கட்டுரைகள்
Published:Updated:

கொரோனா: தடுப்பூசி முயற்சியில் தமிழகம்!

டாக்டர் சுதா சேஷய்யன்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் சுதா சேஷய்யன்

ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பொறுத்தவரை நிறைய பக்கவிளைவுகள் தரக்கூடிய மருந்து அது.

‘கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிக்கப்படும்?’ - மொழி, இனம், தேசம் கடந்து உலகின் எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்கும் கேள்வி இது.

கொரோனாத் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் என்னவாயின? தடுப்பூசி ஆய்வுகள் எந்த நிலையில் உள்ளன? கொரோனாப் பதற்றத்திலிருந்து தமிழகம் விடுபடுவது எப்போது? இந்தியப் பாரம்பர்ய மருந்துவத்தில் கொரோனாவுக்குத் தீர்வு இருக்கிறதா?

தமிழகத்தில் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், டாக்டர் சுதா சேஷய்யனிடம் இந்தக் கேள்விகளை முன்வைத்து உரையாடினோம்.

``மருத்துவராக, ஆராய்ச்சியாளராக இம்மாதிரி நிறைய சூழல்களைக் கையாண்டிருப்பீர்கள். இதற்குமுன் இப்படியான மருத்துவ சவால்கள் இருந்ததுண்டா? கோவிட்- 19ல் மட்டும் ஏன் இப்படியான சிக்கல்?’’

``இதுவொரு புது வைரஸ்; புது நோய். ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் இந்த வைரஸின் பாதிப்பு முறைகள் வேறு வேறாக இருக்கின்றன.

டாக்டர் சுதா சேஷய்யன்
டாக்டர் சுதா சேஷய்யன்

வைரஸ்களில் இரண்டு வகை உண்டு. ஆர்.என்.ஏ (RNA Viruses), டி.என்.ஏ (DNA Viruses). கோவிட் 19, ஆர்.என்.ஏ வகை வைரஸ். ஆர்.என்.ஏ. வைரஸின் தன்மை வேகவேகமாக மாறிக்கொண்டேயிருக்கும். அதன் விளைவுகளும் மாறும். கேரளாவில், சீனாவில் படித்துவிட்டு ஊர் திரும்பிய மாணவியை பாதித்தது, வூகானில் அடையாளம் காணப்பட்ட அதே வைரஸ். பின்னர், மும்பையில் கண்டறியப்பட்ட வைரஸுக்கும் வூகான் வைரஸுக்கும் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

அதேபோல், இந்தியாவிலேயே ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்புகளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய பேருக்கு நுரையீரலை பாதிக்கிறது. ஆனால், சிலருக்கு நரம்புமண்டலத்தில் பிரச்னை ஏற்படுகிறது. சிலருக்கு செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதுதான் கோவிட் 19 விஷயத்தில் இருக்கிற சிக்கல்.”

``நாம் நுரையீரலை குறிவைத்து சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், கோவிட் 19, ரத்தத்தில் கலந்து, அதிலிருக்கும் அயர்ன் கன்டென்டை பாதிக்கிறது. ரத்தத்துக்குக் கிடைக்கவேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் நுரையீரலில் ரத்தம் உறைந்தே உயிரிழப்பு நேர்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்களே?”

``கோவிட் 19 என்பது இதுவரை நாம் கையாண்டிராத வைரஸ். நமக்கு அறிமுகமாகி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. நாம் இதில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டு, என்ன பாதிப்பு ஏற்படுகிறதோ, அந்த பாதிப்புக்கேற்ற சிகிச்சைதான் அளிக்கமுடியும்.

கோவிட்டைப் பொறுத்தவரை, இரண்டுவகை முக்கியமான பாதிப்புகளை மருத்துவர்கள் கண்டிருக்கிறார்கள். முதல் வகை பாதிப்பு: வைரஸ் உடலுக்குள் சென்றதும், உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் அதை வெளியில் தள்ளப் போராடும். அந்தப் போராட்டத்தில் எதிர்ப்பு அணுக்கள், சில வேதிமங்களைச் சுரக்கும். இன்டர்ஃபெரான் (Interferon), இன்டர்லிக்யூன் (Interleukin) உள்ளிட்ட வேதிமங்கள் இவை. போராட்டம் அதிகமாக இருந்து, அதிகமான வேதிமங்களும் சுரக்கப்படும்போது, இவை எல்லாமாக ஒன்றிணைந்து அதிவேகத்தில் போய், நுரையீரலில் படையெடுக்கும் (வைரஸ் அங்கேதானே உடலுக்குள் நுழைந்தது!). இந்தத் தாக்குதலில் நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன; நுரையீரல் செயலிழந்து, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுகின்றன. `Cytokine storm’ என்று மருத்துவத்தில் ஒரு பதம் உண்டு. புயல்மாதிரியான தாக்குதல். இண்டர்ஃபெரான், இன்டர்லிக்யூன் போன்ற வேதிமங்கள் சைடோகைன்கள் ஆகும். இந்த ரசாயனங்கள் நுரையீரலைப் புயலாகத் தாக்குவதைத்தான் ‘டோகைன் ஸ்டார்ம்’ என்கிறோம்.

அதேநேரம், இன்னொரு விதமான பாதிப்பும் இருக்கிறது. நம் நுரையீரலில் நிறைய காற்று அறைகள் உள்ளன. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் உள்ளே செல்லும். உள்ளேயிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியே வரும். இந்தப் போக்குவரத்துப் பரிவர்த்தனை நுரையீரல் காற்றறைகளிலும் அங்கிருக்கும் ரத்த நாளங்களிலும் நடைபெறுகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு சிலரில், நுரையீரல் ரத்த நாளங்களில் நுண்ணிய ரத்தக்கட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மருந்து
மருந்து

இவை மட்டுமல்லாமல், இன்னொரு பாதிப்பும் சில நோயாளிகளில் காணப்பட்டுள்ளது.ரத்தத்தில் ’ஹீமோகுளோபின்’ என்றொரு மூலக்கூறு உண்டு. இரும்புச்சத்தும் புரதமும் சேர்ந்த இந்த `ஹீமோகுளோபின்’தான் உடலெங்கும் ஆக்சிஜனைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. உடலுக்குள் வைரஸ் புகுந்தவுடன், வைரஸ் பல்கிப் பெருகும். இந்தப் பெருக்கத்தில் பல வகையான வைரஸ் புரதங்கள் உருவாக்கப்படுகின்றன. வைரஸ் புரதங்கள், ஹீமோகுளோபினில் உள்ள, இரும்பைச் சூழ்ந்துகொள்கின்றன. இதனால், `ஹீமோகுளோபின்’ செயல்பாடு பாதிக்கப்பட்டு உடலுக்குள் ரத்தம் கொண்டுசெல்லும் பணி ஸ்தம்பித்துவிடுகிறது. போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் செயலிழந்து, ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்கும். கோவிட் 19 இப்படி வெவ்வேறு விதமான பாதிப்புகளை உருவாக்குவதால் பாதிப்புகளைப் பொறுத்துதான் சிகிச்சை அமையும்.”

``ஹைட்ரோ குளோரோகுயின் மருந்து நேரடியாக கோவிட் 19க்கு எதிராகச் செயல்படாது என்கிறார்கள். ரெம்டெசிவிர் மருந்து சில இடங்களில் நோயாளிகளுக்குப் பயனளித்திருக்கிறது. அதைத் தயாரிக்கும் கில்லிட்ஸ் நிறுவனம், இந்தியாவில் சில நிறுவனங்களோடு கையெழுத்திட்டுள்ளது என்கிறார்கள். மருந்துகள் அதிகாரபூர்வமாக எப்போது நடைமுறைக்கு வரும்?”

``ஒரு வைரஸை வளர்த்து (கல்ச்சர் செய்து) அதன் தன்மையை ஆராய்ந்துதான் மருந்துகள் கண்டறியமுடியும். இப்போதிருக்கும் பேரிடர் சூழலில் கோவிட் 19 வைரஸை வளர்க்கமுடியாது. நிறைய பேருக்குப் பரவும் ஆபத்து உண்டு. ரெம்டெசிவிர் மருந்தைப் பொறுத்தவரை, அது பொதுவாக வைரஸ்க்கு எதிராக வேலை செய்யும். ஹைட்ரோ குளோரோகுயினைப் பொறுத்தவரை, அது வைரஸை அழிப்பதோ பெருக விடாமல் செய்வதோ இல்லை. ஆனால், `சைடோகைன் ஸ்டார்மை’க் குறைக்கிறது.

இரண்டு மருந்துகளின் செயல்முறைகளும் வேறு வேறு. ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பொறுத்தவரை நிறைய பக்கவிளைவுகள் தரக்கூடிய மருந்து அது. கண் விழித்திரை பாதிக்கப்படலாம். இதயத்துடிப்பு பாதிக்கப்படலாம். காது கேட்காமல் போகலாம். அதனால் ஐ.சி.எம்.ஆர், சில வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது. பாதுகாப்பு தேவைப்படும் இடத்தில் மட்டுமே அதைப் பயன்படுத்தவேண்டும். அதனால், நோயாளிகளோடு நேருக்கு நேர் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது நோயாளிகளோடு அவர்களின் வீட்டில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தரப்படுகிறது. எல்லோரும் சகட்டுமேனிக்கு, ‘எனக்குப் பாதுகாப்பு வேண்டும்; எனவே நான் இதைச் சாப்பிடுகிறேன்’ என்று சாப்பிட முடியாது.

டாக்டர் சுதா சேஷய்யன்
டாக்டர் சுதா சேஷய்யன்

புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகிற எந்த மருந்தாயினும், அதற்கென இருக்கும் சில வரைமுறைகளின்படிதான் அது சோதிக்கப்படும். அதன்பிறகே அதிகாரபூர்வமாகப் பொதுப்பயன்பாட்டுக்கு இத்தகைய மருந்துகளைக் கொண்டுவரமுடியும். உலகமெங்கும், பல்வேறு மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.”

``இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மிகவும் குறைவாகவே டெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?”

``அப்படியொரு தோற்றம் நமக்குத் தெரிகிறது. இந்தியா பெரிய நாடு. எல்லோரையும் பரிசோதிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. தேவையிருக்கும் இடங்களில் எல்லாம் பரிசோதனைகள் நடக்கின்றன. மார்ச் 24-ல் லாக்டௌன் ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் முடிந்துவிட்டன. சோதனைகள் நடைபெறவில்லை, குறைவான பரிசோதனை நடந்தது என்பதையெல்லாம் வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம். சோதனைகள் செய்யப்படாமல், பலருக்கு நோய் இருந்திருக்கும்பட்சத்தில் இந்நேரம் ஆயிரக்கணக்கானோர் அறிகுறிகளோடு மருத்துவமனைகளில் குவிந்திருப்பார்களே... அப்படி எங்கும் நடக்கவில்லை, இல்லையா? ஆகவே, நாம் சரியான திசையில்தான் இதுவரை சென்றிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளலாம்.’’

``இப்போது டெஸ்ட் கிட் வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோம். பற்றாக்குறையாக இருக்கிறது. இந்தியாவில் சிலர் மிகக்குறைந்த செலவில் உடனடியாக முடிவுதெரியும்வகையில் சில கிட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருவனந்தபுரம் சித்திரைத் திருநாள் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், டெல்லியில IGIB... இங்கெல்லாம்... இவற்றையெல்லாம் உடனடியாகச் செயலுக்குக் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?”

``எங்கள் பல்கலைக்கழகத்திலும்கூட ஆன்டிபாடி டெஸ்ட் கிட் ஒன்றைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் சில கட்டங்களைத் தாண்டவேண்டும். ஐ.சி.எம்.ஆர் முழுமையாக அவற்றைப் பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்தபின்னரே, அவற்றைப் பயன்படுத்தமுடியும்.”

``தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் கோவிட் 19 தொடர்பாக என்னென்ன ஆராய்ச்சிகள் நடக்கின்றன?”

“நிறைய செய்துகொண்டிருக்கிறோம். அடுத்தடுத்த மாதங்களில் பாதிப்பின் தன்மை எப்படியிருக்கும் என்று ஒரு காலண்டர் தயாரித்திருக்கிறோம். நம் இந்திய மருத்துவத்தில் கோவிட் 19 வைரஸைத் தடுக்கும் சில தாவரங்கள் குறித்தும் ஆய்ந்துகொண்டிருக்கிறோம்.

கோவிட் 19 வைரஸில் மூன்று முக்கியப் புரதங்கள் இருக்கின்றன. மேல் உறையில் முள்மாதிரி இருக்கும் பகுதியில் ஒரு புரதம் இருக்கிறது. அதற்கு `ஸ்பைக் புரதம்’ என்று பெயர். முட்களுக்கு நடுவில் உள்ள படலப் பகுதியில் இருக்கும் புரதம் ’மெம்பிரேன் புரதம்’ எனலாம். . தவிர, வைரஸ் இன்னொரு புரதத்தைச் சுரக்கும். இதற்கு `புரோடியேஸ்’ என்று பெயர். புரோடியேஸை வைத்துதான் வைரஸ் அணுவுக்குள் நுழையும்.

கொரோனா: தடுப்பூசி முயற்சியில் தமிழகம்!

நம்முடைய பாரம்பர்ய மருத்துவ முறைகளில் பயன்படுத்துகிற சில பொருள்கள், இந்தப் புரதங்களோடு இணைந்து வைரஸைத் தடுக்கின்றன. சித்தரத்தையில் இருக்கும் கலாங்கின் என்னும் வேதிப்பொருள் இந்த மூன்று புரதங்களோடும் இணைகிறது. நொச்சியில் இருக்கும் காஸ்டிசின் மற்றும் கிரிஸோஃபீனால் ஆகியவை மெம்பிரேன் புரதம் மற்றும் புரோடியேஸோடு இணைகின்றன. கிராமங்களில் கிடைக்கிற அழிஞ்சிலில் இருக்கும் `அலங்கின்’ என்னும் பொருள், புரோடியேஸ் மற்றும் ஸ்பைக் புரதம் ஆகியவற்றோடு இணைகிறது. `ஏழிலைப்பாலை’ என்று ஒரு மூலிகை உண்டு. அதிலுள்ள ’எகிடமின்’ என்னும் வேதிப்பொருளும் வைரஸின் மூன்று புரதங்களோடும் இணைகிறது. கபசுரக் குடிநீரிலுள்ள பல்வேறு மூலிகைகளும் இவ்வாறு வைரஸின் பலவகைப் புரதங்களோடு இணைந்து, வைரஸ் அணுக்களுக்குள் புகுவதைத் தடுக்கின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.

ஏற்கெனவே, ஆயுஷ் மருத்துவத் துறையும் கபசுரக் குடிநீர் போன்றவற்றை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகப் பரிந்துரை செய்திருக்கிறது. நெல்லிக்காய், இஞ்சி, வேம்பு, துளசி, மஞ்சள், பெருங்காயம், கண்டங்கத்திரி இவையெல்லாம்கூட ஆராய்ச்சியில் இருக்கின்றன. மேலே சொன்ன மூலிகைகள் எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நோய் வந்தவர்களுக்கும் அலோபதி மருந்துகளோடு சேர்த்துக் கொடுக்கலாம். குணமாகிச் சென்றவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்தலாம். கேரளாவில் ஆயுர்வேதம் போன்ற பாரம்பர்ய மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு நெறிமுறை வகுத்திருக்கிறார்கள். தமிழக அளவில் உள்ள நிபுணர் குழுவிடம் எங்கள் ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்துவிட்டோம். அவர்கள் அவற்றைப் பரிசீலித்து அங்கீகரித்தால், விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம்”

“கோவிட் 19-க்கான தடுப்பூசி ஆராய்ச்சிகள் எந்த அளவுக்கு உள்ளன. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?”

“உலகளவில் இரண்டு மூன்று நாடுகளில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நாங்களும் அதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். கோவிட் 19 வைரஸின் ஜீன் மாதிரி ஏற்கெனவே ஆய்வுத் தரவாக வெளியிடப்பட்டுள்ளது. ’ரிவர்ஸ் வாக்சினாலஜி’ என்பது ஒரு புதிய முறை. சுமார் நான்கைந்து ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் இம்முறையைப் பயன்படுத்துகிறார்கள். இதே முறையைப் பயன்படுத்தி, உயிர்தகவலியல் (பயோ இன்ஃபர்மேடிக்ஸ்) மென்பொருள்கள் வழியாக, செயற்கைப் புரத மூலக்கூறு ஒன்று கோவிட் தடுப்பு மருந்தாகப் பயன்படும் என்று கண்டறிந்திருக்கிறோம். தக்க ஒப்புதல் பெற்று, அமெரிக்காவில் இருக்கும் ஒரு தடுப்பூசி மையத்தோடு இணைந்து பரிசோதிக்க இருக்கிறோம். அநேகமாக, 2021ல் தடுப்பூசியைத் தயாரித்துவிடலாம் என்று நம்புகிறோம். .”

”மே 3 க்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடுமா? இந்தசூழல் எப்போது மாறும்?”

”உடனடியாக இந்த வைரஸ் அழிந்துவிடாது. நாம்தான் மாறவேண்டும். சமூக விலகலை வாழ்க்கைமுறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவதையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சானிடைசரை எப்போதும் வைத்திருக்கவேண்டும். தடுப்பூசியோ, நேரடியான மருந்துகளோ வரும் வரை இந்த வைரஸின் தாக்கம் இருக்கவே செய்யும். வைரஸ் பரவ, பரவ ஒருகட்டத்தில் நம் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நிறைய பேருக்கு எதிர்ப்புச் சக்தி வந்துவிட்டால், வைரஸின் பாதிப்பு குறைந்துவிடும். தவிர, சிலநேரம் படிப்படியாக வைரஸின் தன்மை குலைந்து ஆபத்தற்றதாகக்கூட மாறலாம்..”

”ஊரடங்குக்குப்பிறகு வேலைக்கு செல்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பள்ளிகள் திறந்தால் குழந்தைகள் நிலை?”

”அத்தியாவசியத் தேவைகள் தவிர, வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள்பொடி கலந்த தண்ணீரை வைத்துக்கொள்ளவேண்டும். அலுவலகம் செல்பவர்கள் வீடு திரும்பும் நேரத்தில், உள்ளே இருப்பவர்கள், அவர்களின் வரவை எதிர்நோக்கிக் கதவை திறந்து வைக்கவேண்டும். அவர்கள் கதவு உள்பட எதையும் தொடக்கூடாது. வந்ததும் வாசலில் உள்ள மஞ்சள் பொடி தண்ணீரில் கைகளை நன்றாகக் கழுவிவிட்டு, பேக், பர்ஸ் உள்ளிட்ட அனைத்துப்பொருள்களையும் வீட்டு வராண்டாவில் அல்லது முகப்புப் பகுதியில் தனியாக வைத்துவிட்டு, நேராகக் குளியலறை (கதவுகளையோ வேறெதையோ தொடாமல்) சென்று, உடைகளை சோப்பு நீரில் ஊறவைக்கவேண்டும். பிறகு குளித்துவிட்டு இயல்பாகலாம். சுற்றுலா, சினிமாவையெல்லாம் ஓராண்டுக்குத் தள்ளிவைப்பது பாதுகாப்பானது. குழந்தைகளைப் பொறுத்தவரை, பள்ளிகளில் குவிப்பது நல்லதல்ல. எங்கேயுமே கூட்டம் இல்லாமல் இருப்பது நல்லது. ஆன்லைன் வகுப்புகளுக்குக் குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்துவிட்டோம். செய்முறைப் பயிற்சிகளுக்கு மட்டும் நிலைமை ஓரளவுக்கு இயல்பான பின்னர், பேட்ச் பேட்சாக வரவழைக்கலாம் என்று எண்ணியுள்ளோம்.”