Published:Updated:

குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் அம்மாவின் கர்ப்ப காலத்தைப் பொறுத்தது! - இப்படிக்கு... தாய்மை - 7

தாய்மை

ஆரோக்கியமான, அழகான குழந்தை பெற ஒரு தாய் என்னவெல்லாம் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்...

Published:Updated:

குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் அம்மாவின் கர்ப்ப காலத்தைப் பொறுத்தது! - இப்படிக்கு... தாய்மை - 7

ஆரோக்கியமான, அழகான குழந்தை பெற ஒரு தாய் என்னவெல்லாம் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்...

தாய்மை

நூறாண்டுகள் வாழப்போகும் நாள்களை, வெறும் 10 மாதத்தில் சுருக்கித் தாயின் கருவறையில் வடிவமைக்கப்படுகின்றனர் மனிதர்கள். அங்கு ஒழுங்காகச் சீரமைக்கப்பட்டால் வாழும் நாள்கள் வரம். இல்லையேல் அதற்கான நேரம், பொருள், ஆற்றல் ஆகியவற்றை பின்நாளில் அதீதமாகச் செலவு செய்ய வேண்டி வரும். இதைப் புரிந்தவர்கள் தங்கள் கர்ப்ப காலத்தை மிக மிக முன்னேற்பாட்டுடன் எடுத்துச் செல்வர். உணராதவர்கள் இந்தக் கதையில் வரும் பானுவைப்போல் வந்தபின் வருந்தும் மாந்தராய் மட்டும் இருப்பர்.

தாய்மை
தாய்மை

ஆரோக்கியமான, அழகான குழந்தைச் செல்வத்துக்காக ஒரு தாய் என்னவெல்லாம் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற அலசலை அறிவியல்பூர்வமாகத் தொடங்கி, பெற்றோர் ஆகப்போகிற தம்பதியர் எப்படித் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது, அந்தச் சிறு மூளைக்குள் எத்தனை விந்தைகள் ஆரம்பகாலத்தில் நடந்தேறிவிடுகின்றன என்பன போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை இனி வரும் கட்டுரைகளில் காணலாம். வளர்ந்த நாடுகள் பலவும் இந்த எளிமையான விஷயத்தில் கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான தலைமுறைக்கு வித்திடுகிறார்கள்.

அதற்கு முன்னால், தன் கர்ப்ப காலத்தையும் குழந்தையின் ஆரம்பகால மூளை வளர்ச்சியின் அஸ்திவாரத்தையும் சரியாக மேற்கொண்ட சீதாவின் கர்ப்ப கால வாழ்வியல் முறைகளை, அவளைப் பற்றி நன்கு அறிந்த கல்பனா விளக்க, சீதாவை 'லக்கி மாம்' என்று வர்ணித்த சைலஜா கேட்க ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே துணி காயவைக்க வந்த மாலாவும் அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மாலா, பானுவின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்.

தாய்மை
தாய்மை

''சீதா கொஞ்சமும் அயர்ச்சியடையாமல் நடைப்பயிற்சி செய்தாள். கர்ப்ப காலத்தில் தாய் ஈடுபாட்டுடன் செய்யும் எந்தவொரு பணியும், குழந்தைகளின் எதிர்காலத்தில் அதன் மேல் பாசிட்டிவ்வான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி, நிறைய புது விஷயங்களைக் கற்றுக்கொண்டாள். தன் மூத்த மகளோடு கதை சொல்லல், புத்தகம் வாசித்தல், இசைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, ஓவியம் வரைதல் என்று பல கலைகளைக் கற்றுக்கொண்டாள். சீதா வேலைபார்ப்பதைப் பார்க்கும் எங்களுக்கு மூச்சு வாங்கும். ஆனால், ஒருநாள்கூட அவள் முகத்தில் உற்சாகம் குறைந்து நாங்கள் பார்த்ததே இல்லை.

சீதா எண்ணியவண்ணம் குழந்தைப்பேறு இயல்பாய் நடந்து முடிந்தது. இரண்டே வாரங்களில் தன் மூத்த மகளோடு, கைக்குழந்தையையும் சிரமமின்றி பராமரித்ததோடு தனி ஒருத்தியாக அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றையும் யாருடைய உதவியுமின்றி அற்புதமாகச் செய்ய ஆரம்பித்தாள். குழந்தைகள் அரைமணி நேரம் உறங்கினால் நாமும் சற்று இளைப்பாறலாம் என்று பல அம்மாக்கள் நினைப்பார்கள். ஆனால், சீதாவோ, ஒரு குழந்தையின் 3 வயதுக்குள் மூளையின் வளர்ச்சியில் முக்கால் பங்கு முடிவடையும் என்று தெரிந்து வைத்திருந்ததால், ஒவ்வொரு நாளும் புதுப்புது முயற்சியைச் செய்துபார்த்ததெல்லாம்... வேற லெவல்.

