ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

குழந்தை வளர்ப்பு கைடு!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை வளர்ப்பு கைடு!

கர்ப்பகாலம், பரிசோதனை, தடுப்பூசி, உணவு, வளர்ச்சி...

குழந்தைகளை செம்மையாக வளர்த்தெடுப்பதே எல்லா பெற்றோர்களின் விருப்பமாக, கனவாக, லட்சியமாக உள்ளது. குறிப்பாக, அவர்களின் ஆரம்ப வயதுகளில் ஆரோக்கியத்தையும், அந்தந்த வயதுக்குண்டான வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதில் பெற்றோர்கள் மிகவும் முனைப்புடன் இருப்பார்கள்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

ஒரு குழந்தையின் உடல்நலன் என்பது, அது சிசுவாக தாயின் கருப்பைக்குள் வளரும் நாள்களில் இருந்தே பேணப்பட வேண்டியது. குழந்தையின் வளர்ச்சி என்பதை, பிரசவத்துக்குப் பின் இருந்தே பலரும் யோசிக்கலாம். ஆனால், கர்ப்பகாலம் குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். சொல்லப்போனால், குழந்தை பிறந்த பின்னர் அதன் வளர்ச்சிக்கும், மேலும் ஒருவேளை ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டாலும் அம்மா, குடும்பத்தினர், மருத்துவர் என அனைவரும் இணைந்து அக்குழந்தையை வளர்த்தெடுக்க முடியும். ஆனால், கர்ப்ப காலத்தில் அதன் வளர்ச்சி முழுக்க முழுக்க அம்மாவை மட்டுமே சார்ந்துள்ளதால், பரிசோதனைகளில் இருந்து உணவு வரை கர்ப்பிணி அதிக பொறுப்பு, அக்கறைகொள்ள வேண்டும். கூடவே, எமோஷனல் சப்போர்ட் முதல் ஆரோக்கியம் வரை, கர்ப்பிணிக்கான அன்பையும் ஆதரவையும் அவர் குடும்பத்தினர் வழங்க வேண்டும்.

 ஹேமலதா
ஹேமலதா

ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கவும் வளரவும் கர்ப்பகால பரிசோதனைகளில் ஆரம்பித்து, தடுப்பூசி, உணவு வரை அதற்கு அனைத்தும் தவறாது கிடைக்கச் செய்ய வேண்டியது, ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு. அந்த வகையில், கருவறை முதல் குழந்தையை முதன்முதலாக பள்ளியில் சேர்த்து வகுப்பறையில் அமரவைக்கும் வயது வரையில், அந்தந்தக் காலகட்டத்துக்கான மருத்துவ ஆலோசனைகளை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார்கள், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஹேமலதா மற்றும் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் நரேஷ்.

 நரேஷ்
நரேஷ்

குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த பின்னர்...

குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவை எடுத்த பின்னர், அந்தப் பெண் தன் உடலையும், அவர் கணவர் மற்றும் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கான சூழலையும் அதற்கேற்ப தயார்படுத்த வேண்டும். பெண்ணுக்கு ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் நெடுநாளைய நோய்கள் ஏதேனும் இருந்து, அதற்கு சிகிச்சை எடுத்து வருபவராக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே, குழந்தைக்குத் திட்டமிடுதல் நல்லது. மனரீதியாகவும் தாயாகத் தயாராக வேண்டும். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, கருவுறுதலுக்கு முன்பிருந்தே ஃபோலிக் ஆசிட், வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் உதவி புரியும். குடும்பத்தினரின் ஆதரவு முக்கியம். குறிப்பாக, வீட்டுப் பணிகள் முதல் மனநலன் வரை கணவர் தன் மனைவிக்குத் தேவையான சப்போர்ட் கொடுக்க வேண்டும். வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவரை தேர்ந்தெடுப்பது நல்லது. உடலுக்கு ஏற்ற எடை, பற்களின் ஆரோக்கியம் என எல்லாவற்றையும் பேண வேண்டும். மிக முக்கியமாக, ரூபெல்லா தடுப்பூசி போட்டு 3 மாதங்களுக்குள் கர்ப்பம் தரிக்கக் கூடாது. கர்ப்பத்துக்கு முன்பான இந்தத் திட்டமிடல்கள், கருவின் வளர்ச்சிக்கு ஆரோக்கிய மான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

கருவுற்றதை உறுதி செய்யும் பரிசோதனை!

மாதவிடாயைத் தவறவிட்டால் அது கர்ப்பமா என்று பரிசோதனை செய்ய, வீட்டிலேயே UPT (The Urine Pregnancy Test) செய்து பார்க்கலாம். இதில், பரிசோதனை செய்யும் கார்டில் பெண்ணின் சிறுநீரை விடும்போது, இரண்டு பிங்க் கோடுகள் தோன்ற வேண்டும். என்றாலும், அதன் மூலம் மட்டுமே உறுதிப்படுத்தாது, அப்படித் தோன்றினால் அடுத்து மகப்பேறு மருத்துவரிடம் செல்ல வேண்டும். அங்கு சிறுநீர், ரத்த பரி சோதனைகள் மேற்கொள்ளப்படும். தவிர, ஸ்கேன் பரிசோதனை யின் மூலம் கருவின் ஆரோக்கியம் முதல் கருப்பைக்கு வெளியே தங்கியிருக்கும் கர்ப்பமா (Tubal Pregnancy), ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளா என்பது வரை கண்டறியப்படும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

கருவுற்றதற்குப் பின்னான பரிசோதனைகள்!

கருவுற்ற 7-வது வாரத்தில், அதாவது 50-வது நாளுக்குப் பின் ஸ்கேன் செய்யப்படும். தொடர்ந்து, தாய்க்கு ஏதேனும் இணை நோய்கள், குறைபாடுகள் உள்ளனவா என்பதை அறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இவற்றில், தாய்க்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்த வகை, ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு, HIV (Human Immunodeficiency Virus) பரிசோதனை, VDRL (The Venereal Disease Research Laboratory Test) என்ற பாக்டீரியா தொற்றுக்கான பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ரத்த பரி சோதனைகளும் மற்றும் தொற்றை அறியும் சிறுநீர் பரிசோதனை களும் மேற்கொள்ளப்படும்.

பரிசோதனைகளின் முடிவில், தாய்க்கு ஏதேனும் இணை நோய்கள், தொற்றுகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே அதற்கான மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்பட்டு தாய், சேய் நலம் பாதுகாக்கப்படும். மாதம் ஒருமுறை அல்லது உடல் நிலைக்கேற்ப மாதம் இருமுறை என மருத்துவப் பரிசோதனைக் குச் செல்ல வேண்டும். அந்தந்த மாதத்துக்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

5-வது மாதத்தில்... குளுக்கோஸ் சேலஞ்ச் பரிசோதனை!

கர்ப்பகாலத்தின் 5-வது மாதத்தில் குளுக்கோஸ் சேலஞ்ச் பரிசோதனையை (Glucose Challenge) தவறாமல் மேற் கொள்ள வேண்டும். இது கர்ப்பகால சர்க்கரை நோயை (Gestational Diabetes) கண்டறியும் பரிசோதனை.

இந்தப் பரிசோதனையின்போது, காலையில் வெறும் வயிற்றில் 50 கிராம் குளுக்கோஸ், நீரில் கலந்து குடிக்கக் கொடுக்கப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அறியப்படும். அளவு 140-க்கு மேல் இருந்தால், தாய்க்கு கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், அதற்கு ஏற்ற உணவு முறை, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை போன்றவை பரிந்துரைக்கப்படும்.

கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட்டால், அது பிரசவ நேரத்தில் அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மேலும், இதனால் சிசுவின் எடை இயல்பைவிட அதிகரிக்கலாம் என்பதால், பிரசவம் சிக்க லாவது, அறுவை சிகிச்சை தேவைப்படுவது போன்றவற்றுக்கும் வாய்ப்பாகலாம். எனவே, கர்ப்பகால சர்க்கரையைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

ஸ்கேன் பரிசோதனைகள் - எந்தெந்த மாதம்?

முதல் பரிசோதனை - ஏழாவது வாரம்: இதில் கருவை உறுதி செய்வது, வளர்ச்சி, இதயத் துடிப்பு, கருவின் இருப்பிடம் மற்றும் தாய்க்கு கருப்பையில் ஏதேனும் கட்டிகள் உள்ளனவா என்பவற்றை அறியலாம். செயற்கை கருத்தரிப்பு முறைகளில், கருவின் வளர்ச்சி, எத்தனை கரு உண்டாகியுள்ளது என்பவற்றையும் இந்த முதல் ஸ்கேன் மூலம் அறியலாம்.

NT ஸ்கேன் - 11 முதல் 14-வது வாரம்: கருவின் கழுத்துப் பகுதியில் உள்ள நரம்பு மண்டலத்தின் அளவை கண்டறிய, நியூக்கல் ட்ரான்ஸ்லுசென்சி (Nuchal Translucency - NT) ஸ்கேன், 11 முதல் 14-வது வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும். இந்த NT ஸ்கேனுடன், தாய்க்கு டபுள் மார்க்கர் டெஸ்ட் (Double Marker Test), ட்ரிப்பிள் மார்க்கர் டெஸ்ட் (Triple Marker Test) என்ற ரத்தப் பரிசோதனையையும் மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பரிசோதனைகள் மூலம் சிசுவுக்கு மூளைவளர்ச்சிக் குறைபாடு, டௌன் சிண்ட்ரோம் உள்ளிட்ட மரபணு பிரச்னைகள் இருக்கிறதா மற்றும் தாய்க்கு வலிப்பு நோய், ரத்த அழுத்தம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது கண்டறியப்படும்.

Anomaly ஸ்கேன் - 18 முதல் 22-வது வாரம்: அனாமலி (Anomaly) ஸ்கேன் 18 முதல் 22-வது வாரங்களுக்குள் செய்யப்படும். இதன் மூலம் கருவின் மூளை, இதயம், சிறுநீரகங்கள், வயிறு என உள் உறுப்புகளின் வளர்ச்சியை அறிந்து, அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கண்டறியப்படும். பிறவிக் குறைபாடுகளுக்கு வாய்ப்பிருந்தால் அதைக் கண்டறிந்து சொல்லும் இந்தப் பரிசோதனை, தவறவிடக்கூடாத முக்கியமான பரிசோதனை.

Growth ஸ்கேன் - 30 மற்றும் 36-வது வாரம்: சிசு சீராக வளர்கிறதா, சரியான அளவில் நீர் செல்கிறதா, தேவையான நீர் இருக்கிறதா, ஊட்டச்சத்து, ரத்தம் முதலியவை தேவையான அளவில் கிடைக்கின்றனவா, நஞ்சுக்கொடி சுற்றியிருக்கிறதா, தலை எந்தப் பக்கம் உள்ளது உள்ளிட்டவற்றை குரோத் ஸ்கேன் (Growth Scan) மூலம் கண்டறியலாம். இதுதான் கர்ப்பகாலத்தின் கடைசி ஸ்கேன். இது 30 மற்றும் 36-வது வாரங்களில் எடுக்கப்படும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
ArtMarie

கர்ப்பகால தடுப்பூசிகள்!

* டெட்டனஸ் (வெட்டுக்காயங்கள், புண்கள் ஆகியவற்றின் ஊடாக நோய் நுண்மங்கள் உடலினுள் புகுந்து உண்டாகும், தசைகளை, குறிப்பாக முகத்திலுள்ள தசைகளை, விறைப்பாகவும் அசைக்க முடியாமலும் செய்யும் கடுமையான நோய் வகை), டிப்தீரியா (தொண்டை அழற்சி) மற்றும் ‘பெர்டாசிஸ்’ (கக்குவான் இருமல்)... இவற்றுக்கு எதிராகச் செலுத்தப்படுவது Tdap (Tdap - Tetanus, diphtheria, and pertussis) தடுப்பூசி. இது பிறந்த குழந்தை களுக்குப் போடப்படுவது. ஆனால் தற்போது, கருவுற்ற தாய்க்கே இந்தத் தடுப்பூசி 26-வது வாரத்தில் முதல் டோஸும், 30-வது வாரத்தில் அடுத்த டோஸுமாகப் போடப்படுகிறது.

* 7-வது மாதத்தில் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

* தற்போது கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாகப் போடப் படுகிறது. இதை கர்ப்பகாலத்தின் எந்த மாதத்திலும் போட்டுக் கொள்ளலாம். கர்ப்ப காலத்துக்கு முன்னரே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்கள், கர்ப்பகாலத்தில் போட தேவையில்லை.

* இவை தவிர்த்து, வசிப்பிடம், செல்லும் இடங்களைப் பொறுத்து, அங்கிருக்கும் காலநிலை, அங்கு பரவிக்கொண்டிருக்கும் நோய்களுக்கு ஏற்ப தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
yacobchuk

சிசு ஆரோக்கியமாக வளர... இவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும்!

* நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் இருக்கும் உணவுப் பொருள்கள்.

* இட்லி, தோசைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், சிறு தானியங்களில் செய்த உணவுகளை அடிக்கடி உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

* வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள், குறிப்பாக நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை உண்ண வேண்டும்.

* சர்க்கரை மற்றும் உப்பை ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுக்குள் எடுத்துக்கொள்வது நல்லது.

* இரும்புச்சத்து அதிகமுள்ள பீட்ரூட், பேரீச்சை, முருங்கைக் கீரை, அத்திப்பழம், கேரட், பொரிகடலை, சத்துமாவு போன்ற வற்றை சாப்பிடலாம்.

* நிறைய கீரை வகைகள் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் காலை 10 மணிக்குள் 10 - 15 நிமிடங்கள் வெயில் உடலில்படும்படி இருக்கலாம்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
Anastasiia Stiahailo

இவற்றையெல்லாம் தவிர்க்கவும்!

* அதிகமான மாவுச்சத்து, அதிக கொழுப்புச்சத்து உடைய உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண் டும்.

* ஜங்க் உணவுகள், குளிர்பானங்கள், மைதா உணவு கள், பாஸ்தா, நூடுல்ஸ், அளவுக்கு அதிகமான அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* பிஸ்கட், பிரெட் போன்றவை கர்ப்பகாலத்தில் வேண்டாம்.

* பாலில் கலந்து குடிக்கச் சொல்லி பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களை தவிர்ப்பது நல்லது.

* பச்சை முட்டை, சரியாக வேகாத இறைச்சி போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

* ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் ஆறு வேளைகளாக உணவை பிரித்துச் சாப்பிடலாம்.

* அதிக குளிர்ச்சி, அதிக சூட்டுடன்கூடிய உணவுகளைத் தவிர்க்கவும்.

* மன அழுத்தம் தவிர்க்க வேண்டும்.

* அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுக்கக் கூடாது

* மது மற்றும் புகைப்பழக்கம் தவிர்க்க வேண்டும்.

* அதிகமான பயணங்கள், நீண்ட தூர பயணங்கள் வேண்டாம்.

* கடைகளில் பார்ப்பது அனைத்தையும் சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய ஹேர் கலர், ஹேர் டை போன்றவற்றைத் தவிர்க்கவும்.

* நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது.

* மிக முக்கியமாக கேட்ஜெட்களை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

* ஐந்தாவது மாதத்துக்குப் பின் மல்லாந்து படுப்பதைத் தவிர்க்கவும்.

* உடல்நலத் தொந்தரவுகளுக்கு மெடிக்கல் ஷாப்பில் தானாக மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது.

* அதிக கூட்டமிருக்கும் இடங்கள், ட்ரெக்கிங் போன்ற சாகச பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

பிரசவத்துக்கு இப்படி தயாராக வேண்டும்!

முடிந்தவரை உடலுக்கு அசைவை, உழைப்பைக் கொடுக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி செய்யலாம். எளிமையான யோகா, சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம். குறிப்பாக, கர்ப்பவாயைப் பலப்படுத்தும் பட்டர் ஃபிளை உடற்பயிற்சி. மூச்சுப் பயிற்சியை பிரசவத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே செய்யத் தொடங்கலாம். பிரசவத்துக்குத் தயாராவது குறித்து மருத்துவர்கள் நடத்தும் `டெலிவரி கிளாஸி'ல் கணவருடன் கலந்து கொள்ளலாம். இப்படி, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பிரசவத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

தாய்ப்பால் கொடுக்கும்போது!

* தங்கள் உடல்நிலை மற்றும் சிசுவின் வளர்ச்சி பற்றிய கர்ப்பகால குழப்பங்கள், சந்தேகங்கள் எல்லாம் ஒருவழியாக பிரசவத்துடன் முடிவுக்கு வர, குழந்தை பிறந்த பிறகு, அடுத்த சுற்று வழிகாட்டல் தேவைப்படும் தாய்மார்களுக்கு. அதில் முதலாவது தாய்ப்பால்.

* பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே முக்கிய உணவாகும். இந்த ஆறு மாதங்களில் கொடுக்கக்கூடிய தாய்ப்பாலின் சத்துகள், அதன் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக அமையும்.

* ஆறு மாதங்கள் வரை தண்ணீர்கூட தேவையில்லை, தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்குப் போதுமானது. அதிலேயே அனைத்து சத்துகளும் கிடைத்து விடும்.

* தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்புக்கு தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் மற்றும் பால், நார்ச்சத்து மிக்க உணவுகள், காய்கறிகள், புரதச்சத்து அதிகமுள்ள சைவ, அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமானதாக உள்ளதா என்பதை அறிய, ஒரு நாளைக்கு குழந்தை குறைந்தது ஆறு முறை சிறுநீர் கழிக்கிறதா என்று பார்க்கவும். அதன் மூலமே குழந்தைக்குத் தேவையான அளவு பால் கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

முதல் ஆறு மாதத்துக்குப் பின்... என்னென்ன இணை உணவுகள்?

* முதலில் அரிசிக் கஞ்சியை சிறிது சிறிதாகக் கொடுத்துப் பழக்கவும். தொடர்ந்து மிருதுவான உணவான இட்லியை மசித்துக்கொடுக்கவும். பழகிய பின் பருப்பு சாதம் கொடுத்துப் பழக்கலாம். 6 முதல் 8 மாதம் வரை தாய்ப்பாலுடன் இந்த இணை உணவுகளை, நாளுக்கு இரண்டு முதல் மூன்று முறை வரை கொடுத்துப் பழக்கவும்.

* 8 மாதங்களுக்குப் பின், ஒரு நாளுக்கு மூன்று முதல் ஐந்து முறை பிரித்து உணவு கொடுப்பதுடன், தாய்ப்பாலையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

குழந்தைகளுக்கான தடுப்பூசி... ஆரோக்கியத்துக்கான வேலி!

நம் உடம்பில் Innate Immunity, Acquired Immunity என இரண்டு வகை எதிர்ப்பு சக்திகள் இருக்கும். இதில் Innate Immunity என்பது நம் உடம்பில் இயற்கையாக எப்போதும் இருப்பது. Acquired Immunity என்பது நாம் வளரும்போது அவ்வப்போது தோன்றும் ஆரோக்கிய பிரச்னைகளை எதிர்கொள்வதன் மூலம் உடலில் உருவாவது.

பொதுவாக, ஒரு கிருமி நம் உடலுக்குள் செல்லும்போது அதற்கு எதிர்வினை யாற்றி நோயை வெல்வதுடன் கூடவே, அதை எப்படிக் கையாள்வது, கொல்வது என்பதை எல்லாம் நமது எதிர்ப்பு சக்தி தனது நினைவடுக்கு செல்லில் சேமித்து வைத்துக்கொள்ளும். தொடர்ந்து, வாழ்க்கை முழுக்க எப்போதெல்லாம் அந்தக் கிருமி உடலுக்குள் வருகிறதோ அப்போதெல்லாம் நம் நோய் எதிர்ப்பு சக்தி தனது நினைவில் சேமித்துள்ள அந்தச் செயல்முறையை செயல்படுத்தி எதிர்வினையாற்றி, நோயை வெல்லும். இந்த கான்செப்ட் தான் தடுப்பூசிக்கும். தடுப்பூசி செலுத்தும்போது, இந்த நோய் எதிர்ப்பு சக்தி செயற்கையாகத் தூண்டப்படுகிறது. குழந்தைகளை ஆரம்ப வருடங்களில் இருந்து வரும் நோய்களிலிருந்து காப்பாற்ற தடுப்பூசி மிக முக்கியம்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
naumoid

* குழந்தை பிறந்து 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் BCG, போலியோ சொட்டு மருந்து மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பூசியை கண்டிப்பாகப் போட வேண்டும்.

* 6-வது வாரம், 10-வது வாரம், 14-வது வாரம், 18 மாதத்தில் முத்தடுப்பு ஊசிகள் (DPT) போட வேண்டும். ஒருவேளை கர்ப்பகாலத்தில் அம்மாவுக்கு Tdap ஊசி செலுத்தப்பட்டிருந்தாலும், அது குழந்தை பிறந்த முதல் 45 நாள்களுக்கே நோய்ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக இருக்கும். எனவே, குழந்தைக்கும் போட வேண்டும்.

* PCV (Pneumococcal Vaccination) தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் காதில் ஏற்படும் பிரச்னை, நிமோனியா, மூளைக்காய்ச்சல், கிருமித் தொற்றுக்கு எதிராகச் செயல்பட இந்தத் தடுப்பூசி மிக முக்கியமானது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் இருந்து 6 மாதம் வரை மூன்று டோஸ்களும், ஒன்றரை வயதில் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படும். உங்கள் மருத்துவரை அணுகி இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

* 5 வயது வரை போலியோ சொட்டு மருந்து கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.

* மேற்கூறியவை எல்லாம் தவறாமல் கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை தடுப்பூசிகள். தவிர, அந்தந்தப் பகுதிகள், சீசன்களுக்கு ஏற்ற தடுப்பூசியை மருத்துவ ஆலோசனையுடன் போட்டுக்கொள்ளலாம்.

* ஒருவேளை தடுப்பூசி அட்டவணையில் ஏதேனும் ஓர் ஊசி, பூஸ்டர் டோஸை அதற்குரிய மாதத்தில், வயதில் போடாமல் விட்டிருந்தால், தாமதமானாலும் கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி போடும்போது காய்ச்சல், சளி என குழந்தைக்கு உடல்நலப் பிரச்னைகள் இருக்கக் கூடாது.

* தடுப்பூசி போட்ட பின் அதிக நேரம் தேய்க்க வேண்டாம். தடுப்பூசி செலுத்திய பின் உடனே மருத்துவமனையில் இருந்து கிளம்பாமல், 20 நிமிடங்களாவது இருந்து, குழந்தைக்கு எந்த எதிர்வினையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டுச் செல்லலாம்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்!

* பிறந்த குழந்தைக்கு சளி பிடித்திருந்தாலோ, குளிக்க வைக்கும்போதோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ மூக்கு மற்றும் காதில் எண்ணெய் விடுவது கூடாது. இதனால் நுரையீரல் மற்றும் உள்ளுறுப்புகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கை.

* குழந்தையின் உடல் முழுவதும் துணியால் சுற்றி வைக்காமல், காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

* தொப்புள்கொடியில் மஞ்சள், எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* `உரம் எடுக்கிறேன்’ என்று குழந்தையை துணியில் போட்டு உருட்டுவது, குலுக்குவது எல்லாம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுத்தக் கூட வாய்ப்பை உண்டாக்கலாம் எச்சரிக்கை.

* குழந்தையின் அழுகையை சமாதானப் படுத்தக்கூடிய அழுகை, சமாதானப்படுத்த முடியாத அழுகை என்று இரண்டாகப் பிரிக்க லாம். அழும்போது பால் கொடுத்தாலோ, தூங்க வைத்தாலோ அழுகையை நிறுத்தினால் அது சமாதானப்படுத்தக்கூடிய அழுகை. ஆனால், எதைச் செய்தாலும் விடாது தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால், அதன் உடலில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு பிரச்னையை நமக்குச் சொல்லும் அதன் மொழிதான் அழுகை என்பதை புரிந்துகொண்டு, உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
Svetlana_Smirnova

குழந்தையின் எடை... கொழுகொழுதான் ஆரோக்கியமா?

* குழந்தையின் எடை என்பது அந்தக் குழந்தையின் மரபணு, அதற்குக் கிடைக்கும் சாப்பாடு, வளரும் சூழல் என அனைத்தையும் பொறுத்து அமைவது. எனவே, எடை விஷயத்தில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம்.

* குழந்தை பிறந்த 10 நாள்களில் எடை குறைந்து, பின்னர்தான் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

* குழந்தை தன் பிறந்த எடையில் இருந்து மூன்று மடங்கு வரை ஒரு வயதில் அதிகரித்திருக்க வேண்டும்.

* குழந்தையின் முதல் இரண்டு வருட எடையில் சீரான முன்னேற்றம் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை தடுப்பூசி செலுத்தச் செல்லும்போதும் இதைக் கண்காணிக்க வேண்டும். ஒரே எடையில் குழந்தை அதிக மாதம் தேங்கினாலோ, அதைவிட குறைந்தாலோ ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கலாம். அதற்குரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும்.

* கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்றில்லை.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

வளர்ச்சி நிலை... மாறுபடலாம்!

எல்லா குழந்தைகளும் ஸ்விட்ச் போட்டதுபோல மூன்றாவது மாதத்தில் குப்புறப் படுக்க வேண்டும், 10 மாதங்களில் நடக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் இது மாறுபடும். சில குழந்தைகள் இந்த வளர்ச்சி நிலைகளை விரைவாகவும், சில குழந்தைகளை தாமதமாகவும் எட்டலாம். அதற்குக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், சில விஷயங்களை

அலர்ட் ஆவதற்கான அளவுகோலாகக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்குப் பின் குழந்தையின் பார்வை நம் முகத்தை நேராகப் பார்க்காமல் இருந்தால், மூன்று மாதங்களுக்குப் பின் கிலுகிலுப்பை, குரல்கள் என சத்தத்துக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தால், நான்கு மாதங்களுக்குப் பின் தலை நிற்காமல் இருந்தால், ஒரு வயதுக்குப் பிறகும் குழந்தையால் எழுந்து நிற்க முடியாமல் இருந்தால்... மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

விளையாட ஆரம்பிக்கும்போது... இவற்றில் எல்லாம் கவனம்!

* குழந்தைகள் தவழ ஆரம்பித்த பின்னரும், விளையாட்டு நேரங்களிலும் அவர்களது உள்ளங்கையைவிட சிறிய பொருள்கள் எதுவும் அவர்கள் கைக்கு எட்டும் வகையில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி, ஊக்கு, சாவி போன்றவை.

* சூடான எந்தப் பொருளையும் தரையில் வைக்கக் கூடாது.

* அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருள்கள் அனைத்தையும் உயரத்தில் வைக்க வேண்டும்.

* அரிவாள்மனை, கத்தி போன்ற கூர்முனை உள்ள பொருள்கள் குழந்தை எடுக்கும் வகையில் இருக்கக் கூடாது.

* ட்ரான்ஸ்பரன்ட் பாட்டில்களில் தண்ணீரை தவிர வேறு எதையும் வைக்கக் கூடாது. லிக்விட் சோப், ஆசிட் எல்லாம் குழந்தை கண் பார்க்காத இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

* இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முன் கடலை போன்ற செரிக்கக் கடினமான உணவுப் பொருள்களை வைக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். விழுங்கும்போது அது அடைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகலாம்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!
Madhan'S P H O T O G R A P H Y

பள்ளிக்கூடம் போகலாம்!

பள்ளிக்கூடம் என்பது, குழந்தையைப் பொறுத்தவரை வீடு என்ற பாதுகாப்பான வளையத்தில் இருந்து முதன்முறையாக வெளியில் செல்லக்கூடிய இடமாகும். உடன் படிக்கும் குழந்தைகள், பள்ளி என புதியவர்கள் மற்றும் புதிய சூழலை குழந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, வகுப்பில் ஒரு குழந்தைக்குக் காய்ச்சல், சளி என ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் அது மற்ற குழந்தைகளுக்கும் விரைவில் பரவும். எனவே, குழந்தை பிளே ஸ்கூல் செல்ல ஆரம் பிக்கும்போது அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படலாம். உரிய தடுப்பூசிகளைச் செலுத்தி பிளே ஸ்கூலுக்கு அனுப்பவும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்த, அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளை ப்ரீ கே.ஜி தவிர்த்து, நேரடியாக எல்.கே.ஜியில் சேர்க்கலாம்.

பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்னர், குழந்தை தானாகச் சாப்பிடுவது, பல செருப்பு களுக்கு மத்தியில் தன் செருப்பை சரியாக அடையாளம் கொண்டு போட்டுக்கொள்வது, டாய்லெட் டிரெய்னிங், தன் பொருள்களை பத்திரமாக வைத்துக்கொள்வது போன்ற வற்றைப் பழக்கப்படுத்தி அனுப்ப வேண்டும்.

இதுவரை வீட்டில் வளர்ந்த குழந்தைகள், இனி வகுப்பறையிலும் வளர ஆரம்பிப்பார்கள் இன்னும் விசாலமாக.

கர்ப்பகால மருத்துவப் பரிசோதனைகள்... ஒவ்வொன்றும் அவசியம்!

கருவுற்றதை உறுதி செய்வதில் ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை தாய்க்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிசோதனையும், தாய், சேயின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த மிகவும் இன்றியமையாதவை. கர்ப்பகாலம் வரை சிசுவின் வளர்ச்சி முழுமைக்கும் தாய் மட்டுமே பொறுப்பு என்பதால், அப்போது எடுக்கச் சொல்லி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் எந்தப் பரிசோதனையையும் தாய் எக்காரணம் கொண்டும் தவறவிடக் கூடாது.

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய தடுப்பூசிகள்!

* ரூபெல்லா தடுப்பூசி.

*அம்மை நோய் தடுப்பூசி.

இவை கர்ப்பகாலத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இவற்றை அப்போது போடவே கூடாது..

தாய் எடை கூட வேண்டுமா?!

`தாய் எடை கூடினால்தான் குழந்தையும் எடை கூடும்’ என்று, எவ்வளவு எடை கூடுகிறோமோ அவ்வளவு நல்லது என்று நினைத்து சாப்பிடக் கூடாது. கர்ப்பிணி, முதல் மாத எடையில் இருந்து பிரசவ காலம் வரை 10 முதல் 12 கிலோ வரை மட்டுமே எடை அதிகரித்திருக்க வேண்டும். அதாவது, மாதத்துக்கு இரண்டு கிலோ, வாரத்தில் அரை கிலோ அளவுக்கு மட்டுமே எடை கூட வேண்டும். இதற்கு மேல் செல்லும் பட்சத்தில், கர்ப்பிணிக்கு இணை நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

கருவறை முதல் வகுப்பறை வரை... குழந்தை வளர்ப்பு கைடு!

தாய்ப்பாலை எப்போது நிறுத்தலாம்?

* ஒரு வருடத்துக்குப் பின் தாய்ப்பாலுடன், வீட்டில் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தையும் குழந்தைக்குக் கொடுத்துப் பழக்கலாம்.

* இந்த நிலையில் படிப்படியாகத் தாய்ப்பாலைக் குறைக்க ஆரம்பிக்கலாம். 18-வது மாதத்தில் முழுவதுமாகத் தாய்ப்பாலை நிறுத்திவிடலாம்.

குழந்தைக்கு உணவு கொடுக்கும் முறை!

* குழந்தைக்கு, முதலில் காரமற்ற உணவுகளான கஞ்சி, கூழ், களி போன்றவற்றை கொடுக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டு வந்த குழந்தைக்கு திட உணவுகளை ஒவ்வொன்றாகப் பழக்க வேண்டும்.

* அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, கூழ் என ஆரம்பித்து, பின் பருப்பு சாதம் எனத் திடத்தன்மையை அதிகரிக்கலாம்.

* பல் முளைக்கும் வரை மசித்துக் கொடுக்கலாம்.

* முளைகட்டிய தானிய கஞ்சி, பாசிப்பருப்புடன் நெய் சேர்த்த உணவு, புட்டு, கூழ், இட்லி, தோசை, சத்து மாவு உருண்டை எனச் செய்து கொடுக்கலாம்.

* காரம், மசாலா அதிகம் சேர்க்காத வீட்டு உணவுகளையே கொடுக்கவும். நாவின் அரும்புகள் தூண்டப்பட்டு குழந்தைகள் நன்கு சாப்பிடுவார்கள்.

* குழந்தைக்கு இனிப்பு பிடிக்கும் என்பதற்காக, அனைத்து உணவிலும் இனிப்பு சேர்க்கக் கூடாது.

* ஒரு வயது வரை பழச்சாறு கொடுக்க வேண்டாம்.

* அசைவ உணவுகளான முட்டை, மீன், கோழி போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, சிறிது சிறிதாக உணவில் சேர்த்துப் பழக்கவும்.

* தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பார்க்க வைத்துக்கொண்டு சாப்பாடு கொடுத்துப் பழக்குவதை தவிர்க்கவும்.

* அதிகமான உணவை வாய்க்குள் வைத்து திணிப்பது, தேவைக்கு அதிகமாக உணவு ஊட்டுவது போன்றவற்றை தவிர்க்கவும்.

* குழந்தைக்கு உணவு கொடுத்த பின் உடனடியாகத் தூங்க வைக்காமல், சிறிது நேரம் விளையாடவிட்டு பின் தூங்க வைக்கவும்.