லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

தேவை அதிக கவனம்: தாய்மையை தற்காலிகமாகத் தள்ளிப் போடலாம்!

தாய்மை
பிரீமியம் ஸ்டோரி
News
தாய்மை

சசித்ரா தாமோதரன், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்

“கல்யாணமாகி மூணு வருஷம் ஆச்சு. கேரியரை மனசுல வெச்சு தள்ளிப் போட்டுட்டே வந்தோம்.

கடைசியா, இந்த மாசத்தோட லீவ் போட்டுட்டு குழந்தைக்கு ட்ரை பண்ணலாம்னு இருந்தப்ப எங்களுக்காகவே வந்த மாதிரி, கொரோனாவால வொர்க் ஃப்ரம் ஹோம் கிடைச்சிருக்கு... இந்த நேரத்தில ட்ரை பண்ணலாமா டாக்டர்..?”

தேவை அதிக கவனம்: தாய்மையை தற்காலிகமாகத் தள்ளிப் போடலாம்!

“சமீபமாத்தான் குழந்தைக்காக செயற்கைக் கருத்தரித்தல் முறையில ட்ரீட்மென்ட்டை எடுக்க ஆரம்பிச்சோம். இப்ப ட்ரீட்மென்ட் கன்டின்யூ பண்ணலாமா... இல்ல, அந்தக் கொடூர கொரோனா இதையும் பாதிக்குமா டாக்டர்..?”

Novel Corona என்பது மனிதனுக்கு முற்றிலும் புதியதொரு நோய்த்தொற்று என்பதாலும், அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும் கொரோனாவின் வீரியத்தன்மை, நோயியல், நோய்க்குப் பிந்தைய பாதிப்புகள் என எதையும் முழுமையாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

தாய்மை
தாய்மை

இந்த நிலையில் இந்த ஆபத்தான வைரஸ் இளம் வயதினரை, அவர்களது கருமுட்டைகள் அல்லது விந்தணுக்களை பாதிக்கச் செய்கிறதா? அப்படியே கர்ப்பம் தரித்தால் கர்ப்பிணிக்கும் பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்துமா? இதுபோன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்ல போதிய தரவுகள் இப்போது இல்லை.

ஆனால், நாம் இதுவரை பழகிவந்த கொரோனாவின் முந்தைய தலைமுறை வைரஸ் நோய்களை வைத்துக் கணிக்கும்போது, கோவிட்-19 ஏற்படுத்தும் அதிக அளவிலான காய்ச்சல் வளரும் கருவை பாதிக்கக்கூடும் என்பதும், கருவில் வளரும் குழந்தையால் பெரிதாகும் வயிறு, அப்பெண்ணின் நுரையீரல் செயல்திறனைக் குறைக்கக் கூடும் என்பதும் கணிக்கக்கூடியவையே.

தாய்மை
தாய்மை

இந்த நோய் தாக்கினால் கர்ப்ப காலத்தில் தரக்கூடிய மருந்துகளின் அளவு, விகிதம் ஆகியவை மாறும் என்பதால், மகப்பேறு மருத்துவர் களுக்கு கர்ப்பகால கொரோனா மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

எனினும், இதுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின் போதும் தாயிடமிருந்து சேய்க்கு கொரோனா பரவவில்லை என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதல்தான்.

இவையனைத்தையும் கருத்தில்கொண்டே, குழந்தைப்பேற்றுக்கான உலக அமைப்பான IFFS (International Federation of Fertility Societies), `தாய் சேய் என இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட தாய்மையை தற்காலிகமாகத் தள்ளிப் போடலாம்' என்று நம்மை அறிவுறுத்துகிறது.

தாய்மை
தாய்மை

இதையே வலியுறுத்தும் இந்திய குழந்தைப் பேறின்மைக்கான அமைப்பு (ISAR), டெஸ்ட் டியூப் குழந்தை மற்றும் IUI, ICSI போன்ற செயற்கைக் கருத்தரித்தல் முறைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதோடு், ஏற்கெனவே சிகிச்சையில் இருக்கும் தம்பதி யருக்கும், கருமுட்டை எண்ணிக்கை குறைவாக உள்ள பெண்களுக்கும், Oocyte retrieval & Cryopreservation போன்ற சிகிச்சை முறைகளின் மூலமாக கரு முட்டைகளை மீட்டெடுத்துச் செய்யப்படும் செயற்கை முறை கருத்தரிப்பை, சிறிது காலத்துக்குப் பிறகு முயற்சி செய்யலாம் என்று அறிவுறுத்தியும் உள்ளது.

இதற்கிடையே, `கொரோனா பாதிப்பால் விந்தணுக்கள் குறைபாடுகளும் ஆண்மைக் குறைவும் ஏற்படக்கூடும்' என்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான சீனாவின் வூஹான் மாநில ஹூபே மருத்துவமனையின் ஆய்வுக் கட்டுரையை, `அந்தச் செய்தி உறுதியில்லை' என்று சீன அரசு விலக்கிக்கொண்டுள்ளது. அதற்குள் ஆண்மைக் குறைபாட்டுக்கான மாத்திரைகளின் விற்பனையும் அதன் பக்கவிளைவுகளும் கொரோனாவை விட எகிறிவிட்டது என்பது உப தகவல்.

Covid-19 என்ற பெயரைத் தவிர, அது எப்போது போகும், இதற்கான மருத்துவம் என்ன, வராமல் தடுக்க முடியுமா என்று எதுவுமே முழுமையாகத் தெரியாத இந்த நேரத்தில் கருத்தரித்தலைத் தள்ளி வைக்கலாம். அதோடு, இந்த நோயே நமக்கு அண்டாத வகையில் இருமடங்கு எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே புத்திசாலித்தனமான முடிவு!