
சருமப் பாதுகாப்பு
முகத்தில் உள்ள சருமத்தின் பி.ஹெச் அளவும், உடலில் உள்ள சருமத்தின் பி.ஹெச் அளவும் வேறு வேறு. முகத்தின் சருமமானது, உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும். அதனால்தான் முகத்துக்கு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வலியுறுத்தப்படுகிறது.
யாருக்கு என்ன ஃபேஸ் வாஷ்?
எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்களுக்கு - ஆயில் ஃப்ரீ ஃபேஸ் வாஷ்.
பருக்களும் இருப்பவர்களுக்கு - சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) உள்ள ஃபேஸ் வாஷ்.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு - பால், க்ரீம் கலந்த ஃபேஸ் வாஷ்.
காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு - T ஸோன் பகுதியை கவனத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஃபேஸ் வாஷ்.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு - பாரபின் மற்றும் வாசனை சேர்க்காத ஃபேஸ் வாஷ்.
முதுமையைத் தள்ளிப்போடவும், சுருக்கங்களைத் தவிர்க்கவும் - ஆன்ட்டி ஏஜிங் ஃபேஸ் வாஷ்.
சரும நிறத்தை மேம்படுத்த - ஸ்கின் லைட்டனிங் ஃபேஸ் வாஷ்
எப்படி உபயோகிப்பது?
முதலில் முகத்தை ஈரப்படுத்திவிட்டு, ஃபேஸ் வாஷில் சிறு துளியை எடுத்து முகத்தில் தடவி, மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்து, கழுவ வேண்டும்.

ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும்போது சருமத்தில் லேசான பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். அது பற்றிக் கவலை வேண்டாம்.
வெளியில் சென்று விட்டு வந்த உடனேயும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் ஃபேஸ் வாஷ் உபயோகித்து முகத்தைச் சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். இதனால் சருமத்தில் சுருக்கங்களும் முதுமைத் தோற்றமும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
அலர்ஜி இருப்பவர்கள் வாசனையோ, அதிக நுரையோ, சோடியம் லாரைல் சல்ஃபேட் போன்ற கெமிக்கலோ கலந்த ஃபேஸ் வாஷ்களைத் தவிர்க்கவும்.