ஏற்படலாம். ஊட்டச்சத்துக் குறைபாடுதான் சிவப்பணுக்கள் குறைவதற்கான பிரதான காரணம். நம் உணவில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்றவை போதுமான அளவு இல்லையென்றால் எலும்பு மஜ்ஜை யில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகாது.

அடுத்து, எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோய் செல்கள் தாக்கியிருக்கலாம். `ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்’ காரணமாக அதாவது, அதீத உடல் எதிர்ப்பு சக்தியின் காரணமாக எலும்பு மஜ்ஜையிலுள்ள ஸ்டெம்செல்கள் எல்லாமே அழிந்துபோகலாம். இதனாலும் சிவப்பணுக்களின் உற்பத்தி குறையும்.

மூன்றாவதாக, சிவப்பணுக்கள் சரியான அளவில் உற்பத்தியானாலும், அதிகளவில் அழிந்துபோவதும் ஒரு காரணம். அளவுக்கதிக ரத்த இழப்பு, `ஹிமாலிசிஸ்’ என்ற கண்டிஷன் (Hemolysis), மண்ணீரல் அதிகமாக வேலைசெய்கிற `ஹைப்பர்ஸ்ப்ளினிஸம்’ (Hypersplenism) என்ற நிலை போன்றவையும் காரணங்கள். வழக்கமாக ரத்தச் சிவப்பணுக்கள் 120 நாள் களுக்குப் பிறகு மண்ணீரலில்தான் போய் அழிந்துபோகும். மண்ணீரல் அளவுக்கதிகமாக வேலைசெய்கிறபோது 120 நாள்களுக்கு முன்னதாகவே ரத்தச் சிவப்பணுக்கள் சிதைந்துபோகலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

அறிகுறிகள்

அதிகமான உடல் சோர்வு

பலவீனம்

தலைச்சுற்றல்

மூச்சுத்திணறல்

சருமம் வெளிறிப்போவது

சிறு குழந்தைகளிடம் காணப்படும் பசியின்மை, எடைக்குறைவு, வளர்ச்சியின்மை, எளிதில் சோர்ந்துபோவது, படிப்பில் கவனமின்மை.

அனீமியாவின் வகைகள்

1. நியூட்ரிஷனல் அனீமியா

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் இதில் அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. அடுத்து வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாட்டால் ஏற்படும் அனீமியா. உணவில் போதுமான அளவு இரும்புச்சத்தும் ஃபோலிக் அமிலமும் இல்லாமல் போவதே காரணம். சைவ உணவுக்காரர்களுக்கு பி12 குறைபாடு வரலாம்.

இதை உறுதிப்படுத்த `கம்ப்ளீட் பிளட் கவுன்ட்டுக்கான டெஸ்ட்' (CBC) எடுப்பார்கள். அதில் ஹீமோகுளோபினின் அளவு, சராசரியாக இருக்க வேண்டியதைவிட குறைவாக இருக்கும்.

அடுத்து, `பெரிஃபரல் பிளட் ஸ்மியர்' என்றொரு டெஸ்ட். இதில் ரத்தச் சிவப்பணுக்களின் வடிவமும், அளவுகளும் மாறியிருக்கும். `அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா'வில் அணுக்களின் அளவு மிகச் சிறியதாக இருக்கும். உள்ளே உள்ள நிறமியும் குறைவாக இருக்கும். இதைவைத்தும் அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியாவை உறுதிப்படுத்துவார்கள்.

2. ஹீமோலைட்டிக் அனீமியா

ரத்தச் சிவப்பணுக்கள் வட்டு வடிவத்தில் (Biconcave Shape) இருக்கும். ஆக்ஸிஜனை உடல் பாகங்களுக்கு எடுத்துச்செல்லும்போது சின்னச் சின்ன ரத்தக் குழாய்களுக்குள் சிக்கிக்கொள்ளாமலிருக்கவே இந்த ஷேப். மரபியல் ரீதியான பிரச்னைகளாலும் ஒருவிதப் புரதச்சத்துக் குறைபாட்டின் காரண மாகவும் சிலருக்கு இவை வட்ட வடிவத்தில் இருக்கும். இதனால் சின்னச் சின்ன ரத்தக்குழாய்களுக்குள் சிக்கிக்கொள்வதுடன், மண்ணீரலுக்குள் சென்று சிக்கிக்கொண்டு, உடைந்து அழிந்துபோகின்றன.

ரத்தச்சிவப்பணுக்கள் அதிக அளவில் உடைந்து அழிந்துபோவதையே `ஹிமாலிசிஸ்’ என்கிறோம். இந்த நிலையை `Hereditary Spherocytosis' என்று சொல்வார்கள். ரத்தச் சிவப்பணுக்களின் வடிவம் மாறியிருப்பதால் இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு என்னதான் இரும்புச்சத்து மாத்திரைகளையும் டானிக்கையும் கொடுத்தாலும் அணுக்கள் மண்ணீரலில் போய் அழிந்துதான் போகும். ரத்த மாற்று சிகிச்சையும், தேவைப்பட்டால் மண்ணீரலை அகற்று வதும்தான் இவர்களுக்கான தீர்வுகள்.

`ஹீமோகுளோபினோபத்தீஸ்’ (Hemoglobinopathies) எனப்படுகிற பீட்டா தாலசீமியா, சிக்கெல்செல் அனீமியா போன்றவற்றாலும் ரத்தச்சோகை ஏற்படலாம். இந்தியாவில் தாலசீமியா மரபணுவைக்கொண்டவர்கள்

3 முதல் 4 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். சிந்தி இன மக்கள், பழங் குடியினர், இஸ்லாமியர்கள், ஒடிசா, குஜராத்தில் வசிக்கிறவர்கள் எனக் குறிப்பிட்ட சில இன மக்களில் இது அதிகமாக இருக்கிறது.

`சிக்கெல்செல் அனீமியா' என்பது கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ரத்தச் சிவப்பணுக்கள் அதிகளவில் அழிந்து போவதால் ஏற்படும் அனீமியா இது. பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும். சிக்கெல்செல் அனீமியாவில் ஹீமோகுளோபின் `ஏ'க்குப் பதில் ஹீமோகுளோபின் `எஸ்' என்று இருக்கும். இதனால் வட்டு வடிவத்தில் இருக்கவேண்டிய சிவப்பணுக்கள், பிறைநிலா வடிவில் இருக்கும். அணுக்கள் ரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க முடியாமல் அடைத்துக் கொள்ளும். ரத்த ஓட்டம் தடைப்படும். சிவப்பணுக்கள் சீக்கிரமே அழிந்து, அனீமியா வரும்.

இதனால் பாதிக்கப்படுவோருக்கு வயிறு, எலும்புகள், மூட்டுகளில் வலி இருக்கும். கண் கோளாறுகள், நுரையீரல் பாதிப்பு, நிமோனியா போன்றவை வரலாம். பெற்றோர் இருவருக்கும் குறைபாடுள்ள மரபணு இருந்தால் குழந்தை, சிக்கல்செல் அனீமியாவுடன் பிறக்கும். இருவரில் ஒருவருக்கு மட்டும் குறைபாடுள்ள மரபணு இருந்தால், குழந்தை ‘சிக்கெல்செல் ட்ரெயிட்’ எனப்படும் மிதமான பாதிப்புடன் பிறக்கும்.

சிக்கெல்செல் அனீமியா உள்ளவர்களுக்கு பக்கவாதம், வலிப்பு, நுரையீரல், கட்டி, மண்ணீரல். பாதிப்புகள் வரலாம். பித்தப்பை கற்கள் உருவாகலாம். கர்ப்பிணிகளாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படலாம். குறைப் பிரசவம் நிகழவும், குழந்தை எடை குறைவாகப் பிறக்கவும், தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

பெற்றோருக்கு பாதிப்பு இருப்பது தெரிந்தால், குழந்தைக்கு ஜெனடிக் டெஸ்ட் செய்யலாம். `நியூபார்ன் ஸ்க்ரீனிங்' மூலமும் குழந்தைக்கு பாதிப்புள்ளதா என உறுதிபடுத்தலாம். பெரியவர்களுக்கு `பெரிஃபரல் ஸ்மியர்' மூலமும், `ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரெசிஸ்' டெஸ்ட் (Hemoglobin Electrophoresis) மூலமும் உறுதிப்படுத்தலாம்.

ரத்த மாற்று சிகிச்சைக்கான தேவையையும் வலியையும் குறைக்கும் மருந்துகள் உள்ளன. இந்த வகை அனீமியாவால் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கு தொற்றுகளுக்கான அபாயம் அதிகம் என்பதால், குழந்தையிலேயே எல்லா தடுப்பூசிகளையும் தவறாமல் போட வேண்டும்.

`தாலசீமியா அனீமியா' என்பது ஒருவகையான பிறவிக் குறைபாட்டினால் வருவது. பொதுவாக பெரியவர்களுக்கு `ஹீமோகுளோபின் ஏ' 95 சதவிகிதமும், `ஹீமோகுளோபின் ஏ2' என்பது 5 சதவிகிதமும் இருக்கும். தாயின் கருவில் இருக்கும்போது `ஹீமோகுளோவின் எஃப்' என்பது இருக்கும். தாலசீமியா பாதிப்புள்ளவர்களுக்கு பிறந்த பிறகும் இந்த `ஹீமோகுளோபின் எஃப்' என்பது மறையாமல் இருக்கும். தாலசீமியாவில் `ஆல்ஃபா தாலசீமியா', `பீட்டா தாலசீமியா' என இருவகை உண்டு.

பீட்டா தாலசீமியாதான் ரொம்பவும் பரவலாகக் காணப் படுவது. பீட்டா தாலசீமியாவில் `பீட்டா தாலசீமியா மேஜர்', `பீட்டா தாலசீமியா மைனர்' என இரு வகை உண்டு. கரு வயிற்றிலிருக்கும்போது தாயின் பனிக்குட நீரை எடுத்து டெஸ்ட் செய்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்த பாதிப்பு வருமா என கண்டறியலாம். பிறந்த பிறகு குழந்தைகள் அனீமிக்காக இருந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு சந்தேகம் தந்தாலோ, பெரிஃபரல் பிளட் ஸ்மியர் மற்றும் ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரெசிஸ் டெஸ்ட் செய்வதன் மூலம் ஹீமோகுளோபின் எஃப் அதிகமிருப்பதைக் கண்டறியலாம்.

தாலசீமியா உள்ள குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும். இவர்களுக்கு இரும்புச்சத்து கொடுக்கக்கூடாது. இவர்களுக்கு ரத்த அணுக்கள் அழிந்து கொண்டே இருக்கும். அதனால் உடலில் இரும்புச்சத்து நிறைய இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைக்கவே சிகிச்சைகள் மேற்கொள்வார்கள். சில நேரம் இவர்களுக்கு மண்ணீரலை அகற்ற வேண்டியிருக்கலாம். கடைசி தீர்வாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பரிசீலிக்கப் படும்.

3. ஏபிளாஸ்டிக் அனீமியா

சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்ஸ் என மூன்றுமே குறைவாக இருக்கும் நிலை இது. `போன்மேரோ பயாப்ஸி' செய்து பார்த்தால் அதில் ஸ்டெம்செல்களே இருக்காது. இதை வைத்து `ஏபிளாஸ்டிக் அனீமியா'வை உறுதிப்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும். டோனர் கிடைக்கும் பட்சத்தில் ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையும் மேற் கொள்ளப்படும். கூடவே `இம்யூனோசப்ரெசன்ட் தெரபி'யும் கொடுக்க வேண்டியிருக்கும். சிலருக்கு `கார்டிகோ ஸ்டீராய்டு' மருந்துகள் தேவைப்படும். சிலருக்கு `போன்மேரோ ஸ்டிமுலன்ட்ஸ்' எனப்படும் மருந்துகளும் கொடுக்கப்படும். இவர்களுக்கு வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதால் காய்ச்சல், இன்ஃபெக்‌ஷன் போன்றவை வந்தால் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

ஏபிளாஸ்டிக் அனீமியாவுக்கு சில நேரம் காரணம் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை குறிப்பிட்ட மருந்தின் விளைவாகவோ, கீமோதெரபியின் விளைவாகவோ வந்தது தெரிந்தாலோ, கர்ப்பத்தின் காரணமாக ஏற்பட்டிருந்தாலோ கீமொதெரபியை நிறுத்திய பிறகோ, பிரசவத்துக்குப் பிறகோ தானாகவே ஏபிளாஸ்டிக் அனீமியா குணமாக வாய்ப்புண்டு.

4. அனீமியா ஆஃப் க்ரானிக் டிசீசஸ்

தைராய்டு, கிட்னி பாதிப்புகள் நீண்ட காலமாக இருப்பதன் விளைவாக ஏற்படுகிற அனீமியா இது.

5. ரத்த இழப்பினால் ஏற்படும் அனீமியா

மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு, பைல்ஸ் பிரச்னையால் ஏற்படும் ரத்த இழப்பு போன்றவற்றால் ஏற்படுவது.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

எது அனீமியா?

ஹீமோகுளோபின் அளவானது....