தாய்மை
தாய்மை

பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு பயந்து, கைக்குழந்தைகளை பெரும்பாலும் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல யோசிப்போம். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால், இதற்கெல்லாம் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி, தன் இரு குழந்தைகளுடன் இமயம் முதல் குமரிவரை டூர்கூட சென்று வந்தாள் சீதா. மற்ற குழந்தளெல்லாம் மழை வந்தாலோ, வெயில் வந்தாலோ உடல் சுகமில்லாமல் போக... சீதாவின் குழந்தைகள் 99 சதவிகிதம் நோய்வாய்ப்பட்டதே இல்லை. அதற்கெல்லாம் காரணம், சீதா கர்ப்பகாலத்தில் தேடித் தேடி உட்கொண்ட உணவுகள்தான். நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் வளர்ச்சி பெறுவதற்குக்கூட சில பிரத்யேக உணவுகளை சீதா சாப்பிட்டாள் என்றால் பார்த்துக்கொள் சைலஜா'' என்ற கல்பனா தொடர்ந்தாள்.

''பெற்றோருக்கான பயிற்சிகள் நடக்கும்போதெல்லாம், அங்கெல்லாம் மெனக்கெட்டுச் சென்று கற்றுக்கொண்ட சீதாவை நாங்கள் எல்லோரும் விமர்சித்தும் பரிகாசம் செய்துகொண்டும் இருந்தோம். இதோ, இப்போது அவள் குழந்தையின் பேரறிவைக் கண்டு வாயடைத்துப் போயிருக்கிறோம்.

தாய்மை
தாய்மை

இனி, சீதாவின் குழந்தைகளை எங்கு விட்டாலும் அவர்கள் சாமர்த்தியமாக வளர்ந்து ரோல் மாடல் சிட்டிசனாக வரப்போவது உறுதி. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், நாமெல்லாம் குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு நாளும் அடைந்த மன அழுத்தத்தில் ஒரு சதவிகிதம்கூட இல்லாமல் சீதாவும் அவள் கணவரும் எப்போதும் ஜீரோ டென்ஷனாக இருப்பது பார்க்கப் பார்க்க ஆச்சர்யம்தான். இந்த அபார்ட்மென்ட்டில், ஏன் எனக்குத் தெரிந்த எந்தக் குடும்பத்திலும் இப்படிப்பட்ட குழந்தைகள் இல்லை. தான் நினைத்தவண்ணம் குழந்தைகளைச் செதுக்கி எடுத்திருக்கிறாள் சீதா'' கல்பனா பேசி முடிக்க, கேட்டுக்கொண்டிருந்த சைலஜா, ''இனிமேல் நான் சீதாவைப் பார்த்து 'லக்கி மாம்'னு சொல்ல மாட்டேன், 'ஸ்மார்ட் மாம்'னுதான் சொல்வேன்'' என்றதும் இருவரும் சிரித்து மகிழ்ந்தாரகள்.

இவர்கள் பேசியதில் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கேட்டபடி, வேலைபார்த்துக்கொண்டிருந்த மாலா, அவர்களுடன் வந்து அமர்ந்து, ''அக்கா, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சீதா அக்கா மாசமா இருந்தப்போ என்கிட்ட அடிக்கடி முருங்கைக்கீரை கொண்டு வரச் சொல்லி காயவைச்சுப் பொடி பண்ணி வாரம் ரெண்டு முறை சாப்பிடுவாங்க. தினமும் மூணு கிலோமீட்டர் நடந்தேபோய் மூத்த குழந்தையை பள்ளிக்கூடத்துலயிருந்து கூட்டி வருவாங்க... ஆனா, இந்தப் பானு அக்காவுக்கு எப்பப்பாரு ஒரே பிரச்னைன்னு அவங்க அம்மா பொலம்புறாங்க. 'எம் பொண்ணு பானுவுக்கு காலேஜ் படிக்கும்போதிலிருந்தே உடம்புலே ரத்தமே இல்ல, ஒழுங்கா சாப்பிடவே மாட்டா. எப்பவுமே அசதியாவே இருப்பா. இப்பவும் அப்படியேதான் இருக்காம். கொஞ்சம் எல்லாத்தையும் சரி பண்ணி கர்ப்பமாயிருந்தா பரவாயில்லை'ன்னு சொல்லிக் கவலைப்படறாங்க... ஹூம்... யாருக்குத் தெரியுது இவையெல்லாம்'' என்றபடி அங்கிருந்து கிளம்பினாள்.

