Published:Updated:

Doctor Vikatan: முறைதவறிய பீரியட்ஸ், உடல்பருமன், பிசிஓடி பாதிப்பை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

பிசிஓடி

பிசிஓடி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதை சிகிச்சைகள், வாழ்வியல் மாற்றங்கள், உணவுப்பழக்கம் போன்றவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மட்டுமே முடியும்.

Doctor Vikatan: முறைதவறிய பீரியட்ஸ், உடல்பருமன், பிசிஓடி பாதிப்பை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

பிசிஓடி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதை சிகிச்சைகள், வாழ்வியல் மாற்றங்கள், உணவுப்பழக்கம் போன்றவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மட்டுமே முடியும்.

Published:Updated:
பிசிஓடி

என் மகளுக்கு 12 வயதாகிறது. பூப்பெய்திவிட்டாள். ஆனால், அவளுக்கு மாதவிடாய் முறையாக வருவதில்லை. உடல் பருமன் பிரச்னையும் இருக்கிறது. பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. இந்த வயதில் பிசிஓடி பிரச்னை வருமா? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அவளுக்குத் திருமணமானால் குழந்தை பெறுவதில் சிக்கல் வருமா? பிசிஓடியை முழுமையாகக் குணப்படுத்த என்னதான் வழி?

 மனுலட்சுமி
மனுலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முறையற்ற மாதவிலக்கு சுழற்சி, அதிக அளவில் பருக்கள், முடி உதிர்வு, உடல் பருமன் ஆகியவை பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

மாதவிடாய் (Representational Image)
மாதவிடாய் (Representational Image)

பெண் குழந்தைகளைப் பிறவியிலேயே இந்தப் பிரச்னை பாதிக்கலாம். அவர்கள் பூப்பெய்தும் வயதில்கூட இதை உறுதிப்படுத்த முடியாது. பிசிஓடி பாதிப்பில்லாத நிலையிலும் சில பெண்களுக்கே அந்தப் பருவத்தில் மாதவிடாய் முறைதவறி வருவதுண்டு.

20 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முறைதவறி வந்தால் பிசிஓடி இருக்கிறதா என டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

எந்த வயதில் பூப்பெய்தினார்கள், எத்தனை நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என்கிற தகவல்களைக் கேட்டறிய வேண்டும். கழுத்துக்குப் பின்பகுதியிலும் முழங்கைகளிலும் கருமை இருக்கிறதா எனப் பார்ப்பார்கள் மருத்துவர்கள். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தால் சினைப்பைகளில் கொப்புளங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

ஹர்மோன்களின் அளவுகளை அறியும் ரத்தப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும். இது மாதவிலக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செய்யப்படும்.

Blood samples
Blood samples

அல்ட்ரா சவுண்டில் பிசிஓடி இருப்பது, உடல்ரீதியான அறிகுறிகள் இருப்பது, ரத்தப் பரிசோதனையில் அசாதாரணம் என இந்த மூன்றில் இரண்டு இருந்தால் அதை `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' என்கிறோம்.

பிசிஓடிக்கான சிகிச்சை என்பது முறையற்ற மாதவிலக்கு, பருக்கள், குழந்தையின்மை என பிரச்னையைப் பொறுத்து முடிவுசெய்யப்படும்.

எடை அதிகரிக்க அதிகரிக்க, ஹார்மோன் தொந்தரவுகள் தீவிரமாகும். அதனால் சினைப்பைகளின் செயல்திறன் பாதிக்கப்படும். சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு மிக எளிதில் எடை அதிகரிக்கும்.

ஆனால், அதே வேகத்தில் குறைக்க முடியாது. எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டுவேலைகளைச் செய்வது, சாக்லேட், இனிப்பு போன்ற அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது என தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டும்.

workout
workout

பிசிஓடி இருந்தால் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல்கள் இருக்கும். குழந்தையின்மைக்கான பிரத்யேக சிகிச்சையிலும் எடைக் குறைப்புதான் பிரதானமாக இருக்கும். பிறகு, கருமுட்டை உருவாக மாத்திரைகள் தரப்படும். அவை உதவாத பட்சத்தில் ஊசிகள் போட வேண்டியிருக்கும்.

அதிலும் முட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும். கடைசித் தீர்வாக ஐ.வி.எஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

எனவே, உங்கள் மகளுக்கு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவசியமான பரிசோதனைகளைச் செய்து, பிசிஓடியை உறுதி செய்யுங்கள். மாதவிலக்கு சுழற்சி முறை தவறுவதையும், உடல் பருமனையும் மட்டும் வைத்து நாமாக முடிவுக்கு வர முடியாது.

Homely food
Homely food

பிசிஓடி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதை சிகிச்சைகள், வாழ்வியல் மாற்றங்கள், உணவுப் பழக்கம் போன்றவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மட்டுமே முடியும். அதை குணப்படுத்தவோ, இல்லாமலே செய்யவோ வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.