Published:Updated:

மாதவிடாய் அசெளகரியத்திற்குத் தீர்வளிக்கும் மென்சுரல் கப்! எளிதாகப் பயன்படுத்த சில ஆலோசனைகள்

நாப்கின் பயன்பாட்டிலிருந்து மென்சுரல் கப்புக்கு மாற விரும்பும் பெண்களா நீங்கள்? இதைப் படிங்க முதல்ல...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் அளவுக்கு அதிகமான வலிகளும் ஏற்படும். உலக அளவில் ஏறத்தாழ 40 முதல் 50 சதவிகித பெண்கள் தங்களது மாதவிடாய்க் காலத்தை வலிகளுடனேயே கடப்பதாக பிரிட்டிஷ் மெடிக்கல் கவுன்சில் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'அமெரிக்கன் ஃபேமிலி அசோசியேஷன்' ஆய்வில், ஐந்தில் ஒரு பெண் தனது அன்றாட வேலைகளைக்கூடச் செய்யமுடியாத அளவு மாதவிடாயின்போது வலியை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

'துணி, நாப்கின், டேம்பான்ஸ் போன்றவற்றைவிட மென்சுரல் கப் உபயோகமே பெண்களுக்கு சௌகரியமாக உள்ளது!'
லேன்செட் பப்ளிக் ஹெல்த் ஆய்வு

பொதுவாகவே சில பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் வலியுடன் கூடுதலாக சில தொந்தரவுகளும் அசௌகரியங்களும் ஏற்படும். அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு அதன் காரணமாக ஆடைகளில் கறைபடிந்து அசௌகரியம் ஏற்படலாம். ரசாயனம் மூலம் தயாரிக்கப்பட்ட நாப்கினை பயன்படுத்தும் பெண்களுக்கு நோய்த்தொற்று, அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். 'பிரச்னைகள் தீவிரமாகும்வரை பல பெண்கள் அதற்கான தீர்வைத் தேடுவதில்லை' என்பது மகளிர்நல மருத்துவர்களின் வாதமாக இருக்கிறது.

Vikatan

ஆண்டுதோறும் சராசரியாக 65 நாள்கள் மாதவிடாய்க் கால ரத்தப்போக்கை பெண்கள் எதிர்கொள்கின்றனர். ரத்தப்போக்கைக் கையாள பெண்கள் எந்தப்பொருளை உபயோகப்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்தே அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்பதால் அதுகுறித்த ஆய்வுகளையும் தரவுகளையும் திரட்டத்தொடங்கியது 'லேன்செட் பப்ளிக் ஹெல்த்' அமைப்பு. அதன்முடிவில், 'மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தப்படும் துணி, நாப்கின், டேம்பான்ஸ் போன்றவற்றைவிட மென்சுரல் கப் உபயோகமே பெண்களுக்கு சௌகரியமாக உள்ளது' என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, ஏற்கெனவே நடத்தப்பட்ட 43 ஆய்வுகளின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மென்சுரல் கப்
மென்சுரல் கப்
IStock

ஆய்வாளர்களின் ஒருவரான பேராசிரியர் ஃபிலிப்ஸ் ஹாவேர்டு பேசும்போது, "மென்சுரல் கப் தான் மிகவும் சௌகரியமாக உள்ளது என்றாலும்கூட அதன் பயன்பாடு குறித்தோ பயன்படுத்தும் முறை குறித்தோ பெண்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை. உலகளவில் ஏறத்தாழ 199 நிறுவனத்தின் மென்சுரல் கப்புகள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால், 99 நாடுகளில்தான் அவை கிடைக்கின்றன. மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுவதில்லை. மாதவிடாய்க் கால பொருள்களை விற்பனை செய்யும் வலைதளங்களில், 30 சதவிகித வலைதளங்களில் மட்டுமே மென்சுரல் கப் குறித்த தகவல்களும் அது சார்ந்த தெளிவான விளக்கங்களும் இருக்கின்றன" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏறத்தாழ 3,300 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 70 சதவிகிதம் பேர், 'மென்சுரல் கப் தான் சௌகரியமாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளனர்.

சிலிகான் மூலம் தயாரிக்கப்படும் மென்சுரல் கப்கள், 8 முதல் 10 வருடங்கள் வரை உபயோகப்படுத்தப்படலாம்.
சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே
Vikatan

பொதுவாக நாப்கின், டேம்பான்ஸ் போன்றவை ரத்தத்தை உறிஞ்சிக்கொள்ளும் இயல்புடையவை. ஆனால், `மென்சுரல் கப்' நேரடியாக ரத்தத்தைச் சேமித்துக்கொள்ளும். ரத்தப்போக்கின் அளவைப்பொறுத்து நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை அதனை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

மென்சுரல் கப் தயாரித்து விற்பனை செய்துவரும் சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலேவிடம், அதன் உபயோகம் குறித்து கேட்டோம். விரிவாகப் பேசினார்,

"எந்தப் பொருளால் தயாரிக்கப்பட்ட மென்சுரல் கப்பைப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை!"
சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே
சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே
விகடன்

"பிறப்புறுப்புக்குள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதால் எந்தப் பொருளால் தயாரான கப்பைப் பயன்படுத்துகிறோம் என்பதில் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். தற்போது விற்பனையில் உள்ள மென்சுரல் கப் வகைகள் சிலிக்கான், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டவை. அவற்றில் 'சிலிக்கான்தான் பாதுகாப்பானது' என்று மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். சிலிக்கான் கப்புகளை 8 முதல் 10 வருடங்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

நாப்கினைவிட கப் சிறந்தது... ஏன் தெரியுமா?

மென்சுரல் கப்
மென்சுரல் கப்
விகடன்

நாப்கினை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாது. அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நாப்கினை அழிக்க முற்படும்போது அதிலிருந்து அதிகப்படியான ரசாயனங்கள் வெளியேறும். இது சுற்றுச்சூழலுக்கும் கேடு. 'நாப்கின் உபயோகிக்கும்போது ரத்தப்போக்கை நேரடியாக உணரமுடியும்' என்பதுதான் முக்கியமான அசௌகரியமாகக் கூறப்படுகிறது. ஆனால் கப் வகைகளைப் பயன்படுத்தும்போது அந்த அசௌகரியம் ஏற்படாது. காரணம், கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்றப்படும் ரத்தம் நேரடியாகக் கப்பில் சேமிக்கப்பட்டுவிடும். நாப்கினில் ரத்தம் உறிஞ்சப்படும்போது நுண்ணுயிரிகள் அதிகரித்து தொற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். கப்பில் ரத்தம் சேமிக்கப்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படாது.

"எந்தச் சூழலிலும் மென்சுரல் கப்பை சுத்தம்செய்ய சோப், டிடெர்ஜென்ட் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது!''
சீமா கண்டலே
நாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே!

உபயோகப்படுத்தும் முறை:

மென்சுரல் கப்பின் அடிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு கப்பின் ஒரு பக்கத்தை உள்நோக்கி மடித்து அதே நிலையில் பிறப்புறுப்புக்குள் செலுத்தவேண்டும். கப் உள்ளே நுழைந்ததும், தானாக விரிவடைந்துகொள்ளும். இந்த முறை `பஞ்ச் டவுன் ஃபோல்ட்' (Punch Down Fold) எனப்படும். கப்பின் நடுப்பகுதியில் விரல்வைத்து இரண்டாக மடித்தும் உள்ளே செலுத்தலாம். இது 'C Fold' எனப்படும். உள்ளே நுழைக்கப்பட்ட கப் சரியாகப் பொருந்தவில்லை என்ற உணர்வு இருந்தால், கப்பின் அடிப்பகுதியிலுள்ள தண்டுப்பகுதியை விரல்களால் லேசாகத் திருப்பவேண்டும்.

அப்படிச் செய்யும்போது, கப் சரியாகப் பொருந்திவிடும். கப் உபயோகிக்கத்தொடங்கும் பெண்கள் ஆரம்பத்தில் மனதளவில் தயாராகியிருக்கமாட்டார்கள். அப்படியானவர்கள் சில மாதங்கள் மென்சுரல் கப்புடன் நாப்கினும் சேர்த்துப்பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் பழக்கத்தைத் தொடர்ச்சியாக்க வேண்டாம். மாதவிடாய்க் கால ரத்தம் வெளியேறும் அளவு நபருக்கு நபர், நாளுக்கு நாள் மாறுபடும் என்பதால் கப் உபயோகிப்பவர்கள், தங்கள் உடல்குறித்த புரிதலுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மென்சுரல் கப்
மென்சுரல் கப்
IStock

கப்பை அகற்றும்போது தண்டுப்பகுதியை விரல்களால் லேசாக அழுத்தி இழுத்தால் மிக எளிதாக வெளியே வந்துவிடும். வெளியே எடுத்ததும் அதில் சேமிக்கப்பட்டிருக்கும் ரத்தத்தை அப்புறப்படுத்திவிட்டு வெந்நீர் அல்லது குளிர்நீரால் கப்பை நன்றாக சுத்தப்படுத்தவேண்டும். எந்தச் சூழலிலும் கப்பை சுத்தம்செய்ய சோப், டிடெர்ஜென்ட் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. கப் உபயோகப்படுத்தும் பெண்கள் கண்டிப்பாக நகத்தை நீளமாக வளர்க்கக் கூடாது. பல வருடங்கள் பயன்படுத்திய பொருள் என்பதாலும் உடலினுள் செலுத்தப்படும் செயற்கையான பொருள் என்பதாலும் அதன் சுத்தத்தில் பெண்கள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதந்தோறும் அதன் பயன்பாடு நிறைவடைந்ததும் அதைச் சுத்தமான இடத்தில் வைத்துப் பராமரிக்கவேண்டும்" என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு