Published:Updated:

``குழந்தையின்மைப் பிரச்னை லாக்டௌனில் தானாகச் சரியாகிறது... எப்படி?!'' - மகப்பேறு மருத்துவர்

லாக்டெளனையொட்டிய கருத்தரிப்பு அதிகரித்தல் பற்றி இன்னும் குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்துதான் தெளிவாகச் சொல்ல முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லாக்டௌன் நாள்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இன்னொரு பக்கம், கணவனும் மனைவியும் வீட்டில் சேர்ந்திருக்கும் நேரம் அதிகரித்திருப்பது, இருவருக்குமான உரையாடல் நேரம் அதிகரித்திருப்பது, நெருக்கம் கூடியிருப்பது போன்ற பல காரணங்களால் அவர்களுக்கிடையிலான தாம்பத்ய உறவும் மேம்பட்டிருக்கிறது என்கின்றன செய்திகள். இதன் விளைவாக, தேவையற்ற கருத்தரிப்புகள் அதிகரித்திருப்பதாகவும், பாதுகாப்பற்ற கருச்சிதைவுகள் நடைபெறும் அபாயம் இருப்பதையும்கூட கேள்விப்படுகிறோம்.

இந்தச் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜிடம் பேசினோம்.

pregnancy @ lockdown
pregnancy @ lockdown
Representational image

"தேவையற்ற கருத்தரிப்புகளின் எண்ணிக்கையை மருத்துவர்களிடம் வருபவர்களை வைத்து மட்டுமே தீர்மானித்து விடமுடியாது. மாநகரங்களில் வசிக்கிற, கல்வியறிவுபெற்ற பெண்கள், மாதவிடாய் தள்ளிப்போனால் உடனே சிறுநீர் பரிசோதனை செய்கிறார்கள், மருத்துவரைச் சந்திக்கிறார்கள். இன்றைக்கும் கிராமங்களில் இருக்கிற எத்தனையோ பெண்கள், கருவுற்று மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அது பற்றிய விழிப்புணர்வே அடைகிறார்கள்.

அதனால், லாக்டெளன் ஆரம்பித்து ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கிற நிலையில், இதைப் பற்றி இப்போது ஒரு முடிவுக்கு வர முடியாது. வரவும் கூடாது. இப்போது கருத்தரித்திருப்பவர்களில் பலர், லாக்டெளனுக்கு முன்னாடியே தாம்பத்ய உறவு கொண்டவர்களாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். லாக்டெளனை ஒட்டிய கருத்தரிப்பு அதிகரித்தல் பற்றி இன்னும் குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்துதான் தெளிவாகச் சொல்ல முடியும்.

pregnancy @ lockdown
pregnancy @ lockdown
Representational image
``லாக்டௌன் தளர்வின் பாசிட்டிவ் நெகட்டிவ் பக்கங்கள்!" - விளக்கும் வைராலஜிஸ்ட் #ExpertOpinion

பல வருடங்கள் குழந்தையின்மைக்காக சிகிச்சைபெற்று வந்தவர்கள், 'வயது 40 ஆகிவிட்டது. இனிமேல் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது' என்று தவித்துக்கொண்டிருந்தவர்கள், தற்போது மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சைகள் நடைபெறவில்லை என்பதால், வேறு வழியில்லாமல் வீட்டில் இருப்பார்கள். இந்த ஒன்றரை மாத காலத்தில், கணவனும் மனைவியும் குழந்தையின்மை பற்றிய கவலைகளை மறந்து இருந்த காரணத்தால், கர்ப்பமாகி இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தையின்மைக்காக சிகிச்சைபெற்றுவந்தவர்கள், சிகிச்சைகளை நிறுத்திய ஒரு வருடத்துக்குள் கருத்தரிப்பது மருத்துவத்தில் சகஜம்தான். இப்படி நிறைய பெண்களை எங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக, கணவனுக்கும் மனைவிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தும், கருத்தரிக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதே நிலைமை இந்த லாக்டெளன் காலத்திலும் நடந்திருக்கலாம். ஆனால், அதைப் பற்றியும் இந்த ஒன்றரை மாதத்தில் சொல்வது அறிவியல்பூர்வமாக எனக்கு சரியாகப்படவில்லை.

pregnancy @ lockdown
pregnancy @ lockdown
Representational image

இந்த லாக்டெளன் நேரத்தில், ஐ.டி துறையில் வேலைபார்க்கிற பெண்கள் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால், ஒருவர் மார்னிங் ஷிஃப்ட், ஒருவர் நைட் ஷிஃப்ட் என்று வாழ்ந்ததன் காரணமாகவே அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்னை இருந்திருக்கலாம். இந்த ஒன்றரை மாதத்தில் அவர்கள் குழந்தைக்கு முயற்சி செய்திருக்கலாம். இந்த விஷயத்தை லாக்டெளனின் பாசிட்டிவ்வாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

ஆனால், இதை வைத்து லாக்டெளன் நேரத்தில் கருத்தரிப்பு அதிகரித்துவிட்டது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. குழந்தை இல்லாதவர்களை, மருத்துவர்களே ஒரு வாரம் எங்கேயாவது வெளியூருக்கு சென்றுவர அறிவுறுத்துவதுண்டு. அதாவது, அவர்கள் தனிமையாக தாம்பத்யத்தை அனுபவித்தால் மட்டுமே குழந்தைப்பேற்றுக்கான சாத்தியம் உருவாகும் என்பதால் அப்படிச் சொல்வோம். அது தற்போது இயல்பாக நடக்கலாம்.

"இந்த நேரத்தில், மருத்துவமனையில் வைத்து டிஎன்சி செய்வது மிகவும் கடினம்.’’
டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ்

முப்பதுகளின் இறுதியில் மற்றும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கிற பெண்களிடையே கருத்தரிப்பு அதிகரித்திருப்பதாக வருகிற தகவல்களுக்கும் மேலே சொன்னவைதான் காரணங்கள்.

தேவையற்ற கருத்தரிப்பு என்றால், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசித்து மாத்திரைகள் மூலம் அபார்ஷன் செய்து விடுவதே பாதுகாப்பு. 30 நாள்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வருகிற பெண்கள் என்றால், 35-வது நாள் யூரின் டெஸ்ட் செய்து பாசிட்டிவ் என்றால் உடனே மருத்துவரிடம் அபார்ஷன் குறித்துப் பேசிவிடுங்கள்.

Vikatan

ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டிருந்தாலும், கருத்தடை மாத்திரை சாப்பிடாமல் உறவு கொண்டிருந்தாலும், காப்பர்-டி அணியாமல் இருந்தாலும், உங்களுக்கே கருத்தரித்து இருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்தாலும், உடனடியாக யூரின் டெஸ்ட் செய்து பார்த்துவிடுங்கள். பாசிட்டிவ்வாக இருந்தால் மருத்துவரிடம் பேசுங்கள். இந்த நேரத்தில் மருத்துவமனையில் வைத்து டிஎன்சி செய்வது மிகவும் கடினம். நீங்கள் வெளியில் வரும்போது தொற்றுடன் வர வாய்ப்பு அதிகம் என்பதால், முன்கூட்டியே எச்சரிக்கையாக இருங்கள்.

abortion @ lockdown
abortion @ lockdown
Representational image
லாக்டௌனில் டியூ டேட்... கர்ப்பிணிகள் கவனத்துக்கு 10 விஷயங்கள்!

ஒரு சிலர், தாங்களாகவே மாத்திரை சாப்பிட்டு கருவைக் கலைக்க முயற்சி செய்கிறார்கள். இதிலோர் ஆபத்து இருக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு கருக்குழாயில் கருத்தரித்து இருந்தால், மாத்திரை போட்டு கலைக்க முற்பட்டால், வேறு சில ஆபத்துகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேவையற்ற கருத்தரிப்பு நிகழ்ந்துவிட்டால், மருத்துவரிடம் ஆன்லைனில் ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, பிறகு கருக்கலைப்பு மாத்திரை சாப்பிடுங்கள். லாக்டெளன் முடியும்வரை தேவையற்ற கருத்தரிப்பு நிகழாமலும், நிகழ்ந்துவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி அபார்ஷன் செய்வதிலும் மட்டும் கவனமாக இருங்கள்" என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு