லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே... மகளிர் தினம்... அனைத்துப் பெண்களையும் சென்று சேர்ந்திருப்பதே பெரும் வெற்றி!

நமக்குள்ளே...
News
நமக்குள்ளே...

தலையங்கம்

`அம்மா இருங்க நான் காபி போட்டுக் கொடுக்கிறேன்’ என்று தன்னை அமர்த்திய நடுத்தர வயது மகனை அந்தத் தாய், ‘என்னடா?’ என்பதுபோல பார்க்க, ‘பெண்கள் தினம்மா’ என்று சிரித்தார் மகன். `உங்க ஃபேஸ்புக் போஸ்ட், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல எல்லாம் பெண்கள் தின வாழ்த்துச் சொல்லி முடிச்சிட்டீங்களா?’ என்று கிண்டல் செய்த தன் மனைவிக்கு, `ஒண்ணு பாக்கி, நைட் டின்னர் போறோம்’ என்று சர்ப்ரைஸ் கொடுத்தார் அந்தக் கணவர். அலுவலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை விதவிதமாக ஐடியா யோசித்து செய்திருந்தனர் ஆண் சகாக்கள். மகளிர் தினம் எட்டாத தொலைவில் இருந்த விளிம்புநிலைப் பெண்களுக்கு, முன்னோடிப் பெண்கள், ஆண்கள் சிலர் அந்த வாழ்த்தை கொண்டு சேர்த்தனர். ரிமோட் சண்டையில் ஒரு தருணத்தில் தன் டீன் அக்கா, ‘டேய்ய் இன்னிக்கு விமன்’ஸ் டே...’ என்றதும் சட்டென சிரித்து, விட்டுக்கொடுத்து, அவளை செல்ல மாகக் தட்டிச் சென்றான் ஒரு குட்டித் தம்பி. இப்படியாக... மகளிர் தினம் கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் வந்து சேர்ந்திருக்கிறது என்பதே... அந்த இயக்கத்தின் மாபெரும் வெற்றிதான்.

1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி வேலை நேரம், கூலி, வாக்குரிமை போன்றவற்றை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய பேரணியில் பிறந்ததுதான் மகளிர் தினம். பெண்களின் பிரச்னைகளுக்கு, உரிமைகளுக்கு, தேவைகளுக்குக் குரல் கொடுப்பதை ஒருமுகப்படுத்தும் ஒரு நாளாகக் கொண்டாடப்படும் இந்த சர்வதேச மகளிர் தினத்துக்கு கியூபா, ரஷ்யா, உகாண்டா, மங்கோலியா, உக்ரைன் போன்ற பல நாடுகளில் அலுவல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கங்கள் முதல் கொண்டாட்டங்கள் வரை எல்லா நாடுகளிலும் களைகட்டி முடிந்திருக்கிறது இந்தாண்டு மகளிர் தினமும். சமூகத்தில் முன்னர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு இன்று விரிவடைந்து வரும் வெளியையும், கிடைக்கும் முக்கியத்துவத்தையும் பார்க்கக் கிடைப்பது... அந்த நாளின் மகிழ்ச்சிகளில் ஒன்று.

நமக்குள்ளே... மகளிர் தினம்... அனைத்துப் பெண்களையும் 
சென்று சேர்ந்திருப்பதே பெரும் வெற்றி!

`மகளிர் தினத்தன்று மட்டும் பெண்களைக் கொண்டாடுவது சரியா, மற்ற நாள்களில் எல்லாம் அவர்கள் நடத்தப்படும் நிலை என்ன?’ என்ற கேள்விகளும் கேட்கப்பட்டன. பெண்களை சமூகம் நடத்தும் விதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த மாற்றம் ஆரம்பமாகிவிட்டது என்பதை ஒவ்வொரு தளத்திலும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது. அலுவலக மீட்டிங்குகள், பொதுக்கூட்ட மேடைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா வசனங்கள், பேருந்து பயணங்கள் வரை பொதுத்தளங்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், குறிப்பிடப்படும் மொழி மாறியிருக்கிறது; மாற்றப்பட்டிருக்கிறது. காரணம், கடுமையான எதிர்வினைகள். ஆக... இன்னும் நமக்கான சுதந்திரம், உரிமை கிடைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் கோரிக்கைகளை, எதிர்வினைகளை, எச்சரிக்கைகளை, கண்டனங்களை, போராட்டங்களை தொடர்ந்துகொண்டே இருப்போம்.

வீட்டுக்கு வெளியே மட்டுமல்ல... வீட்டுக்குள்ளேயும் பெண்ணடிமைத்தனம் கரைந்து, பெண் முன்னேற்றம் வளர்ந்து வருகிறது. அரசு, சட்டம், செயற்பாட்டாளர்கள், பெண் கல்வி, பொருளாதார பலம், ஆண்கள் மற்றும் குடும்பங்களின் மனமாற்றம் என ஒரு கூட்டுழைப்பாக, சங்கிலித்தொடர் மாற்றமாக இது சாத்தியமாகி வருகிறது. தொடர்வோம் நம் தன்னம்பிக்கை நடையை தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்