Published:Updated:

''74 வயதில் இரட்டைக் குழந்தைகள் என்பது மருத்துவ முன்னேற்றம் என்றாலும்..." - டாக்டர் கமலா செல்வராஜ்

எம்.மரிய பெல்சின்

பேரன், பேத்திகளைக் காணும் வயதில், மங்காயம்மா குழந்தை பெற்றெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. மருத்துவர்கள், பெண்களை 45 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்திவருகிறோம்.

Twins
Twins ( pixabay.com )

ஆந்திராவைச் சேர்ந்த 74 வயது பெண்ணுக்கு ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைமூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கு முன்னர், 72 வயது பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததே உலக அளவில் இதுவரை சாதனையாகக் கருதப்பட்ட நிலையில், இந்தப் பெண்மணியின் பெயர், இப்போது இதுகுறித்த உலக சாதனையாகப் பட்டியலில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

Old Age Couples
Old Age Couples
ANI

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், நெலபர்த்திபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமராஜு என்ற 79 வயது விவசாயிக்கும் 74 வயதாகும் அவர் மனைவி மங்காயம்மாவுக்கும்தான், மருத்துவ சாதனையான இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். இந்தத் தம்பதிக்கு 1962-ம் ஆண்டு திருமணமானது.

57 ஆண்டுகளாக குழந்தைப் பேற்றுக்குக் காத்திருந்தனர். கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான இவர்களுக்கு, தங்கள் ஊரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைமூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தது புதிய நம்பிக்கையைத் தந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் உதவியை நாடினர்.

Twins
Twins
pixabay.com

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்காயம்மா மற்றும் அவரின் கணவர் ராமராஜுவை, டாக்டர் உதய பாஸ்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். மங்காயம்மாவுக்கு 74 வயதாகிவிட்டதால், மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதிநிலையை அடைந்திருந்தார். ஆனாலும் கருத்தரிப்பதற்கான உடல் தகுதி அவருக்கு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

எனவே, நின்றுபோன மாதவிடாயை ஊசிமூலம் மீண்டும் தொடரவைத்தனர். இதையடுத்து, அடுத்த மாதமே அவருக்கு செயற்கை முறையில் கருமுட்டை செலுத்தப்பட்டது. முதல் சிகிச்சையிலேயே மங்காயம்மாவின் கர்ப்பப்பை, கருமுட்டையை ஏற்றுக்கொண்டது. முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்ததையடுத்து, மங்காயம்மாவை தனி அறையில் அனுமதித்த மருத்துவர்கள், அவரை தீவிரமாகக் கண்காணித்தனர்.

Doctors
Doctors
Pixabay

மங்காயம்மாவின் கர்ப்பத்தில் கரு முழு வளர்ச்சி அடைந்ததையடுத்து, கடந்த 5-ந்தேதி அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. முதிய வயதில் குழந்தை பெற்றாலும் தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.

74 வயது மங்காயம்மாவுக்கு குழந்தைகள் பிறந்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டாலும், இது நல்ல முன்னுதாரணமல்ல என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. `ஐ.வி.எஃப்' எனப்படும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் பல்வேறு சாதனைகளைச் செய்துவரும் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் இது பற்றி கருத்துக் கேட்டோம்.

Doctor Kamala Selvaraj
Doctor Kamala Selvaraj

'இந்த வயதில் மங்காயம்மா குழந்தை பெற்றெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. பொதுவாக மருத்துவர்கள், பெண்களை 45 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்திவருகிறோம்.

இந்நிலையில், 74 வயதில் ஒருவர் குழந்தை பெறுகிறார் என்றால் அவரது உடல்நிலை, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும், அவர்களை வளர்த்தெடுப்பதற்கும் தயாராக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகச் சாதாரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பாதிப்புகள் உள்ள சூழலில் அவைகுறித்தெல்லாம் யோசிக்க வேண்டும்.

Twins
Twins
Pixabay

குழந்தை பெற்றெடுத்தால், அவர்களை வளர்த்து ஆளாக்கும் அளவுக்கு அவர்களிடம் ஆரோக்கியமும் பொருளாதாரமும் இருக்கின்றனவா என்பதையும் சிந்திக்க வேண்டும். இவற்றையெல்லாம் பரிசீலிப்பது, பிறக்கும் குழந்தைகளின் நலனுக்கு அவசியமானது. வயதில் மூத்தவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பது மருத்துவ முன்னேற்றம் என்றாலும் இது ஆரோக்கியமானதல்ல.'' என்றார் டாக்டர்.