பெண்களின் உடல்நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளின் விரிவான விளக்கங்களை திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் என்.சுசித்ராவிடம் கேட்டோம்...

பிரசவம்...
முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழுமா?
முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழ வேண்டும் என்பதில் எந்தக் கட்டாயமும் கிடையாது. முதல் குழந்தை எந்தக் காரணத்துக்காக சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டது என்பதைப் பொறுத்து அடுத்த குழந்தை எப்படிப் பிறக்கும் என்பதைக் கூற முடியும். கர்ப்பப்பை சாதாரணமாக இல்லாமல் இருப்பது, அதாவது பிளவுபட்ட கர்ப்பப்பை, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் சிறியதாக இருத்தல் போன்ற சூழ்நிலைகளில் சிசேரியன் மூலம்தான் குழந்தை வெளியே எடுக்கப்படும். இதுதவிர, தாய்க்கு இதயநோய் பாதிப்புகள் இருந்தாலோ, தாயின் உயரம் 140 செ.மீ-க்குக் குறைவாக இருந்தாலோ சிசேரியன் முறையே பரிந்துரைக்கப்படும்.
இப்படி இல்லாமல் குழந்தையின் பொசிஷன் காரணமாக, நீர்ச்சத்து குறைவாக இருப்பது, முதல் பிரசவ நேரத்தில் நீரிழிவு அல்லது ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிசேரியன் செய்யப்பட்டு இருக்கலாம். அப்படி இருக்கும்போது இரண்டாவது பிரசவ சமயத்தில் ஏதுவான சூழல் இருந்தால் சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யலாம்.
பிரசவத்தின்போது முதுகில் போடப்படும் தடுப்பூசியால் ஆயுள் முழுவதும் முதுகுவலி இருக்கும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?
உண்மையில்லை. பிரசவ நேரத்தில் முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் ஊசியின் பெயர் Spinal anaesthesia. முதுகுப்பகுதியில் சிறிய ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி இடுப்புக்குக் கீழே உள்ள உடல் பகுதிகளை மரத்துப்போகச் செய்வதற்கு இந்த ஊசி பயன்படுகிறது. முழு உடலையும் மரத்துப்போக வைக்கும் General anaesthesia-வைவிட இந்த Spinal anaesthesia தான் பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்த ஏதுவானது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் இந்த வகையில் மயக்க மருந்து செலுத்துவதுதான் நல்லது. முழு உடலையும் மரத்துப்போக வைக்க ஊசி செலுத்தினால் அந்த மயக்க மருந்தின் தாக்கம் சிறிதளவு குழந்தையின் உடலில் இருக்கலாம். ஆனால், தண்டுவடத்தில் ஊசி போடும்போது மயக்க மருந்தின் தாக்கம் குழந்தையிடம் இருக்காது.

பிரசவத்துக்குப் பிறகு தாய் எழுந்து நடமாடுவது, பழைய நிலைக்குத் திரும்புவது அனைத்தும் தண்டுவடத்தில் ஊசி செலுத்தினால் கொஞ்சம் எளிதாக இருக்கும். முழு உடலுக்கும் மயக்க மருந்து செலுத்தினால் அது கொஞ்சம் கடினமாக மாறலாம். தண்டுவடத்தில் ஊசி செலுத்தப்பட்டாலும் பிரசவத்துக்குப் பின்பு பெண்கள் சரியான முறையில் உடற்பயிற்சி செய்யும்போது, தசைகள் பழைய நிலைக்குத் திரும்பும். அதன்மூலம் முதுகுவலியைக் குறைக்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோய்களுள் இதுவும் ஒன்று. இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது Human Papilloma Virus என்று அழைக்கப்படும் ஒருவகை வைரஸ் ஆகும். இந்த வைரஸ் உடலுறவின் மூலம் பரவக்கூடியது. உடலுறவு சமயத்தில் பிரசவ பாதையின் மூலம் ஆண்களிடம் இருந்து பெண்களிடம் பரவும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்று சில பெண்களுக்கு புற்றுநோயாக மாறும்.

இதை ஆரம்ப நிலையில் கண்டறிய `pap smear test' செய்துகொள்ள வேண்டும். ஆனால் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு சில அறிகுறிகள் உண்டு.
* வெள்ளைப்படுதல்.
* வெள்ளைப்படும்போது கலங்கலாகக் கெட்ட வாடையும் சேர்ந்து இருப்பது போல் இருக்கும்.
* உடலுறவின்போது உதிரப்போக்கு ஏற்படுவது.
* மாதவிடாய் இல்லாதபோதும் உதிரப்போக்கு ஏற்படுவது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுப்பதற்கு HPV தடுப்பூசி தற்போது உள்ளது. இதை பத்து வயது முதல் செலுத்தலாம். இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் இந்த ஊசியை பெண்களுடன் சேர்த்து ஆண் குழந்தைகளும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வைரஸ் ஆண்களிடம் இருந்துதான் பெண்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் வருமா?
கண்டிப்பாக வரும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருக்கும் பெண்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். உடலும் எப்போதும் அசதியாக இருப்பது போல் உணருவார்கள். உடலில் புற்றுநோய் இருந்தால் கர்ப்ப காலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய கர்ப்பப்பை வாயிலிருந்து தசையை எடுத்து சோதனை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது கர்ப்பப்பை வாய் அளவு சிறிதாகிவிடும். இது எடை குறைவான குழந்தை பிறப்பது, பிரசவ காலத்துக்கு மிகவும் முன்பாக குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.
கர்ப்பகால நீரிழிவு
கர்ப்ப காலத்தின்போது வரும் நீரிழிவு, மகப்பேறுக்குப் பின்பும் தொடர வாய்ப்பு உண்டா?
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோயை Gestational Diabetes என்று கூறுவோம். இது பிரசவம் முடிந்த பின்பும் தொடர்வதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்பட்டால் பிரசவத்துக்குப் பின்பும் சர்க்கரை அளவை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆறு வாரங்கள் வரை கட்டாயம் கண்காணித்து உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர, பல ஆண்டுகள் கழித்துகூட நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு `Gestational Diabetes’ ஏற்பட்ட பெண்களுக்கு, சாதாரண பெண்களைவிட அதிகம்.

கர்ப்ப கால சர்க்கரை நோய் குழந்தைகளையும் பாதிக்குமா?
சர்க்கரை நோய் இருக்கும் தாய்மார்களின் குழந்தைகள் அளவில் பெரியதாக இருப்பார்கள். குறை மாதத்தில் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உண்டு. நுரையீரலின் வளர்ச்சி கொஞ்சம் குறைவாக இருக்கும். இதனால் சுவாசம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை பிறந்த பின் குழந்தையின் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் (Hypoglycemia). தாய்க்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் குழந்தை வயிற்றில் இருக்கும்போது இறந்துகூட போகலாம். கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் உடல் பருமன் பிரச்னை, சர்க்கரை நோய்க்கு உள்ளாகலாம்.
ரிஸ்க் நிறைந்த கர்ப்பம்
நஞ்சுக்கொடி இறக்கம் ஏற்பட்டால் பிரசவத்தில் சிக்கல் வருமா?
நஞ்சுக்கொடி இறக்கம் ஏற்படுவதன் மூலம் பிரசவம் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. நஞ்சுக்கொடி பொதுவாக கர்ப்பப்பையின் மேற்புறத்தில் பொருந்தி இருக்கும். அப்படியில்லாமல் கர்ப்பப்பை வாய்ப்பகுதியில், பிரசவப் பாதையில் நஞ்சுக்கொடி இருக்கும்போது அது பல சிக்கல்களை உண்டாக்கும். நஞ்சுக்கொடி கீழாக இருக்கும்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ரத்தச்சோகையை உண்டாக்கலாம்.
இது பிரசவத்தை சிக்கலானதாக மாற்றும். கர்ப்ப காலத்தில் மூன்று மாதங்களில் தொடங்கி ஏழு மாதங்கள் வரை நஞ்சுக்கொடி கீழே இருப்பதால் உதிரப்போக்கு இருக்கலாம். குறை மாதத்தில் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. நிறை மாதம் வரையிலும் நஞ்சுக்கொடி கீழாகவே இருந்தால் சிசேரியன் மூலம்தான் பிரசவிக்க முடியும். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும்கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம். இது தாயின் உயிருக்குக்கூட ஆபத்தாக முடியலாம். எனவே, இதுபோல் இருப்பவர்கள் ஐ.சி.யு, ரத்த வங்கி, குழந்தைகான NCU கேர் போன்ற அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் பிரசவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

35 வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் சிக்கல்கள் இருக்கும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?
உண்மைதான். பெண் குழந்தை பிறக்கும்போதே அந்தக் குழந்தை இரு சினைப்பைகளுடன் பிறக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்றதுபோல குறிப்பிட்ட அளவு கருமுட்டைகள் சினைப்பையில் பிறக்கும்போதே இருக்கும். இந்த அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறும். பெண் பருவமடைந்த பின்பு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் உதிரப்போக்குடன் கருமுட்டையும் வெளியேறத் தொடங்கும். 45 வயது ஆகும்போது மெனோபாஸ் ஏற்பட்டு கருமுட்டை வெளிவருவது நின்று போகாலாம். ஒரு பெண் 35 வயதில் குழந்தை பெற நினைத்தால் அந்த நேரத்தில் ஏற்கெனவே நிறைய கருமுட்டைகள் தீர்ந்து இருக்கும். இது கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
மெனோபாஸ்
மெனோபாஸ் ஏற்பட்டால் அதன்பின் எப்போதும் சிலர் உடல் சோர்வாக இருக்கிறது என்று சொல்கிறார்களே... காரணம் என்ன?
மெனோபாஸ் ஏற்பட்ட பின் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். இந்த மாற்றங்கள் எலும்பின் வலுவைக் குறைக்கும். இதனால் கால்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படலாம். இந்த நேரத்தில் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்களைச் சேர்த்துக் கொள்ளும்போது உடல் சோர்வைக் குறைக்க முடியும்.

எந்த வயதில் மெனோபாஸ் வருவதை இயல்பாக எடுத்துக் கொள்ளலாம்?
45 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் மெனோபாஸ் ஏற்படுவது இயல்பானது. ஆனால் 40 வயதுக்கும் குறைவாக ஒரு பெண்ணுக்கு மெனோபாஸ் ஏற்படும்போது அது ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Menopause) என்று அழைக்கப்படுகிறது.
பிசிஓடி மற்றும் மனநிலையில் தடுமாற்றங்கள் (PCOD +Moodswigs)
`மூட்ஸ்விங்ஸ்’ ஏற்படும் நேரத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றம் நிகழுமா?
மூட்ஸ்விங்ஸ் என்பது மாதவிடாய் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிடாய் நிகழ்வதற்கு ஒரு பத்து நாள்கள் அல்லது ஒரு வாரத்துக்கு முன்பு பெண்களின் உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். இது மூட்ஸ்விங்ஸை உண்டாக்கும். கோபம் வருவது, எரிச்சல் அடைவது, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம்.
இதுபோன்ற நேரத்தில் சர்க்கரை அதிகம் உள்ள சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்ற பொருள்களை உட்கொண்டால் அது ஹார்மோன் அளவுகளை இன்னும் பாதித்து மூட்ஸ்விங்ஸை அதிகப்படுத்தலாம். எனவே, அதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு அதிக வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
பிசிஓடி பிரச்னையின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?

பிசிஓடி பிரச்னையின் ஆரம்பகால அறிகுறி முறையற்ற மாதவிடாய் ஆகும். ஒரு பெண்ணுக்கு சாதாரணமாக 25 - 30 நாள்களில் வரும் மாதவிடாய், முறையற்று இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாத்திரை சாப்பிட்டால்தான் மாதவிடாய் வருவது என்று இருப்பது முக்கிய அறிகுறி ஆகும்.
இது தவிர பிசிஓடி பிரச்னை இருக்கும் பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். பிசிஓடி பாதிப்பு உள்ள பெண்களின் உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஹார்மோன் தேவையான அளவைவிட அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன், மீசை வளர்வது, தாடைக்குக் கீழ் முடி வளர்வது, கழுத்துப் பகுதியில் முடி வளர்வது போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். பிசிஓடி உள்ள பெண்களின் இரண்டு சினைப்பைகளும் சாதாரண அளவைவிட சற்று வீங்கியது போல பெரிதாக இருக்கும். இதை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கண்டறிய முடியும்.
வயது கடந்த கர்ப்பம்
எந்த வயதில் பிரக்னென்சி பிளான் செய்வது சரியாக இருக்கும்?
25 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடலாம். அந்தக் காலகட்டம் சரியானதாக இருக்கும்.
கால தாமதமாக கருத்தரித்தால் நார்மல் டெலிவரி செய்ய வாய்ப்பு குறைவு என்பது உண்மையா?

ஓரளவு உண்மை. ஏனென்றால் 35 வயதுக்கு மேல் ஒரு பெண்ணுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. இது பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதுதவிர, பெண்களுக்கு வயதாகும்போது பிரசவப் பாதையில் உள்ள தசைகள் வலுவிழந்து விடும். இதுபோன்ற காரணங்களால் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துபோகும்.
இது தவிர பெண்களுக்கு வயதாகும்போது இடுப்பு எலும்பு மற்றும் அதைச் சுற்றி உள்ள தசைகளின் நெகிழ்வுத்தன்மை (Flexiblity) குறைந்துவிடும். இது போன்ற காரணங்களால் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து போகும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் கற்றுத் தரப்படும் உடற்பயிற்சிகள் இதைத் தவிர்க்க உதவும்.
ஐவிஎஃப் (IVF)
செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரித்தால் குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்குமா? குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏதும் சிக்கல் இருக்குமா?
இது உண்மைதான். செயற்கை கருத்தரிப்பு மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் நிறைய நேரங்களில் பிரசவ காலத்துக்குச் சற்று முன்பே சிசேரியன் மூலம் வெளியே எடுக்கப்படுவார்கள். சாதாரணமாக உருவாக்கும் குழந்தைகளை விட அவர்கள் எடை குறைவாக இருப்பதற்கான காரணம் இதுதான்.

செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரிப்பவர்களுக்கு பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
செயற்கை கருத்தரிப்பு முறையில் மருந்துகளைச் செலுத்தி அதிக அளவில் கருமுட்டைகளை வெளியேற்ற சினைப்பை தூண்டப்படும். அதிக அளவில் முட்டைகள் வெளியாகும்போது இரட்டைக் குழந்தைகள் உண்டாவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.