Published:Updated:

கர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா? #DoubtOfCommonMan

கர்ப்பிணி

கர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா?

Published:Updated:

கர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா? #DoubtOfCommonMan

கர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா?

கர்ப்பிணி

முன்பு எப்பொதும் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, 'ஃபைப்ராய்டு (Fibroid) என்னும் கர்ப்பப்பை தசைநார்க்கட்டி உலக அளவில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு வருவதாக' புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, `30 முதல் 45 வயதுக்குள்ளேயே கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை சில சமயங்களில் கருவுறுதலையும் பாதிக்கிறது' என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கர்ப்பிணி பெண்!
கர்ப்பிணி பெண்!
``ஃபைப்ராய்டு கட்டிகள் வந்தால் கர்ப்பப்பையை அகற்றச் சொல்வது ஏன், கர்ப்பப்பையை அகற்றாமல் இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை தீர்வு காண முடியுமா, ஃபைப்ராய்டு கட்டிகள் வராமல் தடுப்பது எப்படி, அதைத் தவிர்ப்பதற்கான உணவுமுறைகள் என்னென்ன" என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வினோத் என்ற வாசகர் எழுப்பியிருந்தார்.

இந்தப் பிரச்னை குறித்து மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மனுலக்‌ஷ்மியிடம் பேசினோம்.

மனுலக்‌ஷ்மி
மனுலக்‌ஷ்மி

``குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது கர்ப்பப்பையில் காணப்படும் நார்த்திசுக் கட்டிகள்தான். இந்தப் பிரச்னைக்கென்று பிரத்யேக அறிகுறிகள் இல்லாததால், ஏதாவது பிரச்னைக்காக ஸ்கேன் செய்யும்போதுதான் ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பது தெரிய வருகிறது" என்கிறார். `ஒரு பெண்ணுக்கு இந்தக் கட்டியின் காரணமாகக் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழல் எப்போது ஏற்படுகிறது?' என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறார்.

அது என்ன ஃபைப்ராய்டு கட்டி?

ஃபைப்ராய்டு கட்டி பரிசோதனை
ஃபைப்ராய்டு கட்டி பரிசோதனை

கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைநார்க் கட்டிக்கு ஃபைப்ராய்டு என்று பெயர். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். அது தோன்றும் இடத்தைப் பொருத்து கட்டிகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டிக்கு `சப்செரோசல் ஃபைப்ராய்ட்ஸ்' (Subserosal Fibroids) என்றும், கர்ப்பப்பையின் வெளி மற்றும் உட்சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடிய கட்டிக்கு `இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்ட்ஸ்' (Intramural Fibroids) என்றும், கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வரும் கட்டி `சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ்' (Submucosal Fibroids) என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் சப்செரோசல் ஃபைப்ராய்ட்ஸ், இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்ட்ஸ் கட்டிகள் வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

எதனால் வருகிறது?

Doubt of common man
Doubt of common man

எதனால் கர்ப்பப்பை கட்டி ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. `மரபணு, ஹார்மோன் பிரச்னை காரணமாக கர்ப்பப்பை கட்டிகள் ஏற்படலாம்' என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Doubt of Common Man
Doubt of Common Man

அறிகுறிகள் என்னென்ன?

ஃபைப்ராய்டுகள் பொதுவாக அறிகுறிகள் எதையும் காட்டுவதில்லை. சிலருக்கு மாதவிடாயின்போது வயிற்றுவலியும் ரத்தப்போக்கும் மிக அதிகமாக இருக்கும். அதிக நாள்களுக்கு மாதவிடாய் நீடிப்பதும் ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்.

மாதவிடாய்
மாதவிடாய்

பெரிய கட்டியாக இருப்பின் அருகிலிருக்கும் உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம். குறிப்பாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மலச்சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு எந்தத் தொந்தரவும் அறிகுறிகளும் இல்லாமலேயே குழந்தைப்பேறு தடைப்படலாம்.

யாருக்குக் கட்டிகள் வரலாம்?

Doubt of common man
Doubt of common man

பூப்பெய்திய எந்தப் பெண்ணும் இந்தக் கட்டிகள் வரலாம் என்றாலும், பொதுவாக 20-40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் அதிகமாக வருகின்றன. குறிப்பாக, குழந்தைப்பேற்றுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்களுக்கு ஃபைப்ராய்டு கட்டி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதேபோல, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சைகள் என்னென்ன?

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

மருந்து, மாத்திரைகள் மூலம் தற்காலிகமாக மட்டுமே இந்தப் பிரச்னை தீர்வு கிடைக்கும். நிரந்தரத் தீர்வுக்கு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை அகற்ற வேண்டும். மூன்று வகைக் கட்டிகளில், எந்த வகைக் கட்டி எனக் கண்டறிந்த பின், அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். இன்ட்ராமியூரல் கட்டிகள் என்றால் 'லேப்ராஸ்கோப்பிக் மயோமக்டெமி' (laparoscopic myomectomy ), சப்மியுகோசல் கட்டிகளை `ஹிஸ்ட்ரோஸ்கோபிக் மயோமக்டெமி' (hysteroscopic myomectomy) ஆகிய சிகிச்சைகள் செய்யப்படும். சப்செரோசல் கட்டிகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுவதில்லை என்பதால் அதற்குச் சிகிச்சையும் தேவை இல்லை.

தவிர்க்க முடியுமா?

குறைக்கலாம் உடல் எடை
குறைக்கலாம் உடல் எடை

போதுமான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இருந்தால், பொதுவாகவே கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். முக்கியமாக, உடல் உயரத்திற்கேற்ப உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். ஃபைப்ராய்டு கட்டிகள் வராமல் தடுப்பதற்கென பிரத்யேக உணவுமுறைகள் இல்லை. ஆனால், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கியமாக, காய்கறிகள், கீரைகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். துரித உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். பரம்பரையாக இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

கர்ப்பப்பையை நீக்கவேண்டிய சூழல் எப்போது ஏற்படும்?

கர்ப்பப்பை
கர்ப்பப்பை

கர்ப்பப்பையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளை உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், கட்டியின் அளவு பெரிதானாலோ, அதிக வலியும் அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டால், மாதவிடாய் ரத்தப்போக்கு நீண்டகாலம் தொடர்ந்தால், பிரச்னைக்கு மருந்துகள் சாப்பிட்டும் பலன் கிடைக்காத நிலை ஆகிய காரணங்களால் கர்ப்பப்பையை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஃபைப்ராய்டு கட்டிகளால் பாதிக்கப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இனிமேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத பெண்கள் கர்ப்பப்பையை அகற்றலாம். சில ஃபைப்ராய்டு கட்டிகள் தானாகவே சரியாகிவிடும். அதோடு ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதால், புற்றுநோய்க்கு அஞ்சி கர்ப்பப்பையை அகற்ற வேண்டியதில்லை" என்கிறார் டாக்டர் மனுலக்‌ஷ்மி.

Doubt of common man
Doubt of common man

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை அனுப்ப, இங்கே கிளிக் செய்யுங்க!