அஸ்ஸாம் மாநிலத்தில் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சமீபத்தில் சிறார் திருமணத்திற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. அஸ்ஸாமில் பிரசவத்தின் போது அதிக அளவில் இறப்பு விகிதம் இருக்கிறது என்று அரசு தரவுகளைச் சொல்லி நடவடிக்கை எடுத்தது.
இதனை தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 8 மற்றும் 9வது வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இந்த கார்டு வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாய் கார்டு பெறும் மாணவிகள் கார்டில் மாதவிடாய் தேதியைச் சரியாகக் குறிப்பிட்டு வரவேண்டும். இந்த கார்டுகள் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பெண்களின் மாதவிடாய் சரியாக இருக்கிறதா என்பது கண்காணிக்கப்படும்.

மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், உடனே உள்ளூர் சுகாதாரப் பணியாளரை தொடர்பு கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது வரை மாநிலம் முழுவதும் 1.04 கோடி கார்டுகள் மாணவிகள் மற்றும் திருமணமாகப் போகும் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவிகளின் உடல்நிலையை கண்காணிக்கவும், கர்ப்பத்தை தெரிந்து கொள்ளவும் இந்த கார்டு வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு இந்த கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் என்ன காரணம் என்பதை உடனே தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் அஸ்ஸாம் அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. இத்திட்டத்தை தொடங்க, கடந்த மே மாதம் அஸ்ஸாம் அரசு முடிவு செய்தது.