Published:Updated:

`அபார்ஷன் பற்றி முடிவெடுக்க இந்திய பெண்களுக்கு உரிமை இல்லை!’-மத்திய சுகாதார துறையின் கருத்து சரியா?

Medical termination of Pregnancy
Medical termination of Pregnancy

தவிர்க்கமுடியாத இக்கட்டான சூழலில்களில் இறுதிமுடிவாகத்தான் கருவைக் கலைப்பதே சரி என்று தாய்மார்களும் முடிவுக்கு வருகிறார்கள்.

கருகலைப்பு தொடர்பாக முடிவெடுக்க பெண்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை (No absolute right) என மத்திய சுகாதார அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971 என்பது, குறிப்பிட்ட சில சூழலில் உள்ள மனிதக் கருக்களை மட்டும் பதிவு பெற்ற மருத்துவர்கள், அதன் சூழல் சார்ந்த நிலையைக் கருத்தில் கொண்டு கலைப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம். 20 வாரங்களுக்கு உள்ளான கருக்களைச் சுகாதாரமான முறையில் கலைக்கலாம் என்பதே இந்தச் சட்டம். இதை எதிர்த்து 2008-ம் வருடம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் நிக்கில் தாதர் வழக்கு தொடர்ந்தார்.

அது தொடர்பான சட்ட திருத்தப் போராட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அவர் வழக்கு தொடரப்பட்டதற்கான பின்னணியை அறிவோம். மும்பையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வரும் தாதரின் மருத்துவமனைக்கு 2005-ம் வருடம் ஒரு கர்ப்பிணி வந்தார். அவரின் கருவை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் பல வகை நோய் உபாதைகள் இருப்பது தெரியவந்தது. நோய் உபாதைகளுடன் குழந்தை பிறந்தால் அது நிச்சயம் கஷ்டப்படும் என்பதால் அதைக் கருவிலேயே கலைத்துவிட முடிவெடுத்தார். ஆனால், சட்டம் அப்போது அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. பிறந்த குழந்தை ஆறு வயது வரை உயிரோடு இருந்தது. அத்தனை வருடகாலமும் தனது கண் முன்னேயே அந்தக் குழந்தை சித்ரவதையை அனுபவித்ததைப் பார்த்து மனதொடிந்துபோனார் அந்தத் தாய்.

Dr Nikhil datar
Dr Nikhil datar

அதுபோல வேறு ஒரு சம்பவத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவே 20 வாரத்துக்குள் கருகலைப்பு செய்யவேண்டிய கட்டாயத்தில் கருவைக் கலைத்துவிட்டார் அந்தத் தாய். ஆனால், 20 வாரங்கள் கழித்து வந்த பரிசோதனையில் குழந்தைக்கு எவ்வித நோய் பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இன்றளவும் அந்தத் தாய் தனது குழந்தையைக் கலைத்துவிட்ட குற்ற உணர்ச்சியிலிருந்து மீளவில்லை. ஒருவேளை 20 வாரங்களுக்குப் பிறகு கருவைக் கலைக்கச் சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கப்போவதில்லை.

Vikatan

இதுபோன்று இன்னும் நிறைய பெண்கள் சந்தித்த பிரச்னைகளைப் பார்த்துதான் 2008-ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் நிக்கில் தாதர் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தோற்றாலும், தொடர்ந்து பல பெண்களுக்காக உச்சநீதிமன்றத்தில் கருகலைப்பு உரிமை தொடர்பாக வழக்கு தொடர உதவினார். அவரது பொதுநல வழக்கு ஒன்றில்தான் தற்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துள்ளது. 20 வாரங்களுக்குள் சட்டரீதியாகக் கருக்கலைப்பு செய்யலாம் என இருக்கும் சட்டத்தை 26 வாரங்களாக நீட்டிக்கக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பிறந்த குழந்தையின் உடல்ரீதியான நோய்களைச் சமாளிப்பதைவிட கருவிலேயே குழந்தையை அபார்ஷன் செய்வதுதான் தாய்மார்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுடன் தமிழகத்தைச் சேர்ந்த `லைப் ஃபார் ஆல்’ என்கிற அரசு சாரா அமைப்பும், மருத்துவர் நிகில் தாதருக்கு எதிராக ஒரு மனுதாரராக ஆஜராகியிருந்தது. இதுகுறித்து அமைப்பின் நிறுவனர் ஜொஹானா துரைராஜிடம் பேசினோம்.

``கரு உருவான அடுத்த நொடி தொடங்கியே அது ஓர் உயிராகவே பார்க்கப்படவேண்டும். எப்படி ஒருவரைச் சுட்டுக் கொல்வது வன்முறையோ அதுபோலதான் கருவைக் கலைப்பதும் வன்முறை. தன் வயிற்றில் இருக்கிறது என்பதற்காக அதைக் கலைக்க தாய்க்கு எந்தவித உரிமையும் கிடையாது. நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் பிறந்த குழந்தையிடம் இருக்கும் உடல்ரீதியான நோய்களைவிட கருவிலேயே குழந்தையை அபார்ஷன் செய்வதுதான் தாய்மார்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஜொஹானா துரைராஜ்
ஜொஹானா துரைராஜ்

அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதும் இயலாததாக இருக்கிறது. ஆகவே, ஒரு குழந்தை வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ய தாய்க்கு உரிமை இருக்கிறது என்றாலும் அந்தக் கருவுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்னும் அடிப்படையில்தான் நாங்கள் குரல் கொடுக்கிறோம்” என்றார்.

உரிமை இல்லை என்று சொல்லுவதோடு மட்டும் சுகாதாரத்துறையின் வேலை நின்றுவிடவில்லை

மேலும், ``மத்திய அரசு போல நாங்கள் பெண்களுக்கு உரிமை கிடையாது என வாதாடவில்லை. நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளில் பெரும்பாலும் பள்ளி செல்லும் கிராமப்புறச் சிறுமிகளைச் சந்தித்தோம். ஏழு அல்லது எட்டு மாதங்கள் வரை அவர்கள் கருவுற்றிருப்பதே அந்தச் சிறுமிகளுக்குத் தெரியாது. இந்தச் சூழலில் சிறுமி, குழந்தை இருவரையுமே காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது. இருவரின் மறுவாழ்வுக்கான ஆவன செய்யவேண்டிய கடமையும் இருக்கிறது. மற்றொரு பக்கம் குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க அந்தத் தாய்மார்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு. உரிமை இல்லை என்று சொல்லுவதோடு மட்டும் சுகாதாரத்துறையின் வேலை நின்றுவிடவில்லை”என்றார் ஜொஹானா துரைராஜ்.

Supreme Court
Supreme Court

பெண்களின் அபார்ஷன் உரிமை சர்வதேசப் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா கருக்கலைப்பை 1973 -ம் ஆண்டில் அதிகாரபூர்வமாக்கிய அதே சமயத்தில்தான் அங்கே விவாகரத்து எண்ணிக்கையும் அதிகரித்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியதே. உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறையின் பிற்போக்குத்தனமான பதில் கண்டிக்கத்தக்கது என்றாலும் தாயின் உரிமைக்கு முன்னுரிமை தரப்போகிறோமா அல்லது குழந்தையின் வாழ்தலுக்கான உரிமைக்கு முன்னுரிமை தரப்போகிறோமா என்கிற கேள்வி தொடர்கிறது.

கருக்கலைப்பு நிகழ்வது ஒன்றும் வலிந்து செய்யப்படுவதும் இல்லை. தவிர்க்கமுடியாத இக்கட்டான சூழலில்களில் இறுதிமுடிவாகத்தான் கருவைக் கலைப்பதே சரி என்று தாய்மார்களும் முடிவுக்கு வருகிறார்கள்.

காஷ்மீர் பிரச்னையிலேயே தீர்ப்பு கூறிவிட முடியும் என்றாலும், இதுபோன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் முடிவுகளைச் சொல்லுவது என்பது உச்சநீதிமன்றத்துக்கே சவாலாகத்தான் இருக்கும். 

மருத்துவக் கருகலைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு உரிமைக்கான வாரத்தை 20லிருந்து 26 வாரமாக நீட்டிக்கக் கோரி மாற்றம் கொண்டுவருவது குறித்து உங்கள் கருத்து என்ன?அதற்கான காரணம் என்ன? கீழே கமென்டில் குறிப்பிடவும்.

அடுத்த கட்டுரைக்கு