நெபுலைசர்களும் இன்ஹேலர்களும் கெட்டவை! அதைப் போய் டிரெண்ட் ஆக்குறீங்களே காஜல் என அவரின் #SayYesToInhalers ஹேஷ்டேக், ரசிகர்களிடமிருந்து விமர்சனங்களை வாங்கிவந்தது.
தனக்குப் பல வருடங்களாக ஆஸ்துமா பிரச்னை இருப்பதாகவும் அதற்கு அவர் இன்ஹேலர் பயன்படுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இன்ஹேலர் பயன்படுத்துவதில் தயக்கம் வேண்டாம் என்பதையும் வலியுறுத்தியிருந்தார். #SayYesToInhalers என காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கிய ஹேஷ்டேகின் அவசியமும் புரிந்துணர்வும் நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசிய பின் தெளிவானது.

சளித்தொல்லை, நுரையீரல் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களை நெபுலைசர் மற்றும் இன்ஹேலரைப் பயன்படுத்தச் சொல்லுவார்கள் மருத்துவர்கள். ஆனால், இன்ஹேலரை கைப்பையில் வைத்துக்கொண்டே பொதுவெளியில் எடுத்துப் பயன்படுத்தப் பலர் கூச்சப்படுகிறார்கள். இன்ஹேலர் பயன்படுத்துவதில் மக்களுக்கு இருக்கும் மனத்தடையும்கூட இதற்கொரு காரணம் என்கிறார் மருத்துவர் திருப்பதி.
நெபுலைசர்களும் இன்ஹேலர்களும் நன்மையைத்தான் செய்கின்றன எனத் தொடங்கிய நுரையீரல் மருத்துவர் திருப்பதி சந்தேகங்கள் பலவற்றைத் தெளிவுபடுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நுரையீரல் தொடர்பான மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும்போது மருந்தை காற்று மூலமாக நுரையீரலுக்கு செலுத்தும் கருவிகள்தான் நெபுலைசர்கள் மற்றும் இன்ஹேலர்கள். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், எப்போதும் இன்ஹேலரை கையில் வைத்துக்கொண்டு உபயோகப்படுத்துவது ஒருவகை அடிக்ஷன் என நினைப்பது தவறு.
அடிக்கடி இவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பழக்கம் அடிக்ஷனாக மாறிவிடும் என்னும் பொதுவான கருத்து இருக்கிறது. ஆன்லைனிலேயே மருத்துவரை கன்சல்ட் செய்து மருத்துவ உதவிகள் எடுத்துக்கொள்ளும் இந்தக் காலத்தில் எந்தக் கருத்தாக இருந்தாலும் அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது அவசியம் இல்லையா?

முதலில், ஒன்றை எதற்குப் பயன்படுத்துகிறோம், அதன் அவசியமும் அத்தியாவசியமும் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பிரச்னையே இல்லை, நெபுலைசர்களையோ இன்ஹேலர்களையோ பயன்படுத்தினால் தான் பிரச்னை எனும் தவறான புரிந்துணர்வு பரவலாக இருக்கிறது. "சொல்லப்போனால், அதிகபட்ச பாதுகாப்பான, பலனளிக்கக்கூடியவை இன்ஹேலர்களும் நெபுலைசர்களும் தான். மருந்துகளை மில்லி கிராம் அளவில் எடுத்துக் கொள்கிறோம். டோஸேஜ்கள் அதிகரிக்கும்போது, கூடவே பக்க விளைவுகளும் அதிகரிக்கின்றன.
ஆனால், நெபுலைசர்களோ இன்ஹேலர்களோ உபயோகிக்கும்போது மைக்ரோகிராம் அளவில் தான் மருந்து காற்றுவழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. காற்றின் மூலம் மைக்ரோகிராம் அளவில் நுரையீரலுக்கு மருந்து செலுத்தப்படுவதால் இதற்குப் பக்கவிளைவுகள் மிகக்குறைவு. இதனால் தான் இவை பாதுகாப்பானவை'' என்கிறார் நுரையீரல் மருத்துவர் திருப்பதி.

கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுபவர்களும்கூட கையில் இன்ஹேலர்களை வைத்திருந்தால் வெறும் ஐந்து நொடிகளுக்குள் அதிலிருந்து விடுபடலாம். அப்படி இருக்கும்போது மக்கள் இவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதேன்?
தும்மல் வந்தால் தும்முவதும் இருமல் வந்தால் இருமுவதும் உலக வழக்கம்தானே. சத்தமாகத் தும்மினால் மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என அவற்றை அடக்கிக்கொள்ளவா முடியும்?
தும்மலோ இருமலோ கொட்டாவியோ எதுவாக இருந்தாலும் சரி... நம் மூலம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும், அது தான் மிக முக்கியமே தவிர மனத்தடை தேவையில்லை!