டாக்டர் ஆனந்தி ரகுபதி
டாக்டர் ஆனந்தி ரகுபதி

கர்ப்ப காலத்தில் தாயானவள் தினமும் ஆழ்ந்த தூக்கம், சரிவிகித உணவு, சரியான உடற்பயிற்சி, சிலவகை மூச்சுப்பயிற்சி என்பதில் தொடங்கி, ஒவ்வொரு நாளும் நிறைவான மனநிலையோடும் தெளிவான சிந்தனையுடனும் புதியன கற்றல், குறிப்பிட்ட சில இசையைக் கவனித்தல் என வாழ வேண்டும். ஒரு தாய் தன்னுடைய கர்ப்ப காலத்தை இப்படி வழிநடத்தினால், பிறக்கும் குழந்தையின் மூளையும் உடலும் எதிர்காலம் முழுமைக்கும் பலமாக வித்திடப்படும். தாய்க்கும் குழந்தைக்குமான நீண்டகால ஆரோக்கியத்துக்கு இதுவோர் எளிமையான என்ட்ரி பாஸ்.

கர்ப்ப காலத்துக்கு முன்னரே உடலில் குறைபாடுகள் இருப்பின் அவற்றையெல்லாம் சரிசெய்து கர்ப்பமானால் இன்னும் ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம். இதற்கு சீதாவின் வாழ்க்கையே உதாரணம்.

அனீமியா எனப்படும் இரும்புச்சத்துக் குறைபாடு எதனால் வருகிறது?

நாம் எல்லோரும் இரும்புச்சத்துக் குறைந்தால்தான் அனீமியா வரும் என நினைக்கிறோம். ஆனால் B12, ஃபோலேட் (FOLATE) குறைவாக இருந்தாலும் அனீமியா வரும்.

இரும்புச்சத்து Heme, Non Heme iron இரண்டு வகைப்படும். நம் உடம்புக்கு தாவரங்களில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை இருப்பாக (bioavialability) மாற்றக்கூடிய வல்லமை மிகக் குறைவு. இந்த வகை இரும்புச்சத்தை 'NonHeme iron' என்கிறோம். இதுவே அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்து (Heme iron) உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ஒரு நாளைக்கு 35 மில்லிகிராம் இரும்புச்சத்து நமக்குத் தேவை.

- டயடீஷியன் திலகவதி மதனகோபால்

டயடீஷியன் திலகவதி மதனகோபால்
டயடீஷியன் திலகவதி மதனகோபால்

இரும்புச்சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் ?

1. அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் வாரத்துக்கு இரண்டு முறை ஆட்டு ஈரல், ரத்தம், சுவரொட்டி போன்ற ஆட்டின் உள்ளுறுப்புகளை இரண்டு மாதங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் ஒரே மாதத்தில் இரும்புச்சத்து நிச்சயம் அதிகரிக்கும். 2. பீட்ரூட் சாற்றுடன் ஆரஞ்சுச்சாறு கலந்து சாப்பிடலாம். 3. மாதுளையை ஜூஸாகவோ, முழுப்பழமாகவோ சாப்பிடலாம். 4. அடர்பச்சை நிற காய்கறி, கீரைகளில் இரும்புச்சத்து அதிகம். 5. தானியவகைகளில் குறிப்பாக தினையில் இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ளது. 6. முளைகட்டிய பயறு வகைகள், பூசணி விதை, சூரியகாந்தி விதையிலும் இரும்புச்சத்து அதிகம். மிகவும் முக்கியமான விஷயம், இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்போது வைட்டமின் 'சி' அதிகமுள்ள எலுமிச்சைச்சாறு, ஆரஞ்சுச்சாறு குடிப்பது மிக மிக அவசியம். உடம்பில் வைட்டமின் 'சி' இருந்தால்தான் உடம்பால் இரும்புச்சத்தை உறிஞ்சிக்கொள்ள முடியும்.

- டயடீஷியன் திலகவதி மதனகோபால்

உடம்பில் இரும்புச்சத்துக் குறையாமல் இருக்க தினமும் செய்ய வேண்டிய சிறு சிறு மாற்றங்கள்...

1. நான் ஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்த்து இரும்புப் பாத்திரங்களில் சமைப்பது. 2. உணவுடன் 200 மில்லி எலுமிச்சைச்சாறு அருந்துவது. 3. உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பும் பின்பும் டீ, காபி அருந்துவதைத் தவிர்ப்பது. ஏனென்றால், அவற்றில் இருக்கும் டானின் (tanin) கஃபைன் (caffine), நம் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும். இதனாலேயே பல இந்தியர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. 4. இரும்புச்சத்து மருந்துகள் சாப்பிடும்போது உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடுவது நல்லது. ஏனென்றல், நம் இந்திய உணவுகளில் அதிகமாக phythates உள்ளதால் அவை பல சத்துகளை நம் உடலில் சேராமல் தடுக்கும். அதனால்தான் சாப்பிட்டப பிறகு வைட்டமின் 'சி' நிறைந்த பழச்சாறுகளைக் குடிக்க வேண்டும்.