Published:Updated:

கரூர்: 25 சென்ட் நிலம், 11 வகையான காய்கறிகள்... ஊர் மக்களுக்காக சமுதாய காய்கறித் தோட்டம்!

 சமுதாயக் காய்கறித் தோட்டம்
சமுதாயக் காய்கறித் தோட்டம்

இந்தக் கிராமத்தில்தான் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

தங்கள் கிராமத்தில் வசிக்கும், வாழ்வாதாரத்துக்கே சிரமப்படும் 25 குடும்பங்களுக்கு, சத்தான இயற்கைக் காய்கறிகளை இலவசமாக வழங்க ஏதுவாக, 25 சென்ட் இடத்தில் 12 பெண்கள் சேர்ந்து இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்திருப்பது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

சமுதாயக் காய்கறித் தோட்டம்
சமுதாயக் காய்கறித் தோட்டம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது கருப்பத்தூர். இந்த ஊராட்சியில் உள்ள சிறிய ஊர், வேங்காம்பட்டி. இந்தக் கிராமத்தில்தான் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்கள் பெண்கள். கருப்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ரெங்கம்மாள்தான், 11 பெண்களை ஒன்றிணைத்து இந்த அற்புதப் பணியைச் செய்துவருகிறார். அருகிலுள்ள வீடுகளில் உள்ள கழிவுநீரைக் கொண்டு, இயற்கை முறையில் இந்தக் காய்கறித் தோட்டத்தை பராமரித்து வருகிறார்கள்.

`பல வருஷ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டார்!' -  பெண் ஊராட்சி மன்றத் தலைவரை பாராட்டும் மக்கள்

மிளகாய், தக்காளி, கொத்தவரை, வெண்டை, சுரைக்காய், செடி அவரை, பீர்க்கன், பாகல், புளிச்சகீரை, தண்டுக்கீரை உள்ளிட்ட காய்கறி, கீரை வகைகளை இங்கே பயிர் செய்திருக்கிறார்கள். 12 பெண்களும், காய்கறித் தோட்டத்தைத் தினமும் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறார்கள். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை நடக்கும் காய்கறி, கீரை அறுவடைக்குப் பின், அதை 25 பங்குகளாகப் பிரித்து, அந்தக் குடும்பங்களுக்கு வழங்கிவருகிறார்கள்.

அதோடு, வேப்பங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 'பசுமைக்குடி' என்ற இயற்கை தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழங்கிய துணிப் பைகளையும் மக்களுக்கு வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

துணி பை பிரசாரம்
துணி பை பிரசாரம்

இந்த நல்ல முயற்சி பற்றி, கருப்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கம்மாளிடம் பேசினோம்.

"நான் ஊராட்சிமன்றத் தலைவராகுறதுக்கு முன்புவரை, ஒரு என்.ஜி.ஓ-ல பணிபுரிந்து வந்தேன். அப்போதான் புழுதேரியில் உள்ள, மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையம் பத்தி எனக்குத் தெரிய வந்தது.

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு ஆசை இருந்ததால, கடந்த உள்ளாட்சித் தேர்தல்ல கருப்பத்தூர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றேன். என்னை நம்பி ஜெயிக்கவெச்ச மக்களுக்குப் பல நல்ல விஷயங்களைச் செய்யணும் முடிவெடுத்தேன். நஞ்சான உணவை, நஞ்சான காய்கறிகளை உண்பதால, மக்களுக்குப் பலவித நோய்கள் ஏற்படுது. அதைத் தடுக்க மக்களை இயற்கை விவசாயத்துக்குத் திருப்ப முடியுமானு யோசிச்சேன்.

இந்த நிலையிலதான், வேளாண் அறிவியல் மையம், ஏதாவது ஒரு ஊருல, மக்களுக்குப் பொதுவாகப் பயன்படும் வகையில சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைக்க முயல்வதா சொன்னாங்க. உடனே நான், 'அதை எங்க ஊருல அமைக்கிறோம்'னு சொன்னேன். வேப்பங்குடியில ஏற்கெனவே 'பசுமைக்குடி' அமைப்பு, தமிழகத்திலேயே முதன்முறையா இப்படி ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைச்சாங்க.

அதைப் பார்த்துட்டுதான், வேளாண் அறிவியல் மையம் சார்புல, ஊராட்சிகள்ல சமுதாயக் காய்கறித் தோட்டம் அமைக்க வெள்ளோட்டம் பார்ப்பதா சொன்னாங்க. எங்க கிராமத்துல அமைக்க சம்மதம் சொன்னதால அவங்க எல்லா விதைகளையும் கொடுத்தாங்க.

 சமுதாயக் காய்கறித் தோட்டம்
சமுதாயக் காய்கறித் தோட்டம்

அதோடு, விதை நேர்த்தி செய்வது, விதைப்பது, தோட்டத்தைப் பராமரிப்பது, உரம் இடுவதுனு பல விஷயங்களையும் எங்க 12 பேருக்கும் சொல்லிக்கொடுத்தாங்க. கடந்த ஆகஸ்ட் மாதம் காய்கறித் தோட்டத்தை அமைச்சோம். குறைந்த இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டுள்ளதால, ஊராட்சியில உள்ள மொத்த மக்களுக்கும் கொடுக்க முடியாதுனு நெனச்சோம்.

அதனால, ஊர்ல ஏழ்மை நிலையில உள்ள குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு வர்றோம். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்துறோம். அடுத்த முயற்சியா, ஊர்ல விவசாயம் செய்யாம விவசாயிகள் வெச்சிருக்கும் நிலங்கள்ல பெரிய அளவுல காய்கறித் தோட்டத்தை அமைக்கப்போறோம். இதன் மூலம், ஊர்ப் பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற இருக்கோம்" என்றார் மகிழ்ச்சியாக.

வாழ்த்துகள் சகோதரி!

அடுத்த கட்டுரைக்கு