தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பயமும் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம்!

கர்ப்பிணிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் கவனிக்க....

கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சுமார் ஒன்றரை லட்சம் பிரசவங்கள் தமிழகத்தில் நடைபெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எந்த நோயாக இருந்தாலும் கர்ப்பிணிகள் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்கிற எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது. ஆனாலும், `பதற்றம் வேண்டாம்... கர்ப்ப காலத்தை எளிதாகக் கடந்துவிடலாம்' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் மகப்பேறு மருத்துவர் நந்திதா கிருஷ்ணன். கர்ப்பிணிகளுக்கான கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் அவர்.

கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் சாத்தியமில்லையா?

கோவிட்-19 பாசிட்டிவ் என்பதாலேயே கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. பிற மருத்துவ காரணங் களால் சுகப்பிரசவத்துக்குச் சாத்தியமில்லை என்று மகப்பேறு மருத்துவர் தெரிவித்தால் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும். இல்லையென்றால், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சுகப்பிரசவத்தின் மூலமாகவே குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

கோவிட்-19 பாதித்த தாய், தாய்ப்பால் கொடுக்கலாமா?

தாய்ப்பால் மூலம் இதுவரை கொரோனா வைரஸ் பரவியதாக எந்தவித ஆதாரமும் இல்லை. அதனால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். `தாய்க்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கிறது, அவரால் சுயமாக தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை' என்றால் மட்டும் தாய்ப்பாலைப் பீய்ச்சி எடுத்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

பயமும் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம்!

கோவிட்-19 கர்ப்பிணிகளை பாதிக்க அதிக வாய்ப்புள்ளதா?

கொரோனா வைரஸ் நோயானது உலகளாவிய பெரும்தொற்று. இந்தத் தொற்றுநோய் பரவுவதற்கு பொதுவான மக்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அதே வாய்ப்புகள்தாம் கர்ப்பிணிகளுக்கும் உள்ளன. அவர்களை மட்டும் அதிகமாக பாதிக்கும் என்பது கிடையாது. ஆனால், ஒருமுறை தொற்று வந்துவிட்டது என்றால் கர்ப்பிணிகள் அதிக ஆபத்தானவர்கள் பட்டியலில் வந்துவிடுவார்கள். காரணம், கர்ப்பிணிகளுக்கு லேசான, மிதமான பாதிப்பில்லாமல் தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பும் அதிகம்.

கோவிட்-19 தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைந்த குழந்தைப் பிறப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுமா?

இவை தொடர்பாக மருத்துவ ரீதியாக எந்தத் தகவலும் நிரூபிக்கப்பட வில்லை. கோவிட்-19 தாயை பாதித்துள்ளதா, எவ்வளவு தீவிரமாக பாதித்துள்ளது என்று பார்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நிச்சயம் வைரஸை வெளியே தள்ளிவிடும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டு பிரசவம் நடைபெற்ற தாயின் பனிக்குடத்திலிருக்கும் நீர் மற்றும் பிறந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது நோய்ப்பரவல் ஏற்படவில்லை. ஆரோக்கியமான குழந்தைகளே பிறந்திருக்கின்றன. பிறந்த குழந்தைகளை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை எதிர்கால ஆராய்ச்சிகள்தாம் தெரியப்படுத்தும்.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள்

நோய்ப் பரவல் அதிகரித்துவரும் சூழலில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வது பாதுகாப்பானதா?

சில நாடுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வீடுகளுக்கே சென்று பிரசவம் பார்க்கின்றனர். ஆனால், இந்தியா போன்ற மக்கள்தொகையுள்ள, மாறுபட்ட சுற்றுச்சூழலுள்ள நாட்டில் வீட்டில் பிரசவம் என்பது பாதுகாப்பில்லாததுதான். பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள், அவசர சிகிச்சைகள் போன்றவற்றைக் கையாள்வதற்கு மருத்துவமனைதான் சரியானது. 99.9 சதவிகிதம் மருத்துவமனை பிரசவம் நடக்கும் நாட்டில் புதிய நடைமுறையைப் புகுத்த முயற்சி செய்ய கூடாது. மருத்துவமனைகளையும் சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். மருத்துவமனைப் பணியாளர்களும் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மூன்று ட்ரைமெஸ்டர் நிலையிலுள்ள கர்ப்பிணிகளுக்கான ஆலோசனைகள் என்னென்ன?

முதல் மூன்று மாதங்கள்: கர்ப்பம் உறுதியானதும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் தேவையெனில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த ஸ்கேன் தேவைப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தால் நேரடியாக 12-வது வாரம் ஸ்கேன் எடுத்து குழந்தையின் இதயத் துடிப்பு, வளர்ச்சியைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரும் தொற்று பரவிவரும் வேளையில் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதையும் முடிவு செய்யும் நேரம் இதுதான்.

பயமும் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம்!

இரண்டாவது மூன்று மாதங்கள்: 20-வது வாரத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன் கட்டாயம் செய்ய வேண்டும். அதை எடுக்கச் செல்லும்போதே வேறு பிரச்னைகள் இருந்தால் அந்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

இறுதி மூன்று மாதங்கள்: குழந்தையின் வளர்ச்சி, எடை போன்றவற்றைப் பரிசோதிக்கும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

வீடியோ கான்ஃபரன்சிங், தொலைபேசியின் மூலம் மருத்துவர் ஆலோசனைகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ், தனி மனித இடைவெளி, ஊரடங்கு போன்ற இறுக்கமான சூழலில் கர்ப்பிணிகளின் மனநலத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?

கர்ப்ப காலத்தில் சிலருக்குப் பொதுவாகவே மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரங்களில் எப்போதும் வீட்டிலேயே அடைந்து கிடைப்பதால் அவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மனதுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஈடுபட வேண்டும். உணர்வுகளையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொடர்பான என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

கர்ப்பிணிக்கு உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு பிரச்னைகள் இருந்தாலும் அவ்வப்போது அவற்றை வீட்டிலிருந்தே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, வீட்டிலுள்ளவர்களுடன் அதிகம் புழங்காமல் தனித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் தொற்று ஏற்படாத வகையில் விலகி இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெளியே நடைப்பயிற்சிக்குச் செல்ல முடியாத சூழலில் கர்ப்பிணிகள் வீட்டிலிருந்தே என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம்?

முகக்கவசம் அணிந்து மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டினுள்ளே சிறிது இடைவெளிவிட்டு இரண்டு நாற்காலிகளைப்போட்டு அவற்றைச் சுற்றி 8 வடிவில் நடக்கலாம். இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் இரண்டை கைகளில் வைத்து எடையைத் தூக்குவது, நாற்காலியில் உட்கார்ந்து கால்களைத் தூக்குவது போன்ற உடற் பயிற்சிகளைச் செய்யலாம்.

கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை

1. பொதுமக்கள் அனைவருக்கும் கூறப்படும் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கர்ப்பிணிகளும் கடைப்பிடிக்க வேண்டும்.

2. தனி மனித இடைவெளியைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

3. ஸ்கேன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நாளில் முடிக்க வேண்டும். மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. கொரோனா தொடர்பான மருத்துவர் ஆலோசனை, மனநல மருத்துவர் ஆலோசனைகளை தயங்காமல் பெற வேண்டும்.

செய்யக் கூடாதவை

1. நோய் குறித்து தேவையற்ற பயம், பதற்றம் கூடாது.

2. அதே நேரம் அலட்சியத்துடனும் இருக்கக் கூடாது

3. கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளத் தயங்கக் கூடாது.

4. பொதுவெளியில் செல்வது, பூ முடிப்பது, வளைகாப்பு போன்ற அதிகம் பேர் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது.