கட்டுரைகள்
Published:Updated:

மருத்துவம் மக்களுக்குச் சேர வேண்டும்!

மினால் தாவே
பிரீமியம் ஸ்டோரி
News
மினால் தாவே

தொற்றுநோய்கள் தொடர்பான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறேன்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாட்டையே உலுக்கிய அதே நேரம் மும்பை லேப் ஒன்றின் ஆய்வாளராக இருக்கும் மினால் தாவே போஸ்லே உருவாக்கிய குறைந்த விலையிலான கொரோனா கிட் அவசியமானதும் ஆறுதல் தருவதுமாக அமைந்தது. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கிட்கள் இரண்டு மணிநேரத்தில் துல்லியமாக நோய்த்தொற்றைக் காட்டிக்கொடுப்பவை.

நோய்ப் பரவலைத் தடுப்பதில் குறைந்தவிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கிட்கள் மிகமிக முக்கியமானவை. இந்த ஆராய்ச்சியின்போது நிறைமாத கர்ப்பமாக இருந்தார் மினால். கிட் உருவாக்கி முடித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டுதான் குழந்தையைப் பிரசவிக்க மருத்துவமனைச் சென்றார். தாவேக்குத் தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். டபுள் வாழ்த்துகளைச் சொல்லி அவரிடம் பேசினேன்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``பிறந்து வளர்ந்தது மகாராஷ்டிராவில்தான். ஆய்வுப்படிப்பில் அதிகம் ஆர்வம் உண்டு என்பதால் வைராலஜி தொடர்பான முதுகலை அறிவியல்படிப்பை முடித்திருந்தேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் உலகெங்கிலும் சார்ஸ் வைரஸ் தொற்று பல உயிர்களைக் கொன்றது. அது ஏற்படுத்திய தாக்கத்தால் பல வருடங்கள் சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். அதன்பிறகு மும்பையின் மைலேப்ஸ் ஆராய்ச்சிப்பிரிவில் சேர்ந்தேன். தொற்றுநோய்கள் தொடர்பான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறேன்.”

உங்கள் கிட் உருவானதன் பின்னணியைச் சொல்லுங்கள்...

“ஏற்கெனவே சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் அனுபவம் கொண்டவள் என்பது இந்த கிட்டை உருவாக்க எனக்கு உதவியது. இதை உருவாக்க எனக்கு ஆறு வாரகாலம் தேவைப்பட்டது. இந்தியாவில் வைரஸ் தொற்றுவது தொடர்பான அரசு எச்சரிக்கை வெளியாவதற்கு முன்பே நான் டெஸ்ட் கிட்களுக்கான ஆராய்ச்சி வேலையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வயிற்றில் குழந்தை வேறு... அவளது ஆரோக்கியத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை, கிட் ஆராய்ச்சி வேலைகள் தொடர்பான சிந்தனை என அவ்வளவு நெருக்கடி இருந்தது. குழந்தை பிறப்பதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தாலும் பலகோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்கு இருந்தது. உலகம் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த அதே வேளையில் நான் கொரோனாவுக்கு எதிராகவும் என் குழந்தைக்காகவும் போராடிக் கொண்டிருந்தேன்.”

மருத்துவம் மக்களுக்குச் சேர வேண்டும்!

இந்த டெஸ்ட் கிட் பற்றி விளக்குங்களேன். உலகச் சந்தையில் விற்கும் மற்ற கிட்களைவிடக் குறைவான விலையில் எப்படி இதைத் தர முடிந்தது?

“ஆர்.டி-பி.சி.ஆர் என்னும் பரிசோதனை அடிப்படையிலான டெஸ்ட் கிட்டை நான் உருவாக்கினேன். பொதுவாக நோய் எதிர்ப்புக் கிருமிகளை வைத்துதான் டெஸ்ட் கிட்கள் உருவாக்கப்படும். ஆனால் இந்த ஆர்.டி-பி.சி.ஆர் முறை அதைவிடத் துல்லியமானது. இதில் ஃபால்ஸ் பாசிட்டிவ்கள் வருவதும் குறைவு. சில நோயாளிகளின் உடலில் வைரஸ் இருக்கும். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமே அவரிடம் தென்படாது. அதுமாதிரியான சூழலிலும் இது துல்லியமாகக் கண்டுபிடித்துத் தரும். அதிக மக்கள்தொகை உடைய நாட்டில் எல்லோரும் வாங்கும் வகையில் மருந்துப் பொருள்கள் இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே இதன் சந்தை விலையைக் குறைக்க முடிவு செய்தோம்.”

ஒரு வைரஸ் ஆய்வாளராக கொரோனாவுக்கான தீர்வு என்னவென்று நினைக்கிறீர்கள்?

“இந்திய அரசு சமூக விலகல் மற்றும் தொடர் பரிசோதனைகளையே இதற்கான தீர்வாக முன்னிறுத்தியிருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்குச் சமூக விலகலும் பரிசோதனையும் சாத்தியம்? தடுப்பூசி மற்றும் மருத்துவ முறைகளைக் கண்டறிய வேண்டும். மேலும், கொரோனாவோடு மட்டும் இந்த அச்சுறுத்தல் நின்றுவிடவில்லை. இன்னும் இதுபோல பலநூற்றுக்கணக்கான வைரஸ்களை எதிர்கொள்ள நம்மிடம் திட்ட வரைவு தேவை.”

மினால் தாவே
மினால் தாவே

இதற்கு முன்பு அச்சுறுத்திய எபோலா, நிபா, ஹெச்1என்1 வைரஸ் கிருமிகளைவிட இதைச் சமாளிப்பது கடினமாக இருக்கிறதே ஏன்?

“பன்றிக்காய்ச்சல் மெக்சிகோவிலிருந்து பரவிய அதே வேகத்தில்தான் தற்போது கொரோனாவும் சீனாவிலிருந்து பரவியிருக்கிறது. பன்றிக்காய்ச்சலுக்கு எதிராக நம்மிடம் மருந்து இருந்தது. ஆனால் கொரோனாவுக்கு எதிராக மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை. இவ்வளவுக்கும் 2014-16 காலகட்டத்தில் பாதித்த எபோலாவைவிட இதன் வீரியம் மிகக் குறைவுதான். எபோலா பாதிக்கப்பட்ட ஐம்பது சதவிகித மக்கள் இறந்துபோனார்கள். ஆனால் அது உடலிலிருந்து வெளியேறும் நீரின் வழியாக மட்டுமே பரவியது என்பதால் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் கொரோனாவைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு சதவிகிதம் குறைவு, ஆனால் இதனால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள்தான் ஈடுசெய்யமுடியாததாக இருக்கின்றன.”