
மாதவிடாய் நாள்களுக்கு 3 முதல் 4 நாள் களுக்கு முன்பு வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பானதே.
மாதவிடாய் குறித்த சந்தேகங்களும் கேள்வி களும் பெண்களிடம் எந்த வயதிலும் நீங்குவதில்லை. எது சரியான மாதவிடாய் சுழற்சி, ஆரோக்கியமான உதிரப்போக்கு எப்படி இருக்க வேண்டும், மாத விடாயில் பிரச்னையை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன, அவற்றுக்கான தீர்வுகள் உள்ளிட்ட வற்றை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மதுபிரியா.
``ஒரு பெண் பூப்படைந்தது முதல், ஒவ்வொரு முறை கருமுட்டை வெளியேறும் போதும் கர்ப்பப்பை கருவை சுமக்கத் தயாராகும். கருமுட்டை விந்தணுவுடன் சேர்ந்து கரு உருவாகாமல் போகும்போது, கர்ப்பப்பை சிசுவை சுமக்கத் தயார் படுத்தி வைத்திருந்த திசு படுக்கை, மாதவிடாய் உதிரமாக வெளியேறும்.
மாதவிடாய் சுழற்சி எத்தனை நாள்கள்?
பொதுவாக 22 முதல் 35 நாள் களுக்கு ஒருமுறை மாதவிடாய் வந்து, 3 முதல் 7 நாள்கள் வரை உதிரம் வெளியேறினால் அது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி. இரண்டு, மூன்று மாதங் களுக்கு ஒருமுறை, 21 நாள்களுக்கு முன்பு, அல்லது 35 நாள்களுக்கு பின்பு என மாதவிடாய் ஏற்பட்டால், அது ஒழுங்கற்ற சுழற்சி. பொதுவாக 28 - 32 நாள்களுக்கு ஒருமுறை மாத விடாய் ஏற்படும் பெண்களுக்கு 14 - 16ம் நாள்களுக்குள் கருமுட்டை வெளியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் பெண் களுக்கு, கரு முட்டை வெளியேறும் நாளை கணிக்க இயலாது. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஹார்மோன் சமநிலையின்மை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.

உதிரப்போக்கில் கவனிக்க வேண்டியது என்ன?
சில பெண்களுக்கு உதிரப்போக்கு 7 நாள்களுக்கு மேல் தொடரும்; சிலருக்கு உதிரம் கட்டியாக வெளியேறும். பொது வாக மாதவிடாய் நாள்களில் 80 மில்லி ரத்தம் வெளியேறுவது வழக்கம். ஆனால், அதற்கு அதிகமாக உதிரம் வெளி யேறும்போது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரும்புச்சத்து குறைபாட்டை (Anemia) ஏற்படுத்தும். அதிகமான உதிரப் போக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்தால் அழற்சி, சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்டவை ஏற்படலாம். இவை ரத்த சோகையின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி அதற்கான மாத்திரைகள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
பதின்வயதுப் பெண் பருவமெய்திய வுடனான ஆரம்பக்கால மாதவிடாய் நாள்கள், மற்றும் மெனோபாஸ் நாள்களில் ஒரு நாள் மட்டும் சிறிதளவில் உதிரம் வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால் 22 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இதுபோன்ற மாதவிடாய் நாள்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டும். இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை, உடற்பருமன் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சி, மாவுச் சத்தைத் தவிர்க்கும் டயட், உடல் எடை குறைப்பு உள்ளிட்டவற்றை மருத்துவர் பரிந் துரைப்பார்.

வயிற்று வலி... நார்மலா?
பல பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் அடிவயிற்றில் கடுமையான வலி (Dysmenorrhoea) ஏற்படும். கர்ப்பப்பை சுருங்கி, அழுத்தம் உண்டாக்கி, உதிரத்தை வெளியேற்றுவதுதான் இந்த வலிக்குக் காரணம். ஒவ்வொரு பெண் ணுக்கும் இந்த வலியின் அளவு மாறுபடும். சிலருக்கு கருப்பையில் ஏற்படும் சிறிய அளவிலான `ஃபைப்ராய்ட்' (Fibroid) கட்டிகள், நீர்க் கட்டிகள் (Ovarian Endometrioma) காரணமாகவும் மாதவிடாய் நாள்களில் தாங்கமுடியாத வலி ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், கருப்பையில் ஏற்படும் இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்க உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நாள்களில் அடி வயிற்று வலியுடன் கடுமையான முதுகு வலியும் ஏற்படும். முன்வயிற்றில், முதுகில் விளக்கெண்ணெய் தடவி, வெந்நீர்ப்பை (Hot water bag) கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி வலி நிவாரண மருந்து எடுத்துக்கொள்ளலாம்.
வெள்ளைப்படுதல் ஒரு பிரச்னையா?
மாதவிடாய் நாள்களுக்கு 3 முதல் 4 நாள் களுக்கு முன்பு வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பானதே. அது வெள்ளை நிறமாக அல்லாமல், பழுப்பு, சிவப்பு, பிங்க் அல்லது மஞ்சள் நிறத்தில் ரத்தத்துடன், வாடையுடன் வெளியேறினால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மாதவிடாயை சீராக்கும் உணவுகள் எவை?
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், பச்சைக் காய்கறிகள், அன்னாசிப்பழம், வாழைப்பழம் போன்ற மஞ்சள் நிற பழ வகைகள், பப்பாளி, இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரீச்சை, கீரை வகைகள், வைட்டமின் சி நிறைந்த உணவுகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். ஹீமோ குளோபின் அளவு குறைந்திருப்பவர்கள் மருத்துவர் அறிவுரையின்படி ஊசிகள், மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.''