Published:Updated:

அவள் பதில்கள் - 20: கர்ப்பப்பையை நீக்கினால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 20: கர்ப்பப்பையை நீக்கினால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து நான் பார்லர் செல்வதையே தவிர்த்துவிட்டேன். கைகால்களில் உள்ள ரோமங்களை வாக்ஸிங் செய்ய முடியவில்லை. முடிகளை நீக்கும் க்ரீம் உபயோகிக்கலாமா அல்லது வீட்டிலேயே வாக்ஸிங் செய்துகொள்ள வழி இருக்கிறதா?

அவள் பதில்கள் - 20: கர்ப்பப்பையை நீக்கினால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஷீபாதேவி

கைகால்களிலும், உடலின் பிற பகுதிகளிலும் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் க்ரீம் உபயோகிக்க எளிதானது என்றாலும் அது சருமத்துக்கு நல்லதல்ல. இதை உபயோகித்தால் சருமம் கருத்துப்போகலாம். தடிப்பு, அலர்ஜி வரலாம். தவிர முடி வளர்ச்சியும் முன்பைவிட அதிகரிக்கும். அதைவிட வாக்ஸிங் முறையே சிறந்தது. கடைகளில் கோல்டு வாக்ஸ், சூடாக்கி, உருக்கிப் பயன்படுத்த வேண்டிய வாக்ஸ் இரண்டுமே கிடைக்கும்.

வீட்டிலேயே வாக்ஸ் தயாரித்தும் உபயோகிக்கலாம். 600 கிராம் சர்க்கரையுடன் 250 மில்லி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து அடிகனமான பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்களுக்குச் சூடாக்கவும். இரண்டும் கரைந்து மெழுகு பதத்துக்கு வந்ததும் அரை கப் தண்ணீர் ஊற்றவும். அதில் சிறிதளவை எடுத்து இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் உள்ள வேறு பாத்திரத்தில் விட்டால், கலவை அடியில் செட்டாகும். அதுதான் சரியான பதம். மாறாக கலவை, தண்ணீரில் கரைந்தால் இன்னும் சிறிது நேரம் மிதமான தீயில் வைத்துக் கிளறி பதம் சரியாக வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

இதுதான் வாக்ஸ். இதை அவ்வப்போது தேவைக்கேற்ப ஃப்ரெஷ்ஷாக செய்துகொள்ளலாம். முதலில் சருமத்தில் முடிகளை நீக்க வேண்டிய பகுதியில் டால்கம் பவுடர் தடவவும். பிறகு மர ஸ்பூனால் வாக்ஸை எடுத்து சருமத்தில், முடியை நீக்க வேண்டிய இடத்தில் முடி எந்த நோக்கில் வளர்ந்திருக் கிறதோ அதே திசையில் தடவவும். பிறகு அதன் மேல் வாக்ஸ் ஸ்ட்ரிப்பை (கடைகளில் கிடைக்கிறது) வைத்து அழுத்தவும். பிறகு முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ஸ்ட்ரிப்பை பிடித்து இழுக்கவும்.

இப்படிச் செய்யும்போது வாக்ஸின் சூட்டை சரி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்குப் பொறுக்கும் சூட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சருமத்தில் கொப்புளங்கள் வரலாம். முடிகளை முழுமை யாக நீக்கியதும் ஈரத்துணியால் கைகால் களைத் துடைத்துவிட்டு, மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் அல்லது லோஷன் தடவிக்கொள்ளவும். காயங்களோ, கட்டிகளோ, புண்களோ இருந்தால் அந்த இடங்களில் வாக்ஸ் செய்ய வேண்டாம்.

நித்யா ராமச்சந்திரன்,  ஷீபாதேவி,  வணங்காமுடி
நித்யா ராமச்சந்திரன், ஷீபாதேவி, வணங்காமுடி

கர்ப்பப்பையை நீக்கியதும் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா?

-வே.தேவஜோதி, மதுரை - 17

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

நம்மூரில் பெண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் மிகப் பரவலானது `ஹிஸ்ட்ரெக்டமி’ எனப்படும் கரப்பப்பை நீக்கம். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. முதலில் நீங்கள் எந்த காரணத் துக்காக கரப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டீர்கள் என்பது தெரியவில்லை. இந்தச் சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருந்தது என்று பாருங்கள்.

ஆபரேஷனுக்கு முன்பு அதில் பிரச்னைகள் இல்லை என்றால், ஆபரேஷனுக்குப் பிறகும் பிரச்னைகள் இருக்காது. அறுவை சிகிச்சை முடிந்து நான்கு முதல் ஆறு வாரங்களில் நீங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். இந்த அறுவை சிகிச்சைக்கு முன் உங்களுக்கு உறவின்போது வலியோ, ரத்தப்போக்கோ இருந்து, அதனால் தாம்பத்திய உறவையே நீங்கள் தவிர்த்திருந்தால், ஆபரேஷனுக்கு பிறகு இந்தப் பிரச்னைகள் எல்லாம் சரியாகும் வாய்ப்புகளும் அதிகம்.

உங்களுக்கு கர்ப்பப்பையை மட்டும் எடுத்திருக்கிறார் களா அல்லது அதனுடன் சேர்த்து ஓவரீஸ் எனப்படும் சினைப்பை களையும் (கட்டிகள் இருப்பது போன்ற காரணத்துக்காக) எடுத்திருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி ஒருவேளை சினைப்பைகளையும் நீக்கி யிருந்தால் அதன் விளைவாக அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவின்போது அசௌகர்யம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இதற்காக பயப்படத் தேவையில்லை. வெளியே தடவிக்கொள்ளும் க்ரீம் உப யோகித்து இதைச் சரியாக்கலாம். எனவே கர்ப்பப்பையை நீக்கியவர்கள், இல்லற வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் என்றோ, அப்படியே உறவு வைத்துக்கொண்டாலும் அது முன்புபோல இருக்காது என்றோ நினைக்கத் தேவையில்லை.

அவள் பதில்கள் - 20: கர்ப்பப்பையை நீக்கினால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா?

எனக்கு வயது 65. கணவர் இறந்துவிட்டார். இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகன் என்னை கவனித்துக் கொள்வதில்லை. மகள்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள். என் கணவர் விட்டுச்சென்ற சொத்துகளை நான் என் இரண்டு மகள்களுக்கு மட்டும் பிரித்து எழுத முடியுமா? அதைப் பதிவு செய்து கொடுப்பது நல்லதா... உயிலாக எழுதிவைப்பது நல்லதா?

-கே.சாமுண்டீஸ்வரி, கோவை

பதில் சொல்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் வணங்காமுடி

மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என உங்கள் கணவர் நான்கு வாரிசுகளை விட்டுவிட்டு இறந்திருக்கிறார். இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 8-ன் படி இறந்து போன கணவரின் சொத்தில் மேற்குறிப்பிட்ட நான்கு பேருக்கும் சம உரிமை உண்டு.

நீங்கள் கேட்டுள்ளபடி, அனைத்து சொத்துகளையும் இரண்டு மகள்களுக்கு மட்டும் பிரித்துக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் நான்கில் ஒரு பங்கான உங்களுடைய பங்கினை இரண்டு மகள்களுக்கு மட்டும் பாத்தியப்படுத்திக் கொடுக்க உரிமை உண்டு. அதை ‘தான செட்டில்மென்ட் பத்திரமாக’ பதிந்து கொடுத்து விடுவது நல்லது. அதற்கு சொத்தின் மதிப்பில் இரண்டு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism