Doctor Vikatan: என் மகளுக்கு 12 வயது. பற்கள் சற்று துருத்தியபடி உள்ளன. கிளிப் போடச் சொல்கிறார்கள் பலரும். கிளிப் அவசியமா, அது நிஜமாகவே உதவுமா, எத்தனை மாதங்களுக்குப் போட வேண்டியிருக்கும்?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி...
12 வயது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான மிகச் சரியான வயது. Fixed braces எனப்படும் நிரந்தர கிளிப் போட்டால் உங்கள் மகளின் பற்களின் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தையும், அவரது முக அமைப்பு மேம்படுவதையும் நிச்சயம் கண்கூடாகப் பார்க்க முடியும். முதல் வேலையாக உங்கள் மகளை அருகிலுள்ள பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

அவர் உங்கள் மகளின் பற்களின் அமைப்பைப் பார்த்துவிட்டு, நிரந்தரமான 28 பற்களும் முழுமையாக முளைத்துள்ளனவா என பார்ப்பார். அதன்பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு உங்கள் மகளுக்கேற்ற கிளிப்பை பரிந்துரைப்பார். குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் அதிகபட்சமாக 18 மாதங்கள்வரை இந்த கிளிப்பை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
மருத்துவர் குறிப்பிடும் காலகட்டம்வரை அதை அணிந்திருந்து விட்டு, பிறகு அவ்வப்போது கழற்றி, மாட்டக்கூடிய கிளிப்பை ஒரு வருடத்துக்கு அணிந்திருக்க வேண்டியிருக்கும்.

இப்படிச் செய்தால்தான் இந்தச் சிகிச்சை முழுமையடையும். 12 என்பது இந்தச் சிகிச்சைக்கான சரியான வயது என்று ஏன் சொல்கிறோம் என்றால், எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு ரிசல்ட் நன்றாக இருக்கும். வயது கடந்து சிகிச்சையைத் தொடங்கும்போது கிளிப் அணிந்திருக்க வேண்டிய காலகட்டம் நீடிக்கலாம். தவிர, நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கவும் தாமதமாகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.