என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

என்றும் இளமைக்கு ஃபேஷியல் யோகா...

ஃபேஷியல் யோகா...
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஷியல் யோகா...

ராஜலட்சுமி; மாடல்: கீர்த்தனப்ரியா

40 ப்ளஸ்ஸில் அடியெடுத்து வைக்கும் பலருக்கும் முழங்கைகளில் சேரும் கொழுப்பும் இடுப்பையும் வயிற்றையும் சுற்றிப் போடும் சதையும், கன்னச் சதைகளில் தெரியும் தொய்வும் கவலையைத் தரும். முதுமையைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதன் அடையாளங்களைத் தள்ளிப்போடலாம். உடலுக்குப் பயிற்சிகள் செய்து எடை கூடாமல் பார்த்துக் கொள்வது போலவே, முகத்துக்கும் பயிற்சிகள் செய்து என்றும் இளமையாகக் காட்சியளிக்கலாம். முகத்தில் முதுமையின் தடம் தெரியாமலிருக்க ஃபேஷியல் யோகா உதவும்.

 மாலினி
மாலினி

யோகா தெரியும்... அதென்ன ஃபேஷியல் யோகா?

‘‘யோகா என்பது ஒட்டுமொத்த உடலுக்குமான பயிற்சி என்றால் ஃபேஷியல் யோகா என்பது முகத்திலிருந்து கழுத்துவரை நீளும் பயிற்சிகள். முதுமையின் முதல் அடையாளங்கள் நெற்றிச் சுருக்கங்களாக, கண்களின் ஓரங்களில் கோடுகளாக, வாய் ஓரம் இறக்கமாக... இப்படியெல்லாம் காட்டிக்கொடுக்கும். என்னதான் உடலளவில் ஃபிட்டாக இருந்தாலும் முகம் இளமையாக இல்லாவிட்டால் அது ஆரோக்கியமாகத் தெரியாது’’ என்கிறார் ‘தெரபியா இன்ஃபினிட்டி’ பயிற்சி நிறுவனத்தை நடத்தும் ஃபேஷியல் யோகா நிபுணர் மாலினி.

முகத்தை அழகாக, இளமையாக வைத்திருக்க உதவக்கூடிய ஃபேஷியல் யோகா பயிற்சிகள் சிலவற்றை விளக்குகிறார் அவர்.

‘‘ஃபேஷியல் யோகாவில் முகத் தசைகளுக்குப் பயிற்சி கொடுக்கப்படுவதால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, சருமச் சுருக்கங்கள் மறைந்து, அதன் தொய்வு சரி செய்யப்பட்டு, இளமைத் தோற்றம் சாத்தியமாகிறது. நம் முகத்தில் மட்டுமே 50-க்கும் மேலான தசைகள் உள்ளன. ஒவ்வொரு தசைக்கும் பயிற்சி கொடுக்கும் போது அது ஒன்றுக்கு மேலான பலன்களைத் தருகிறது. என்றும் இளமையாகத் தெரிய வேண்டும் என ஆசைப்படுவோர், வாரத்துக்கு ஐந்து நாள்களுக்கு ஃபேஷியல் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

ஏன் ஃபேஷியல் யோகா?

அழகையும் இளமையையும் தக்க வைத்துக்கொள்ளத்தான் பார்லர்களில் ஃபேஷியல் செய்து கொள்கிறோமே என்ற கேள்வி சிலருக்கு இருக்கலாம்.

உண்மைதான். ஃபேஷியல் யோகா செய்கிற ரிலாக்ஸிங் மற்றும் டோனிங் இரண்டையும் ஃபேஷியல் செய்வதன் மூலம் பெற முடியும்தான். ஆனால், அதன் பலன் தற்காலிகமானது. அதே பலன்களை ஃபேஷியல் யோகாவின் மூலம் நிரந்தரமாகப் பெற முடியம். இதில் கெமிக்கல் உபயோகம் இல்லை என்பதால் பக்க விளைவுகள் பற்றிய பயமும் தேவையில்லை.

