Published:Updated:

தாய்ப்பால் சுரப்புக்குத் தாய்தான் முதல் பொறுப்பு!

ஜெ.நிவேதா

தாய்ப்பால் சுரப்புக்குத் தாய்தான் முதல் பொறுப்பு!

Mother's breastmilk
Mother's breastmilk

தாய்ப்பால் அமிர்தம், சீம்பால் அதனினும் அமிர்தம். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த தாய்ப்பால், எத்தனை சதவிகித குழந்தைகளுத்குக் கிடைக்கிறது என்பது குறித்து உலகளவில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவில் 41% குழந்தைகளுக்குத்தான் சீம்பால் கிடைக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 47% குழந்தைகளுக்குத்தான் சீம்பால் கிடைக்கிறதாம்.

Mother's breastmilk
Mother's breastmilk

பிரசவத்தின்போது ஏற்படும் தாய் இறப்பு விகிதத்தைக் குறைத்ததில், இந்திய அளவில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தாய் - சேய் உயிரிழப்பைத் தடுப்பதில் அந்த அளவுக்கு அக்கறை காட்டிய தமிழகம், குழந்தைக்கு சீம்பால் கிடைப்பதை உறுதிசெய்யாமல் விட்டது ஏன்? சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நல துறைத் தலைவர் டாக்டர் கமலரத்னத்திடம் இதுகுறித்துக் கேட்டோம்.

தாய்ப்பால் சுரப்புக்கு தாய்தான் முதல் பொறுப்பு!

"இன்றைய சூழலில், சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடக்கின்றன. அறுவைசிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களுக்கு, மயக்கமருந்து செலுத்தப்பட்டிருக்கும் என்பதால், அடுத்த சில மணி நேரங்களுக்கு அவர்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாது என்ற தவறான நம்பிக்கைதான் பல குழந்தைகளுக்கு சீம்பால் கிடைக்காமல் போவதற்கான முக்கியக் காரணமாகிறது. உண்மையில், மயக்கமருந்துக்கும் பால் சுரப்புக்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. எனவே, அறுவைசிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களால் நிச்சயம் சீம்பால் கொடுக்க முடியும், கொடுக்க வேண்டும்.

Mother and Child
Mother and Child

அடுத்ததாக, பிரசவத்துக்குப் பின்னான முதல் ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்கும் எண்ணம் அந்தத் தாய்க்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். அந்த எண்ணம் குறைவாக இருக்கும்பட்சத்தில், பால் சுரப்பும் குறைவாகத்தான் இருக்கும். அதேபோல, பால் கொடுக்கும்போது தாய் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணரும்போது, அவருக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். ஆம்... தாய்ப்பால் சுரப்பு என்பது மனத்துடன் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட. அம்மா தாய்மையில் பூரிக்கும்போது, பால் சுரப்புக்கான ஹார்மோன் அவருக்குத் தூண்டப்பட்டு, குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கும்.

இயல்பாகவே, பிறந்து முதல் ஒரு மணி நேரத்துக்கு, குழந்தையிடம் தாய்ப்பாலுக்கான தேடல் அளவுக்கதிகமாக இருக்கும். தாயின் முலைக்காம்பில் குழந்தையின் வாயை வைத்துவிட்டாலே, அழகாக பால்குடிக்க ஆரம்பித்துவிடும். குழந்தை எந்த அளவுக்கு முலைக்காம்பை நன்கு பற்றிக்கொண்டு உறிஞ்சுகிறதோ, அந்த அளவுக்கு தாய்க்கு பால் சுரப்பு அதிகரிக்கும். மருத்துவ மொழியில் இதை, 'பிரெஸ்ட் க்ரால் (Breast Crawl)' என்போம். இதைப் பின்பற்றுவது மிக எளிது.

எல்லாவற்றையும்விட, முன்பே சொன்னதுபோல பாலூட்டும் எண்ணம் தாய்க்கு மேலோங்கும்போதுதான், அது நிறைவாக நடந்தேறும். எனவே, பல குழந்தைகளுக்கு சீம்பால் கிடைக்காமல் போகும் நிலையை மாற்றத் தேவை, தாயின் ஒத்துழைப்பே.

baby
baby

தாய்ப்பால் வங்கி... வரம்!

தாய்க்கு ஏதேனும் உடல் உபாதை இருந்து, அதனால் பால் சுரப்பு இல்லாமல் போவது, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்க நேரிடுவது போன்ற காரணங்களால், சில தாய்மார்களால் தங்கள் குழந்தைக்கு சீம்பால் தரமுடியாமல் போகலாம். சீம்பால் மட்டுமன்றி, தொடரும் நாள்களில் தாய்ப்பால் கொடுப்பதிலும் சிலருக்கு சிக்கல் நீடிக்கலாம். இதுபோன்ற சூழலில், இவர்களுக்கு தாய்ப்பால் வங்கிகள் வரமாக அமையும்.

யாரிடமிருந்து யாருக்கு..?!

சில உடல்நிலை காரணங்களால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் மற்றும் தன் குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள், தாய்ப்பால் வங்கியிலிருந்து தாய்ப்பால் பெற்று, தங்கள் குழந்தைகளுக்குப் புகட்டலாம். இந்த வங்கியில், தன் குழந்தைக்குத் தேவையான அளவுக்கும் அதிகமாக பால் சுரக்கும் தாய்மார்கள் சேகரித்துத் தரும் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டு, தேவையுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும்.

பிள்ளை பெற்ற பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு இயல்பாக இருக்கிறதா?! வீட்டிலேயே  தெரிந்து கொள்ளலாம்!

தாய்ப்பால் வங்கி வதந்திகள்!

தாய்ப்பால் தானம் குறித்தும், தாய்ப்பால் வங்கியிலிருந்து பெறப்படும் தாய்ப்பால் குறித்தும் சில வதந்திகள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்தவேண்டியது அவசியம்.

* தாய்ப்பால் தானமளித்துவிட்டால், தன் குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். இதில் உண்மையில்லை. தங்கள் குழந்தைக்குத் தேவையான அளவுக்கும் அதிகமாக சுரக்கும் பாலைத்தான் அவர்கள் தானம் செய்கிறார்கள். ஒருவேளை அப்படி தானம் செய்யாவிட்டால், அவர்களுக்கு பால் கட்டும் பிரச்னை ஏற்படலாம். அப்போது, அந்தப் பாலை வெளியேற்றும்போது, அது வீணாகத்தான்போகும். அதை, தேவையுள்ள ஒரு பச்சிளம் குழந்தைக்குக் கொடுப்பது எவ்வளவு சிறந்த உதவியாக இருக்கும் இல்லையா?!

* 'தாய்ப்பால் வங்கியிலிருந்து தானமாகப் பெறும் பாலில் போதிய அளவு ஊட்டச்சத்து இருக்காது', 'அந்தப் பாலில் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் முறைகளில் தொற்றுக்கிருமிகள் ஏற்பட்டிருக்கலாம்' போன்ற எண்ணங்களால், சில தாய்மார்கள் தாய்ப்பால் வங்கிகளைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். மாறாக, தங்கள் குழந்தைகளுக்கு 'இன்ஃபான்ட் ஃபார்முலா' வகைகளை வாங்கிப் புகட்டுகிறார்கள். ஆனால் உண்மையில், தானமாகப் பெறப்படும் தாய்ப்பாலில் எந்த ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படாது; அதில் தொற்றுக்கும் வாய்ப்பிருக்காது. வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட ஃபார்முலாக்களைவிட, தானமாக பெறப்பட்ட தாய்ப்பால், நிச்சயம் குழந்தையின் வயிற்றுக்கு நல் உணவாகவே அமையும். மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறெந்த உணவையும் கொடுக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

child
child

இப்படித்தான் தாய்ப்பால் சேமிக்கப்படுகிறது!

* தாய்ப்பால் தானம் தர முன்வரும் தாய்மார்களுக்கு, தானமளிக்கும் முன்னர் ஹெச்.பி.வி மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனைகள் செய்யப்படும். பின்னர், அவர்களின் மார்பகங்கள் மற்றும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும்.

* எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லாத தாய்மார்களிடமிருந்து, பிரெஸ்ட் பம்ப் உதவியுடன் தாய்ப்பால் தானம் பெறப்படும்.

* தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பால், பதப்படுத்தப்படும்.

* ஒரு தாய், ஒரு முயற்சியில் சராசரியாக 50 மி.லி வரை பாலை தானமாக அளிக்க முடியும். ஆனால், பதப்படுத்துதலுக்கு குறைந்தபட்சம் 200 மி.லி தாய்ப்பாலாவது தேவை என்பதால், அந்த அளவு பால் அவரிடமிருந்து கிடைக்கும்வரை காத்திருந்து, பின்னர் அது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும். தொடர்ந்து அந்தப் பால் சாம்ப்பிள், தரப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். பிரச்னை எதுவும் இல்லையென உறுதிசெய்யப்பட்ட பின், பால் 62 டிகிரியில் சூடுபடுத்தப்படும். அப்போது, ஒருவேளை அதில் பாக்டீரியாக்கள் இருந்தால் அழிந்துவிடும். அடுத்ததாக, மீண்டும் பால் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பின்னர், மைனஸ் 20 டிகிரியில் பால் முழுவதுமாக உறைய வைக்கப்படும்.

mother
mother

* தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலைப் பயன்படுத்த எடுக்கும்போது, வாட்டர் பாத் என்ற முறை மூலமாக அந்தப் பால் அறை வெப்பநிலைக்குக் கொண்டுவரப்பட்டு, தேவைக்கேற்ப தாய்மார்களிடத்தில் பாட்டிலில் அடைத்து வழங்கப்படும். அறை வெப்பநிலைக்குக் கொண்டுவரப்பட்ட தாய்ப்பாலை, அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்கள் உபயோகப்படுத்திவிட அறிவுறுத்தப்படும்.

* மேலே குறிப்பிட்ட வெப்பநிலை செய்முறைகள், தாய்ப்பாலில் கிருமிகள் மற்றும் தொற்றுகள் இருந்தால் அவற்றை முற்றிலும் அழிப்பதோடு, அவை மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் செய்யும். எனவே, தானமாகக் கிடைக்கப்பெறும் தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்குறைபாடோ, கிருமித் தாக்கமோ இருக்காது... தாய்மார்கள் பயப்பட வேண்டாம்.

குழந்தைக்கு வசதியாக தாய்ப்பால் கொடுக்க உதவும் 5 நிலைகள்!  #WorldBreastFeedingWeek

எத்தனை மாதங்கள் வரை தாய்ப்பால் தானம் அளிக்கலாம்?

தாய்க்கு எவ்வளவு காலம் பால் சுரக்கிறதோ, அதுவரையில் தானமளிக்கலாம். சில தாய்மார்கள், குழந்தைக்கு அதிகபட்சம் இரண்டு வயதாகும் வரையில்கூட பால் புகட்டுவதுண்டு. அப்படியானவர்கள், அதுவரை தானமளிக்கலாம்.

தேவை விழிப்புணர்வு!

தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மருத்துவர்களும் தன்னார்வலர்களும் பிரசவித்த தாய்மார்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் தாய்ப்பால் தானம் கொடுப்பது மற்றும் பெறுவது குறித்துப் பேச வேண்டும். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு 'லேக்டேஷன் கவுன்சலர்' நிச்சயமாக இடம்பெற வேண்டும். உலகின் மிகச்சிறந்த லேக்டேஷன் கவுன்சலர்கள், ஏற்கெனவே தாய்ப்பால் தானம் அளித்த மற்றும் பெற்ற தாய்மார்கள்தான். எனவே, அவர்களும் இதில் கைகோக்க வேண்டும்.

child
child

சில தன்னார்வ அமைப்புகள், தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன், பிரசவித்த தாய்மார்கள் மத்தியில் தாய்ப்பால் தானம்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். தாய்ப்பால் தானம் தர முன்வரும் தாய்மார்கள், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர், அவர்களின் வீட்டில் பாலை எப்படி சேமிக்க வேண்டும் என்பதுகுறித்த வகுப்புகளை அவர்கள் எடுக்கின்றனர். 200 மி.லி சேர்ந்த பின், அவர்கள் வீட்டுக்கே சென்று அந்தப் பாலை பெற்றுக்கொள்கின்றனர். அரசு சார்பில் இப்படியான முன்னெடுப்புகள் இதுவரை இல்லை. அரசு மருத்துவமனைகளிலும் இதை சாத்தியப்படுத்தினால், தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளுக்கும் அந்த அமிர்தம் கிடைக்கப்பெறும்.''