தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அம்மாவுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியலையே!

யாழினிஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
யாழினிஸ்ரீ

வாழ்தல் இனிது

`வாழ்க்கையே வெறுப்பா இருக்கு' என்பவர்கள் ஒருநாளாவது யாழினிஸ்ரீயைச் சந்தித்து விடுங்கள். கிட்டத்தட்ட 27 வருடங்களாகச் சக்கர நாற்காலியும் மெத்தையுமாகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கோவை மேட்டுப்பாளையம் தென்திருப்பதியைச் சேர்ந்த யாழினிஸ்ரீ. தீராத கால் வலி, சிறு அதிர்வைக்கூட தாங்க முடியாத உடல், கைகளைத்தவிர உடலில் இயக்கமே இல்லை... இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் 'மரப்பாச்சி கனவுகள்' என்கிற கவிதை புத்தகம் மூலமாக உரக்கப்பேசுகிறார் யாழினிஸ்ரீ.

``பெற்றோர் எனக்கு வெச்ச பேர் யோகேஸ்வரி. சொந்த ஊர் கோத்தகிரி. அப்பா ஜோசியம் பார்ப்பார். கூடவே, சித்த மருத்துவமும் பார்ப்பார். அம்மா கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க. நான் அவங்களுக்கு ஒரே பொண்ணு.

வாழ்தல் இனிது
வாழ்தல் இனிது

1999-ம் வருஷம் அது... கோத்தகிரியில நான் மூணாவது வகுப்பு படிச்சிட்டிருந்தேன். ஒரு நாள் வீட்டுப் பக்கத்துல இருக்கிற பிள்ளைகளோடு விளையாடிட்டு வீட்டுக்கு வந்ததும் கால் மூட்டு ரொம்ப வலிக்குதுன்னு அழுதேன். `விளையாடுறப்ப எங்கேயாவது விழுந்திருப்பே'ன்னு சொல்லி, அம்மா தைலம் தடவி விட்டாங்க. ஆனாலும், ஒரு இன்ச் கூட நகர முடியாத அளவுக்கு செம வலி எடுத்தது. `ராத்திரி ஆகிடுச்சு, டாக்டர் இருக்க மாட்டார்'னு சொல்லி அம்மா என்னை தூங்கவைச்சாங்க. காலையில கண் முழிச்சா, எழுந்து நிற்கக்கூட முடியாத அளவுக்கு மூட்டு வீங்கியிருந்தது. அம்மாதான் பாத்ரூம் போக தூக்கிட்டுப் போனாங்க. அது ஆயுசுக்கும் தொடரும்னு எனக்கு அன்னிக்குத் தெரியாது'' என்கிறார் வேதனையோடு.

``என்னைப் பரிசோதித்த மருத்துவர் ஊசிபோட்டு மருந்து கொடுத்தனுப்பினார். அடுத்தநாள், கால் இன்னும் அதிகமா வீங்க ஆரம்பிச்சதும், அதே மருத்துவர்கிட்ட மறுபடியும் போனோம். தினம் ஒரு ஊசி வீதம் ஏழு நாளுக்கு ஊசி போடணும்னு சொன்னார். என்னை இடுப்புல வெச்சுக்கிட்டு தினமும் இரண்டு கிலோமீட்டர் நடந்துபோய் பஸ் பிடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போவாங்க எங்கம்மா.

தினமும் இரண்டு கிலோமீட்டர் தொலைவு மகளைச் சுமந்துகொண்டு மலையேறிச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வருவாராம் யாழினியின் அம்மா.

அப்பா ஜோசியம் பார்த்து கொண்டு வர்ற காசு வீட்டுச் செலவுக்கும், அம்மா தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குப் போய் கொண்டு வர்ற காசு என் மருத்துவத்துக்கும் செலவாச்சு. பக்கத்து வீட்டுக்காரங்க தொடங்கி எதிர்ப்படுறவங்க வரைக்கும் சொல்ற டாக்டர்கிட்ட எல்லாம் கடன் வாங்கியாவது கூட்டிட்டுப் போயிடுவாங்க எங்கம்மா. ஒருபக்கம் வாங்கின கடனுக்காக வீட்டுக்குப் பக்கத்துல கிடைக்கிற வேலைக்குப் போறது, மறுபக்கம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என்னை வந்து கவனிச்சுக்கிறதுமா அம்மா ஓடிட்டே இருந்தாங்க.

எங்க ஊருக்கு புதுசா வந்த டாக்டரைப் பத்தி கேள்விப்பட்டு என்னை தூக்கிட்டுப் போனாங்க. அவர்தான், `இந்தப் பிரச்னைக்குப் பேர் Kyphoscoliosis. இதை குணப்படுத்துறது கஷ்டம். ஆனா, மேற்கொண்டு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். வளைஞ்ச முதுகுத்தண்டை சரி செய்ய முடியாது'ன்னு சொல்லி சத்து மாத்திரைகள் எழுதித் தந்தார்'' என்கிற யாழினிக்கு, தொடர் அலைச்சல்களால் படிப்பும் பாதிக்கப்பட, அதற்கான தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார் அவரின் அம்மா.

அம்மாவுக்கு என்னால ஒண்ணும் 
செய்ய முடியலையே!
அம்மாவுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியலையே!

`உடம்பு சீக்கிரம் சரியாகிடும், ஆனா, வயசு போனா படிக்க முடியாது. நீ கஷ்டப்பட்டு படிக்கிறீயா' என்று யாழினியைக் கேட்டதோடு, தினமும் இரண்டு கிலோமீட்டர் தொலைவு யாழினியை சுமந்துகொண்டு மலையேறிச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வருவாராம். இதைக்கண்ட யாழினியின் முதல் வகுப்பு ஆசிரியர் தன் காரிலேயே யாழினியை அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த ஆசிரியர் ஓய்வுபெற்றதும் யாழினியைத் தூக்கிச் செல்லும் பொறுப்பை பெற்றோரே ஏற்றிருக்கிறார்கள். இப்படியாக, தன் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார் யாழினி.

``2004-ல் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்ப உடல்நிலை ரொம்ப மோசமாக, நாங்க தென்திருப்பதிக்கு வந்து செட்டில் ஆனோம். 2007-ம் வருஷம், எங்க ஊராட்சி சார்பில் நடந்த இலவச கணினி பயிற்சியில் டிடிபி முடிச்சேன். ஒரு சேவை அமைப்பு மூலமா எனக்கு கணினி வாங்கிக்கொடுத்தார் என் மருத்துவர். அது மூலமா, எப்போவாவது கிடைக்கும் டைப்பிங் வேலைகளை செய்து கொடுத்துட்டிருந்தேன்.

அப்பாவோட வருமானம் போதாம இருந்தப்ப அம்மாதான் குடும்பத்தை தாங்கி பிடிச்சாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி அம்மாவுக்கு நடந்த விபத்துனால, அம்மாவால அதிக நேரம் நிக்கவோ நடக்கவோ முடியாம ஆகிடுச்சு. ஆனாலும், என்னைத் தூக்கி பாத்ரூம் போக வெச்சு, குளிப்பாட்டி டிரஸ் மாத்தி, காபி குடிக்க வைச்ச பிறகுதான் அவங்க காபியே குடிப்பாங்க. என் குரல் கேட்கிறப்ப எல்லாம் என் முன்னாடி வந்து நிக்கிற அம்மாவுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியலையேங்கிற வருத்தம்தான் தினமும் என்னைக் கொல்லுது'' என்கிற யாழினியின் கைகளை மிருதுவாக அழுத்துகிறார் அம்மா சுந்தரி.

ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கிறார் யாழினி. ``சும்மா போய் பார்ப்போம்னு ஃபேஸ்புக் உள்ளே வந்தேன். என் குறைகளை மறக்க காமெடியா ஸ்டேட்டஸ் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். என் ஸ்டேட்டஸால ஈர்க்கப்பட்டவங்க நண்பர்களானாங்க. ஒருகட்டத்துல ஸ்டேட்டஸ் கவிதையாச்சு... `அட சூப்பரா எழுதுறே'ன்னு நண்பர்கள் உற்சாகப்படுத்த, தினமும் ஒரு கவிதை போஸ்ட் பண்ற அளவுக்குத் தீவிரமானேன். அதையெல்லாம் தொகுத்த என் ஃபேஸ்புக் நண்பர்கள் `மரப்பாச்சி கனவுகள்' என்கிற பேர்ல புத்தகமா வெளிக்கொண்டு வந்து என்னை அசரடிச்சுட்டாங்க.

கவிஞர், இயக்குநர் குட்டி ரேவதிதான் என் புத்தகத்தை வெளியிட்டாங்க. முகம் தெரியாம இருந்த எனக்கோர் அடையாளத்தைக் கொடுத்தது என் ஃபேஸ்புக் நண்பர்கள்தான். இப்பகூட என்னோட நெட் ரீசார்ஜ் தொகையை அவங்கதான் கட்டுறாங்க. இதுல உச்சகட்ட சந்தோஷம் என்னன்னா, என் தோழி தனசக்தி என் கவிதைப் புத்தகத்தை எனக்கே தெரியாம நடிகர் விஜய் சேதுபதிக்கு அனுப்பிருக்கா. என் `முதிர் கன்னி' கவிதையை தன் முகநூல்ல விஜய் சேதுபதி பாராட்டியிருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. சின்ன வயசுல நான் கண்ட முதிர் கன்னியோட மன உணர்வுகளை கற்பனையா எழுதினதுதான் அந்தக் கவிதை. ஒருவேளை அந்தக் கவிதை வரிகள் எனக்கும் பொருந்தலாம்'' என்கிறார் மென்மையாக.