சில விபத்துகள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடும். விபத்தின் கோரப்பிடியில் சிக்கி அதிலிருந்து மீள சிலருக்கு பல காலம் ஆகலாம். ஒரு சிறுமி, தனக்கு ஏற்பட்ட விபத்தினால், தாங்க முடியாத பாரத்தை தன் வாழ்க்கையில் வருடக்கணக்கில் சுமந்திருக்கிறாள்.

13 வயதான அஃப்ஷீன் குல், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் 10 மாதக் குழந்தையாக இருந்தபோது, தன் அக்காவின் தோள்களில் இருந்து தவறி விழுந்ததில் இவருடைய கழுத்து 90 டிகிரி வளைந்துள்ளது.
பல சிகிச்சைகள் செய்தும் கழுத்தின் நிலை மாறாமல் அப்படியே இருந்துள்ளது. மேற்கொண்டு பரிசோதனை செய்யவோ, சிகிச்சைக்கோ சிறுமியின் பெற்றோர்களிடம் பணம் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுமட்டுமன்றி அஃப்ஷீன் பெருமூளை வாதத்தாலும் பாதிக்கப்பட்டதால், அவளால் தன் கல்வியிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் வலியிலேயே தவித்துள்ளாள், அஃப்ஷீன்.
இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரியா தாமஸ் எனும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர், அஃப்ஷீன் படும்பாடுகள் குறித்து எழுதியிருந்தார். டெல்லி, அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் ராஜாகோபாலன் கிருஷ்ணன் என்ற மருத்துவர் அதைப் பார்த்துள்ளார். அவர் அஃபஷீனுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குவதாக மார்ச் மாதம் அறிவித்தார்.

கடந்த ஆண்டு இந்தியா வந்த அஃப்ஷீனுக்கு நான்கு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு கழுத்துக்கான முக்கிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
“சரியான சிகிச்சைகள் கிடைக்காதபட்சத்தில், அவளால் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. தற்போது அப்பெண் சிரிக்கிறார், பேசுகிறார்…” என மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன் கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகான அஃப்ஷீனின் உடல்நல முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர், ஸ்கைப் மூலம் வாரம்தோறும் கண்காணித்து வருகிறார்.