
#Avaludan
உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
47 வயதாகும் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், சமீபத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதையும் பகிர்ந்துகொண்டார். இளவயதில் மாரடைப்பு, பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என ஹெல்த் ரிஸ்க்குகள் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், ஆரோக்கிய வாழ்க்கை முறை, வருடாந்தர மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவத்துக்குப் புறம்பான நம்பிக்கைகளை விட்டொழித்தல் என இன்றைய தலைமுறைக்கு அவசியமான ஆரோக்கிய ஆலோசனைகள் குறித்த உங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
sankariiii.kms
சென்ற தலைமுறைகளில் நோய்கள் ஆரோக்கியக் குறைபாடு, மரபு, மருத்துவ சுகாதாரமின்மை உள்ளிட்ட காரணங்களால் வந்தன. இந்தத் தலைமுறையில், நம் வாழ்க்கை முறையே நமக்குப் பல நோய்களைக் கொடுக்கக் காரணமாக இருப்பது துயரம். ஒரு புறம் மருத்துவத் தொழில்நுட்ப வசதிகள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுகொண்டிருக்க, இன்னொரு புறம் ஜங்க்ஃபுட், தூக்கமின்மை, ஸ்கிரீன்டைம், உடல் உழைப்பின்மை என நோய்களுக்கு நாமே வெல்கம் சொல்கிறோம். எனவே, வாழ்க்கை முறை மாற்றத்திலிருந்து ஆரம்பிப்போம்... ஆரோக்கியத்துக்கான முதல் படியை.

iswariya_rajesh
இன்று ஆரோக்கியம், ஃபிட்னெஸ் குறித்த பிரக்ஞை அதிகரித்திருப்பது நேர்மறையான விஷயம். என்றாலும், அதற்கான வழிகாட்டல்கள், அறிவுரைகளை நம்பிக்கையான தளங்கள், உரிய நிபுணர்களிடமே நாம் பெற வேண்டும். இன்னும் சொல்லப்போனால், உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள் நேரடி ஆலோசனை பெற வேண்டும். அப்போதுதான் நம் உடலின் நிலை என்ன, நமக்கு என்ன தேவை, நமக்கு எதுவெல்லாம் ஆகாது என்பதையெல்லாம் அவர் கேட்டறிந்து, அதற்கு ஏற்றபடியான சிகிச்சையைக் கொடுப்பார். மாறாக, `புற்றுநோயை குணமாக்கும் பழம்’ வாட்ஸ்ஆப் ஃபார்வேர்டு முதல், ‘சர்க்கரை நோயையே இல்லாமல் செய்துவிடலாம்’ என்று சொல்லும் ‘ஆன்லைன் யுனிவர்சிட்டி டாக்டர்’கள் வரை பின்பற்றினால், பாதகங்கள் நமக்கே. மேலும் அது சரியான சிகிச்சை பெறுவதை திசை திருப்பி, தாமதமாக்கி, நோயை வீரியமாக்கும்... கவனம்.
shant_hi2812
முன்னர் எல்லாம் புகை, குடி தீய பழக்கங்களாக இருந்தன. அவற்றைச் செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓர் ஒழுக்கக் குற்ற உணர்வு இருந்தது. இன்று அனைத்தையும் ‘சோஷியலைஸ்’, ‘நார்மலைஸ்’ செய்து வருவதன் விளைவு... அவற்றால் ஏற்படும் நோய்களின், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது, பாதிப்புக்கு இலக்காகும் வயது குறைந்துகொண்டே வருகிறது. உடலுக்குத் தீயவற்றை விலக்க வேண்டும் என்பது எந்தத் தொழில்நுட்ப யுகத்துக்கும் பொருந்தும்.
ruby_sheriefdeen
நம் உடல் ஆரோக்கியம் என்பது, நாம் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. நாளையே நமக்கு நலம் குன்றினால், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அது பாரமாகிவிடும். சிகிச்சைக்கான கட்டணம் முதல் பராமரிப்பு வரை... நாம் செய்யும் தவற்றுக்கு நம் மனைவி, கணவர், பிள்ளைகள், சுற்றம் என அனைவரையும் சிரமத்துக்கு உள்ளாக்கலாமா? எனவே, ஒவ்வொருவரும் தங்களது ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.