Published:Updated:

``என் பொண்ணுக்காக நான் வாழணும்!'' - புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதை!

ஒரு தாயின் கண்ணீர்க்கதை

``என் வீட்டுக்காரர் இறந்த பிறகு என் பொண்ணுக்காகத்தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். இப்போ என் பொண்ணுக்குத் துணையா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு.''

Published:Updated:

``என் பொண்ணுக்காக நான் வாழணும்!'' - புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதை!

``என் வீட்டுக்காரர் இறந்த பிறகு என் பொண்ணுக்காகத்தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். இப்போ என் பொண்ணுக்குத் துணையா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு.''

ஒரு தாயின் கண்ணீர்க்கதை

நுரையீரல் புற்றுநோய்க்கு கணவரைப் பறிகொடுத்த மோகன லட்சுமி, தனி மனுஷியாகப் படாதபாடுகள் பட்டு, தன் ஒற்றை மகளை வளர்த்தெடுத்தார். மகளும் தாயின் நிலைமை புரிந்து நன்கு படித்து, இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். தாயும் மகளும், `துயரங்களை எல்லாம் ஒருவருக்கு ஒருவர் துணையா இருந்து தாண்டிட்டோம், இனி எல்லாம் நல்லதா நடக்கும்' என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், இடிபோன்ற இன்னொரு பிரச்னை மோகன லட்சுமிக்கு வந்திருக்கிறது. தொடர்ந்த குமட்டலாலும், சாப்பிடவே முடியாமலும் தவித்துக்கொண்டிருந்த மோகன லட்சுமியின் சினைப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

நோய்க்கு முன் மோகன லட்சுமி
நோய்க்கு முன் மோகன லட்சுமி

``எனக்கு இப்போ 60 வயசாகுதுங்க. நீரிழிவு பிரச்னை இருக்கு. நாலஞ்சு மாசத்துக்கு முன்னால ஒரே குமட்டல். ஆனா, வாந்தி வரலை. சாப்பிடவே முடியலை. ஆரம்பத்துல அசிடிட்டின்னு நினைச்சுக்கிட்டு இஞ்சி, பூண்டுன்னு சாப்பிட்டுப் பார்த்தேன். ஒண்ணும் சரியாகலை. உடனே டாக்டரைப் போய் பார்த்தேன். அவருதான், `உங்க வயிறு வீங்கியிருக்கு; கல்லு மாதிரியும் இருக்கு. நீங்க உடல் பருமனா இருக்கிறதால தெரியலை'ன்னு சொல்லிட்டு உடனே ஸ்கேன் செய்யச் சொன்னாரு. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்ததும், உடனே எம்.ஆர்.ஐ. செய்யச் சொன்னாரு. அதைப் பார்த்துட்டு, `உங்களுக்கு சினைப்பையில புற்றுநோய் இருக்கு. மூணாவது ஸ்டேஜ்’னு சொன்னப்போ நிலைகுலைஞ்சு போயிட்டோம். ``உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதால உடனே ஆபரேஷன் செய்ய முடியாது. கீமோதெரபி கொடுத்து, கட்டியை சுருங்க வெச்சிட்டு, அதுக்கப்புறமா ஆபரேஷன் செய்யலாம்னு சொன்னார்’’ எனும் மோகன லட்சுமி, தன் வாழ்வின் இரண்டாம் போர்க்காலத்துக்குத் தன்னைத் தயாராக்கிக்கொண்டார்.

ஒற்றைப் பெற்றோராக மோகன லட்சுமியும், அவரின் பொறுப்புகள் புரிந்த மகளும் இடைப்பட்ட வருடங்களைக் கடந்து வந்தது, துன்பங்களும் தன்னம்பிக்கையும் கைகோத்த பயணம். அப்பா இறந்தபோது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, ஆண்களுக்கான வேலை எனப் பிரித்துக்கொடுக்க இனி தங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, கறிக்கடை முதல், வங்கி வேலைகள் வரை கற்றுக் கொண்டார். `ஆண் துணை இல்லைனு என் அம்மா எந்தச் செயலுக்கும் சோர்ந்துடாம எல்லாத்தையும் நானே பண்ணுவேன்’ என்று அந்தப் பதின்ம வயதுப்பெண், பேரிழப்பை எதிர்கொள்ளும் பலத்தையும் பக்குவத்தையும் பற்றிக்கொண்டார். `அப்பா இல்லைனு என் மகள் எந்தச் சூழ்நிலையிலும் நினைச்சுடக் கூடாது’ என மோகன லட்சுமி தந்தையாகவும் வாழத் தொடங்கினார். இப்படி, தங்கள் தேவைகளையெல்லாம் சமாளித்து, மகள் படிப்பை முடித்து, வேலையில் அமர்ந்து, இனி வாழ ஆரம்பித்துவிடலாம் என்ற ஆசை கொண்டிருந்தவர்களுக்கு, அடுத்த புயல். வலி இறக்கி சற்று நிமிர ஆரம்பித்த அவர்கள் முதுகுத்தண்டில் மீண்டும் அடி. தொடர்ந்தார் மோகன லட்சுமி.

