கட்டுரைகள்
Published:Updated:

தனிமை, தடுமாற்றம், தவிப்பு... சட்டென்று மாறும் மனநிலை... இதுவும் கடந்து போகுமா? #Menopause

மெனோபாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மெனோபாஸ்

பிரெயின் ஃபாக் அறிகுறிகள் அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. அதை அவர்களும் உணர வேண்டும், குடும்பத்தாரும் உணர்ந்து ஆதரவாக நிற்க வேண்டும்

காரணமே இல்லாத மனக்குழப்பம், சட்டென மாறும் மனநிலை, தனிமை உணர்வு, தடுமாற்றம், மறதி, எதிலும் ஈடுபாடின்மை, ஏதோ ஒரு விரக்தி...

சுமித்ரா சுந்தர் ராமன்
சுமித்ரா சுந்தர் ராமன்

இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ நம்மில் பலரும் அரிதாகவோ, அடிக்கடியோ உணர்ந்திருப்போம். குறிப்பாக, பெண்கள். இந்த உணர்வுகளை ‘பிரெயின் ஃபாக்’ (Brain Fog) என்கிறது மனநல மருத்துவம். ‘மனசு சரியில்லை’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் பலரும் அடக்கிவிடும் இந்த உணர்வுகள், மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு சற்று அதிகம் என்கின்றன சமீபத்திய புள்ளிவிவரங்கள். இந்த வருட ‘உலக மெனோபாஸ் தின’த்திற்கான தீம் ..‘மெனோபாஸ் காலத்தைய மனநலத் தடுமாற்றங்களும் நினைவாற்றல் சிக்கல்களும்’ (Brain Fog and Memory Difficulties in Menopause).

மெனோபாஸுக்கும் மனநலத் தடுமாற்றங்களுக்கும் என்ன தொடர்பு? பெண்கள் என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமன்.

“மெனோபாஸின் அறிகுறிகளாக உடல் சூடாவது, இரவில் திடீரென வியர்த்துக் கொட்டுவது, வெஜைனாவில் ஏற்படும் வறட்சி போன்றவை குறித்து அதிகம் பேசியிருக்கிறோம். அந்தப் பட்டியலில் மிகவும் சீரியஸான பிரச்னையாக இணைந்திருக்கிறது, பிரெயின் ஃபாக். இவை அனைத்துக்கும் காரணம், மெனோபாஸை நோக்கிய நகர்வில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களே.

தனிமை, தடுமாற்றம், தவிப்பு... சட்டென்று மாறும் மனநிலை... இதுவும் கடந்து போகுமா? #Menopause

பிரெயின் ஃபாக் அறிகுறிகள் அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. அதை அவர்களும் உணர வேண்டும், குடும்பத்தாரும் உணர்ந்து ஆதரவாக நிற்க வேண்டும். எந்தப் பொருளை எங்கே வைத்தோம் என்கிற சாதாரண மறதியில் தொடங்கி, ஒரு விஷயத்தை கவனிப்பதில் ஏற்படும் சிக்கல், வேலையில் கவனச் சிதறல், பெயர்களையும் எண்களையும் நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல், ஒரு விஷயத்தைச் செய்துகொண்டிருக்கும்போதே அதை ஏன் செய்கிறோம் என்பதை மறந்துபோவது, வீட்டிலும் வெளியிலும் முக்கியமான நிகழ்வுகளை, தினங்களை மறந்துபோவது என பிரெயின் ஃபாகின் தீவிரம் எதுவாகவும் இருக்கலாம்.

பிரெயின் ஃபாக் அவ்வளவு சீரியஸானதா என்றால் ஆம், இல்லை என இரண்டு பதில்களையும் சொல்லலாம். அறிகுறிகளை உணர்ந்துகொண்டு மருத்துவ உதவியை நாடினால், ‘மெனோபாஸல் ஹார்மோன் தெரபி’யின் மூலம் மீளலாம். அதில் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சிகிச்சை கொடுக்கப்படும். கூடவே, சரிவிகித உணவுப்பழக்கம், குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள், ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், சரியான தூக்கம் மிகமிக முக்கியம்.

அத்தனை வருடங்களாக உடற்பயிற்சியே செய்து பழக்கமில்லாவிட்டாலும், மெனோபாஸை நெருங்கும்போதாவது அதை தொடங்குவது சிறந்தது. வாரத்துக்கு 5 நாள்களுக்கு தினமும் 30 நிமிடங்களுக்கு, நடை, மெது ஓட்டம், சைக்கிளிங், யோகா, ஜிம்முக்குச் சென்று எடை தூக்கிச் செய்கிற பயிற்சிகள் என எதுவும் செய்யலாம். குறுக்கெழுத்துப் புதிர்களைத் தீர்ப்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, பொழுதுபோக்குகள் என்று பிடித்தவற்றைச் செய்யலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் பி 12 உணவுகள் மெனோபாஸை எதிர்நோக்கும் பெண்களுக்கு அவசியம். சைவ உணவுக்காரர்களுக்கும், சர்க்கரை நோய்க்காக மெட்ஃபார்மின் மாத்திரை எடுத்துக் கொள்வோருக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பதை அதிகம் பார்க்கிறோம். அசைவ உணவுகளில் இந்தச் சத்து கிடைக்கும். சைவ உணவுக்காரர்கள் செறிவூட்டப்பட்ட தானியங்களின் மூலம் இவற்றைப் பெறலாம். வைட்டமின் இ சத்துக்குறைபாடு உள்ளவர்கள், நட்ஸ், புரொக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். முடியாதவர்கள், மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட்டுகளாக எடுத்துக்கொள்ளலாம்.

இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அறிவுரைகள். அவதியான மெனோபாஸ் காலத்தில், பெண் உடலையும் அவளின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆதரவாக, ஆறுதலாக இருப்பதே வலி சுமப்பவளுக்கான முதல் சிகிச்சையாக இருக்கும். இது குடும்பத்தாருக்கு..!

இதுவும் கடந்துபோகட்டும்!