Published:Updated:

கோபம், எரிச்சல், அழுகை... ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம்' காரணங்களும் தீர்வும்! #NoMoreStress

பொதுவாக மாதவிடாய் முடிந்தவுடன் தொடங்கும் `ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் உற்பத்தி, பெண்ணுக்கு மனதளவில் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். அத்துடன் உடலளவில் அப்பெண்ணைக் கருத்தரிக்க தயார்படுத்துகிறது.

menopause
menopause

ஆன் ஆஃப் மூட்ஸ்... `இப்ப... என்ன கேட்டதுக்கு இப்படி எரிஞ்சு விழறே தீபா..?' `கோபத்தைக் குழந்தைங்ககிட்ட காட்டாத ரம்யா...' `எதுக்கெடுத்தாலும் அடம் பிடிக்காதே ரியா...' `முதல்ல தனியாப் போய் கதவை சாத்திட்டு அழுறதை நிறுத்து அனு...' இவை, எல்லா வீடுகளிலும் எப்போதாவது நடக்கும் பொதுவான விஷயமாகத் தெரியலாம். ஆனால், இப்படி நடந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட பெண்களைக் கவனித்தால், அது பெரும்பாலும் அவர்களது மாதவிடாய்க் காலத்துக்கு சற்று முந்தைய நாள்களாக இருக்கும். ஆம், மாதவிடாய் வருவதற்குமுன் பெண்களுக்கு ஏற்படும் இந்தக் குணநல மாற்றங்களை `ஆன் ஆஃப் மூட்ஸ்' என்றும், `பி.எம்.எஸ்' என்றும் குறிப்பிடுகிறோம். அதை உதாசீனப்படுத்தும்போது, சில நேரங்களில் பெண்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

menopause
menopause
pixabay.com

அதென்ன பி.எம்.எஸ்..? பெண்களுக்கு மட்டும் ஏன் `ஆன் ஆஃப் மூட்ஸ்' என மனநிலை மாறுகிறது..? அதற்கான தீர்வுகள் என்ன..? `பி.எம்.எஸ்' என்ற மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் பற்றி அறிய சற்று பயணிப்போம் வாருங்கள். பெண்களுக்கு, மாதவிடாய் தொடங்குவதற்கு ஐந்திலிருந்து ஏழு நாள்களுக்கு முன் உடலில் ஏற்படும் சில மாற்றங்களுடன், மனதளவிலும் ஏற்படும் பாதிப்புகளே `பி.எம்.எஸ்' எனப்படுகிறது. அதிக உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலை திடீரென்று மாறி பரபரப்பு, கோபம், எரிச்சல், அழுகை என அப்பெண்ணின் வழக்கமான நடவடிக்கைகளில் காணப்படும் சில மாறுதல்களை, `நல்ல வெளிச்சமான நாளொன்றில் திடீரென இறங்கும் கருமேகத்தின் இருளைப் போன்றது...' என்கிறது மருத்துவ உலகம்..

பெண்களின் பருவ காலத்தில் நிகழும் உடல், மனரீதியான மாற்றங்களுக்குக் காரணமாக விளங்கும் `ஈஸ்ட்ரோஜென்' மற்றும் `புரொஜெஸ்ட்ரான்' ஹார்மோன்கள்தான், பி.எம்.எஸ்ஸின் ஆன் ஆஃப் மூட்ஸுக்குக் காரணமாக விளங்குகின்றன. ஆனால், டீன் ஏஜ் பெண்கள் மட்டுமன்றி, மிடில் ஏஜ் பெண்கள், ஏன்... மெனோபாஸுக்கு முன்புகூட என எல்லா வயதிலும் இந்த மாதவிடாய்க்கு முன்பான `ஆன் ஆஃப் மூட்ஸ்' காணப்படுகிறது. பொதுவாக மாதவிடாய் முடிந்தவுடன் தொடங்கும் `ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் உற்பத்தி, பெண்ணுக்கு மனதளவில் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். அத்துடன் உடலளவில் அப்பெண்ணைக் கருத்தரிக்க தயார்படுத்துகிறது. இரண்டு வாரங்கள்வரை நீடிக்கும் இந்த ஈஸ்ட்ரோஜென் செயல்பாடு, சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளியேறியதும் படிப்படியாக குறையத் தொடங்குகிறது. மற்றுமொரு ஹார்மோனான புரொஜெஸ்ட்ரானின் செயல்பாடு அப்போது அதிகரித்து, கருப்பையின் உட்திசுவின் அடர்த்தியைக் கூட்டுவதுடன், மார்பகங்கள் மற்றும் தசைகளில் நீர்த்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

menopause
menopause
pixabay.com

மாதவிடாய் தொடங்குவதற்கு ஐந்திலிருந்து ஏழு நாள்களுக்கு முன், இந்த உற்சாக ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும். அப்போது, மூளையின் முக்கிய நியூரோ டிரான்ஸ்மிட்டரான செரட்டோனின் அளவும் குறைவதால் மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்தில் உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த மரபணு சார்ந்த பி.எம்.எஸ்-ல் அதிகப்படியான சோர்வு, தலைவலி, படபடப்பு, தலைச்சுற்றல், மார்பகங்களில் கனம் அல்லது வலி, பிறப்புறுப்புகளில் வலி, தசை மற்றும் மூட்டுகளில் வலி, வயிறு உப்புவது போன்ற உணர்வு, வயிற்றுப்போக்கு, பாதங்களில் வீக்கம் மற்றும் முகப்பருக்கள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். அத்துடன் காரணமின்றி ஏற்படும் கோபம், அழுகை, பதற்றம், தூக்கமின்மை, ஞாபக மறதி, கவனமின்மை என மனரீதியான மாற்றங்களும் அப்போது ஏற்படும்.

குறிப்பிட்ட ஒரு பொருளை சாப்பிட விருப்பம் அல்லது வெறுப்பு, அதிகப்படியான கோபம், அழுகை, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் என பெண்ணின் வழக்கமான நடவடிக்கைகளில் ஏற்படும் மாறுதல்கள் பி.எம்.எஸ்ஸின் முக்கிய அறிகுறிகளாகும். திகைப்பூட்டும்விதமாக நான்கில் மூன்று பேரில், அதாவது 85 முதல் 90 சதவிகிதப் பெண்களிடையே பி.எம்.எஸ் அறிகுறிகள் காணப்படுவதாக கூறுகின்றன புள்ளிவிவரங்கள். ஆனாலும், இந்த அறிகுறிகள் அனைத்தும் ஓரிரு நாள்கள் மட்டுமே நீடிக்கும். மாதவிடாய் தொடங்கியதும் அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவார்கள். அதனால் பெரும்பாலான பெண்கள், இதை அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகின்றனர். அப்படியிருக்க, எதற்காக `பி.எம்.எஸ்' பற்றிய விழிப்புணர்வு நமக்கு தேவையென்றால், இவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு அதிகளவு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதிலும் முக்கியமாக இவர்களில் மூன்று முதல் ஐந்து சதவிகித பெண்களில் மாதவிடாய்க்கு முன்பான மன அழுத்தம் தீவிரமடைகிறது. ஒரு சிலரில் மட்டும், அதிலும் பதின்பருவத்தில், ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் ஓரிரு நாள்கள் என்ற பி.எம்.எஸ் நிலைமாறி மனச்சோர்வு ஏற்பட்டு அது சில வாரங்கள் தொடர்வதுடன், அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பி.எம்.டி.டியாக (Premenstrual Dysphoria Disorder) மாறுகிறது.

stress
stress
pixabay.com

இந்த `பி.எம்.டி.டி' என்பது பதின்பருவப் பெண்களின் கற்கும் திறனைக் குறைப்பதுடன் பயம், கோபம், சோகம், பகையுணர்வு, வெறுப்பு, பொறாமை, எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். `கோபப் பறவைகள்' என இவர்களை அழைக்கும் மனநல மருத்துவர்கள், தொடரும் இந்த மனச்சோர்வு சிலநேரம் தற்கொலை முயற்சி, போதைப் பழக்கம் அல்லது வன்முறைகளில் ஈடுபடச் செய்கிறது என்கின்றனர். அதுமட்டுமன்றி `பி.எம்.டி.டி' பாதிப்பை முறையாகக் குணப்படுத்தாவிட்டால், பின்னாளில் 'பை போலார்' என்ற மனநோய்க்கும் இது வித்தாகக் கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

நம் நாட்டில், பதின்பருவத்தில் ஏற்படும் `பி.எம்.டி.டி' கண்டறியப்படுவதில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இதற்குத் தீர்வு என்னவென்று பார்த்தால், பி.எம்.எஸ் மற்றும் பி.எம்.டி.டி ஆகிய இரு நிலைகளுக்கு பிரத்யேக பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் இல்லையென்றாலும், அதுபற்றிய விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் இவற்றை நன்கு கட்டுப்படுத்தலாம். பி.எம்.எஸ் மற்றும் பி.எம்.டி.டி பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும், முக்கியமாக பெற்றோர், ஆசிரியர்களுக்கு அவசியம் தேவை என்கிறது மருத்துவ அறிவியல், `அடிப்படையான உடல் சார்ந்த அறிவு ஒவ்வொரு பருவகாலப் பெண்ணுக்கும் தேவை என்பதுடன் பெண்களிடையே அதுபற்றிய புரிதலை ஏற்படுத்துவது மிகமிக அவசியம்' என்கிறது.

Stress
Stress
pixabay.com

வாழ்க்கைமுறை மாற்றங்களும் இவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றில் முக்கியமானவை நம் அனைவருக்கும் பொதுவான உணவு, உடற்பயிற்சி மற்றும் நல் உறக்கம். சிறிய இடைவெளியில், அளவான உணவை உட்கொள்வது, அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை நிறைந்த உணவுகளை உட்கொள்வது, கால்சியம், வைட்டமின்கள் பி, சி, ஈ நிறைந்த பழங்கள், காய்கறி, கீரை வகைகள், சிறு தானியங்கள், பயறு மற்றும் கொட்டை வகைகள், கடல் உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வது, காபி, டீ மற்றும் கஃபைன் நிறைந்த பானங்களைத் தவிர்ப்பது, எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது ஆகிய அனைத்தும் மாதவிடாய்க்கு முன்பான மன அழுத்தத்தை நன்றாகக் குறைக்கும்.

இரவில் குறைந்தது ஆறு முதல் ஏழு மணிநேரம் வரை உறக்கமும் இங்கு அவசியமாகிறது. தினந்தோறும் 30 நிமிட துரித நடை, உடற்பயிற்சி, யோகா, நீச்சல் அல்லது சைக்கிளிங் ஆகிய பயிற்சிகள் நல்ல உறக்கத்தைத் தந்து பி.எம்.எஸ் அறிகுறிகளைக் குறைப்பதுடன் `டிஸ்மெனோரியா' (dysmenorrhea) என்ற மாதவிடாய் வலியிலும் உதவுகிறது. அனைத்துக்கும் மேலாக, பி.எம்.எஸ் மற்றும் பி.எம்.டி.டி பாதிப்புகள் உள்ள பெண்ணின்மீது அன்பும், அக்கறையும் காட்டுவதே மிகச் சிறந்த மனவியல் மருந்தாகத் திகழ்கிறது.

menopause
menopause

இவையனைத்தும் முழுமையாக பயனளிக்காதபோது, மூளையின் செரட்டோனின் அளவை அதிகரிக்கும் மருந்துகள் (SSRI) பி.எம்.டி.டியில் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் வைட்டமின் மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஹார்மோன் மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உட்கொள்ளலாம். பெண்ணின் மனதைப் படிப்பதும், புரிந்து கொள்வதும் கடினம் என்பது போலவே, மாதவிடாய்க்கு முன் ஏற்படும் மனச்சோர்வை முழுமையாக புரிந்துகொள்வதும் கடினம். ஆனாலும் பி.எம்.எஸ் மற்றும் பி.எம்.டி.டி ஆகிய நிலைகள் இயல்பானவை, இயற்கையானவை என்ற புரிதல் தேவை. வாழ்க்கைமுறை மாற்றங்களும், அனைத்துக்கும் மேலாக உடனிருப்பவர்களின் அன்பும், அரவணைப்பும் ஆன் ஆஃப் மூட்ஸை ஒரு நோயாக மாற்றாமல் இருக்கும் என்பதே நிதர்சனம்.