* 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11 கிராம் / டெசிலிட்டருக்குக் குறைவாக இருந்தால்

* 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு 12கிராம் / டெசிலிட்டருக்குக் குறைவாக இருந்தால்

* ஆண்களுக்கு 13 கிராம் / டெசிலிட்டருக்குக் குறைவாக இருந்தால்

* பெண்களுக்கு 12 கிராம் / டெசிலிட்டருக்குக் குறைவாக இருந்தால்

* கர்ப்பிணிகளுக்கு 11 கிராம் / டெசிலிட்டருக்குக் குறைவாக இருந்தால்

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
Bhupi

பெண்களும் அனீமியாவும்

`நேஷனல் ஹெல்த் சர்வே'யின் புள்ளிவிவரத்தின்படி 55 சதவிகிதப் பெண்கள் `அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா'வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

பெண்கள் அனீமியாவால் பாதிக்கப்பட பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம் மாதவிடாய். மாதந்தோறும் பீரியட்ஸின்போது கணிசமான ரத்தம் வெளியேறுவதால் 15 முதல் 49 வயது வரையிலான பெண்களுக்கு அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா அதிகமிருக்கிறது. கூடவே ஃபைப்ராய்டு, அடினோமையோசிஸ் போன்ற கர்ப்பப்பை பிரச்னைகள் தொடர்பாக அதிக ரத்தப்போக்கைச் சந்திப்பவர்களுக்கு அனீமியா பாதிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

நம் உடலின் ஒருநாளைய சராசரி இயக்கத்துக்கு 18 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படும். அதுவே கர்ப்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காக இந்தத் தேவையானது 27 மில்லிகிராமாக உயர்கிறது. அந்தளவுக்கு இரும்புச்சத்து உடலுக்குள் போகாவிட்டால் கர்ப்பிணிகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்படுவார்கள். பிரசவத்தின்போதும் நிறைய ரத்த இழப்பு ஏற்படுகிறது. கர்ப்பத்தின்போது போதுமான இரும்புச்சத்து உடலில் சேரவில்லை என்றாலும் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அனீமியா ஏற்படும்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
KatarzynaBialasiewicz

எந்த வயதில்... ஏன்?

இரும்புச்சத்துக் குறைபாடு, பி12 குறைபாடு மற்றும் ஃபோலிக் அமில குறைபாடு குழந்தைகளிடம் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. குழந்தைகளுக்குப் பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். மாட்டுப்பால் அல்லது வேறு உணவுகளை அதற்கு முன் கொடுக்கத் தொடங்கும்போது அத்தியாவசிய சத்துகளைக் கிரகிப்பதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். குடல் தொற்றுகள், லெட் பாய்சனிங், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் அனீமியா வரலாம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இரும்புச்சத்தைச் சேமித்துவைப்பதில் உள்ள சிக்கலால் அனீமியா வரலாம்.

டீன்ஏஜில் உள்ளவர்களுக்கு அந்த வயதில் இரும்புச்சத்தின் தேவை அதிகரிக்கும். இளம்பெண்களுக்கு பீரியட்ஸ் வருவதாலும் அதிக இரும்புச் சத்து தேவைப்படும். சிலருக்கு ‘பியூபெர்ட்டி மெனரேஜியா’ (Puberty Menorrhagia) என்ற பிரச்னையால் அதிக ரத்தப்போக்கு இருப்பதாலும் அனீமியா வரலாம். முறையற்ற உணவுப்பழக்கம், ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவதும்கூட காரணங்கள்.

வயதானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு அனீமியா வருவதற் கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்னொரு பிரிவின ருக்கு இரும்புச்சத்துக் குறைபாடும் பி 12 குறைபாடும் இருக்கும். நீரிழிவு, ரத்த அழுத்தம், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றாலும் வரலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

கவனிக்காமல் விட்டால்...

அனீமியா உள்ளவர்களால் எந்த வேலையிலும் சரிவர கவனம் செலுத்த முடியாது. மந்தமாகவே இருப்பார்கள். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எளிதில் தொற்றுகளுக்கு இலக்காவார்கள்.

நீண்ட நாள்களாக சிகிச்சை அளிக்கப்படாத அனீமியாவால் இதயம் செயலிழக்கவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் கருச்சிதைவு ஏற்படலாம், குறைப்பிரசவ வலி வரலாம், குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பேறுகாலத்தில் பெண்கள் உயிரிழப்புக்கு இரண்டாவது முக்கிய காரணம் அனீமியா. (முதல் காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம்.) அனீமியா வால் பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை ‘போஸ்ட் பார்ட்டம் ஹெமரேஜ்’ என்று சொல்வார்கள். இதை கவனிக்காமல்விட்டால் மரணத்தில்கூட முடியலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம்?

* காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உட்கொள்ளாதவர்கள்.

* தவறான உணவுப்பழக்கங்கள் (சாப்பாட்டுடன் காபி, டீ குடிப்பது, அதிக மாவுச்சத்து உணவுகளை உட்கொள்வது) உள்ளவர்கள்.