கீமோவின் போது...
கீமோவின் போது...

``நாலு மாசமா கீமோ தெரபிதான் போயிக்கிட்டிருக்கு.  சினைப்பையையும் கருப்பையையும் ஆபரேஷன் செஞ்சு நீக்கிடணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு தடவை கீமோ கொடுக்கணுமாம். இதுவரைக்கும் கீமோவுக்கே இரண்டரை லட்சம் செலவாகிடுச்சு. ஆபரேஷனுக்கு நாலு முதல் அஞ்சு லட்சம் செலவாகலாம்னு சொல்லியிருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஷுரன்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். ஆனா, சமாளிக்க முடியலைங்க. ஒரு கீமோவுக்கு முப்பதாயிரம் செலவாச்சுன்னா, பன்னிரண்டு ஆயிரம்தான் க்ளெய்ம் பண்ண முடியுது. ஆபரேஷனுக்கும் அறுவதுல இருந்து எழுவது ஆயிரம்தான் க்ளெய்ம் ஆகும்னு சொல்றாங்க.

பாவம், என் பொண்ணுதான் அவ ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் பணம் கேட்டுட்டு இருக்கா. ஆனா, என் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைக்கலை. தவிச்சிக்கிட்டிருக்கா என் குழந்தை. அவ இப்போதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்திருக்கா. என் வீட்டுக்காரர் இறந்தப்போ, அவர் தன் உடல்நலத்துல கவனம் செலுத்தியிருந்தா நாங்க இப்படி நிராதரவா நின்னுருக்க மாட்டோம்னு அப்பப்போ எனக்கும் என் பொண்ணுக்கும் ஒரு கேள்வியும் கவலையும் வந்துபோயிட்டே இருக்கும். இப்போ எனக்கும் புற்றுநோய்னு தெரிஞ்சப்போ, விதி எந்தக் கேள்விகளுக்கும், யாரோட கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதுன்னு புரிஞ்சுகிட்டோம்.

தற்போது
தற்போது

என் வீட்டுக்காரர் இறந்த பிறகு என் பொண்ணுக்காகத்தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். இப்போ என் பொண்ணுக்குத் துணையா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு. இந்தப் புற்றுநோய்ல இருந்து நான் மீண்டு வரணும். என் பொண்ணு நல்லபடியா வாழறதை கண்குளிரப் பார்க்கணும். உதவிகளுக்காகக் காத்திருக்கோம். ஆபரேஷன், அதுக்குப் பிறகான சிகிச்சைகள், வலிகள்னு... இந்த நோயை வாழ்ந்து வெல்லுற தைரியம் எனக்கு இருக்கு. சிகிச்சைக்குத் தேவைப்படும் பண உதவிகள் கிடைக்கிறதுக்கான இந்தக் காத்திருப்பு சீக்கிரம் முடியுமா தெரியல’’ - ஓர் அம்மாவின் நீண்ட போராட்டம் இன்னும் தொடரவிருக்கிறது.  

இயன்றவர்களின் உதவிகள் இரு உயிர்களின் துயர் ஆற்றும்!

வாசகர்களின் கவனத்துக்கு...

வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு... கல்வி கற்க பொருளாதார பலம் இல்லாமல் போராடும் மாணவர்களுக்கு... உயிர் காக்க பணஉதவி கோருபவர்களுக்கு என, பலருக்கும் Vasan Charitable Trust தொடர்ந்து உதவி வருகிறது.

உதவும் உள்ளம் கொண்டவர்கள், Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

உதவி
உதவி

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `For Mohana Lakshmi’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை `ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். அல்லது `help@vikatan.com' என்கின்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் செய்த பரிவர்த்தனைக்கான ஆவணங்களை அனுப்பி வைத்த பின் உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம்.