ஃபேஷியல் யோகாவை எந்த வயதில் ஆரம்பித்தாலும் அதன் பிறகான முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும். முகத் தசைகளுக்கான பயிற்சிகளே இதில் பிரதானம் என்பதால் இளமையான, ஆரோக்கியமான சருமத்தைப் பெற முடியும்.

ஃபேஷியல் யோகாவில் செல்ஃப் மசாஜும் ஒரு பகுதி. தினமும் இருவேளைகள் முகத் தசைகளை நமக்கு நாமே மசாஜ் செய்துகொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பார்ப்பதற்குச் சுலபமாகத் தெரிந்தாலும் ஃபேஷியல் யோகாவை முதலில் ஒரு நிபுணரின் வழிகாட்டுதலோடு செய்யத் தொடங்குவதுதான் சரி. அதன் மூலம் உங்களுக்குத் தேவையான பயிற்சிகளைச் சரியாகத் தெரிந்துகொள்ளவும், அவற்றைச் சரியாகச் செய்யக் கற்றுக்கொள்ளவும் முடியும்.

என்றும் இளமைக்கு ஃபேஷியல் யோகா...

தாடை மற்றும் கழுத்துப் பகுதிக்கான பயிற்சி

கழுத்தை உயர்த்தி சீலிங்கைப் பார்க்கவும். மேலே பார்த்த நிலையில் முத்தமிட முனைவதுபோல வாயை வைத்துக்கொள்ளவும். அதே நிலையில் 5 நொடிகள் இருக்கவும். இதையே ஐந்து முறை திரும்பச் செய்யவும்.

உதடுகளால் `ஓ' போடவும். தாடையை இறக்கி வாயைத் திறக்கவும். உதடுகளை `ஓ' வடிவத்தில் வைக்கவும். இதை பத்து முறை செய்யவும். `ஆ... ஓ.... ஆ... ஓ...' இப்படி மாற்றி மாற்றிச் செய்யவும்.

பற்கள் தெரியாமல் வாயை மூடிச் சிரிப்பது போல உதடுகளை வைத்துக்கொள்ளவும். இரண்டுபக்க கன்னங்களையும் உள்பக்கமாக இழுத்து, முகத்தை மீன் வடிவத்தில் மாற்றவும்.

ஐந்து முறை தொடர்ந்து செய்யவும். இது உதடுகளையும் கன்னங்களையும் டோன் செய்யும்.

என்றும் இளமைக்கு ஃபேஷியல் யோகா...

முதுமையைத் தள்ளிப்போட

வாயினுள் ஈறுகளைச் சுற்றி நாவால் கடிகார சுழற்சியிலும் அதற்கு எதிர் சுழற்சியிலும் மேலும் கீழுமாகச் சுற்றவும்.

வாயின் உள்பக்கத்திலிருந்து கன்னத்தை நாக்கால் சுட்டிக் காட்டவும். நாக்கால் வாயின் மேல் பகுதியை உள்பக்கமாக ஒரு நிமிடம் தொடவும். சில நாள்கள் பயிற்சிக்குப் பிறகு, நாக்கை முடிந்த அளவுக்கு நீளமாக நீட்டவும்.

5 நிமிடங்களுக்குச் செய்யவும்.

தாடையை `ஓ' வடிவில் வைத்தபடி, நாக்கால் இடது, வலது பக்கங்களில் 20 நிமிடங்களுக்கு வேகமாகச் சுழற்றவும். மெள்ள மெள்ள அந்த வேகத்தை 35 நொடி களாக அதிகரிக்கவும்.

நாக்கை நீட்டியபடி எவ்வளவு சத்தமாக முடியுமோ, அவ்வளவு சத்தமாக `ஆ; என்று கத்தவும். இதனால் தைராய்டு சுரப்பி நன்றாக இயங்கும். இந்தப் பயிற்சியை காலை மற்றும் இரவில் ஐந்து முறைகள் செய்யவும்.

முதுமையைத் தள்ளிப்போடும் பயிற்சிகளில் நாக்குக்கு முக்கிய இடமுண்டு. நாய் எப்படி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்குமோ, அதே போல நாக்கை நன்கு வெளியே நீட்ட வேண்டும்.

அப்படி நாக்கை நீட்டும்போது முடிந்தளவுக்கு ‘ஆ...’ என்று ஒலியெழுப்பவும். நாக்கு உள்ளிருக்கும்போது அது கன்னங்கள் முழுவதையும் துழாவும் வகையில், ஈறுகளைச் சுற்றிச் சுழல வேண்டும். இந்தப் பயிற்சிகள் ஸ்ட்ரெஸ் பாதிப்புகளையும் குறைக்கும்.

என்றும் இளமைக்கு ஃபேஷியல் யோகா...

கோணவாய் பயிற்சி

ஒழுங்கு காட்டுதல் என்று சிறுவயதில் நண்பர்களுடன் வாயைக் கோணிக் காட்டி விளையாடியிருப்போம். அதே பயிற்சிதான்.

இந்தப் பயிற்சியை ஐந்து முறை செய்ய வேண்டும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்தும் வெளியேற்றியும் செய்கிற இந்தப் பயிற்சி கன்னங்கள், வாய், தாடை, கண்கள் மற்றும் மூக்குப் பகுதிகளுக்கானது. ஒரே நேரத்தில் பல தசைகளுக்கும் கொடுக்கப்படும் பயிற்சி இது.

என்றும் இளமைக்கு ஃபேஷியல் யோகா...

க்ரோஸ் ஃபீட்

முதுமையின் அடையாளமாகப் பலருக்கும் கண்களின் ஓரங்களில் காணப்படும் சுருக்கத்தையே க்ரோஸ் ஃபீட் என்கிறோம்.

ஆட்காட்டி விரலின் நுனியால் கடிகாரச் சுழற்சியிலும் அதன் எதிர்த்திசையிலும் லேசான அழுத்தம் கொடுப்பதன் மூலமும் இரண்டு கண்களின் ஓரங்களிலும் லேசாகத் தட்டுவதன் மூலமும் இதைச் சரியாக்கலாம். விரல் நுனியால் கொடுக்கும் அழுத்ததமானது ஒவ்வொரு பகுதிக்கும் ஐந்து முறை செய்யப்பட வேண்டும்.

என்றும் இளமைக்கு ஃபேஷியல் யோகா...

டபுள் சின் (தாடைக்குக் கீழே கழுத்துப் பகுதியின் சதை மடிப்பு) பிரச்னையை சரி செய்ய...

படத்தில் காட்டியுள்ளபடி நான்கு விரல்களையும் தாடைக்கு அடியில் வைத்தபடியும் கட்டைவிரல் வெளியில் இருக்கும்படியும் வைத்து நாக்கால் மேல்தாடை மற்றும் பற்களை அழுத்தவும். தாடை மேலும் கீழும் அசையும் உணர்வை ஃபீல் செய்வீர்கள். அதற்கேற்றபடி உங்கள் கையும் அசையும்.

என்றும் இளமைக்கு சில டிப்ஸ்

காலையில் 4 மணிக்கு எழுந்திருக்கவும். 10 மணிக்கு தூங்கச் செல்லவும்

தூங்கி எழுந்ததும் 2 டம்ளர் வெந்நீர் அருந்தவும்.

தினமும் 20 நிமிடங்களுக்கு ஃபேஷியல் யோகா செய்யவும்.

7 மணிக்குள் மிதமான இரவு உணவை முடித்துவிடவும்.

9 மணிக்கு மேல் செல்போன் உபயோகத்தைத் தவிர்க்கவும்.