* இரும்புச்சத்தும் பிற ஊட்டச்சத்துகளும் சரியாக கிரகிக்கப்படாத சீலியாக் டிசீஸ், க்ரான்ஸ் டிசீஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

* ஆல்கஹால் பழக்கமுள்ளவர்கள் (கல்லீரல் மற்றும் கிட்னி பாதிக்கப்பட்டு அதன் விளைவாக அனீமியா வரலாம்).

* `லெட்' உள்ளிட்ட நச்சுப்பொருள்கள் கலந்த தண்ணீரைக்

குடிப்பவர்கள்.

* குடற்புழுக்களுக்கு சிகிச்சை எடுக்காதவர்கள்.

* புற்றுநோய், லூப்பஸ், ருமட்டாயிடு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகிறவர்கள்.

* சைவ உணவுக்காரர்கள். (வைட்டமின் பி 12 குறைபாட்டின் காரணமாக அனீமியா வரலாம். பி12 சத்து அசைவ உணவுகளில்தான் அதிகம்.)

* மரபணு ரீதியான பாதிப்புகள் உள்ளவர்கள்.

* வயதானவர்கள்..

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
twinsterphoto

இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்துமா?

வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு, வாந்தி, மலச்சிக்கல் உண்டாவதால் நிறைய பேர் இரும்புச்சத்து மாத்திரைகளைத் தவிர்ப்பார்கள். ஃபெரஸ் சல்பேட், ஃபெரஸ் ஃபியூமரேட், ஃபெரஸ் குளுகோனேட் போன்ற அயர்ன் சால்ட்டுகள் கலந்த மருந்துகள் மலச்சிக்கலை உருவாக்கலாம். இவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஹீம் அயர்ன் பாலிபெப்டைடு, கார்போனைல் அயர்ன், அயர்ன் அமினோ ஆசிட் செலேட், பாலிசாக்ரைடு அயர்ன் காம்ப்ளெக்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் இயல்பிலேயே மலச்சிக்கல் அதிகமாக இருக்கும் என்பதால் நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வதோடு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது கூடவே வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
AaronAmat

அதிகமானால் ஆபத்தா?

இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்பட்ட அனீமியா இல்லாதவர்கள் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். `ஹீமோ குரோமட்டோசிஸ்' (Hemochromatosis) என்ற நிலையில் உடலிலுள்ள அதிகப்படியான இரும்புச்சத்தானது பல்வேறு உடல் உறுப்புகளில் சேர்ந்து அவை பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

`பிரைமரி ஹீமோகுரோமட்டோசிஸ்' என்பது பிறவியிலேயே வரும். செகண்டரி ஹீமோகுரோமட்டோசிஸ் என்பது தாலசீமியா போன்ற மரபியல் பாதிப்பு நிலைகளில் அடிக்கடி ரத்தம் ஏற்றப்படுவதன் காரணமாக இரும்புச்சத்து வெளியேறி உடல் உறுப்புகளில் ஸ்டோர் ஆகிவிடும். அவர்கள் தெரியாமல் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொண்டால் அது அதிகமாகி, கல்லீரல், கணையம், இதயம், நாளமில்லா சுரப்பிகள், மூட்டுகள் போன்றவை பாதிக்கப்பட்டு, இதயம் செயலிழப்பிலும் முடியலாம். எனவே, தேவையில்லாமல் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளை எடுக்கக் கூடாது. ஒருவேளை இரும்புச்சத்து அதிகமானாலும் பிரத்யேக சிகிச்சைகள் மூலம் அதிகப்படியான இரும்புச்சத்தை நீக்கிவிடுவார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டர் அப்பாயின்ட்மென்ட் ப்ளீஸ்

சருமம் வெளிறிப்போனால், சருமம் பொலி விழந்தால்...

எதிலும் கவனமின்மை

எப்போதும் களைப்பு

முறையற்ற தூக்கம்

அளவுக்கதிகமாக முடி உதிர்தல்

அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல்

கால்களில் தசைப்பிடிப்பு

சிலவகை உணவுகளின் மீது ஈர்ப்பு

நகங்கள் உடைவது

மூச்சுவிடுவதில் சிரமம்

படபடப்பு

சிறிது தூரம் நடந்தாலே சிரமம்...

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
triloks

பொதுவான அட்வைஸ்

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லிக்கு மேல் பால் கொடுக்க வேண்டாம். அதிக அளவிலான பால் இரும்புச்சத்து உட்கிரகித்தலைத் தடைசெய்யும். இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஜங்க் உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் இரும்புச்சத்துக் குறைபாடு வரும் என்பதால் அந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆல்கஹால் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

இரும்பு கடாய்களில் சமைப்பது நல்லது.

மூன்று மாதங்களுக்கொரு முறை டீவேர்மிங் (வயிற்றுப் பூச்சிகளுக்கான சிகிச்சை) செய்துகொள்ள வேண்டும், அந்தரங்க சுகாதாரம் மிக அவசியம்.

அனீமியா அறிகுறிகளை உணர்ந்தால் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை, மருந்துகளைத் தவிர்க்கவே கூடாது. இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தை பெரிதாகவும் கறுப்பாகவும் பிறக்கும் என்ற மூட நம்பிக்கை களை நம்ப வேண்டாம். இரும்புச்சத்து எடுத்துக்கொள்வதால் குழந்தையின் மூளை வளர்ச்சி சீராகவும் அதற்கு அனீமியா வராமல் தடுக்கவும் முடியும். தாய்க்கும் பிரசவத்தின்போதான அதிக ரத்தப்போக்கு ஏற்படும் `போஸ்ட் பார்ட்டம் ஹெமரேஜ்' நிலையையும், பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பதையும் தவிர்க்க முடியும்.

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவிலுள்ள கார்போஹைட்ரேட்ஸ், பைட்டேட் போன்றவை இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதைக் குறைக்கும். சில நேரங்களில் வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள் தீவிரமாக இருக்கும்போது சாப்பாட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
damircudic

தவிர்க்கும் வழிகள்...

இரண்டு கர்ப்பங்களுக்கு இடையே குறைந்தது 2 - 3 வருட இடைவெளி முக்கியம்.

பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். அதையடுத்து சப்ளிமென்ட்ரி, காம்ப்ளிமென்ட்ரி ஃபீடிங்கை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

குடும்பப் பின்னணியில் தாலசீமியா அல்லது சிக்கல்செல் பாதிப்பு உள்ளவர்கள் திருமணத்துக்கு முன்பு ப்ரீ கன்செப்ஷனல் கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டும்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
Arindam Ghosh

அனீமியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசின் முன்னெடுப்பு

‘அனீமியா முக்த் பாரத்’ என்ற பெயரில் இந்தியாவில் அனீமியா விழிப்புணர்வு இயக்கம் ஒன்று நடத்தப்படுகிறது. குழந்தைகளிடம் காணப்படும் 58 சதவிகித ரத்தச்சோகை பாதிப்பை 40 சதவிகிதமாகவும், ஆண் பிள்ளைகளிடம் காணப்படும் 29 சதவிகிதத்தை 11 சதவிகிதமாகவும், பெண் குழந்தைகளிடம் காணப்படும் 54 சதவிகித பாதிப்பை

36 சதவிகிதமாகவும், பெண்களிடம் காணப்படும் 50 சதவிகிதத்தை 32 சதவிகிதமாகவும், தாய்ப்பாலூட்டும் பெண்களிடம் காணப்படும் 58 சதவிகிதத்தை 40 சதவிகிதமாகவும் குறைக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள்.

2022-க்குள் ரத்தச்சோகை பாதிப்பைக் குறைப்பதற்காக, 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இருமுறை 1 மில்லி அளவுக்கு அயர்ன் மற்றும் ஃபோலிக் அமில சிரப் கொடுக்கிறார்கள்.

5 - 9 வயதுக் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை அயர்ன் மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுக்கிறார்கள். 10-19 வயதுக் குழந்தைகளுக்கும், 20 - 49 வயதுப் பெண்களுக்கு வாரம் ஒரு முறை அயர்ன் மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுக்கிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கு நான்காவது மாதத்திலிருந்து 180 நாள்களுக்கு அயர்ன் மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்படி பார்த்துக் கொள்கிறார்கள். பிரசவத்துக்குப் பிறகு 6 மாதங்கள் வரை இது தொடர்கிறது.

கர்ப்ப கால ரத்தச்சோகை

ரத்த அளவு அதிகரிக்கும்போது, அதில் பிளாஸ்மா அளவு அதிகரிக்கும் அளவுக்கு, சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிக்காது. இதை ‘ஃபிசியலாஜிகல் ஹீமோ டைல்யூஷன்’ என்று சொல்வோம். அதுவரை அனீமியா இல்லாத பெண்களுக்குக்கூட கர்ப்ப காலத்தில் அனீமியா வரலாம். அதனால் அவர்கள் கண்டிப்பாக இரும்புச்சத்தும், ஃபோலிக் அமிலமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
Matrix Images

இரும்புச்சத்து ஏன் முக்கியம்?

செலிபிரிட்டி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

இரும்புச்சத்தின் அவசியம், அதன் வகைகள், அதை எளிதில் பெறும் வழிகள், யாருக்கு, எவ்வளவு தேவை என்கிற தகவல்களைப் பகிர்கிறார் செலி பிரிட்டி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு இரும்புச் சத்து மிக முக்கியம். சிவப்பு ரத்த அணுக் களின் ஒரு பகுதியாக உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதே இதன் முக்கிய செயல்பாடு. உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தையும், தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் மையோ குளோபின் என்ற புரதத்தையும் உருவாக்க உடல் இரும்புச்சத்தைப் பயன்படுத்துகிறது. அதி அத்தியாவசிய ஊட்டச்சத்தான இதனை உணவிலிருந்து பெற வேண்டும். உடல் உறிஞ்சும் இரும்பின் அளவானது நாம் அதை எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறோம் என்பதையும் பொறுத்தது.

குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு இரும்புச்சத்து அவசியம். அவர்கள் தம் வாழ்வின் முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கான இரும்புச்சத்தை சேமித்துவைத்துக்கொள்வார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய இரும்புச்சத்து தேவை அதிகரிக்கும்.

திட உணவுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அந்தத் தேவையை ஈடுகட்ட முடிகிறது. 19 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தினசரி தேவையான இரும்புச்சத்து கிடைப்பதில்லை. கர்ப்பம் தரிக்கும் வயதிலுள்ள அல்லது கர்ப்பம் தரித்த பெண்களுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
CharlieAJA

இருவகை இரும்புச்சத்துகள்

உணவில் `ஹீம்' (Heme), `நான்ஹீம்' (Non-heme) என இருவகையான இரும்புச்சத்துகள் இருக்கும். இறைச்சி, கடல் உணவுகள், கோழி போன்றவை இந்த இரண்டு வகை இரும்புச்சத்துகளையும் கொண்டவை. உடலால் சிறப்பாக கிரகித்துக்கொள்ளவும்படுபவை.

நான்ஹீம் வகையானது பசலைக்கீரை, பீன்ஸ், தானியங்கள், செறி வூட்டப்பட்ட உணவு தானியங்கள் (ஃபோட்டிஃபைடு என்ற பெயரில் கிடைக்கும்) போன்றவற்றில் இருக்கும். இது போல தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து உட்கிரகிப்பை அதிகரிக்க, மேற்குறிப்பிட்ட உணவுகளை இறைச்சி, கடல் உணவுகள், கோழி போன்றவற்றுடனோ அல்லது வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளுடனோ சாப்பிட வேண்டும்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
Deepak Sethi
பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!

இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள்

பீன்ஸ், பூசணி விதைகள், ஹெம்ப் விதைகள், ஆளி விதைகள்

கீரை வகைகள்

உலர் திராட்சை மற்றும் உலர் பழங்கள்

டோஃபு, டெம்பே, சோயா பீன்ஸ்

முந்திரி, பைன் நட்ஸ்

தோலுடன் உள்ள உருளைக்கிழங்கு

காளான்

புரொக்கோலி

ஓட்ஸ், கீன்வா, இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உலர்ந்த மற்றும் இன்ஸ்டன்ட் தானியங்கள்,

டார்க் சாக்லேட்

பேரீச்சம் பழம்

வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள்

ஆரஞ்சு, கிரேப், ஸ்ட்ராபெர்ரி, கிவி, கொய்யா, பப்பாளி, அன்னாசி, கிர்ணி, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள்

புரொக்கோலி, சிவப்பு மற்றும் பச்சை குடமிளகாய்

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
FotografiaBasica
பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
fcafotodigital

இரும்புச்சத்தை அதிகரிப்பது எப்படி?

நான்ஹீம் வகை இரும்புச்சத்துள்ள உணவுகளுடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

உணவுடன் காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கவும். இப்படிக் குடிப்பதால் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது 50 முதல் 90 சதவிகிதம்வரை குறைகிறது.

உணவுப்பொருள்களை ஊறவைப்பது, புளிக்கவைப்பது, முளைக்கட்ட வைப்பதன் மூலம், உணவிலுள்ள பைட்டேட் குறைந்து, இரும்புச்சத்து அளவு அதிகரிக்கும்.

இரும்பு கடாய்களில் சமைப்பதன் மூலம் இரும்புச்சத்தின் அளவு மும் மடங்கு அதிகம் கிடைக்கும்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
prabhjits
பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
apomares

அனீமியாவை வெல்லும் வழிகள்...

கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

1. இரும்புச்சத்து உடலில் சேர வைட்டமின் சி சத்து மிக முக்கியம். எலுமிச்சை ஜூஸ் குடிப்பது, லெமன் ரசம் வைத்துச் சாப்பிடுவது, சாலட்டில் சேர்ப்பது போன்றவற்றின் மூலம் வைட்டமின் சியை பெறலாம்.

2. ராஜ்மா, சன்னா, சோயா, டோஃபு, கீரை வகைகள் போன்ற இரும்புச்சத்துள்ள உணவுகளை வெறு மனே சாப்பிடுவதைவிட, கூடவே வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வதுதான் பலன் தரும். ஒவ்வொரு வேளை உணவிலும் எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வற்றை ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்துக் கொள்ளவும்.

3. அவகாடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்டில் இரும்புச்சத்து, வைட்டமின் சி இரண்டும் இருப்பதால் ரத்தச்சோகைக்கான சூப்பர் பழம் இது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
nensuria

4. பிஸ்தா பருப்பில் இரும்புச்சத்தும் தாமிரச்சத்தும் அதிகம். தாமிரச்சத்தானது இரும்புச்சத்தை முறையாக உட்கிரகிப்பது மட்டுமன்றி அது முறையாக உபயோகப்படுத்துவதையும் உறுதி செய்யும். உப்பு சேர்த்தே பெரும்பாலும் பிஸ்தா விற்பனை செய்யப்படுகிறது. கொழுப்புச்சத்தும் சற்று அதிகம் என்பதால் அவ்வளவாக எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. தீவிர ரத்தச்சோகை உள்ளவர்கள், கூடவே உடல் பலவீனமானவர்கள் தினமும் 8-10 பிஸ்தாவை (உப்பில்லாதது), பாதாம், உலர் திராட்சை, பேரீச்சம்பழத்துடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

5. பேஷன் ஃப்ரூட்டிலும் இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் உள்ளதால் அதையும் எடுத்துக்கொள்ளலாம்.

6. சூரியகாந்தி விதைகள் இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி மற்றும் ஈ சத்துகள் நிறைந்தவை. உப்பில்லாத சூரியகாந்தி விதைகளை ரத்தச்சோகை உள்ளவர்களும், ஏதேனும் நோயிலிருந்து மீண்டு கொண்டிருப்பவர்களும் சாப்பிடலாம். கடித்துச் சாப்பிட முடியாதவர்கள், அதை வறுத்துப்பொடித்து சப்பாத்தி, கஞ்சி என எதில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

7. `ஆல்ஃபால்ஃபா' (Alfalfa) என்ற பெயரில் புல்வகை ஒன்று கிடைக் கிறது. இதை ‘ஆன்டி அனீமிக்’ உணவு என்கிறார்கள். இதன் விதையை முளைக்கட்டச் செய்து முளைகட்டிய மற்ற தானியங்களுடன் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது.

8. பீட்ரூட் மிகச் சிறந்தது. சமைத்துச் சாப்பிடுவதைவிடவும் பச்சையாகச் சாப்பிடுவது முழுமையான பலன்களைத் தரும். ஆனால், பலருக்கும் இதன் பச்சை வாசனை பிடிப்பதில்லை என்பதால் 50 மில்லி பீட்ரூட் சாற்றை அவகாடோ ஜூஸுடன் கலந்து குடிக்கலாம். அல்லது பீட்ரூட் துருவலுடன் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.

பெண்களை மிரட்டும் ரத்தச்சோகை... அறிகுறிகள் - ஆபத்துகள் - தீர்வுகள்!
pilipphoto

9. `ஸ்பைருலினா' எனப்படும் கடல்பாசியும் இரும்புச்சத்து நிறைந்தது. இதில் நிறைய கலப்பட வகைகள் கிடைப்பதால் தரமானதாகப் பார்த்து தேர்வு செய்து அந்தப் பொடியை வெறும் தண்ணீரில் கலந்தோ, எலுமிச்சைப்பழ ஜூஸிலோ, சூப்பிலோ கலந்துகுடிக்கலாம்.

10. கோதுமைத் தவிட்டில் உள்ள பைட்டேட் இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற சத்துகள் உட்கிரகிக்கப்படுவதைத் தவிர்க்கும். எனவே கோதுமைத் தவிட்டைத் தவிர்ப்பது நல்லது. ஒருநாளைக்கு 2 டேபிள்ஸ்பூனுக்கு மேல் எடுக்காமல் இருப்பது சிறந்தது.