Published:Updated:

மேடம் ஷகிலா 15: "சமைச்சி வெச்சிட்டு படுத்துக்கோ!" ஆணின் நோய்க்கால அக்கறையும், பெண்ணின் மனஅழுத்தமும்!

மேடம் ஷகிலா | பெண் உடல்நல பாதிப்பு
News
மேடம் ஷகிலா | பெண் உடல்நல பாதிப்பு

தங்களுக்கு சிறு தலைவலி என்றாலும் விடுப்பு எடுத்துக் ஓய்வெடுப்பவர்கள், மனைவி காய்ச்சலில் படுத்திருந்தாலும்கூட "சமைத்து வைத்துவிட்டு படுத்துக்கொள்" என்று வெளிப்படையாகச் சொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள்.

முன்குறிப்பு:

இன்றும் இப்படியான குடும்பங்கள் இருக்கிறது என்பதை சொல்வதற்காக தான் இந்தக் கட்டுரை. இது குறிப்பிட்டு ஆண்களை மட்டும் குறை சொல்வதற்காக அல்ல. பத்தில் இரண்டு பேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். ஆனால் மீதம் இருக்கும் எட்டு பேரிடமும் மாற்றம் வரும்வரை நாம் தொடர்ந்து இவற்றை பேசித்தான் ஆகவேண்டும். இரண்டு பேரின் மாற்றத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு அமைதியாகிவிட முடியாது.

கொரோனாவும், மனிதர்களும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த பதிமூன்று மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் தொற்றுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள், அலுவலகம் செல்லாத பெண்கள், முதியவர்கள் எனத் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கும் பலரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். குடும்பத்திற்குள் மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்கள் என யாருக்காவது நோய் தொற்று ஏற்படும்போதெல்லாம் உண்டாகும் அச்சமும், மன உளைச்சலும் அதிகம்.

நோய் தொற்று ஒருபுறமிருக்க மன உளைச்சலால் நம்மை சுற்றி இருப்பவர்கள் மீது கோபத்தையும், எரிச்சலையும் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

கொரோனா பாடம்
கொரோனா பாடம்
Representational Image Only

இந்த ஓராண்டு காலத்தில் அதிகம் உடல் உழைப்புக்கு ஆளானவர்கள் பெண்கள். நிறைய குடும்பங்களில் ஆண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்தச் சதவிகிதம் மிகக் குறைவு. கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளி/கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். முழுநேரமும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களைச் சார்ந்திருக்கிறது. இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் போகும் சூழ்நிலைகள் வரும்பொழுது குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது. அதுபோக லாக்டெளன் காலத்தில் பெண்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும்போது மேலும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நோய் தொற்றின் அபாயத்தால் உதவிக்கு யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாத சூழல் உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சரி கொரோனாவுக்கு முந்தைய காலம் என்று ஒன்று இருந்தது. அதில் இந்தப் பிரச்னைகளை பெண்கள் எப்படி சமாளித்தார்கள்?

நாம் சிறுவயதில் கவனித்திருப்போம், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது நெருங்கிய உறவுப்பெண்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், அல்லது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மருத்துவமனைக்கு உடன் செல்வார்கள். இன்றும் உள்ளூரில் வசிக்கும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகள், கணவரை எதிர்பார்க்காமல் குடும்பத்தில் மற்ற பெண்கள், அல்லது தோழிகளின் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அதேபோல் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஒருவருக்கு ஒருவர் உணவு பகிர்ந்தும் உதவிக் கொள்கிறார்கள்.

எல்லா சூழ்நிலையிலும் கணவரை எதிர்பார்த்து அன்றைய பெண்கள் இல்லை. மருத்துவமனைக்கு கணவர் உடன் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்திருந்தாலும் வெளியில் சொல்ல மாட்டார்கள். அதை வெளிப்படையாக கேட்பதுகூட தவறு என்கிற தவறான புரிதல் அவர்களுக்கு இருந்தது.

பெண்களின் உடல்நல பாதிப்பு
பெண்களின் உடல்நல பாதிப்பு

இதன் பின்னால் இருக்கும் காரணம் பெண்கள், தங்களை இன்னொரு குடும்பத்திற்கு நேர்ந்துவிடும் சடங்காக திருமணத்தை நினைத்துக் கொள்கிறார்கள். புகுந்த வீட்டில் அனைவரது நலனுக்கும் அவர்கள்தான் பொறுப்பு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. நேரத்திற்குத் தவறாமல் உணவு சமைப்பது தன்னுடைய தலையாய கடமை என்று நினைக்கிறார்கள். தனக்கு கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி அடைவதும், எந்தக் காரணம் கொண்டும் கணவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் எண்ணுகிறார்கள். தங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது ஒரு குற்றம் என்பதுபோல பெண்கள் அதை வெளியே சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் கவனிப்பு கிடைக்கப்போவதில்லை, ஏன் நேரத்தை வீண் செய்யவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கலாம்.

தனக்கு உடல்நிலை சரியில்யில்லாமல் போகும்போது கணவருக்கும், பிள்ளைகளுக்கும் சமைக்க முடியாது, வீட்டை கவனிக்க முடியாது என்கிற வருத்தம் பெண்களுக்கு இருக்கிறது. ஒரு பெண் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமானால் வீட்டில் மகள் அல்லது மருமகள் என அடுத்த தலைமுறை உதவிக்கு வரும்போது மட்டுமே சாத்தியமாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்முடைய சிறுவயதில் அம்மாவுக்கு உடல்நலம் இல்லை என்றால் நமக்கு மனம் சோர்ந்துபோகும். அம்மாவின் மேல் இருக்கும் அன்பு என்பதைத்தாண்டி அம்மா படுத்துக்கொண்டால் வீட்டில் எதுவுமே இயங்காது என்கிற விஷயம் தான் நம்மை அதிகம் வருத்தத்திற்கு உள்ளாக்கும். அம்மாவை ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டு வேலைகளை நாம் எந்த வயதில் செய்யத் தொடங்கினோம் என்று யோசித்தால் புரியும். இதுவே உடல்நிலை சரியில்லை என்றால் வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுக்கும் வசதி அப்பாக்களுக்கு இருந்ததை பார்த்தே வளர்ந்திருக்கிறோம். வீட்டில் அவர்களுக்கு தேவையானவை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச்செல்லும். அவர்களை யாரும் தொந்தரவு செய்யாமல் வீட்டு பெண்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த Luxury நம் வீடுகளில் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு இன்றும் தொடர்கிறது. அதே சமயம் பேரப் பிள்ளைகள் வந்த பின்னும்கூட பெண்களுக்கு கிடைப்பதில்லை.

பெண்களின் உடல்நல பாதிப்பு
பெண்களின் உடல்நல பாதிப்பு

பெண்கள் நோய் காலத்திலும் அவர்களால் முடிந்த அளவு வீட்டில் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். பலரும் நோய்கள் முற்றிப்போகும் நிலையில்தான் தங்களுடைய நலமின்மையை வெளியே சொல்வார்கள். உண்மையில் இது கடமையோ, தியாகமோ இல்லை. இதில் கொடுமை என்னவென்றால் தங்கள் பெண் பிள்ளைகளையும் அதற்கு பழக்கப்படுத்துவதோடு மருமகள்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு உண்டு.

இதை அம்மாக்களின் தியாகம் என்று சொல்லி சோஷியல் மீடியாக்களில் தினமும் குறைந்தபட்சம் ஒரு மீம் அல்லது ரைட்-அப்பை காணலாம். இப்படி போன தலைமுறை பெண்கள் அன்பு, பாசம், குடும்பத்தின் மீது அக்கறை என்று தங்களின் அடிமைத்தனத்தை உணராமல் போற்றி வளர்த்ததன் விளைவு இன்றைய தலைமுறை ஆண்கள் தங்கள் அம்மாக்களைப்போல் மனைவியும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அம்மாக்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானதை புரிந்துகொள்ளாமல் அதைத் தியாகம் எனப் புகழ்ந்து இன்று உருவாகும் மீம்கள் குடும்ப அமைப்பில் உழைப்புச் சுரண்டலையும், பெண்ணடிமைத்தனத்தையும் ஊக்குவிக்கும் என்பதை நினைவில் கொள்க.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை எங்கள் அம்மாவிற்கு சுகமில்லாத நாள்களிலும் சிரமப்பட்டு எழுந்து எதாவது சமைத்து விடுவார். அது அவரது கடமை என்று நம்புகிறார். ஒருமுறை நான் காய்ச்சலில் இருந்தபோது மருத்துவமனைக்கு செல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய அம்மா, “மருத்துவரிடம் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று சொல்லி ஊசிப் போட்டுக்கொள். வீட்டில் சமைக்க வேண்டுமல்லவா?” என்று அறிவுறுத்தினார்.

அந்த நேரத்தில் உன் கணவரை சாப்பாடு வாங்கி வரச்சொல் அல்லது சமைக்க சொல் என்பதுதானே எனக்கு ஆறுதலாக இருக்க முடியும். அப்படியல்லாமல் தன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்பதைவிட மருமகனுக்கு உணவு முக்கியம் என்பது அன்போ, அக்கறையோ அல்ல. ஆண் மைய சமூகத்திற்கு #MalePatriarchy வழிவழியாக அடிமைகளை உருவாக்குதல்.

பெண்களின் உடல்நல பாதிப்பு
பெண்களின் உடல்நல பாதிப்பு

ஒருமுறை அலுவலகத்தில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக உடன் வேலை பார்க்கும் தோழியுடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. மறுநாள் எப்போதும் போல் அலுவலகம் வந்தபோது தோழி, ”ஓய்வெடுக்காமல் அலுவலகம் வர உன் கணவர் எப்படி அனுமதித்தார்?" என்று கேட்டாள். முந்தைய நாள் மருத்துவமனை சென்றதை பற்றி நான் வீட்டில் விரிவாக ஏதும் கூறவில்லை என்றேன். அது தவறு என்று சொல்லி என்னோடு சண்டையிட்டாள். அவள் அந்தச் சூழ்நிலையை பெரிதுபடுத்துகிறாள் என அப்போது தோன்றியது. அவளது பெற்றோர் பிரிந்து வாழ்வதற்கு பெரிதும் காரணமாக இருந்தது அவளது தந்தையின் அக்கறையின்மைதான் என்றாள். "ஆரம்பம் முதலே பெண்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன பிரச்னைகளை வெளியில் சொல்லிப் பழகவேண்டும். மட்டுமல்லாமல் தனக்கு தேவையான அக்கறை மற்றும் கவனிப்பை வீட்டில் கேட்டு பெறாவிட்டால் கிடைக்காது" என்றாள்.

உடல்நிலை சரியில்லாதபோது மருந்துகளை போலவே சரியான உணவும் அவசியம். ஆனால் பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போது முதலில் பிரச்னையாவது உணவுதான்.

பொதுவாக நம் வீடுகளில் மற்றவர்களுக்கு சுகமில்லை என்றால் அந்தந்த நேரத்திற்கு சரியாக உணவு கொடுத்து கவனித்துக் கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் வீட்டில் சமைக்க வேண்டிய கட்டாயம் பெரிய வீடுகளில் இன்றும் உள்ளது.

தங்களுக்கு சிறு தலைவலி என்றாலும் விடுப்பு எடுத்துக் ஓய்வெடுப்பவர்கள், மனைவி காய்ச்சலில் படுத்திருந்தாலும்கூட "சமைத்து வைத்துவிட்டு படுத்துக்கொள்" என்று வெளிப்படையாகச் சொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உணவகங்களில் இருந்து பார்சல் வாங்கிவரும் அளவிற்கு மாறினால்கூட போதும் என்பதே பல பெண்களின் கனவாக இருக்கிறது. அதேபோல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் "உன் அம்மா வீட்டில் சென்று சரி செய்துகொண்டு வா" என்று சொல்லும் கணவர்களும் உண்டு.

இது வெறும் நேரடியான கணவன் மனைவி பிரச்னை மட்டுமல்ல.

பெண்களின் உடல்நல பாதிப்பு
பெண்களின் உடல்நல பாதிப்பு

தங்களுக்கு நோய் என்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும், பெற்றோர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் செய்யும் அன்பு பிள்ளைகள் நம்மூரில் இருக்கிறார்கள்.

வயதாகி நோயில் விழுந்தால் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் என ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ள காரணம் சொல்வார்கள். ஆனால் அப்படி திருமணம் ஆகி பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் மட்டும் போதாது. ஒரு ஆண் தன்வசம் வருமானம் இருந்தால் மட்டுமே நல்ல உணவு முதல் நல்ல மருத்துவம் வரை கிடைக்கும் என்பதை சமீபக் காலமாக அதிகம் காண்கிறோம்.

பெற்றோர்கள் சொத்து சேர்த்து வைத்திருக்க வேண்டும், பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும், நகரத்தில் தங்களோடு வந்து உதவியாக இருக்க வேண்டும் என இன்றைய தலைமுறையினர் பெற்றோர்களை நோய்க் காலத்தில் கவனித்துக்கொள்ள 'Conditions Apply' என்கிறார்கள்.

இன்று ஐம்பது, அறுபது வயதில் இருக்கும் தலைமுறையை சேர்ந்தவர்களின் நிலை இதுவென்றால், நகரங்களில் தனிக்குடும்பங்களாக வசிக்கும் நாற்பது வயதுக்குள் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து குடும்பத்தில் உள்ளவர்களை கவனித்துக் கொள்வது சாத்தியமில்லாத ஒரு வாழ்க்கைமுறை உருவாகியிருக்கிறது. Moral values மற்றும் Sentimentsக்கு இடம் தராத கார்ப்பரேட் கலாசாரமும், வேலையை இழத்தலினால் ஏற்படும் பொருளாதர பிரச்னைகளின் அச்சுறுத்தலும் முக்கிய காரணங்கள்.

குடும்ப அமைப்பின் முக்கிய காரணமே முடியாத காலங்களில் ஒருவருக்கொருவர் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பதுதான். அவை குறைந்து கொண்டே வருவதற்கு நேரமின்மை, பொருளாதாரம், இடப்பற்றாக்குறை, ஈகோ என எண்ணற்ற காரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்காமல் இந்த பெருந்தொற்று காலத்தில் நம்மை சுற்றியிருப்பவர்களின் உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை கொள்வோம்.