Published:Updated:

பெரிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகமா? | மார்பகப் புற்றுநோய் -FAQs

மார்பகப் புற்றுநோய்

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெரிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகமா? | மார்பகப் புற்றுநோய் -FAQs

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

Published:Updated:
மார்பகப் புற்றுநோய்

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட மார்பகப் புற்றுநோய் இப்போது கிட்டத்தட்ட வீட்டுக்கு வீடு காண்கிற பாதிப்பாகப் பெருகியிருக்கிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தாலே அது வருவதற்கு முன் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோய் தொடர்பாக நமக்கிருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கிறார், சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மார்பக சிகிச்சை மருத்துவரும் ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான கீர்த்தி கேத்ரீன் கபீர்.

மார்பக சிகிச்சை மருத்துவர் கீர்த்தி கேத்ரீன் கபீர்
மார்பக சிகிச்சை மருத்துவர் கீர்த்தி கேத்ரீன் கபீர்

யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வரும்?

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் நிற்கும் 40 முதல் 50 வயது வரை உடலுக்குள் அதிகப்படியான ஹார்மோன் மாறுபாடுகள் இருக்கும். அவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகம்.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

மார்பக சருமம் சிவந்து காணப்படுதல், கைகளைத் தூக்கும் போது குழி விழுதல், அக்குள் அடியில் வீக்கத்துடன் காணப்படும் நெறிக்கட்டிகள் , கை வைத்துப் பார்க்கும்போது மார்பகத்தில் கட்டி போல உருள்வது, காம்பில் நீர் அல்லது ரத்தம் வருவது போன்றவை.

சாதாரண கட்டியா, புற்றுநோய்க் கட்டியா என்பதை எப்படிக் கண்டறிவது?

கை வைத்துப் பார்க்கும்போது கொழுப்புக் கட்டிக்கும், புற்றுநோய்க் கட்டிக்கும் வித்தியாசம் அறிவது கடினம். ஸ்கேன் மூலமாகத்தான் எந்த மாதிரியான கட்டி என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே கட்டி வந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

பொதுவாகவே அனைவரது வீட்டிலும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஹேர் டை உபயோகிப்பவர்களுக்குப் புற்றுநோய், குறிப்பாக மார்பகப் புற்றுநோய் வரும் என்பது உண்மையா?

ஹேர் டைக்கும் மார்பகப் புற்றுநோயோடு தொடர்பு இல்லை.

கருத்தடை முறைகளைப் பின்பற்றுவோருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் உண்டா?

மூன்று மாதங்களுக்கோ, ஆறு மாதங்களுக்கோ எடுத்துக்கொள்வது தவறில்லை. இரண்டு வருடங்களைத் தாண்டி உபயோகிக்கும்போது தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் கூடும். எனவே தான் மருத்துவர்கள் இத்தகைய மாத்திரைகளை நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப் பரிந்துரைப்பதில்லை.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

ஸ்ட்ரெஸ்ஸுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?

நிச்சயம் தொடர்புண்டு. ஸ்ட்ரெஸ் இருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். அதனால் ரிஸ்க் அதிகரிக்கலாம்.

புற்றுநோய் இரண்டு மார்பகங்களையும் தாக்குமா?

சிலருக்கு ஒரே நேரத்தில் ரெண்டு மார்பகங்களிலும் பாதிப்பு வரலாம். சிலருக்கு ஒரு மார்பகத்தில் மட்டும் வரலாம். சிலருக்கு வேறு வேறு காலகட்டத்தில் எந்த மார்பகத்திலும் புற்றுநோய் பாதிப்பு வரலாம்.

மார்பகங்களை அகற்றுவதுதான் தீர்வா?

20 வருடங்களுக்கு முன், மார்பகப் புற்றுநோய் வந்தால் மார்பகங்களை முழுவதும் நீக்கிவிடுவார்கள். ஆனால், இப்போது அப்படி கிடையாது. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும்போது, மார்பகத்தைப் பாதுகாக்கலாம். இதுவே இரண்டாம் நிலை அல்லது கடைசி நிலையில வரும்போது, மார்புக்குள்ளேயே அது அதிகம் பரவியிருக்கும். அப்போது மார்பகததைப் பாதுகாக்க முடியாது. அந்நிலையில் மார்பகத்தை முழுதாக நீக்கிவிட்டு, நம் உடலுக்குள்ளேயே இருக்கும் திசுக்களைக் கொண்டு மார்பக வடிவத்தில் ரீகன்ஸ்ட்ரக்ஷன் சிகிச்சை செய்துகொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோய்க்கும் நிணநீர் சுரப்பி வீக்கத்துக்கும் என்ன தொடர்பு?

மார்பகப் புற்றுநோய் பரவும் நிலையில் இருந்தால், அது முதலில் அக்குள் அடியில் உள்ள நிணநீர் சுரப்பிகளில் தான் பரவும். சுய மார்பகப் பரிசோதனை செய்யும்போது சிலருக்கு மார்பகம் பெரிதாக இருந்தால், மார்புக்குள் இருக்கும் கட்டி சிறிதாக இருந்தால், கை வைத்துப் பார்க்கும் போது கண்டுபிடிக்க கஷ்டமாக இருக்கும். அக்குள் அடியில் ஏதாவது பரவி இருந்தால், நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். அக்குள் அடியில் வீக்கம் இருக்கும்போதும், கை முழுவதும் வீக்கமாக இருக்கும்போதும் அதுவும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளில் ஒன்று. எனவே அதையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

மார்பகங்களின் அளவுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?

மார்பகங்களின் அளவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் மார்பகத்தின் வகையைப் பொறுத்து அந்த பாதிப்பு ஏற்படலாம். உதாரணத்துக்கு அடர்த்தியான டென்ஸ் (dense) பிரெஸ்ட் உள்ளவர்களுக்கு , மார்பத்திற்குள் நிறைய சுரப்பிகள் இருக்கும். கொழுப்புத் திசுக்கள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு அதிகப்படியான ரிஸ்க் இருக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா?

ஓரளவுக்கு வராமல் தடுக்கலாம். முக்கியமாக உடற்பயிற்சி செய்யும்போது, ஹார்மோனல் இம்பேலன்ஸ் நார்மலாகும். துரித உணவு, கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சில உணவுகள் வீக்கத்தை அதிகப்படுத்தும். மசாலா, காரம் அதிகமாக சேர்க்கும்போது, வயிற்றுக்குள் எரிச்சலும் வீக்கமும் ஏற்படும்.

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

இதைத் தடுக்க பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும். வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாதவாறு உடலில் சூரிய ஒளியைப் படச் செய்ய வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்வியல் முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோய் அபாயத்திலிருந்து விலகி இருக்கலாம்.