Published:Updated:

தடைப்பட்ட குழந்தையின்மை சிகிச்சை... இடைவெளி விட்டுத் தொடரலாமா? - மருத்துவ ஆலோசனை

inferitility
inferitility ( pixabay )

குழந்தையின்மை பிரச்னைக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற பெண்கள் ஊரடங்கு காரணமாகச் சிகிச்சைக்கு இடைவெளி விடலாமா? அப்படிவிட்டால் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறையுமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக, மாதாந்தர செக்கப்புக்கு மருத்துவரைப் பார்க்கப் போகலாமா, ஸ்கேனிங் செய்ய வெளியே செல்லலாமா என்று கர்ப்பிணிகள் தவித்துக்கொண்டிருக்க, குழந்தையின்மை பிரச்னைக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்களின் நிலைமை..? கருவுறாமை பிரச்னைக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற பெண்கள் ஊரடங்கு காரணமாகச் சிகிச்சைக்கு இடைவெளி விடலாமா... அப்படிவிட்டால் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறையுமா... மகப்பேறு மருத்துவரும் எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனையின் மகப்பேறியல் துறையின் இயக்குநருமான விஜயாவிடம் கேட்டோம்.

டாக்டர் விஜயா
டாக்டர் விஜயா

சமீபத்தில் சிகிச்சை ஆரம்பித்தவரா நீங்கள்?

குழந்தையின்மை பிரச்னைக்கான சிகிச்சை எடுக்க ஆரம்பித்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன என்றால், 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் கழித்துக்கூடச் சிகிச்சையைத் தொடரலாம். இதனால் உங்கள் சிகிச்சையில் எந்தப் பின்னடைவும் ஏற்படாது.

கருமுட்டை வளர்வதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு...

குழந்தையின்மை பிரச்னைக்கான முதல் சிகிச்சை இதுதான். இவர்களுக்குக் கருமுட்டை வளர்வதற்கான சிகிச்சை தருவோம். கருமுட்டை வெளிப்பட்டு அது குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் இயல்பாக உறவுகொள்ளச் சொல்வோம். இந்தச் சிகிச்சைமுறை ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கொடுக்கப்படும். அதன்பிறகு எந்தச் சிகிச்சையும் செய்யாமல், தம்பதியரை இயல்பான உறவில் இருக்கச் சொல்வோம். குழந்தையின்மை சிகிச்சையில் நீங்கள் இந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால், ஊரடங்கால் ஏற்பட்ட இடைவெளி உங்கள் குழந்தைக் கனவுக்கு எந்தக் கெடுதலும் செய்யாது. கவலை வேண்டாம்.

sperm
sperm
pixabay

விந்தணுக் குறைபாட்டுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?

கணவரின் விந்தணுக்களில் அசைவுகள் குறைவாக இருந்தால், தரமான விந்தணுவைத் தேர்ந்தெடுத்து கருமுட்டையின் உட்செலுத்துவோம். இதையும் மூன்று முறை முயற்சி செய்துவிட்டு சில மாதங்கள் இடைவெளி விடுவோம். அதனால், இந்தச் சிகிச்சையில் இருந்தாலும், ஊரடங்கு இடைவெளிக்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.

நீங்கள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களா?

இந்தச் சிகிச்சை முறை அரசு மருத்துவமனைகளில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. தனியார்களிலோ 80 ஆயிரத்தில் ஆரம்பித்து லட்சங்களில்கூட செலவாவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு முயற்சி தோல்வியுற்றால், அடுத்த முயற்சிக்குச் சம்பந்தப்பட்ட தம்பதியரால் உடனே செலவழிக்க முடியாது. என்பதால், அவர்களே இடைவெளி எடுத்துக்கொள்வார்கள். இதைவிட முக்கியமாக, இந்தச் சிகிச்சையில் ஹார்மோன்களைத் தூண்டி சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால், மருத்துவர்களும் இடைவெளி விட்டுதான் சிகிச்சையளிப்பார்கள். ஸோ, நீங்கள் இந்த முயற்சியில் இருக்கிறீர்கள் என்றாலும், இந்த நேரத்தில் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்.

test tube baby
test tube baby
pixabay
கொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்? #DoubtofCommonMan

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

தற்போது அரசு மருத்துவமனைகளில் நாங்களும் எந்தவிதமான குழந்தையின்மை சிகிச்சையும் செய்வதில்லை. கருவுற்ற பெண்களுக்கு மாதாந்தரப் பரிசோதனை மற்றும் பிரசவம் மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஊரடங்கு காரணமாக, வருத்தப்படுபவர்கள் 35 ப்ளஸ் வயதுகளில் இருக்கிற தம்பதியர்தான். ஏனென்றால், இவர்களுக்கு வயதுரீதியாக இன்னும் சில வருடங்களுக்குத்தான் பாசிட்டிவான வாய்ப்பு இருக்கிறது. நாற்பதுகளில் இருப்பவர்களோ, கடைசி வாய்ப்பாக சோதனைக்குழாய் குழந்தைக்கு முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த ஊரடங்கு மிகப்பெரிய இழப்புதான்.

குழந்தையின்மை பிரச்னை இருப்பவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு இந்த ஊரடங்கு நேரத்தில் என்னென்ன செய்யலாம்?

* உங்கள் பிரச்னை காரணமாக மனதுக்குள் இருக்கிற டிப்ரெஷனிலிருந்து முதலில் வெளியே வாருங்கள். இதுவே உங்களை இயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கலாம்.

* பிசிஓடி பிரச்னை இருப்பவர்கள் மாத்திரை சாப்பிடுவதுடன் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.

lockdown
lockdown
pixabay
கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

* யோகா நிபுணரின் ஆலோசனையுடன் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கான ஆசனங்களைக் கற்றுக்கொண்டு, செய்யலாம்.

* காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். ஊரடங்கு நேரத்தில் மருந்து, மாத்திரையில்லாமலே கருத்தரிக்க வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு